பல்லாயிரம் வாழ்வு கண்ட எழுத்துக்காரர்
பட உதவி: அ. கோகுலகிருஷ்ணன்
சுப்பிரமணி இரமேஷ், க. கல்விக்கரசி, சுகுமாரன், அரவிந்தன், நா. இராசேந்திர நாயுடு
இன்றைய சூழலில் எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் காலகட்டத்திலேயே கொண்டாடப்படுவது மிகவும் அரிதான செயல். ‘காலச்சுவடு அறக்கட்டளை’ இந்த அரிதான செயலின்மீது தொடர்ந்து கவனம் செலுத்திப் படைப்பாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு நிகழ்வுகள் நடத்திப் பெருமைப்படுத்திவருகிறது. அந்த வகையில் காலச்சுவடு அறக்கட்டளையும் சென்னை, பட்டாபிராமில் அமைந்துள்ள தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த் துறையும் இணைந்து, ‘சுகுமாரன் படைப்புப் பயணம்’ என்ற பொருண்மையில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கினை இந்துக் கல்லூரி வளாகத்தில் ஜூலை 31ஆம் தேதி நடத்தியது.
இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சு. இரமேஷின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது. காலச்சுவடு அறக்கட்டளை நிறுவனர் கண்ணன் சார்பாக அரவிந்தன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இந்துக் கல்லூரியின் முதல்வர் க. கல்விக்கரசி, சுகுமாரனின் மொழிபெயர்ப்பு தன் ஆய்வு மாணவர்களுக்கு உதவிய விதத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்துக் கல்லூரியின் இயக்குநர் நா. இராசேந்திர நாயுடு, சுகுமாரனின் ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு தமக்கு வியப்பைத் தருவதாகச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தார். அடுத்து, ‘சுகுமாரன் இலக்கியத்தடம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து உரையாளர்கள் சுகுமாரன் படைப்புகள்குறித்து உரை நிகழ்த்தினார்கள். இரண்டு அமர்வுகளாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதல் அமர்வில் பெருமாள்முருகன், ஜெ. சுடர்விழி, ஆ. இரா. வேங்கடாசலபதி, மயிலன் ஜி. சின்னப்பன், அரவிந்தன், இசை, பொன்முகலி, யுவன் சந்திரசேகர், பா. இரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். இரண்டாம் அமர்வில் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, கலைவாணி, லாவண்யா சுந்தரராஜன், ஸ்டாலின் ராஜாங்கம், விக்னேஷ் ஹரிஹரன், பி. ராமன், எம். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர்கள் அனைவரும் சுகுமாரனின் படைப்பாளுமை குறித்தும் அவருக்கும் தங்களுக்குமான தனிப்பட்ட அனுபவங்கள் குறித்தும் மிக அணுக்கமான உரைகளைப் பதிவு செய்தார்கள்.
பெருமாள்முருகன், சுகுமாரன் எழுதிய ‘வளர்ப்பு மிருகம்’ கவிதையை முதன்முதலில் கல்லூரிப் பருவத்தில் வாசிக்கும்போது அதிலுள்ள உருவகத்தைப் புரிந்துகொள்வதில் தனக்கிருந்த சிரமத்தையும் அதில் ஏற்பட்ட ஐயத்தைத் தன் ஆசிரியரிடம் கூறியபோது அவர் அதற்குக் கொடுத்த விளக்கத்தையும் பகிர்ந்துகொண்டார். மேலும் உருவகம், உவமைக்கான வேறுபாடுகளை மாணவர்கள் எவ்வாறு உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற தன்மையில் அவரது உரை அமைந்திருந்தது. சுகுமாரனின் கட்டுரைகள் குறித்துப் பேசிய ஜெ. சுடர்விழி, சுகுமாரனை ஏன் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்கத் தொடங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னார். சுகுமாரனின் அ புனைவு எழுத்துகளில் கொட்டிக்கிடக்கும் இலக்கியத் தரவுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அவர் உரை சுட்டிக்காட்டியது. ஆய்வறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பதிப்பகத்திற்கும் எழுத்தாளருக்கும் ஆரம்பத்திலிருந்த பிணைப்புப் பற்றியும் தற்போதுள்ள நிலையைப் பற்றியும் சுவாரசியமாகப் பேசினார். சுகுமாரன் மொழிபெயர்த்த ‘மார்க்ஸிய அழகியல் - ஒரு முன்னுரை’ என்ற நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். மயிலன் ஜி. சின்னப்பன், சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் குறித்துத் தமது விரிவான பார்வையைக் காணொலி வழியாக முன்வைத்தார்.
எழுத்தாளர் அரவிந்தன், ‘கருத்தரங்கின் பயனாக மாணவர்கள் குறைந்தது சுகுமாரனின் ஒரு புத்தகத்தையாவது வாசிக்க வேண்டும்’ என்று உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ‘பெருவலி’ நாவலிலுள்ள ஜஹனாரா பெண் என்பதற்காகவே ஆட்சி உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது என்பதை நிகழ்காலத்துடன் பொருத்தித் தன் உரையைத் தொடர்ந்தார். சுகுமாரன், தான் சொல்ல நினைக்கும் விஷயத்தை நாவலாகப் படைத்துள்ளார் என்றும் தற்கால நிகழ்வினை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதி யுள்ளார் என்றும் தன்னுடைய உரையில் பதிவுசெய்தார்.
சுகுமாரன் குறைவாகப் பேசுபவர் என்று அனைவரும் கூறுவதிலிருந்து தான் முற்றிலும் மாறுபடுவதாகக் கூறி, அவருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் இசை. எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கச் சில வார்த்தைகளைச் சுகுமாரனிடம் தான் கற்றுக்கொண்டதையும் அவர் சொன்னார். சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் குறித்தும் கவிதை கொடுக்கும் உணர்வுகள் குறித்தும் இசை தமது உரையில் பதிவுசெய்தார்.
ஐம்பது ஆண்டுகளாக அதே உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதிவருபவர் சுகுமாரன் என்று எழுத்தாளர் பொன்முகலி சொன்னார். சுகுமாரனின் கவிதையில் கையாளப்படும் கருப்பொருள்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
சுகுமாரனின் கவிதைகளை எப்படி வாசிக்க வேண்டும் என்ற தொனியில் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் பா. இரவிக்குமார் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார். கவிதைகளின் மொழிநடை எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் அதில் சுகுமாரனின் கவிதை நடை எப்படித் தனித்துவமானது என்பதையும் தம் உரையில் அவர் குறிப்பிட்டார். சுகுமாரனின் கவிதை வரிகளைத் தாகூரின் கவிதையுடனும் திருமூலரின் வரிகளுடனும் ஒப்பிட்டு உரையாற்றினார். இவரின் உரையோடு முதல் அமர்வு நிறைவுபெற்றது.
உணவு இடைவெளிக்குப் பின் மலையாள எழுத்தாளர் சக்கரியாவின் வாழ்த்துரைக் காணொலியுடன் இரண்டாவது அமர்வு தொடங்கியது. சுகுமாரனின் மொழிபெயர்ப்புகுறித்து ஆர். சிவகுமார் உரையாற்றினார். சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் வந்த பஷீரின் நாவல்களையும் பஷீரின் வாழ்க்கை வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். குறைந்தது ‘மதில்கள்’ நாவலையாவது வாசிக்கும்படி பரிந்துரைத்தார். சுகுமாரன் மலையாளத்திலிருந்து நூல்களை மொழிபெயர்க்கும்போது சில சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே மலையாள ஒலியைப் பயன்படுத்தியது நல்லது என்று பாராட்டினார். சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மலையாளத்தின் பண்பாட்டையும் வழக்கத்தையும் மொழிபெயர்க்காமல் தமிழில் கொண்டுசேர்த்தது அவர் மொழிபெயர்ப்பின் தனிச்சிறப்பு என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பாளர் சுகுமாரன் என்ற விளிச் சொல்லோடு ஆரம்பிப்பதற்குத் தயக்கமாக உள்ளது. பிரதானமாகச் சுகுமாரன் என்பவர் ஒரு கவிஞர் என்று தனது உரையைத் தொடங்கினார் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி. சுகுமாரன் மொழிபெயர்ப்புக்கு அவரது கவிமொழி எவ்வாறு உதவியது என்றும் மொழிபெயர்ப்புபற்றிப் பேசும்போது மூலத்தையும் மொழிபெயர்ப்பினையும் இணைத்தே பேச வேண்டும் என்றும் அவர் சொன்னார். சுகுமாரன் என்ற கலைஞருக்கு தி. ஜானகிராமன், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், பாப்லோ நெரூதா ஆகிய மூன்று எழுத்தாளர்கள்மீது அபாரக் காதல் உள்ளது என்றார் ஜி. குப்புசாமி.
சுகுமாரன் என்ற தன்னுடைய மொழிபெயர்ப்புத் துறையின் ஆசிரியரைப் பற்றிய அனுபவத்தை கலைவாணி பகிர்ந்துகொண்டார். தான் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதை சுகுமாரன்தான் அடையாளப்படுத்தினார் என்றார். எறும்பானது எப்படிக் கற்கண்டுத் துண்டினை அதுவாகத் தெரிந்துகொள்ளுமோ, அவ்வாறே தான் சுகுமாரனை அறிந்துகொண்டதாக கலைவாணி சொன்னார். ‘பெருவலி’ நாவலின் மொழிபெயர்ப்பில் அவர் தனக்குச் செய்த உதவிகளையும் மொழிபெயர்ப்பில் தான் செய்த தவறுகளையும் நேர்மையுடன் பதிவு செய்தார்.
கவிதைகளைவிடக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர் சுகுமாரன் என்று தன் உரையில் குறிப்பிட்டார் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன். கவிதை சார்ந்து சுகுமாரன் எழுதிய கட்டுரைகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். சுகுமாரன், கட்டுரைகள் விதவிதமான வண்ணங்கள்கொண்ட பறவைகளைப் போன்று காட்சியளிப்பதாக அவர் உவமித்தார்.
சுகுமாரனின் கட்டுரைகளிலுள்ள பத்திகளுக்குத் தலைப்பிட வேண்டுமென்றால், ‘கவிஞனின் உரைநடை’ என்று இடலாம் என ஸ்டாலின் ராஜாங்கம் தன் பேச்சில் குறிப்பிட்டார். தொடர்ந்து அ-புனைவைப் புனைவின் தன்மையில் எழுதக்கூடியவர் சுகுமாரன் என்பதையும் தன் உரையின் வாயிலாகக் கூறினார்.
இதுவரை பேசியவர்களின் உரையில் கண்ட சுகுமாரன் பன்முக ஆளுமை கொண்டவர் என்பது உறுதியாகிறது. இனி தன்னுடைய சுகுமாரனைப் பற்றி கூறுகிறேன் என விக்னேஷ் ஹரிஹரன் உரையை ஆரம்பித்தார். சுகுமாரன், தன் கட்டுரைகளில் தன்னுடைய அனுபவத்தைப் பரிவோடு எழுதியுள்ளார். கூர்மையான அறிவும் அபாரமான நுண்ணனுபவமும் கொண்ட மனதை உடையவர் என்பதை அவரது கட்டுரைகளை வாசித்ததன் மூலமாகத் தான் தெரிந்துகொண்டதாகக் கூறினார். சுகுமாரனின் கட்டுரைகளிலுள்ள சொல்லாட்சி குறித்தும் அவரின் கண்ணியம் தவறாத வாக்கிய அமைப்பு குறித்தும் மேலும் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக, சுந்தர ராமசாமியின் கட்டுரைகளுடன் சுகுமாரனின் கட்டுரைகளை ஒப்பிடும்போது இவர்களின் ஆசிரியர் மாணவர் உறவு கடந்து இரு பெரும் மகத்தான ஆளுமைகளாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள் என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார். மலையாள மொழியில் சுகுமாரனின் கவிதை நடை குறித்தும் மொழிபெயர்ப்புப் கவிதைகள் குறித்தும் பேசினார் மலையாளக் கவிஞர் பி. ராமன்.
இலக்கிய ஆளுமையாக உருவாக முயற்சி செய்ததை விடவும் இலக்கியம் சுகுமாரனைத் தனக்குள் கொண்டுசென்ற தருணமே அதிகம் என்றார் நிறைவுரையாற்றிய எம். கோபாலகிருஷ்ணன். விற்பனைத் துறையில் சுகுமாரனின் அனுபவம் குறித்தும் சுகுமாரன் அதன்வழி சந்தித்த ஆளுமைகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். கருத்தரங்கின் நிறைவான உரையாக ஏற்புரை வழங்கினார் சுகுமாரன். தன்னுடைய இலக்கியப் பயணம் ஐம்பது ஆண்டினை நெருங்கிவிட்டதை நண்பர்கள் வழி அறிந்தபோது மகிழ்ச்சி அடைந்ததைக் குறிப்பிட்டார். இந்த ஐம்பது ஆண்டுகால இலக்கிய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்த சுகுமாரன், தன் அத்தை வழியாகவும் அம்மா வழியாகவும் தனக்கு வாசிப்புப் பழக்கம் தொடங்கியதையும் பகிர்ந்துகொண்டார். தன் தந்தையைக் குறித்த அவர் நினைவுகூரலில் வார்த்தைகள் மொழியாகாமல் தடுமாறி நின்றதைப் பார்க்க முடிந்தது.
சுகுமாரனின் ஐம்பது ஆண்டுகால இலக்கியப் பணியைப் பாராட்டி காலச்சுவடு சிறப்பானதொரு நினைவுப் பரிசினை அவருக்கு வழங்கியது. அவர் அந்த நினைவுப் பரிசினைத் தன் மனைவியுடன் இணைந்து பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இரு நூறு மாணவர்களுக்கும் நூற்பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியது காலச்சுவடு அறக்கட்டளை. நிறைவாக இந்துக் கல்லூரியின் பேராசிரியர் ச. கண்ணதாசன் நன்றியுரையாற்றினார். இலக்கியமே தன் அடையாளம் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் சுகுமாரனின் படைப்புகளுடன் அந்த நாள் மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.
சு. தீபிகா, உதவிப் பேராசிரியர், இந்துக் கல்லூரி, சென்னை.
மின்னஞ்சல்: deepikas25082001@gmail.com