ஐம்பது ஆண்டுப் பயணம்
படம்: அ. கோகுல கிருஷ்ணன்
பி. ராமன், அரவிந்தன், பிரேமாமணி, சுகுமாரன், எம். கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணி இரமேஷ்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கவிதைத் தொகுப்பு ‘சுகுமாரன் கவிதைகள்’ வெளியானது. அதுநாள்வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு. அந்தத் தொகுப்புக்கான தயாரிப்புப் பணிகளிலிருந்தபோது தற்செயலாக ஒரு விஷயம் புலப்பட்டது. இலக்கியம் என்று நம்பி நான் எழுதிய கவிதை அச்சில் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளை நெருங்குகிறது என்பது கவனத்துக்கு வந்தது. அது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. வாழ்க்கையில் உருப்படியாக ஒரு காரியத்தையாவது செய்திருக்கிறோம் என்ற நிறைவை அளித்தது. அந்த நிறைவோடு அதை விட்டுவிட்டேன். ஆனால் அதைக் கவனத்தில் வைத்திருந்த சில நண்பர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக நண்பர், பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தத் தகவலைப் பதிவு செய்திருந்தார். கவிதை கண்ணதாசன் மாத இதழில் வெளிவந்தது ஞாபகத்தில் இருந்தது. ஆனாலும் வருடம் நினைவில் இல்லை. கட்டுரை எழுதிய சுப்பிரமணி இரமேஷையே அந்த ஆண்டைக் கண்டுபிடிக்க உதவும்படி கேட்டுக் கொண்டேன். விடாமுயற்சிகள் மேற்கொண்டும் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏறத்தாழ அதே கால அளவில் தீபம் இதழிலும் என் கவிதை வெளியாகியிருந்தது. 1975இல். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் எழுத வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கணக்கை நேர் செய்துகொண்டேன். இது ஒருவகையில் வியப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஓர் எளிய குடும்பத்திலிருந்து வந்தவன் நான். சொல்லிக்கொள்ளும்படியான மகிமை எதுவும் இல்லாத குடும்பம். அப்பாவுக்குப் படிக்கத் தெரியும். எழுதத் தெரியாது. அம்மாவுக்கு இரண்டும் தெரியாது. ஆனால் அவர்கள் வாழ்க்கையைக் கற்றிருந்தார்கள். பிறந்து ஒரு வயதாவற்குள்ளாகவே அப்பாவின் சகோதரி, என் அத்தை, என்னை எடுத்துச் சென்று அவர்கள் பராமரிப்பில் வளர்த்தார்கள். வசதியாகவும் செல்லமாகவுந்தான் வளர்த்தார்கள். ஆனாலும் தாய் தந்தையின் அண்மை கிடைக்காமற்போனது ஏக்கத்தைக் கொடுத்தது. அந்த ஏக்கம் தனிமையானவனாக மாற்றியது. அந்தத் தனிமையில் எனக்கு ஆறுதலாகவும் விடுதலையாகவும் அமைந்தது இளமையில் தொடங்கிய வாசிப்பு. அத்தை பக்தி இலக்கியங்களையும் வெகுசன இதழ்களையும் வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் மூலமாக வாசிப்பில் ஈடுபாடு ஏற்பட்டது. வாசிப்பு நான் தனியனல்ல என்ற உணர்வை ஏற்படுத்தியது. வாசிப்பு வேறு வகையிலும் எனக்கு உதவி செய்தது. சக நண்பர்களிடம் சின்ன மரியாதையைப் பெற்றுத் தந்தது. வளர்ந்த பெண்களிடம் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. வாசிப்பே ஒருவரை வேறுபடுத்திக் காட்டும் என்றால் வாசிப்புக்கான பொருளை உருவாக்குபவரை எத்தனை மதிக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். ஒருவேளை அந்த யோசனைதான் எழுதத் தூண்டியிருக்க வேண்டும். எழுத வந்து ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னால் விடை காண முடியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்க முடியாது என்ற உண்மை மட்டும் அனுபவத்தின் மூலம் விளங்குகிறது.
வாசிப்பின் மூலம் நான் அடைந்த இன்பத்தை, பயனை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்ளும் ஆசையில்தான் எழுதத் தொடங்கினேன் என்று இப்போது தோன்றுகிறது. எனக்கும் இந்த உலகிடம் சொல்ல மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதோ இருக்கிறது என்ற எண்ணமே எழுத்துக்கான உந்துதல். இந்த உந்துதலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் சீராட்டினார்கள், ஊக்குவித்தார்கள். கவிதைகளும் கதைகளும் எழுதிப்பார்த்தேன். நம்பிக்கைகுரிய நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் வாசித்துப்பார்க்கக் கொடுத்தேன். அவர்கள் சொன்ன நேர்நிலை அபிப்பிராயங்களும் பாராட்டு மொழிகளும் தொடந்து எழுத்தில் ஈடுபடச் செய்தன. ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளின் முன் கதையும் இதுபோன்றதுதான். விரும்பிய பெண்ணுக்குக் காதல் கவிதை எழுதிக் கொடுத்தும் அண்டை வீட்டாருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தும் தொடங்கியதுதான். இன்னொருவரின் அனுபவத்தைத் தன்னுடையதாக்கிச் சொல்லும் முயற்சியில் தொடங்கியதுதான். இந்தச் செயல் எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஒரு தருணத்தில் பொதுக் கவனத்துக்கு உள்ளாகிறது. தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்ற ஓர்மையை எழுதுபவரிடம் ஏற்படுத்துகிறது. அங்கேதான் ஒரு கவிஞர், ஓர் எழுத்தாளர், ஓர் இலக்கியவாதி உருவாகிறார். எழுத்து எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் அந்தப் புள்ளியில்தான் எழுதுபவர் பொது மனிதனாகிறார். இந்தப் பொதுமையின் காரணமாகவே எழுத்தாளர் பொருட்படுத்தப்பட வேண்டியவராகிறார்.
எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டியவர் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. எழுத்தாளரை மதிக்காத சமூகம் உருப்படாது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கருத்துகளை நான் முழுமையாக ஏற்பவனில்லை. எல்லாருக்கும் சமூகத்தில் என்ன மதிப்பு இருக்கிறதோ அதுதான் எழுத்தாளருக்கும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். சமூகத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவரை விடவோ சமூகத்தின் பயன்பாட்டுக்கான உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒருவரை விடவோ உயர்வானவர் என்று நம்பவில்லை. ஆனால் ஓர் இலக்கியவாதி சமூகத்தின் இன்றியமையாதவராக மாறும் இடமும் இருக்கிறது. அது அந்த இலக்கியவாதி தன் படைப்பில் சக மனிதரின் இருப்பை, சமூகத்தின் இருப்பை உணர்த்தும் இடம். சக மனிதர்களின் உணர்வை, அனுபவத்தைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளும் இடம். அந்த இடத்தை அடைந்தவர்களையே சமூகம் பாராட்டுகிறது. கொண்டாடுகிறது. இதன் பொருள் எழுதுகிற எல்லாரும் எழுத்தாளர்கள் அல்லர்; எழுத்தின் மூலம் அந்த மானுட இடத்தை அடைந்தவர்களே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அந்த இடத்தை நெருங்குவதற்காகவே ஐம்பது ஆண்டுகளாக முயன்றுவருகிறேன். இதை அவையடக்கமாகச் சொல்லவில்லை. தன்னறிவுடனேயே முன்வைக்கிறேன்.
ஓர் எழுத்தாளரை, இலக்கியவாதியைக் காலங் காலமாக அலைக்கழிக்கும் கேள்வி ஒன்று உண்டு. எதற்காக எழுதுகிறோம்? ஒவ்வொரு இலக்கியவாதியும் தத்தம் அனுபவத்தின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டடைந்து சொல்லியிருக்கிறார்கள். அவை பலப்பலவானவை. காலத்தை ஒட்டியும் கருத்து நிலையை ஒட்டியும் சொல்லப்பட்டவை. காலம் மாறுந்தோறும் கருத்துகள் மாறுந்தோறும் பதில்களும் மாறுகின்றன. என்னை நானே கேட்டுக்கொள்ளும் இந்தக் கேள்விக்கு எளிய பதிலையே சொல்லிக்கொள்கிறேன். இலக்கியம் என்ற ஒன்று இருப்பதனால் நான் எழுதுகிறேன். இலக்கியம் என்பது எளிய சமாச்சாரமல்ல என்ற ஓர்மையுடனேயே இதைச் சொல்லிக்கொள்ளவும் செய்கிறேன். காலத்தையும் மானுடச் செயல்கள் அனைத்தையும் அடையாளம் காட்டும் ஒன்றாக இலக்கியத்தைக் கருதுகிறேன். அதனால் எழுத்தில் ஈடுபடுகிறேன். எளிய ஜென்மம்தான். ஆனால் பேராசை மிகுந்த பிறவி. ஒரே ஜென்மத்தில் பல பிறவிகளை வாழ்ந்து பார்க்கப் பெரு வேட்கை கொண்ட பிறவி. ‘என்னுடைய நான் எனக்கு மிகச் சிறிது’ என்று ரஷ்யக் கவிஞர் மயாகாவ்ஸ்கி குறிப்பிட்ட வேட்கை. அந்த வேட்கையை நிறைவேற்றிக்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பே இலக்கியம். வேறு எந்தக் கலையை விடவும் இலக்கியம்தான் இதற்கு உகந்தது என்று நம்புகிறேன். எழுத்துதான் என்னை இன்னொருவரின் ஆன்மாவில் வாழ அனுமதிக்கிறது. இன்னொருவரின் உணர்வை என்னுடையதாகவும் ஏற்கச் செய்கிறது. இப்படிக் கூடு விட்டுக் கூடு மாறத் துணைபுரியும் இன்னொரு கலை நடிப்பு. இந்த இரண்டையும் தவிரப் பிற கலைகள் மனிதனை ஆதாரமாகக் கொண்டிருக்கலாம்; ஆனால் மனித உள்ளத்துக்குள் மாற்று வாழ்க்கை வாழ அனுமதிப்பதில்லை.
இலக்கியத்தின் வாயிலாக நான் பல்லாயிரம் மனிதர்களாக இருந்திருக்கிறேன். பல்லாயிரம் வாழ்க்கைகள் வாழ்ந்திருக்கிறேன். பல்லாயிரம் இடங்களில் வசித்திருக்கிறேன். பல்லாயிரம் காலங்களைக் கடந்திருக்கிறேன். இந்த அவதார மகிமைக்காகவே இலக்கியம் தேவைப்படுகிறது. இது ஓர் இலக்கியவாதியின் இயல்புகளையும் கட்டமைக்கிறது. ஓர் இலக்கியவாதி தனது எல்லைகளைக் கடந்தவராக இருக்க வேண்டிய கட்டாயத்தையும் முன்வைக்கிறது. அவர் குறிப்பிட்ட இனத்தையோ மதத்தையோ மொழியையோ தேசியத்தையோ சார்ந்தவராக இருக்கலாம். அவற்றைச் சார்ந்த வாழ்க்கை அனுபவங்களைப் படைப்பில் சித்தரிக்கலாம். ஆனால் இலக்கியம் என்பது அவற்றை உள்ளடக்கியிருந்தாலும் அவற்றைக் கடந்தது. அந்தப் பொருளில் எழுத்தாளர் இனத்துக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்டவர். இலக்கியத்திலிருந்து நான் பெற்ற பாடங்களில் முக்கியமானது இது. ‘நான் தேசியவாதி அல்லன்; மானுட விரும்பி’ என்று ரவீந்திரநாத் தாகூர் சொல்லுகிறார். இதை என் இலக்கிய முயற்சிகளில் கடைப்பிடிக்க முயன்றிருக்கிறேன். அதைச் சரியாக நிறைவேற்ற முடிந்திருக்கிறா என்ற சந்தேகமும் இத்தனை ஆண்டுகளாக என்னை விடாமல் தொடர்கிறது.
இலக்கியம் கோட்பாடுகளில் அல்ல; வாழ்க்கையில் அடங்குவது என்று முதன்மையாகக் கருதுகிறேன். எனினும் என்னுடைய எழுத்துகளுக்குச் சில விதிகளை வகுத்துக்கொண்டிருக்கிறேன். கவிதையோ புனைவோ கட்டுரையோ எதுவானாலும் இந்த விதிகளை முன்னிருத்தியே எழுத்தில் செயல்படுகிறேன். எழுத்தை மலினப்படுத்திவிடக் கூடாது. அனுபவத்தில் தைக்காத எதையும் எழுதிவிடக் கூடாது. புரியாத வகையில் ஒன்றை எழுதிவிடக் கூடாது. பொய்யான ஒன்றைச் சொல்லக் கூடாது. பகட்டான உணர்வைக் காட்டக் கூடாது என்பவையெல்லாம் நான் வகுத்துக்கொண்ட விதிகள். இவற்றைப் பின்பற்றியிருக்கிறேனா என்பதைக் காலம்தான் மதிப்பிட முடியும்.
பல நூற்றாண்டுகளைக் கடந்த தமிழிலக்கியத்தில் செயல்படுவது இன்பமானதும் அறைகூவல் மிகுந்ததும். இத்தனை நெடுங்காலத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனைகள் என்னை மகிழ்ச்சியடையச் செய்பவை. இந்தப் பெருவெளியில் நானும் ஒரு பகுதி என்ற உரிமையுணர்வு தரும் மகிழ்ச்சி. அதுவே அறைகூவலாகவும் அமைகிறது. இந்த இரண்டுக்கும் இடையிலிருந்து எடுத்துக்கொண்டது மூன்று கூறுகளை: அவை , இந்த மரபு ஓர் அறிவுசார்ந்த மரபு. உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்ற கருத்துக்கு மாறாக ஐம்பூதங்களின் இயக்கத்தால் உருவானதுதான் இந்த உலகம் என்ற பகுத்தறிவு நோக்கை. வாழ்க்கையே இலக்கியத்தின் மூலப்பொருள் என்ற பார்வையை. மானுடத்தை அளவிடுவது இம்மையியல் சார்ந்து என்ற விழுமியத்தை. இந்த மூலக் கூறுகளின் மீது அமைந்ததுதான் என்னுடைய இலக்கிய அணுகுமுறை. ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் உழன்றுகொண்டிருப்பதன் வாயிலாக உருவான கருத்துகள் என்ற நிலையில் இவற்றைப் பகிர்ந்துகொள்கிறேனே தவிர இலக்கியச் செய்முறைக் குறிப்பாகவோ அறிவுரையாகவோ அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். என் எழுத்தின் ஆதார மனநிலையாகக் கருதுவது பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் வாசகம் ஒன்றைத்தான். ‘நான் மனிதனின் நிலைபற்றி அவநம்பிக்கை கொண்டவன். எனினும் மனிதனைக் குறித்து நம்பிக்கை கொண்டவன்’.
அறியப்படாமல் இருப்பது ஓர் ஆனந்தம் என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த வாசகம். தனிநபர் என்ற நிலையில் அறியப்படாமலிருப்பதையே பெரிதும் விரும்புகிறேன். அப்படி இருப்பதே எல்லாருடனும் எல்லாப் போக்குகளுடனும் புழங்க வசதியாக இருக்கிறது. ஆசைப்படுகிறவற்றை அறிந்துகொள்ளத் தோதாக இருக்கிறது. ஆனால் ஒரு படைப்பாளன் என்ற நிலையில் அப்படி இருக்க இயலாது. எல்லாப் படைப்பாளருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. என் கவிதையின் ஒரு வரியையோ புனைவின் ஒரு தருணத்தையோ கட்டுரையின் ஒரு கருத்தையோ நினைவுகூரும் ஒருவரிடம் ஓர் இணக்கம் உருவாகிறது. இலக்கியம் குறைந்தளவில் செய்யக்கூடிய பெரும் பணி இந்த இணக்கத்தை உருவாக்குவதுதான். அப்படி ஓர் இணக்கம் எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
ஐம்பதாண்டு இலக்கியப் பயணத்தில் பலருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். வாசிப்பில் ருசியைக் காட்டிய என் அத்தைக்கு, கண்டதையும் படிச்சுக் கெட்டுப் போகாதே என்ற எச்சரிக்கையுடன் புத்தகம் வாங்கக் காசு கொடுத்த என் அம்மாவுக்கு, இந்தப் புத்தகத்தையெல்லாம் போட்டுக் கொளுத்தப்போறேன் என்று அச்சுறுத்தினாலும் வெளியில் என் பையன் எழுத்தாளன் என்று ரகசியமாகப் பெருமைப்பட்டுக்கொண்ட அப்பாவுக்கும் முப்பத்து நான்கு ஆண்டுகளாக என் இலக்கியப் பித்துக்கு ஈடுகொடுத்து உதவிவரும் மனைவிக்கும் என்னுடைய ஆசிரியர்களுக்கும் என்னைப் பாதித்த எல்லாத் தலைமுறை இலக்கியவாதிகளுக்கும் என்னுடைய சக இலக்கியப் பயணிகளான நன்பர்களுக்கும் எழுத்தை வெளியிட உதவிய இதழாசிரியர்கள், பதிப்பாளர்களுக்கும் என் எழுத்தைப் பொருட்படுத்தும் வாசகர்களுக்கும் வெகுவாகக் கடமைப்பட்டிருக்கிறேன். இவர்களில் யார் இல்லையென்றாலும் என் இலக்கியப் பயணம் தொடர்ந்திருக்காது.
இன்று இங்கு இந்த நிகழ்வுக்குக் காரணமான தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல் கண்ணன் செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த் துறைக்கும் காலச்சுவடு அறக்கட்டளைக்கும் பங்கேற்பாளர்களாகவும் பார்வை யாளர்களாகவும் வருகை தந்திருக்கும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.