நம்மிடையே ஒரு சான்றோன்
2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதை, ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற நூலுக்காகப் பெற்ற பேராசிரியர், வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கான பாராட்டு விழாவை அண்ணா நூற்றாண்டு நூலகமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை மாலை நடத்தின.
சங்கர சரவணன், கவிஞர். சுகுமாரன், சித்ரா பாலசுப்ரமணியம், அருண் பிரசாத், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அருண் பிரசாத், தன்னுடைய பதினான்காவது வயதில், காலச்சுவடு இதழில் வரலாற்று ஆசிரியர் எரிக் ஹாப்ஸன் மறைவையொட்டி ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய அஞ்சலிக் கட்டுரைமூலம் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு அப்போதிலிருந்து தொடர்ந்து சலபதியின் எழுத்துக்களை வாசித்துவருவதையும் அவரை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். பானை ஓட்டையென்றாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டது என நகைச்சுவையோடு அவர் கூறுவதைக் குறிப்பிட்டு, எனினும் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதி, பதிப்பித்து, மொழிபெயர்த்து, தொகுத்து ஐம்பத்தெட்டு கொழுக்கட்டைகள் வெந்துவிட்டன என சலபதியின் பல்வேறு நூல்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
தான் வாசித்த சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இல்லாத வ.உ.சியைத் தேடிப் புறப்பட்ட சலபதி நாற்பதாண்டுகள் அந்தத் தேடலில் பயணம்செய்து வ.உ.சி. குறித்த முக்கியமான நூல்களை நமக்கு அளித்திருக்கிறார் என்றார்.
சுகுமாரன் முதன்முதலில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் பெயரைத் தான் கேள்விப்பட்டு முதல்நூலை வாங்கிய விதத்தையும், அடுத்தடுத்து அவருடைய நூல்களின்பால் தான் ஈர்க்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகச் சொன்னார். அவரது ஆய்வெழுத்தின் முதல் அம்சம் சுவாரஸ்யம், பொதுவாசிப்புக்கு மிக நெருக்கமாக அமைந்த விதம் என்றும், வரலாறு என்றால் காத தூரம் ஓடக்கூடிய தன்னைப் போன்ற படைப்பாளிகளையும் வரலாற்று வாசிப்பு நோக்கி இழுத்தது ஆ.இரா. வேங்கடாசலபதியின் எழுத்துத் திறம் என்றும் குறிப்பிட்டார். ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ ஒரு மர்ம நாவலைப் போலவும் காப்புரிமை சம்பந்தமான முக்கிய ஆவணமாக ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ புத்தகத்தையும் ஒரு நூல் உருவாக்க உழைப்பு பற்றியும் வெகு ஆர்வமூட்டக்கூடிய வகையில் எழுத முடியும் என்பதற்கு ‘கலைக்களஞ்சியத்தின் கதை’ புத்தகத்தையும் குறிப்பிட்டார். தனித்தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் பிடிவாதமாகத் தம் எழுத்தில் பயன்படுத்துவதன் மூலம் அவர் ஒரு மொழியியலாளராகவும் செயல்படுகிறார் எனவும் சுகுமாரன் பாராட்டினார். புதுமைப்பித்தன் தொகுப்பு முயற்சிகளுக்காக சலபதி மேற்கொண்ட உத்திகள்தான் இன்றைய நவீன பதிப்பின் அடிப்படை என்று குறிப்பிட்ட சுகுமாரன், பாரதி, புதுமைப்பித்தன் ஆகிய ஆளுமைகளின் சித்திரத்தைத் துலக்கியமாக்கியதில் ஆ.இரா.வின் பங்கு அளப்பரியது என்றார். பாரதி குறித்து ஆறு நூல்கள், புதுமைப்பித்தன் குறித்து ஆறு நூல்கள் இவற்றோடு புதுமைப்பித்தனின் மேதமையை இந்தத் தமிழ் உலகம் எவ்வாறு மதிப்பிட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டும் சமீபத்திய வெளியீடான ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ எனத் தமிழ் உலகம் ஆ.இரா.விற்குக் கடன்பட்டுள்ளது என்றும் விதந்தோதினார். இவற்றுக்கெல்லாம் மேலாக, கண்ணீர்த் துளி உள்ளுருக எழுதப்பட்ட, வ.உ.சி. எனும் தமிழ் ஆளுமையைச் சர்வதேச அரங்கில் நிலைநிறுத்திய ‘சுவதேசி ஸ்ட்ரீம்’ (swathesi stream), தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் அதை ஆ.இரா. வே மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட சுகுமாரன். தம்மின் இளையவர் எனினும் தான் சான்றோன் எனக் குறிப்பிட விரும்புபவர் சலபதி என்பதைப் பலத்தக் கைதட்டல்களுடன் கூறிமுடித்தார்.
கண்ணன் வரலாற்று ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டுவருவது குறித்த காலச்சுவடு பதிப்பகத்தின் அனுபவங்களையும் தேர்வுகளையும் பற்றிக் கூறி, ‘கிறித்துவமும் சாதியும்’ என்ற நூலைத் தாங்கள் பதிப்பித்தபோது எத்தகைய மாற்றங்கள் செய்ய நேர்ந்தது என்பதையும் இன்று எட்டுப் பதிப்புகள் கண்டு தொடர்ந்து விற்பனையாகும் அந்த நூல், ஆய்வுப்புலத்தினின்று எழுதப்பட்டாலும் ஆர்வமூட்டும் வகையில் எழுதப்படும் வரலாற்று நூல்களுக்கு வாசகர்களிடையே பெரிய வரவேற்பு இருப்பதைக் காட்டுகிறது என்ற உதாரணத்தோடு தொடங்கினார். கூடவே, காலச்சுவடு இதழை மீண்டும் தொடர்ந்து நடத்த முடிவு செய்தபோது பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பொது வாசிப்பிற்கானதாக எழுதுவதைக் குறித்து சலபதியோடு நடத்திய நீண்ட உரையாடல்களையும் அதில் சலபதியின் பங்களிப்பு குறித்தும் கூறினார். ஓர் இலக்கியப் படைப்பைச் செய்பவருக்கு இருக்கும் அதே படைப்பூக்க மனநிலை, மனஅவசம், மன எழுச்சி, பதற்றங்கள் என அனைத்து அம்சங்களும் சலபதியின் படைப்புகளுக்கும் உண்டு என்பதை அவருடைய பணியை நேரில் பார்த்து அறிந்தவன் என்ற முறையில் கூற முடியும் எனக் கண்ணன் குறிப்பிட்டார்.
சித்ரா பாலசுப்ரமணியம், ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘முச்சந்தி இலக்கியம்’ ஆகிய நூல்கள் மூலமாகத் தான் சலபதியின் எழுத்துக்களை நோக்கி ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு ஆய்வுக்கான கரு, அதை அணுகும் விதம், அதன் கூறுமுறை, மொழிநடை என இத்தகைய பல்வேறு கூறுகள் சார்ந்து சலபதியின் நூல்கள் தனித்துவம் பெறுகின்றன எனக் கூறினார். இந்தப் பாராட்டு விழாவிற்குக் காரணமாக அமைந்த சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற நூலையொட்டி மட்டுமே தன் பேச்சை அமைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர் அந்த நூல் எழுதப்பட்ட விதம் மற்ற வரலாற்று நூல்களிலிருந்து எத்தகைய முறையில் வித்தியாசமானது என்றும் கூறினார். தன் பதின் வயதுகளில், ஒரு சிறிய பத்திச் செய்தியாகத் தான் வாசித்த திருநெல்வேலி எழுச்சி குறித்த செய்தியைப் பல ஆண்டுகள், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உழைத்து, ஒரு முழுச்சித்திரமாக அந்த நிகழ்வைப் பற்றிய பார்வையைப் பல்வேறு வேறுபட்ட தரவுகள்மூலம் படைத்தளித்துள்ள சலபதியின் எழுத்து வன்மையை விதந்தோதினார். ‘திருநெல்வேலி எழுச்சி’ நூலில் தாம் வாசித்து மகிழ்ந்த பல்வேறு நிகழ்வுகள், தரவுகள், ஆளுமைகள் குறித்துப் பட்டியலிட்டதோடு ஒரு நேர்மையான வரலாற்று ஆய்வாளராகச் சலபதியின் பங்கு இதில் மகத்தானது என்றும், சலபதியின் பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகள் குறித்துச் சர்வதேசக் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என் தம் வேண்டுகோளையும் முன்வைத்தார்.
சங்கர சரவணன், வரலாற்றுப் பாட நூல் உருவாக்கத்தில் சலபதியின் பங்கு குறித்து வியப்புடன் குறிப்பிட்டார். சலபதியின் பெயரிலுள்ள எழுத்துகளை, ஒவ்வொரு பண்பு நலனோடும் ஆளுமைத்திறத்தோடும் ஒப்பிட்டுக் கூறினார். சலபதியின் ‘சுவதேசி ஸ்ட்ரீம்’ நூலுக்கு புலிட்சர் விருது போன்ற பெருமைகள் கிடைக்க வேண்டும் என வாழ்த்திய அவர், எடுத்துக்கொள்ளும் எந்தச் செயலையும் மிகத் துல்லியமாக நேர்த்தியாகச் செய்யக்கூடியவர் சலபதி என்றார்.
நிறைவாக ஏற்புரை வழங்கிய ஆ.இரா. வேங்கடாசலபதி, நெகிழ்வோடு கல்வியாளர் வசந்தி தேவிக்குத் தம் அஞ்சலியைப் பதிவுசெய்தார். சாகித்திய அகாதமி விருது தனக்குக் கிடைத்தது தற்செயலானது என்றும் தமக்கு முன்னோடிகளான எழுத் தாளுமைகளான சுந்தர ராமசாமி தொடங்கி சுகுமாரன்வரை எத்தனையோ முக்கியமானவர்களுக்குக் கிடைக்காத விருதை அவர்களின் சார்பாகத் தான் பெற்றுக்கொண்டதுபோல் உணர்வதாகக் கூறினார். தம்முடைய நாற்பதாண்டுப் பயணத்தில் தான் செய்தது, நம் தமிழ்ச் சமூகத்தில் பதிவு செய்யப்படாமல் போன சில கதைகளைப் படிப்பினைகளாகவும் அனுபவங்களாகவும் அமைந்திருக்கக்கூடிய செய்திகளைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். இவற்றில் எந்தவிதமான சுவாரஸ்யத்தையும் கூட்டத் தாம் முயற்சிக்கவில்லை என்றும் அந்த வரலாற்று நிகழ்வுகளின் ஆளுமைகளின் சுவாரஸ்யம் மிகுந்த வாழ்வே அதனை அவ்வாறு வெளிப்படுத்திக்கொண்டது என்றார். தம்முடைய நீண்ட பயணத்தில் தமக்கு வழிகாட்டிகளாக விளங்கிய முகம் மாமணி, ம.இலெ. தங்கப்பா, புலவர் தா. கோவிந்தன், எம்.எஸ்.எஸ். பாண்டியன், சுந்தர ராமசாமி, சிவசுப்பிமணியன், கைலாசபதி எனப் பெரிய பட்டியலைக் கூறலாம் என்றும் இவர்களைப் போன்ற எழுத்தாளுமைகளோடு பழக நேர்ந்ததில் தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை எழுத்தில் கொண்டுவர முடிந்ததை நினைத்து மகிழ்வதாகவும் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் போன்ற பெரும் ஆளுமைகள்மீது சிறிதளவேனும் வெளிச்சம் பாய்ச்சக்கூடிய வாய்ப்பைத் தமிழ்ச் சமூகம் தமக்கு வழங்கியிருப்பது குறித்து மகிழ்வும் நன்றியும் எனக் குறிப்பிட்டார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் காமாட்சி வரவேற்புரை வழங்கினார்.
அரங்கு நிறைந்த கூட்டம். முக்கிய எழுத்தாளுமைகளும் ஆய்வாளர்களும் மாணவர்களும் திரண்டிருந்தார்கள். நிகழ்ச்சி நிறைவுபெற்ற பின்னும் நீண்ட நேரம் சலபதியோடு அவர்கள் உரையாடி மகிழ்ந்த விதம் நிகழ்வின் சிறப்பைக் காட்டியது.