என்றென்றும் தோழர்
வசந்தி தேவி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992இல் பொறுப்பேற்ற பிறகுதான் அவருடன் எனக்கு நேரடிப் பழக்கம். அதற்கு முன்னால் அவர் தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடி வி. சர்க்கரைச் செட்டியாரின் பேத்தி, ஜேக்டீ போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர் என்று மட்டுமே அவரைப் பற்றி அறிந்திருந்திருந்தேன்.
அப்போது நான் அஞ்சல் துறையிலிருந்து தப்பி, அறிவொளி இயக்கத்தில் பணி செய்துகொண்டிருந்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான் அறிவொளி இயக்கத்தின் தலைமை இடமாக இருந்தது. ம.சு. பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் கட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்திருந்த கட்டிடத்தில்தான் பல்கலைக்கழகம் இயங்கியது. ஆகவே நடந்துசென்று சந்திக்கக்கூடிய தூரத்தில்தான் அவர் இருந்தார்.
அவர் பணி ஏற்றதும் செய்த முதல் காரியம் திறன்மிக்க ஆளுமைகளைத் தன் பக்கத்தில் வரவழைத்து வைத்துக்கொண்டதுதான். தமிழ்த் துறைக்கு தொ. பரமசிவன், இளைஞர் நலத்துறைக்கு ச. மாடசாமி, வரலாற்றுத் துறைக்கு கே.ஏ. மணிக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி, ஊடகவியல் துறைக்கு நடராஜன், அருட்செல்வன் என்று தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகளைக் கொண்ட நல்ல குழுவை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமான ஆளுமைகளாக ஆனார்கள்.
“சேர்ந்து வேலை செய்யும்போதுதான் மனிதர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்” என்பது எனக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். அவரோடு சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. முதல் வாய்ப்பாக அவர் ஆண்-பெண் சமத்துவம் குறித்த கண்காட்சி ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பை எனக்கு வழங்கினார் (பேராசிரியர் பிரேமா வழியாக).
சுமார் 200 படங்களைத் தயார்செய்து முடித்தபோது அதை மக்கள் பார்வைக்கு வைப்பதற்கு முன்னால் தானே நேரில் வந்து பார்த்து ஓகே சொல்ல விரும்பினார். வந்து பார்த்து மகிழ்ந்தார். சில திருத்தங்கள் சொன்னார். நெல்லையில் அக்கண்காட்சியை மக்கள் பார்வைக்கு வைத்ததோடு முடிந்துபோக அவர் விடவில்லை. அப்படங்களை போட்டோ மவுண்ட்டில் ஒட்டி நீண்ட நாள் தாக்குப்பிடிக்கும் விதமாகத் தயாரிக்கச் சொல்லிப் பணம் ஒதுக்கீடு செய்தார். ஒரு பெரிய பெட்டியில் அப்படங்களைப் போட்டுப் பத்திரப்படுத்தி, பல்கலைக்கழகத்திற்குக்கீழ் இயங்கும் எல்லாக் கல்லூரிகளுக்கும் கொண்டுசென்று பார்வைக்கு வைக்கச் சொன்னார். ஒரு கலாச்சாரப் பொருளை எப்படி இயக்கமாக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்புறம் அறிவொளி மகளிர் மாநாடுகளுக்கெல்லாம் அழைத்தோம். அழைத்தபோதெல்லாம் வந்து எம் பெண்களிடம் பேசினார். அவ்வளவு பெண்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. “நீங்களெல்லாம் இத்தனை காலமாக எங்கே இருந்தீர்கள்?” என்று அவர் கேட்ட கேள்வி இன்னும் எங்கள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகளுக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கென அழைத்தபோதெல்லாம் மறுக்காமல் வந்தார். காலப்போக்கில் நான் அவரைச் சந்திக்கப் போனாலே என்ன மாதம், என்ன தேதி என்று சிரித்துக்கொண்டே கேட்பார். அவரிடம் போய் சும்மா உட்கார்ந்து டீ சாப்பிட்டு அரட்டை அடித்துவிட்டெல்லாம் வர முடியாது. அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க மாட்டார். பல சமயம் என்னை உள்ளேயே அழைக்க மாட்டார். வாசலில் வைத்தே வாயிற்காவலர்மூலம் தேதி ஓகே என்றோ இல்லை என்றோ சொல்லி ஒரு நிமிடத்தில் என்னை அனுப்பிவிடுவார். பார்க்காமலே திரும்பிய பொழுதுகள்தான் அதிகம். அவருக்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கும். கட்டாந்தரையிலிருந்து ஒரு மாபெரும் கல்வி வளாகத்தை எழுப்பிக்கொண்டிருந்தார். சம்பிரதாயங்கள் ஏதும் அவரிடம் செல்லாது.
அவருடைய மகள் திருமணம் நடந்த சேதி கேள்விப்பட்டுப் பலரும் “என்ன மேடம் கல்யாணச் சாப்பாடு போடாமலே, எங்களையெல்லாம் அழைக்காமலே திருமணத்தை முடித்துவிட்டீர்களே” என்று கேட்டபோது “திருமணத்துக்கு அவள் என்னை அழைத்ததே பெரிசு. உங்களை எங்கே அழைப்பது” என்று சிரித்துக் கடந்தார்.
வசந்தி தேவி கல்விசார்ந்த கருத்தரங்குகளில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு வாக்கியம் அவர் நமக்கு விட்டுச்சென்ற மகத்தான காவிய வரியாக இன்றும் எம் நெஞ்சங்களில் துடித்துக்கொண்டிருக்கிறது. அது “வகுப்பறைகளின் சன்னல்களைத் திறந்துவைப்போம். வெளிக்காற்று உள்ளே வரட்டும்”.
கவித்துவமான இவ்வாசகத்தைச் சொன்னதோடு நில்லாமல் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தவும் முனைந்தார். பாடத்திட்டத்தில் சமூகச் செயல்பாடுகளை இணைத்தார். மாணவ, மாணவியர் தாம் வாழும் நிலப்பரப்பின் மனிதர்களோடு உறவாடி, உரையாடி அவர்களைப் பற்றிய ஆய்வறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும். அதற்கு மதிப்பெண் உண்டு என்று கொண்டுவந்தார். இளைஞர் நலத்துறையின் மூலம் பேராசிரியர் ச. மாடசாமி அப்பணிகளை ஒருங்கிணைத்தார். மாடசாமி எம் இயக்கத் தோழர் என்பதால் அவருக்கு உதவப்போய் அத்திட்டத்தின் பலன்களை, விளைச்சலை நேரில் காணும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது.
திருநெல்வேலியில் பிரம்மாண்டமாகப் புத்தகக் கண்காட்சியை நடத்துவோம் என்று ஒருநாள் எங்கள் எல்லோரையும் அழைத்து ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்தார். மனோ புத்தகக் கண்காட்சி இப்படித்தான் ஆரம்பம் ஆனது. அதில் அவர் செய்த ஒரு காரியம் பாராட்டையும் எதிர்ப்பையும் ஒருசேரக் கொண்டு வந்தது. புத்தகக் கண்காட்சியின் நுழைவாயிலில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை வைத்துப் புத்தகம் வாங்கிச் செல்பவர்களை அதில் பதிவுசெய்ய வேண்டினார்.தான் யார், என்ன தொழில் செய்கிறேன், என்னென்ன புத்தகங்கள், எத்தனை ரூபாய்க்கு வாங்கினேன் என்கிற விவரத்தைப் பதிவுசெய்ய வேண்டினார். கண்காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி அந்தப் பதிவுகளின் தொகுப்பை வெளியிட்டார். கண்காட்சிக்கு வந்தவர்களிலேயே மிகமிகக் குறைவாகப் புத்தகம் வாங்கியவர்கள் பேராசிரியர்களும் ஆசிரியர்களும்தான் என்பதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துரைத்தார்.ஆசிரியர்கள் கடும் கோபம் அடைந்தார்கள். எங்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்திவிட்டார் என்று கொதித்தார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயத்துக்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என்று திருப்பிக் கேட்டார்.அதுதான் வசந்தி தேவி. எந்த வர்க்கத்தைத் தன் சொந்த வர்க்கமாகக் கருதினாரோ அந்த வர்க்கத்தை விமர்சிக்க ஒருபோதும் தயங்கியதில்லை. பிற்காலத்தில் அவர் பள்ளிப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி நடத்திய காலத்திலும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தம் உறுப்பினர்களை வாசிக்கத் தூண்டாமல், வாசிப்பே இல்லாத வர்க்கமாக ஆசிரியர்களை வைத்திருப்பதைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார்.
இரு முறை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.கல்வித் திட்டத்திலும் கற்பிக்கும் முறைமையிலும் தேர்வு முறையிலும் மாணவர்நலன் சார்ந்த ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடனான கல்வி சார்ந்த உரையாடல் புத்தகமாக வந்து ஓர் அலையை ஏற்படுத்தியது இந்தப் பின்னணியில்தான்.
துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற பின்னர் 2002ஆம் ஆண்டு மகளிர் ஆணையத் தலைவி ஆன பிறகும் சில பணிகள் கொடுத்தார், உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்துவந்த பின்னணியை ஆய்வு செய்யவும், அம்மக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் வந்தன.
கல்வியின் அரசியலை கல்வி அமைப்பின் உள்ளீடாக இருக்கும் வர்க்க அரசியலை அவரைப் போலத் தோலுரித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் இல்லை.அருகமைப் பள்ளிக்காகவும் பொதுப்பள்ளிக்காகவும் பல்வேறு இயக்கங்களை உருவாக்கி நடத்தினார். எங்களை எல்லாவற்றிலும் இணைத்துக்கொண்டார். எங்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
2016இல் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துச் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராகக் களம் இறங்கினார். இது அதிரடியான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் அவரிடம் இருந்ததாக நான் பார்த்தேன். ஒன்று ஜெயலலிதா எதிர்க்கப்பட வேண்டியவர். தான் கல்வியாளராக, அறிவுஜீவியாக இருந்தாலும் களத்தில் இறங்கிச் சமூகக் கடமை ஆற்றுவேன் என்பதை அறிவுலக மினுக்கிகளுக்குக் காட்ட விரும்பினார். இரண்டாவதாக, அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலத்தை, சென்னைத் தெருக்களில் சந்துபொந்துகளில் நுழைந்து நேரடியாக வறிய மக்களைச் சந்தித்து, அவர்களது குழந்தைகள் எங்கே படிக்கிறார்கள், எப்படிப் படிக்க வைக்கிறார்கள் என்கிற முதல் தகவலைத் திரட்டும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டார். அந்த அனுபவங்களை அவர் நேர்ப்பேச்சுகளிலும் சில கூட்டங்களிலும் எழுத்திலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
வயது அவருக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.கையிலெடுக்கும் எந்தக் காரியத்தையும் அத்தனை ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வார். அதில் என்றும் எமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவரே திகழ்கிறார்.
பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, உயர்கல்வியும் உயர்பொறுப்புகளும் பெற்று வாழ்ந்த அவர் எப்போதும் எளிய மக்களுக்காக மட்டுமே சிந்தித்தார், பேசினார். இயங்கினார். ஆகவேதான் அவரை நேரில் மேடம் என்று அழைத்தாலும் மனதில் தோழர் என்றே நினைத்திருப்போம்.
மின்னஞ்சல்: tamizh53@gmail.com