இலக்கியத்துடன் வாழ்தல்
Courtesy: book Brahma
பெங்களூரில் ஆகஸ்டு 8,9,10 தேதிகளில் நடைபெற்ற புக் பிரம்மா இலக்கிய விழாவில் கலந்துகொண்டேன். இது இவ்விழாவின் இரண்டாம் பதிப்பு. தென்னிந்தியாவின் ஆன்மா என்ற மையப் பொருளைக் கொண்டிருந்தது விழா. இரண்டாம் நாள் முற்பகலில் ஓர் அமர்விலிருந்து இன்னொரு அமர்வுக்கு விரைந்துகொண்டிருந்தபோது புக் பிரம்மாவின் இயக்குநர் சதீஸ் சப்பரிகே தோழமையுடன் மறித்தார். “இரண்டாவது வருடமாக விழாவில் கலந்துகொள்கிறீர்கள். ஏற்பாடுகள்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். நொடிப்பொழுதுகூட யோசிக்காமல் பதில் சொன்னேன், “குறை காண முடியாத சிறப்பான ஏற்பாடுகள். ஆனால் இனி இந்த நிகழ்வின் பெயரை நீங்கள் மாற்றியாக வேண்டும்.” சதீஷ் ஒரு நொடி விழித்துப் புருவத்தை உயர்த்தினார். “ஆமாம், இது வெறும் இலக்கிய விழா அல்லவே, கலை விழா அல்லது கலாச்சாரத் திருவிழா” என்று மேலும் சொன்னதும் பூரிப்புடன் தோளைத் தட்டிவிட்டு நகர்ந்தார்.
புக் பிரம்மா நிகழ்வு இலக்கிய விழா என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது கலை விழா அல்லது பண்பாட்டு விழா. இலக்கியவாதிகள், வாசகர்கள் மட்டுமல்ல இசைக்கலைஞர்கள், திரை ஆளுமைகள், நாடகச் செயல்பாட்டாளர்கள், ஊடகத் துறையினர் முதலான பல்வேறு பிரிவினரும் விழாவின் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள். இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல பிற கலைகள் குறித்தும் அவற்றுக்கும் எழுத்துக்குமான உறவு பற்றியுமே மூன்று நாள் அமர்வுகளில் விவாதிக்கப் பட்டன. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுடன் இந்தப் பதிப்பில் மராட்டிய மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
எட்டு பிரதான அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட அமர்வுகள், ஏறத்தாழ இருநூறு ஆளுமைகள், ஆயிரத்துக் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று கோலாகலமாக நடந்த இலக்கியச் சங்கமம் பார்வையாளனாக என்னை ஆனந்தத் திகைப்பில் ஆழ்த்தியது. எந்த அமர்வுக்குச் செல்வது, எந்த மொழிக்குக் கவனமளிப்பது, எந்தப் பிரபலத்தின் பேச்சை அவதானிப்பது என்று தடுமாற்றமாகவே இருந்தது. ஆசையிருந்தும் அமர்ந்து கவனித்தவை சில அமர்வுகள் மட்டுமே.
வழக்கமான உரையாடல்கள் தவிர இம்முறை மூன்று பிரிவுகள் குறிப்பிடத் தகுந்தவையாக அமைந்தன. தென்னிந்திய மொழிகளின் முன்னோடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்த அரங்குகள் அந்த முன்னோடிகளின் ஆக்கங்களை மறு அறிமுகம் செய்வனவாகவும் இருந்தன. ஆளுமைகளுடனான நேர்முகம் இன்னொரு சிறப்பு அம்சம். பார்வை யாளர்கள் அதிகம் பங்கேற்ற நிகழ்வு இதுவாகவே இருந்தது. ஆங்கிலம்
உள்ளிட்ட மொழிகளில் நூல்கள் வெளி யிடப்பட்ட அரங்கமும் ஈர்ப்புக்குரியதாக இருந்தது.
தென்னிந்திய மொழிகளிலும், ஆங்கிலம், மராட்டியிலும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளுடன் புதிய தலைமுறையினரையும் புக் பிரம்மா இலக்கிய விழா கொண்டாடியது. தமிழிலக்கியத்தைப் பொறுத்தமட்டில் சங்க இலக்கியம் முதல் புத்தாயிரத்தின் படைப்பு முயற்சிகள் வரை விவாதிக்கப் பட்டதைச் சிறப்பானது எனலாம். இதே மதிப்பு பிற மொழிகளுக்கும் அளிக்கப் பட்டமை மேலும் சிறப்பு.
இலக்கிய ஆர்வலனாகவும், கலை ரசிகனாகவும் விழா நாட்கள் என்னை மகிழ்ச்சியுறுத்தின. ஏற்கெனவே அறிமுகமானவர்களுடன் புதியவர்களுடன் ஏற்பட்ட பரிச்சயம் இந்த நாட்களில் சாத்தியமாயிற்று. அதே அளவுக்கு மகிழ்ச்சி தந்தவை கலை நிகழ்ச்சிகள் டி.எம். கிருஷ்ணாவின் கர்நாடக இசைக் கச்சேரி (காம்போஜியில் அவர் பாடிய ‘திருவடி சரணம்’ அபாரமான கற்பனை வளத்துடன் ஒலித்தது), பிரவீண் கோச் கிண்டியின் இந்துஸ்தானி புல்லாங்குழல் கச்சேரி, கணபதிபட்டின் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கு அரங்கும் மனதும் நிறைந்திருந்தன. பழம்பெரும் நாடகக் கலைஞர் குப்பி வீரண்ணாவின் வாரிசும் நாடக விற்பன்னருமான பி. ஜெயஸ்ரீ பாடிய நாடகப் பாடல்கள் மொழி விளங்காதபோதும் வெகுவாக ஈர்த்தன. மூன்றாம் நாள் மாலை அரங்கேறிய தெலுங்கு நாடகமும் மொழி புரியாமலே கவர்ந்தது.
கலை விழாக்களில் ஆர்வலனுக்கு நேரும் இக்கட்டு யாரைப் பார்த்தோம், யாரிடம் என்ன பேசினோம் என்று நினைவு வைத்துக்கொள்ள இயலாத ஆனந்தத் ததும்பல். அதை புக் பிரம்மா கலை விழாவின் மூன்று நாட்களும் உணர்ந்தேன். கூடவே மொழியும் இடமும் வெவ்வேறானாலும் இலக்கியமும் கலையும் எல்லாரையும் ஒன்றுபடுத்துகிறது என்ற உண்மையையும்.
மூன்று நாள் விழாவில் ஆர்வலனாக நான் அடைந்தவை வெவ்வேறான உணர்வுகளும் கருத்துகளும். அநேகமாக அவை நினைவில் இனிமை சுரக்கச் செய்பவையே. இரண்டு விஷயங்கள் விதிவிலக்கு. விழாவின் முதல் நாள் முதல் அமர்வு ‘புக்கர் பரிசுக்கு அப்பால்’ என்பது. இந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்கும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தீபா பஸ்தியும் பங்கேற்றனர். மொழிபெயர்ப்பாளரும் சகபடைப்பாளரே என்ற தீபாவின் கூற்றுக்குக் கண்டனத்துடன் பதிலளிப்பதிலேயே பானு முஷ்டாக் மும்முரமாக இருந்தார். அது அமர்வுக்குச் சிறப்புச் சேர்க்கவில்லை. இரண்டாம் நாளின் முதலாவது அமர்வு ‘சொற்களும் உலகங்களும்: கருத்தியல் எதிர்க்களமாக இலக்கியம்’ என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையாளம் சார்பில் சக்கரியா, கன்னடத்துக்காக எச்.எஸ். சிவப்பிரகாஷ், தெலுங்குக்காக ஓல்கா ஆகிய மூத்த எழுத்தாளர்கள் பங்கேற்றபோது தமிழுக்காகப் பங்கேற்றவர் அஜிதன். இந்தப் பிரதிநிதித்துவம் பொருத்தமற்றதாகத் தோன்றியது.
விடைபெற்றுக்கொண்டபோது சதீஷிடம் என் அளப்பரிய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன். “அடுத்த ஆண்டும் கண்டிப்பாக வர வேண்டும்” என்றார். வருவேன், கலையும் இலக்கியமும் ஒருவரைப் புத்துணர்வுள்ளவராக்கும் என்பதைக் கண்டறிய வருவேன்” என்றேன். இது உண்மை. உணர்ந்தறிந்த உண்மை.