பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்., Special Intensive Revision - SIR) என்னும் முன்னெடுப்பு பாஜக ஆட்சியின், தேர்தல் ஆணையத்தின் நோக்கம் பற்றிய பலவிதமான ஐயங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே அசைக்கக்கூடியதாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று விமர்சிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இந்த நடவடிக்கையின் தாக்கம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக்கூடிய வேறொரு நடவடிக்கை குறித்த விவாதமும் தேவைப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் (Delimitation) என்னும் செயல்முறைதான் அது. இந்தியாவில் உயர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளை மாற்றியமைப்பதே இந்தச் செயல்முறை. இதன் விளைவாகத் தென்னக மாநிலங்கள் மக்களவையில் தங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயம் உள்ளது. சரியாகச் சொல்வதானால், தென்னக மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதியில்கூட வெற்றிபெறாத ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகலாம்.
இந்தியா முழுமைக்குமான தொகுதி மறுசீரமைப்புச் செயல்முறை 2027 மார்ச்சுக்குப் பிறகு நிறைவு செய்யப்படும். மத்திய அரசு, தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002, 2003இன்படி, மார்ச் 2027இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 (‘2026க்குப் பிறகு நடக்கும் கணக்கெடுப்பு’ என்கிறது சட்டம்) முடிந்தவுடன் இந்தச் செயல்முறையைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறைக்கான தரவு ஆதாரம் 2027ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக இருக்கும். 2027இல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்ததன் மூலம் தற்போதைய உள்துறை அமைச்சகம், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பே தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
திருத்தப்பட்ட தரவுகள்
1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, எல்.கே. அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட 2001 கணக்கெடுப்பு அளவுக்கு அதிகமாகத் திருத்தப்பட்ட தரவை வெளியிட்டதைக் கவனிக்க முடிகிறது. அதில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை, 1901 முதல் முந்தைய நூற்றாண்டு முழுவதிலும் இல்லாத அளவில், அதிக சதவீத வளர்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டது. 2001 கணக்கெடுப்பு 3 கோடியே 40 லட்சம் மக்கள்தொகை அதிகரிப்பைப் பதிவு செய்தது (1991இல் 13.20 கோடி; 2001இல் 16.60 கோடி). இதற்கு மாறாக, 2011 கணக்கெடுப்பின்படி, 2001, 2011க்கு இடையில் உ.பி.யில் மக்கள்தொகை அதிகரிப்பு 3 கோடியே 36 லட்சம் மட்டுமே (2011இல் 19.98 கோடி). 2001 – 2011 ஆகிய பத்தாண்டுக் கால வளர்ச்சி விகிதம் 20.23%. இது 1991 – 2001 காலகட்டத்தைவிட 5.62% குறைவு. இந்த விவரங்களை நுட்பமாக அலசினால், 2001 கணக்கெடுப்புத் தரவுகளில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை சுமார் 60முதல் 70 லட்சம்வரை உயர்த்தப்பட்டுள்ளது தெரியவரும்.
2028 மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தும் என்று நம்புவதற்குப் போதுமான காரணங்களை அரசாங்கம் அளித்துள்ளது. அதற்காகப் பல ஆயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை:
• 2021 கணக்கெடுப்பை ஒத்திவைத்து, அதை 2031க்குப் பதிலாக 2027இல் நடத்துவது.
• ஜனவரி 2029வரை ஓய்வு பெறாத ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நியமித்தது.
• தற்போதைய எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டியது.
மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படவிருக்கும் நிலையில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கும் மாநிலங்கள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையால் கணிசமாகப் பாதிக்கப்படும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி அதை 2.0 என்ற மக்கள்தொகை பதிலீட்டு விகிதத்திற்குக் கீழ் கொண்டுவந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகை பதிலீட்டு விகிதம் என்பது ஒரு மாநிலத்தில் கருவுறும் எண்ணிக்கை அதன் மக்கள்தொகையைப் பதிலீடு செய்யும் அளவில் இருத்தல். ஒரு நாட்டில் கருவுறும் வயதுள்ள ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என்றால், அந்த நாடு “மக்கள்தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகிறார்கள். தென் மாநிலங்கள் இந்த நிலையை அடைந்துவிட்டன. வடக்கு மாநிலங்கள், குறிப்பாக உ.பி., பிகார் ஆகியவை இந்த நிலையை எட்டவில்லை. எனவே அவற்றின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகவே மக்கள்தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பில் அவற்றுக்குக் கிடைக்கும் மக்களவைத் தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கும்.
முந்தைய மறுசீரமைப்புகளில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது (1951:494; 1961:522; 1971:543). புதிய மறுசீரமைப்பு ஆணையம் ‘இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருக்கும்’ மாற்றங்களை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே முழுமையாக அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தால், 2028 மறுசீரமைப்பில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 780ஆக மாறலாம். இதன் விளைவாக, 2029க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் இந்தத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவை ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவிற்கும் வடகிழக்குக்கும் வெளியே அமைய வாய்ப்புள்ளது. இது வரவிருக்கும் பல பதிற்றாண்டுகளுக்கு இந்தி பேசுவோரின் ஆட்சி அமைவதற்கு வழி வகுக்கும்.
இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதற்குச் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாத்தியமான நடவடிக்கைகள்
மறுசீரமைப்பு ஆணையத்தையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளையும் நீதிமன்றங்களில் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் வெளியீடான ‘Principles and Recommendations for Population and Housing Censuses (Revision 2) (New York: 2008)’, வரவிருக்கும் கணக்கெடுப்பின் சில அம்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வழிகளை வழங்குகிறது. இதன்மூலம் மறுசீரமைப்பு ஆணையம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
“மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்முறையும் முடிவுகளை வெளியிடுதலும் முழுமையாக நிறைவடைந்தால் ஒழிய” மறுசீரமைப்பு ஆணையத்தை நியமிக்கும் செயல்முறையைத் தொடங்க முடியாது என்று சட்டம் குறிப்பிடுகிறது. அதாவது மொழி, பண்பாட்டு, மத, சமூகச் சிறுபான்மையினர் உட்பட மக்கள்தொகை தொடர்பான அனைத்துத் தரவுகளும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகத்தால் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது இதன் பொருள். இந்த வகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அவசர அவசரமாக மேற்கொள்வதைத் தடுக்கலாம்.
மறுசீரமைப்புச் செயல்முறை ஒரு மாநிலத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்பட்ட முன்னுதாரணம் உள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, அதை 2.0 என்ற மக்கள்தொகை பதிலீட்டு விகிதத்திற்குக் கீழ் கொண்டுவந்த மாநிலங்களுக்கு மட்டும் மறுசீரமைப்பைச் செயல்படுத்தலாம். 2.0 என்ற மக்கள்தொகை பதிலீட்டு விகிதத்திற்குக் கீழ் கொண்டுவராத மாநிலங்களில் மறுசீரமைப்பை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடைக்கும் பாரபட்சமான சாதகத்தைத் தடுக்கலாம்.
மறுசீரமைப்பு ஆணையத்தில் உள்ள இரண்டு முதன்மை உறுப்பினர்களில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவும் ஒருவர் வட இந்தியாவைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த நடைமுறை 1952 (நீதிபதி என். சந்திரசேகர ஐயர், சுகுமார் சென்), 1963 (நீதிபதி ஜே.எல். கபூர், டி.வி.கே. சுந்தரம்), 1973 (நீதிபதி ஜே.எல். கபூர், டி. சுவாமிநாதன்) ஆகிய ஆண்டுகளில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டது. இது தேஜகூ ஆட்சியின்போது 2002இல் மாற்றப்பட்டது (நீதிபதி குல்தீப் சிங், பி.பி. டாண்டன்). இரு பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் என்னும் ஆரோக்கியமான நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். இதன்மூலம் தென்னக மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
துணை உறுப்பினர்களின் தேர்வு (ஐந்து பேர் மக்களவை சபாநாயகராலும் ஐந்து பேர் மாநிலச் சட்டமன்றங்களின் சபாநாயகர்களாலும் நியமிக்கப்படுவார்கள்) மக்களவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் பங்களிப்பை விகிதாசாரப்படி பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். தன்னிச்சையான முறையில் நியமனம் இருக்கக் கூடாது.
வாக்காளர்களின் அடிப்படையில் மறுசீரமைப்பு
மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் அல்லாமல், 17 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும். மறுசீரமைப்பு ஒட்டுமொத்த மக்கள்தொகைக்காக அல்ல, வாக்காளர் தொகுதிகளுக்காகவே செய்யப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது, குழந்தைகளைக் குறைவான சதவீதத்தில் கொண்ட மற்ற மாநிலங்களில் வாக்குகளின் மதிப்பைக் குறைக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைப் பதிலீட்டு விகிதமும் மறுசீரமைப்பின் அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டும். கடந்த மறுசீரமைப்பில், 1971 கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றியமைத்தபோது மக்கள்தொகை சுமார் 54.40 கோடியாகவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543ஆகவும் இருந்தது (தோராயமாக 10 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மக்களவை உறுப்பினர்). 2025இல் மக்கள்தொகை சுமார் 140 கோடி. இப்போது 25 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என இருக்கிறது. அடுத்த மறுசீரமைப்பில் இதை 20 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஆக்கலாம். இதனால் மக்களவையின் பலம் 700ஆக அதிகரிக்கும். 1.8 மக்கள்தொகை பதிலீட்டு விகிதம் கொண்ட மாநிலங்களில் 18 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும்; 2.2 மக்கள்தொகை பதிலீட்டு விகிதம் கொண்ட மாநிலங்களுக்கு, 22 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் இருக்க வேண்டும். இது, மக்கள்தொகையைக் குறைப்பதில் முனைப்புடன் செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிப்பதைத் தவிர்க்கும். பிகார் (பிறப்பு விகிதம் 3.0), ஜார்கண்ட் (2.3), சத்தீஸ்கர் (2.2), மணிப்பூர் (2.2), மேகாலயா (2.9), உத்தரப் பிரதேசம் (2.4) ஆகிய மாநிலங்கள் எதிர்காலத்தில் 2.1 அல்லது அதற்குக் குறைவான கருவுறுதல் விகிதத்தை அடையும்வரை அவற்றின் மறுசீரமைப்பை நிறுத்திவைக்க வேண்டும்.
கடந்த மறுசீரமைப்பிலிருந்து இடப்பெயர்வு அதிகரித்துள்ளது. தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களுக்கு வளர்ச்சியடையாத மாநிலங்களிலிருந்து இடப்பெயர்வு அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கடந்த இருபது ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இடப்பெயர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களின் வாக்காளர் எண்ணிக்கையில் கணக்கீட்டிற்காக இதையும் சேர்க்க வேண்டும். பொருளாதாரரீதியாக வளர்ச்சியடையாத மாநிலங்களிலிருந்து இதைக் குறைக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நெருக்கடியை அரசியல், ஊடகங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்ற அவைகள், நீதிமன்றங்கள், கல்விப்புலம், பொதுமேடைகள் எனச் சாத்தியமான அனைத்துத் தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் தென்னக மாநிலங்கள் இந்திய அரசியலை வெறுமனே வேடிக்கை பார்க்கும் சாட்சிகளாக மாறும் அவல நிலை விரைவில் உருவாகிவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வருமானத்தைப் பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கும் மனித வளக் குறியீடுகளுக்கும் கணிசமாகப் பங்களித்துவரும் தென் மாநிலங்களைத் தண்டிப்பதாக மறுசீரமைப்பு அமைந்துவிடுவதைத் தடுப்பது இந்த மாநிலங்களின் நலனுக்கு மட்டுமின்றி இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி உணர்வுக்கும் மிக முக்கியமானது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தைப் போலவே மிகவும் தீவிரமாக விவாதித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முக்கியமான பிரச்சினை இது.
தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள தரவுகளில் பெரும்பாலானவை வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான கணேஷ் தேவியின் ஆய்விலிருந்து எடுத்தாளப்பட்டவை – ஆசிரியர்.
•••
மௌனத்தின் அபாயம்
1990ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதிக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதோடு கிழக்கில் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணத்தை நூற்றாண்டு காலமாகத் தமது வேரடி மண்ணாகக் கொண்டிருந்த சுமார் 75,000 இஸ்லாமிய மக்கள், தமது உழைப்பில் சேர்த்த எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாமல், அமைப்பின் பேரிலான சுரண்டலுக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். தமிழர்–முஸ்லிம் உறவைப் “புட்டும் தேங்காய்ப்பூவும்போல” எனப் பெருமிதம் கொண்டிருந்த காலம் புலிகளின் எதேச்சாதிகாரப் போக்கில் கரைந்தோடிவிட்டதுதான் துயரம்.
முஸ்லிம்கள் தமது ஈழப் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை என விடுதலைப் புலிகளின் தலைமை நம்பியதன் விளைவாக நிகழ்ந்த இந்த நடவடிக்கை இனச் சுத்திகரிப்புக்கு இணையானது. இந்தக் கட்டாய வெளியேற்றம், காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் 100க்கும் மேற்பட்டோரின் படுகொலை, தமிழ்-முஸ்லிம் எல்லைப்புறக் கிராமங்களில் நடந்த வன்முறைகள், கடத்தல்கள் அனைத்தும் சிங்கள இனவாத அரசு தமிழர்கள்மீது நடத்திய இனச் சுத்திகரிப்பு முயற்சிகளோடு ஒப்புநோக்க வேண்டியவை.
புலிகளின் இந்த நடவடிக்கை தமிழ்-இஸ்லாமிய உறவில் ஆறாத வடுவானது. தோழமை இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அங்கே நடப்பது ‘விடுதலைப் போராட்டம்’ அல்ல, ‘இனவெறிப் போராட்டம்’ என்ற விமர்சனம் எழக் காரணமாயிற்று. பல்லினச் சமூகத்தில் முரண்பாடுகள் இயல்பானவை என்றாலும், புலிகள் அந்த முரண்பாடுகளை முறையாகக் கையாளாமல், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பகைமையையும் அவநம்பிக்கையையுமே நிரந்தரமாக விதைத்தார்கள். புலிகளின் ஏகபோகத் தமிழ்த் தேசியவாதமும்
இனவெறிச் செயல்பாடுகளுமே அதற்குக் காரணம். இன்றுவரை காயாது இருக்கும் இனச் சுத்திகரிப்பின் வடு, தமிழ்-இஸ்லாமிய உறவை எட்டாக்கனியாக மாற்றிவிட்டது. இருப்பினும் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களிலும் நுண் அரசியல் தளங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதே இப்போதைக்கான நம்பிக்கை.
2004ஆம் ஆண்டின் சமாதானக் காலகட்டத்தில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றம் ‘மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத தவறு’ எனப் புலிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆயினும், படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் அவர்கள் எந்தவிதப் பொறுப்பும் ஏற்கவில்லை. இது தவறுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் குறித்து அக்கறைப்படும் சமூக இயக்கங்களோ, அரசியல் கட்சிகளோ, முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் படுகொலைகளுக்கும் எதிராக வெளிப்படையான கண்டனமோ வருத்தமோ தெரிவித்ததாகப் பதிவுகள் இல்லை. அன்றைய காலகட்டத்தில் ஈழப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்த ஆதரவு வலுவானது. புலிகளின் இந்தக் கொடூரச் செயல்களைக் கண்டிப்பது, ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழப் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்று அக்காலத் தலைவர்களும் இயக்கங்களும் நம்பினார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஓர் அமைப்பு, அதே தவறைத் திரும்பச் செய்வதை விமர்சிக்கத் தமிழகத்தின் பிரதான நீரோட்ட அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டின.
திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் உட்படத் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள், தமிழர்கள் (பெரும்பாலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) மீது இலங்கை அரசு வன்முறைகள் நிகழ்த்தியபோது உடனடியாகக் குரல் கொடுத்தன. ஆனால் விடுதலைப் புலிகளால் மதச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது அவை மௌனம்காத்தன. இந்த நடவடிக்கையைக் கண்டிக்காமல், வருத்தம் தெரிவிக்காமல், மௌனத்தைக் கடைப்பிடித்து இனச்சுத்திகரிப்புக்கு ஆதரவளித்தன. தமிழகத்தின் மைய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் இந்தச் செய்தியே இடம்பெறவில்லை. ஆனால் கொழும்பிலிருந்து வெளியான சரிநிகர் 1990 நவம்பர் 4வது இதழில் முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்துத் தலையங்கமும் சில கருத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகளின் மௌனம், அவர்களின் சிறுபான்மை ஆதரவின் வரையறையையும் மதச்சார்பற்ற கொள்கையில் உள்ள பாரபட்சத்தையும் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தில் தமிழர் இன அடையாளம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டதே தவிர, மதச்சார்பற்ற சிறுபான்மை உரிமைப் பாதுகாப்பு முதன்மைப்படுத்தப்படவில்லை. மொழி அடையாளம் என்று வரும்போது மத அடையாளம் பின்னுக்குப் போய்விடுமா? மொழி அடையாளத்தின் பெயரால் மத அடிப்படையில் நடக்கும் வன்முறைகளை அனுமதிப்பது அந்த வன்முறையைக் காட்டிலும் அநீதியான செயல் அல்லவா?
தமிழ்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள், சில எழுத்தாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மட்டுமே இந்தக் கொடூரங்களைக் கண்டித்தன. அது பொதுவெளியில் அல்லது மைய நீரோட்ட அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகள், இயக்கங்கள் தமது அரசியல் ஆதாயங்களுக்காகவும், தமிழ்த் தேசிய உணர்வுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், ஒரு மதச் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டும் காணாததுபோல் அல்லது நியாயப்படுத்த முயல்வது ஜனநாயக உணர்வுகளுக்கு ஏற்றதல்ல. இந்த மௌனங்களுக்குத் தமிழ்த் தேசிய உணர்வு, அரசியல் ஆதாயங்கள், புலிகளின் செல்வாக்கு, புலிகள் ஏற்படுத்திய அச்சம் ஆகிய காரணங்களும் உண்டு. இந்தக் காரணங்களை வைத்து இன அழித்தொழிப்பை நியாயப்படுத்த முடியாது. இனச்சுத்திகரிப்பு என்பது இனச்சுத்திகரிப்பு மட்டுமே. மத, இன, சாதி என எவ்வகையான அழித்தொழிப்பும் அழித்தொழிப்பு மட்டுமே. எவ்விதக் கோட்பாட்டு விளக்கமும் அழித்தொழிப்பை நேர்செய்துவிட முடியாது.
முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்து 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த வன்முறையின் கோரத்தை மட்டுமின்றி அந்த வன்முறை தொடர்பான மௌனத்தின் அபாயத்தையும் வரலாறு நமக்கு நினைவுபடுத்துகிறது.
