கறைபடிந்த விருதுகள்
திரைப்படங்களுக்கான 71ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லா விருது அறிவிப்புகளுக்கும் எதிர்ப்பும் வரவேற்புமாக எதிர்வினைகள் இருக்கும் என்றாலும் இந்த முறை கடுமையான எதிர்வினைகளும் விமர்சனங்களும் வருகின்றன. தகுதியான திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் ஆளுங்கட்சி முன்னெடுக்கும் அரசியல் கதையாடலின் ஊதுகுழலாக அமையும் படங்கள் விருதுபெறுகின்றன என்றும் எதிர்ப்புக் குரல்கள் கேட்கின்றன. ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருது பெற்ற ஊர்வசி தனது கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஆடுஜீவிதம் இயக்குநரும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திரைத்துறையிலிருந்தும் விருதாளராகவும் ஊர்வசி எழுப்பியிருக்கும் குரல் தேசிய விருதுகள்மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. விருதுபெற்ற கலைஞராகத் துணிந்து குரல் எழுப்பியிருக்கும் ஊர்வசியின் கேள்விகள் கவனத்திற்குரியவை. இவ்விருதுகள் தமது ஓய்வூதியமல்ல என்று அவர் கடுமை காட்டியிருப்பது அத்துறை சார்ந்தவர்களைச் சிந்திக்கச் செய்யக்கூடும்.
திரைப்படக் கலை பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வாழ்வு, அரசியல், பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கக்கூடிய வலுவான பண்பாட்டுச் சாதனம். எனவே அதற்கான விருதுகளும் அறிந்தேற்புகளும் தனிநபர்கள் சார்ந்தவை அல்ல; சமூக விழுமியங்களின் பிரதிபலிப்புகள், அடையாளங்கள். எனவே அவை குறித்து நாம் ஆழமாக அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. இதே காலகட்டத்தில் வெளியான பல்வேறு படங்களின் தரம், கலைஞர்களின் சிறப்பான வெளிப்பாடுகள் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் விருதுபெற்ற படங்கள், கலைஞர்களின் தேர்வுகள் ஏமாற்றமளிக்கின்றன. முழுக்க முழுக்க வணிகக் கேளிக்கை நடிகரான ஷாருக் கானுக்கு விருது அளிக்கப்பட்டு, பல்வேறு நுட்பமான கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் ஊர்வசிபோன்ற தேர்ந்த கலைஞர்கள் துணை நடிகர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படுவதையும் திரைப்படங்களில் தரத்தை விழைபவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தீவிரமான திரை மொழியும் கலாப்பூர்வமான கூறுகளும் தேர்ந்த நடிப்பும் கொண்ட ஆடு ஜீவிதம், தங்கலான் போன்ற படங்கள் தேர்வுக் குழுவினரின் கண்ணிலேயே படாமல்போனது தேர்வுக் குழுவினரின் தரத்தை அம்பலப்படுத்துகிறது.
அரசியல் கறை
தரம் சார்ந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க அரசியல் விமர்சனங்களும் வலுவாக ஒலிக்கின்றன. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்காகக் ‘காஷ்மீர் பைல்ஸ்’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே ஆளுங்கட்சியான பாஜக முன்னிறுத்தும் அரசியல் கதையாடலின் நீட்சியாக அமையும் திரைப்படங்களுக்கு அரச ஆதரவும் அறிந்தேற்பும் வெளிப்படையாகவே கிடைப்பதை உணர முடிந்தது. தற்போது ‘கேரளா டைரீஸ்’ படத்துக்கான விருது அந்த விமர்சனத்துக்கு வலுச் சேர்த்திருக்கிறது. இதுவரை இலைமறைகாயாக அரசு விருதுகளில் பிரதிபலித்த பாரபட்சம் தற்போது வெளிப்படையாகவே இருப்பதை இது காட்டுகிறது.
கேரளா டைரீஸ், காஷ்மீர் பைல்ஸ் ஆகிய படங்கள் உண்மையின் பிரதிபலிப்புகள் என்ற உரிமைகோரலுடன் வெளியானவை. ஆனால், உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை என்பதே யதார்த்தம். உண்மை ஒரே வகைப்பட்டதல்ல, அது பல்வேறு தரப்புகளின் பார்வையில் வேறுபட்டுக்கொண்டேயிருப்பதும். ஒரு தலித்தியர் ஒரு சம்பவத்தை விளக்குவதற்கும் பெண்ணியர் விளக்குவதற்கும் மார்க்ஸியர் விளக்குவதற்கும் இடையிலேயே ‘உண்மை’ என்பது ‘உண்மைகள்’ ஆகிவிடுகின்றன. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்நிலைகள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் சார்ந்தே ஒரு சம்பவத்தை அணுகுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அதன் உண்மைத் தன்மையை விளக்க முற்படுவார்கள். உண்மை நிலையான அர்த்தம் கொண்டதல்ல. பல்வேறு விளக்கங்களையும் அர்த்தங்களையும் கொண்டது. எனவே ஒரு படைப்பு உண்மையின் சித்தரிப்பு என்னும் உரிமைகோரலுடன் வரும்போது அது யாருடைய உண்மை என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. காஷ்மீர் பைல்ஸ், கேரளா டயரீஸ் போன்ற படங்களோ குறிப்பிட்ட அரசியல் சமூகப் பார்வை கொண்ட பரப்புரையின் தளத்தில் நிகழ்பவை. எனவே இவற்றின் உரிமைகோரலை மிகவும் ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது.
ஒரு தரப்பினர் கூறும் உண்மையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களாகவும் சமகாலக் கட்சி அரசியலின் பிரச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களாகவுமே இவை வெளிப்பட்டிருக்கின்றன. இவை வெளிவந்தபோது இந்துத்துவ அரசியல் போக்கைக் கொண்டவர்கள் அப்பட்டமாகவே கொண்டாடினார்கள். சிறுபான்மையினர் வெறுப்புப் பிரச்சாரப் படங்கள் என்று ஒரு தரப்பினர் விமர்சித்தார்கள். இவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்றும் சிலர் குரலெழுப்பினார்கள். புனைவு உண்மையைக் குறுக்கு விசாரணை செய்யக்கூடியது. ஆனால் இங்கு வரலாற்றுப் புனைவு என்னும் வகைமையில் ஒரு தனிநபருக்கு நிகழ்ந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட சமூகமே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதுபோல ஊதிப்பெருக்கும், வெறுப்பை உண்டாக்கும் கருவியாகப் பயன்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறையே இந்தப் படங்களின் ஆதாரமான பிரச்சினை.
இந்தப் படங்களில் வெளிப்படும் ஆவேசக் குரல் ஜனநாயக அரசியலின் மீதான அவநம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. சிறுபான்மைச் சமூகங்கள்மீதான அச்சத்தை வளர்த்தல், அவர்கள்மீது எதிர்மறையான பொதுப்பார்வையை உருவாக்குதல், மற்றமையாக அவர்களை வெளித்தள்ளுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படங்களுக்கு விருதுகள்மூலம் அளிக்கப்படும் அங்கீகாரம் அரசியல் லாபங்களின்பாற்பட்டது வெளிப்படை. 2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருந்ததையும் இங்கு நினைவுபடுத்திக்கொண்டால் இந்தப் படங்களின் அரசியலையும் அவற்றுக்கு விருது வழங்குவதிலுள்ள அரசியலையும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
கலைத்துறைக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு புதியதல்ல. தமிழக அரசியலிலும் இதற்குப் பல்வேறு உதாரணங்கள் உண்டு. கலையில் அரசியல் செயல்பாடும் அங்கீகரிக்கப்பட்டதுதான். ஆனால் அதிகாரமிக்க அரசுகள் கலையைப் பிரச்சாரக் கேலிக்கூத்தாக்குவதை அங்கீகரிக்க முடியாது. அப்பட்டமான அரசியல் சார்பு கொண்ட இதுபோன்ற படங்களுக்கு அளிக்கப்படும் விருதுகள், விருது வழங்கும் செயல்பாட்டிலிருந்து படைப்புப் பரிமாணத்தை நீக்கிவிட்டு அப்பட்டமான அரசியலைப் புகுத்திவிடுகின்றன. விருதுகளுக்கான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் குறைக்கும் செயல்பாடு இது.
யதேச்சாதிகாரப் போக்கு, மொழி, மதம், பிரதேசவாதம் ஆகியவற்றுக்கு ஆதரவான அரசசார்புப் போக்கு ஆகியவற்றுக்கு எதிராகத் திரைத்துறையினர் திரள வேண்டியதையும் விருது அறிவிப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
மாற்றுக் கருத்துகளின் களமாகவும் உரையாடலின் தளமாகவும் இயங்கும் திரைப்பட ஊடகத்தைப் பலவீனப்படுத்தக்கூடிய இதுபோன்ற அரசியல் கையகப்படுத்தல்களை வலிமையாக எதிர்க்க வேண்டும். எந்தச் சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை அரசுகள் தீர்மானிப்பது ஜனநாயகத்தை, ஜனநாயக் கருவிகள் மூலமே சிதைப்பது என்றாக்கிவிடும். அதிகாரத்திற்கு ஏற்றாற்போன்ற கதையாடல்களை உருவாக்குவது, ஏற்றுக்கொள்ளச் செய்வது, எதிர்க்கருத்துகளைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகள் பன்முக அடையாளமும் பல்வேறு தரப்பினரிடையே சமத்துவமும் இணக்கமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான ஆரோக்கியமான முன்னெடுப்பு அல்ல.