‘உடம்பு இருக்கிறது ஆத்மா இல்லை’ பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய விழா
புக் பிரம்மா-2025 விருதுபெறும் மலையாள எழுத்தாளர் கே.ஆர். மீரா
தென்னிந்தியா முழுவதும் பல வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறவர்களென்றாலும் உடுப்பிக்காரர்களுக்குத் தமிழர்கள் ரசிக்கிற மாதிரி சாம்பார் வைக்கத் தெரியாது. எனக்குத் தெரிந்து உடுப்பி ஓட்டல் சாம்பாரை ரசித்துச் சாப்பிட்ட ஒரே தமிழர் க.நா.சு. மட்டுமே. இந்த ஓட்டல்காரர்கள் (முதலாளிகளும், தொழிலாளிகளும்) பெரும்பாலும் தென் கன்னட மாவட்டத்தின் குந்தாபுரா பகுதியிலிருந்து வருகிறவர்கள்தான். புக் பிரம்மா இலக்கியத் திருவிழாவின் பிதாமகர் சதீஷ் சப்பரிகேவும் இந்தப் பகுதியிலிருந்து வருபவர்தான். சப்பரிகே என்பது ஒரே ஒரு வீடு கொண்ட அவரது கிராமத்தின் பெயர். சதீஷ். திகம்பர சமணர். ஆனால் தென் கன்னடப் பகுதிக்கே உரித்தான அத்தனை பண்பாட்டுத் தேட்டங்களையும் கொண்டவர். சூழ்நிலை காரணமாகப் பெருவணிகக் கலாச்சாரத்துக்கும் உலகமயமாதலுக்கும் தன்னைப் பலி கொடுத்துக் கொண்டவர். அதன் காரணமாகவே இந்தக் கட்டுரைத் தலைப்பின் பொருளை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தம் தேடும் முகமாக இந்த விழாவைத் தொடங்கினார். தென்னிந்தியப் பண்பாட்டுத் தளத்தில் சூறாவளியாக வந்த இந்த விழா வரும் வருடங்களில் கிழடு தட்டாமல் இருக்க வேண்டுமானால் நிலைய வித்வான்களை நிச்சயம் மாற்றியாக வேண்டும். இலக்கியம் துரித உணவல்ல. ஒரே சமயத்தில் நிறைய உண்ணத் தகுந்ததும் அல்ல.
2025 ஆகஸ்டு 8-10 தேதிகளில் பெங்களூர் கோரமங்கலாவில் நடந்த புக் பிரம்மாவில் ‘நினைவில் வாழும் வரலாற்று நாயகர்கள்’ வரிசையில் பி. லங்கேஷ் (1935-2000) பற்றி நடராஜ் ஹுளியார் பேசினார். லங்கேஷின் மாணவர் நடராஜ். பின்னாளில் அவரது ஆத்ம நண்பராகவும் இருந்தவர். நடராஜ் ஹுளியார் சொன்னது மாதிரியே கன்னடப் பண்பாட்டுப் புலத்தில் லங்கேஷ் ஓர் அபூர்வ நிகழ்வுதான். ‘உமாபதியின் ஸ்காலர்ஷிப் யாத்திரை’ என்ற அவரது சிறுகதையில் ஒரு பதின்வயதுக் கிராமத்து மாணவன் உதவித்தொகைக்கு அலையும் பயணத்தில் நிறையக் கற்றுக்கொள்கிறான். ஸ்காலர்ஷிப் என்பது உதவித்தொகை மட்டுமல்லவே. அறிவுச்கேகரிப்பும் கூட அல்லவா? உமாபதி கற்றுக்கொண்டது வாழ்க்கை அனுபவச் சேகரிப்பு. லங்கேஷின் பயணமும் அவ்வாறே இருந்தது.
லங்கேஷின் பண்பாட்டுப் பயணத்திற்கு நடராஜ் நல்ல அறிமுகம் கொடுத்தார். ஒரு படைப்பாளியாக லங்கேஷ் உருவத்திற்கு முக்கியம் கொடுத்ததில்லை. கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், விமர்சனம் என எதுவாக இருந்தாலும் அதில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும் என்று நம்பினார். தனது படைப்புகளில் ஒருங்கிணைந்த உணர்வியம் (integrated sensibility) இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொண்டார். முதலில் இலக்கியம், பிறகு திரைப்படம், அப்புறம் இதழியல், மீண்டும் இலக்கியம், இடையிடையே நாடகம் என லங்கேஷின் செயல்பாடுகள் இருந்தன. அவரது படைப்பு நடை தனக்குத்தானே பேசிக்கொள்வது மாதிரி இருக்கும். அதுவே ஒரு தலைமுறை வாசகர்களின் ரசனையை உருவாக்கியது. அவரது அரசியல் பார்வை ஷாந்தவேரி கோபால கௌடா வழியானதாகவும், சித்தாந்த நோக்கு லோஹியா வழிப்பட்டதாகவும் இருந்தன.
லங்கேஷிடம் பிரிக்க முடியாத அம்சமாக இருந்தது அவரது பதற்றமும் துடிப்பும்தான் (angst and restlessness) என நடராஜ் சொன்னார். இதனாலேயே அவரது படைப்புப் புலமும் மாறிக்கொண்டிருந்தது. (அவர் எடுத்த முதல் திரைப்படம் ‘பல்லவி’ அந்தக் காலகட்டத்தின் துல்லியமான சமூக, அரசியல், பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருந்தது). தான் விடுக்கும் செய்தி அதிக எண்ணிக்கையிலான மக்களைப் போய்ச்சேர வேண்டும் என்று நினைத்து லங்கேஷ் பத்திரிகேயைத் தொடங்கினார். அறம் தவறிய செயல்பாட்டை யாரிடம் கண்டாலும் அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். எஸ்.எம். கிருஷ்ணா, எல்.கே. அத்வானி, இந்திரா காந்தி என யாரும் அவரிடமிருந்து தப்பவில்லை. சோனியா காந்தியைத் தேசப்பற்றுடைய இந்தியர் எனவும், வாஜ்பாயை அந்நியர் என்றும் அழைக்கக்கூடிய திராணி அவருக்கு இருந்தது. குண்டுராவைப் பதவியிலிருந்து இறக்கியதில் அவருக்குப் பெரும்பங்கு இருந்தது. (லங்கேஷ் பத்திரிகே யில் விளம்பரங்களே இருக்காது. அதை கொள்கையாக வைத்திருந்தார்.)
இதழியலிலிருந்து மீண்டும் இலக்கியத்திற்கு வந்த லங்கேஷ் நாடகத்தில் கவனம் செலுத்தினார். தனக்குள் இருக்கக் கூடிய உலகாயத் தேட்டங்களுக்கும், லட்சியம்சார் சுயத்துக்கும் இருக்கக்கூடிய தொடர்பை லங்கேஷ் தனது படைப்புகள்மூலம் கொண்டுவர முயற்சித்தார்.
உருவகங்களே லங்கேஷின் படைப்புக் கருவியாக இருந்தன. தனது வாழ்நாள் முழுவதும் நிறுவன எதிர்ப்பாளராக இருந்தவர் மதம், அரசியல், சாதி உள்ளிட்ட எல்லாவகையான வன்முறைக் கும்பல் (mafia)களையும் எதிர்த்தார். லங்கேஷின் இறுதிக் காலம்வரை அவருடனிருந்த நடராஜ் ஹுளியார் மனிதன் அடிப்படையில் ஒரு தீய சக்தி என லங்கேஷ் கூறியதாகவும் சொன்னார்.
ஒரு தனி மனிதன் எவ்வாறு ஒரு சமூகத்தின் சிந்தனைப் போக்கை மாற்ற முடியும் என்பதை நம்பத்தகுந்த முறையில், அழகிய ஆங்கிலத்தில், உணர்வுப்பூர்வமாகச் சொன்ன நடராஜ், லங்கேஷின் ஆளுமைப் பிரகாசத்தின் முன்னால் யு.ஆர். அனந்தமூர்த்தியே மங்கிப்போய் விடுவார் என்று சொன்னது கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
ஒரு பண்பாட்டு நாயகனுக்கு புக் பிரம்மா செலுத்திய பொருத்தமான அஞ்சலியாக ஹுளியாரின் பேச்சு இருந்தது.
படைப்புக் காலங்களில் அடூர் 12 படங்களையும், காசரவள்ளி 16 படங்களையும் மட்டுமே எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது படைப்புகள் அவர்களது காலகட்டத்தியப் பொருளியலை, சமூகத்தை, அரசியலை, பண்பாட்டை நேர்மையாக, நேர்த்தியாக, கலாப்பூர்வமாக வெளிப்படுத்தின. எந்தச் சமரசத்திற்கும் உட்படாமல் எடுக்கப்பட்டவை அந்தப் படங்கள். இந்த ஆளுமைகளைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு தரவுகள் மிகவும் உதவியாக இருக்கும். ஒன்று ‘பிம்பங்களும் பிரதிபலிப்புகளும்’(Images/Reflections) என்ற தலைப்பில் அடூரைப் பற்றி காசரவள்ளி எடுத்த ஆவணப்படம் (2015). இரண்டு ‘பிம்பமும், பிம்ப உருவாக்கமும்’ (பிம்ப, பிம்பன) என்னும் தலைப்பில் கிரீஷ் காசரவள்ளியும், கோபாலகிருஷ்ண பையும் எழுதிய புத்தகம் (2024). இவை பற்றிய அறிமுகம் இல்லாவிடிலும்கூட இவர்களது சொல்லாடலைப் புரிந்துகொள்ள முடியும்.
‘இலக்கிய ஆத்மா வெளிப்படும் இந்திய இணை சினிமா’ (Literary Soul of Indian Parallel Cinema) என்பதுதான் அந்த அமர்வின் தலைப்பு. இந்தத் தலைப்பே தவறு என்று அடூர் சுட்டிக்காட்டினார். ‘நாங்கள் இணை சினிமா எதுவும் எடுப்பதில்லை. சினிமாதான் எடுக்கிறோம். எதற்கும், யாருக்கும் ‘இணை’யாக நாங்கள் எதுவும் செய்வதில்லை. திரைப்பட ஆக்கம் ஒரு புனிதமான தொழில். அதற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதற்கென்று சமூகப் பொறுப்பு இருக்கிறது. மாற்றத்திற்கு உட்படும் எந்த நிகழ்வையும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ரசிகர்களை நாங்கள் மதிக்கிறோம். எங்களது அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்’ என்று சொல்லி நிகழ்ச்சியைத் தொடங்கினார் அடூர்.
அவர் பேசியதன் தொடர்ச்சியாகப் பேசிய காசரவள்ளி, ‘இணை சினிமா என்பதை ஊடகங்கள்தான் உருவாக்கின. கலைப்படம் என்ற சொல்லாக்கம் ஐரோப்பாவில்தான் உருவானது. அமெரிக்கர்கள் அதை சுயத்துவ சினிமா (independent cinema) என்றார்கள். சினிமாவுக்கும், சந்தைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அடிப்படையில் இது ஒத்த ரசனையுடைய மனிதர்களுக்கிடையில் (சஹிருதயர்) நடக்கும் அனுபவப் பகிர்வுதான்.’ என்றார்.
நெறியாளர் அர்ச்சனா வாசுதேவன் அடூர்பற்றி காசரவள்ளி எடுத்த ஆவணப் படம் தன்னளவில் கலைப்படைப்பாக மாறியிருப்பதைக் குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றிய காசர வள்ளி ‘எங்களுக்குக் கிடைக்கும் அனுப வங்களோடு கற்பனைகளைச் சேர்க்கிறோம். படைப்பில் இவை இரண்டுமே கலந்து கிடக்கின்றன’ என்றார்.
காசரவள்ளியிடம் ‘திரைப்படங்கள் சம காலத்திய அரசியல், சமூக, பண்பாட்டு வெளிப்பாடுகளா?’ எனக் கேட்டார் அர்ச்சனா.
‘அரசியல் இல்லாத எந்த மனிதச் செயல்பாடும் இல்லை. இறுதியாக உங்கள் முன்னாலுள்ள கேள்வி, நீங்கள் நிறுவனங்களுக்கு எதிரானவரா இல்லை ஆதரவானவரா என்பதுதான். இதை நான் அரசியலியம் (கன்னடத்தில் ‘ராஜகீயதே’) என்று சொல்கிறேன். பிம்பங்களுக்குப் பின்னாலுள்ள அரசியல், பிம்பங்களை உருவாக்குவதற்குப் பின்னாலுள்ள அரசியல் (politics of image, politics of imaging)’ இது ஒரு உருவாக்க முறை. நல்ல கலை என்பது நமக்குப் பரிச்சயமான ஒன்றைப் பரிச்சயமில்லாததாக ஆக்கும். பரிச்சயமில்லாத ஒன்றைப் பரிச்சயமுள்ளதாக ஆக்கும்.’
காசரவள்ளியைத் தொடர்ந்து பேசிய அடூர், இருவருடைய படங்களும் உள்ளூர்ச் சூழலையே மையமாகக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டார். ‘நம்ம ஊர் ஆட்கள் எல்லாரும் ஒரு படத்தில் கதை என்ன என்றுதான் தேடுகிறார்கள். கதையில் அடுத்து என்ன என்னும் ஆவல்தான் அவர்கள் படத்தைப் பார்க்கத் தூண்டுதலாக இருக்கிறது. நாங்கள் ‘என்ன?’ என்பதைவிட ‘ஏன்? எப்படி?’ என்பதில்தான் ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம். ஒரு கதகளி நிகழ்ச்சியில் என்ன கதை சொல்லப்போகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி எப்படி ரசிக்கத் தகுந்ததாக மாறுகிறது?’
படங்களின் உலகத்தன்மை (universal element) குறித்துப் பேச்சு வந்தது. உள்ளூர்ப் பண்பு (local) இல்லாத எதுவும் உலகத்தன்மை பெற முடியாது என்பது இருவரின் ஒருமித்த கருத்து. எனது படைப்பு உலகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி உள்ளூர் அம்சங்களைப் புறக்கணித்தால் அது ஒருபோதும் நல்ல கலைப்படைப்பாக ஆகாது.
பெரும்பாலான விஷயங்களில் ஒத்துப்போனவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் முரண்பட்டார்கள். தற்போது காணக்கிடைக்கும் இளைஞர்களின் திரைப்பட முயற்சிகள் உற்சாகமளிக்கின்றன என்று காசரவள்ளி சொல்ல ‘இல்லை. அவை ஏமாற்றமளிக்கின்றன’ என்று அடூர் மறுத்துச் சொன்னார்.
பிரம்மா இலக்கியத் திருவிழாவின் ஏற்பாடுகள் உலகத் தரத்தில் இருந்தன. அடூர் தனது பேச்சுக்கிடையில் ‘தமிழ்க் கவிஞர் சுகுமாரன் குறிப்பிட்டபடி இது ஒரு பண்பாட்டுத் திருவிழா’ என்றார். அறிமுகப்படுத்தியவர்கள், நெறியாள்கை செய்தவர்களில் பலரும் வயதில் இளையவர்களாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையில் அறிமுகம் இருந்ததாலும், நிகழ்ச்சியை நடத்துவதில் நல்ல பக்குவம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால் தென்னிந்திய மொழிகளுக்கிடையில் இலக்கியம் குறித்த கருத்தாடல் நடைபெற வேண்டும் என்பது அமைப்பாளர்களுடைய நோக்கமாக இருந்தால் அது நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அந்தந்த மொழிகளுக்கான அமர்வில் வேற்று மொழியினரை அதிகம் காண முடியவில்லை. இல்லை என்றே சொல்லலாம். கன்னட விமர்சனம்பற்றிய அமர்வில் பேச்சாளர்கள் நான்கு பேர்களாகவும், பார்வையாளர்கள் மூன்று பேர்களாகவும் இருந்தார்கள். அந்த மூன்று பேர்களில் (கன்னடரல்லாத) நானும் ஒருவன். பொது அமர்வில் கலந்துகொண்டு பேசியவர்களுக்கு மொழி பிரச்சினையாக இருந்தது.
ஆங்கிலத்தில் அறிமுகமாகியிருந்த எழுத்தாளர்களுக்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. மின்னணு ஊடக வெளிச்சம் கொண்டவர்களுக்கும் மவுசு கூடுதலாகத் தெரிந்தது. இந்த விழாவின் பேராளர்களில் பெரும்பகுதியினர் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் அந்தந்த மொழிகளின் பொதுவெளிப் பண்பை அறிய மாட்டார்கள். அதைப் பிரதிபலிக்கவும் அவர்களால் முடியாது. பெருநகர் சார்ந்து நடக்கும் பண்பாட்டுக் கருத்தாடல்களில் சத்தியம் அபூர்வமாகவே வெளிப்படும்.
குறிப்பிட்ட எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் விழாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிந்தது. எல்லாம் இருந்தாலும் இந்திய அளவில் இத்தகைய ஒரு பண்பாட்டுத் திருவிழா வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. உலகின் பிற பகுதிகளில்கூட இத்தகைய வகைமை உடைய திருவிழாக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். பன்மைத்துவம் என்பதை சதீஷ் சப்பரிகே நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.
மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com