30 50


உருவ ஓவியம்: மு. சுந்தரன்
கலை இலக்கியங்களுக்கூடான கற்பித்தலின் தனித்துவமும் தாக்கமும், உணர்வுத்தோழமைச் செயற்பாடுகள், போரிலக்கியத்தின் வரையறை குறித்த விவாதங்கள், மனித மேலாண்மைக்குப் பிந்திய காலத்தின், செயற்கை நுண்ணறிவுப் பாவனை பரவத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில் கலை இலக்கியங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கருத்துகள் உரையாடப்பட்டன.
காலச்சுவடு பதிப்பகத்தின் 30 ஆண்டு நிறைவையும் கவிஞர் சேரனின் 50 ஆண்டுக்கால கலை இலக்கிய வாழ்வையும் முன்நிறுத்தும் நிகழ்வு 19.10.25வில் ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்பட்டது.
இந்த வருடம் காலச்சுவடு பதிப்பகம் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது. கவிஞர், பேராசிரியர் சேரன் கலை இலக்கிய வாழ்வியக்கத்தில் அரை நூற்றாண்டை நிறைவு செய்துள்ளார். படைப்புத்துறை சார்ந்த இந்த இரண்டு அடைவுகளையும் அடையாளப்படுத்தும் வகையில் ஏற்பாடு அமைந்தது.
தமிழ்ப் பதிப்புத் துறை, தமிழ்க் கவிதை, மொழியாக்கங்கள், ஏனைய மொழிகளில் தமிழ் நூல்கள் வெளிவரும் வாய்ப்பு, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலான இலக்கிய பதிப்பக முயற்சிகள் குறித்தும் உரையாடப்பட்டது.
காலச்சுவடு இதழினதும் பதிப்பகத்தினதும் தோற்றம், அவற்றின் பயணத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள், வாய்ப்புகள், சவால்கள் குறித்த கருத்துகளை கண்ணன் பகிர்ந்துகொண்டார். 30 ஆண்டு காலப் பயணத்தினை வரலாற்றுரீதியாகவும் தகவல்ரீதியாகவும் பகிர்ந்த அவர், காலவோட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்த அனுபவங்களையும் தொட்டுச்சென்றார்.
‘காலச்சுவடும் நாமும்’ எனும் பொருளில் ஈழ, புலம்பெயர் இலக்கியப் படைப்புகள், படைப்பாளிகளுக்கும் காலச்சுவடுக்கும் இடையிலான உறவின் இயல்பு குறித்த தனது பார்வையையும் அனுபவங்களையும் சேரன் பகிர்ந்துகொண்டார். சேரனின் அரை நூற்றாண்டு கலை, இலக்கியப் படைப்புலகம், கல்வியியற் பங்களிப்புக் குறித்து சர்வேந்திரா உரையாற்றினார்;.
சேரனின் ‘பனி இரவின் தனியிரவில் பாதையிலே யாரது’, ‘மேகம் இருண்டு திரிந்த இரவிலே போகவிடு என்று சொன்னான்’ ஆகிய பாடல்களை வாசுகி ஜெயபாலன் உணர்வுபற்றிப் பாடினார். இந்தப் பாடல்கள் யாழ். பல்கலைக் கழக கலாச்சாரக் குழுவினால் 1985இல் அரங்கேற்றப்பட்ட ‘எங்கள் மண்ணும் இந்த நாட்களும்’ கவிதா நிகழ்விற்காக உருவாக்கப்பட்டு இசைவாணர் கண்ணன் இசையமைத்த பாடல்களாகும்.
நிகழ்வில் காலச்சுவடு கண்ணனுக்கும் சேரனுக்கும் மதிப்பளிப்பும் இடம்பெற்றது. அண்மையில் மொழி பதிப்பகத்தின் வழியாக எம். பௌசர், ஹரி ராஜலட்சுமி ஆகியோர் தொகுத்த சேரனின் படைப்புகள் சார்ந்த பதிவுகள், பார்வைகள், விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான ‘உறைய மறுக்கும் காலம்’ நூல் வெளியீடும் இடம்பெற்றது.
சேரனின் கலை இலக்கிய வாழ்வு
சேரனின் கலை இலக்கிய வாழ்வு 70களின் முற்பகுதியிற் தொடங்கி இன்றுவரை ஐந்து தசாப்தங்களைத் தாண்டி உயிர்ப்புடன் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. சேரன் போன்றவர்கள் எழுதத் தொடங்கிய காலம் ஈழத்தின் நவீன கவிதைகள் புது வீரியத்துடனும் வீச்சுடனும் பொருளுடனும் வடிவத்துடனும் உருவாகத் தொடங்கிய காலமாகவும் மதிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவின் இன ஒடுக்குமுறைச் சூழல், சமூக, சாதிய ஒழுக்குமுறைகளுக்கு எதிரான கூருணர்வு, இளைஞர்களின் போராட்ட எழுச்சி, பெண்ணிலைவாதம் எனவான சமூக, அரசியல், வாழ்வியக்கச் சூழல்கள் ஈழத்தின் நவீன கவிதைகளுக்குரிய உந்துதலாக அமைந்தன. இந்தக் காலகட்டம் அற்புதமான பல கவிஞர்களை உருவாக்கியிருந்தது. ஆண் கவிஞர்கள் மட்டுமல்லாது பல படைப்பாளுமைமிக்க பெண் கவிஞர்களையும் பிரசவித்த காலம் இது.
சேரன் எழுதத் தொடங்கியதிலிருந்து இன்றுவரையான இந்தக் காலவெளி பெரும் நீட்சியைக் கொண்டது. சமூகம், அரசியல், வாழ்வியக்கம், சிந்தனைப் போக்குகள், பல யுக மாற்றங்களைக் கண்டும் கடந்தும் வந்துள்ளன. கவிதை மட்டுமல்ல, கலை இலக்கிய வகைமைகள் அனைத்தும் அவற்றின் வடிவம், உள்ளடக்கம், சொல்முறை, படிமங்கள், பண்புகள் சார்ந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. நவீனம், பின்-நவீனம், பின்-பின் நவீனம் எனவும் நவீனத்திற்கு அப்பாற்பட்ட இலக்கியம் எனவும் பிரிவுகளுடனும் விரிவுகளுடனும் படைப்பாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் போக்குகளுக்கு அப்பால் கவிஞர் சேரன் இன்றுவரை நுண்ணுணர்வோடும் கவிமனதோடும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
காலச்சுவடு
காலச்சுவடு பதிப்பகம் ஒருபுறம், அதற்குச் சமாந்தரமாக இதழியல் துறையிலும் இயங்கிவருகின்றது. காலச்சுவடு இதழ் 1988இல் தொடங்கப்பட்டது. தற்போது 300 இதழ்களைக் கடந்துள்ளது. தனியே இலக்கிய நூல்கள் என்றில்லாமல், அரசியல், சூழலியல், சமூகம், அறிவியல், பொருளாதாரம் என நூல்களின் பேசுப்பொருள் பன்முகத் தன்மையுடையன. ஈழம், புலம் பெயர் எழுத்தாளர்களின் நூல்களையும் கணிசமாகப் பதிப்பித்துவருகின்றது.
உரையாடல் அரங்கு
‘தமிழர் கலை இலக்கிய வாழ்வு: அடுத்த காலடி’ எனும் பொருளில் கவிஞர் சேரனின் அழைப்புரையைத் தொடர்ந்து சபையோருடன் இணைந்த உரையாடல் இடம்பெற்றது. இரண்டு வாதக்கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடலுக்கான அழைப்புரையை சேரன் நிகழ்த்தினார். கடந்த பத்து ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை சார்ந்த ஒரு பாடத்தினை உருவாக்கிக் கற்பித்து வருகிறார் சேரன். அதாவது அரசுகள் செய்த-செய்துவருகின்ற இனப்படுகொலைகள் (Genocide), மானிடத்திற்கு எதிரான குற்றம் (Crimes against humanity) என்பன இந்தப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கம். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைதான் இந்தப் பாடத்திட்ட உருவாக்கத்திற்கான உந்துதல் என்று குறிப்பிட்ட சேரன், உலகளாவிய இனப்படுகொலைகளை உள்ளடக்கிய பாடமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதில் உள்ள சிக்கலான ஒரு விடயத்தையும் அவர் முன்வைத்தார். ஆய்வுகள், ஆவணங்கள், கட்டுரைகள், அறிக்கைகள், விபரிப்புகள் ஊடாக அதனைக் கற்பிப்பது போதுமானதல்ல. அந்தக் கற்பித்தல் சாரம், உணர்ச்சி, உதிரமற்ற தாள் போன்றது. இதற்கான மாற்றுவழி குறித்து சிந்தித்தபோது கவிதைகள், திரைப்படம், நாட்டியம், நாடகம், பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்களின் கதைகள், அந்தக் கதைகளை அவர்களே சொல்லுவது போன்ற வடிவங்கள் உகந்தவை என்ற முடிவுக்கு வரநேர்ந்ததைச் சேரன் விவரித்தார். ஆனால் அந்த வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்ற வருத்தத்தினையும் பகிர்ந்துகொண்டார்.
கலை இலக்கியங்களின் ஊடான கற்பித்தல்
இனப்படுகொலை சார்ந்த இத்தகு மாற்றுக் கல்வித்திட்டத்தினை மையப்படுத்தி ருவண்டா, மியான்மர், பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்குத் தான் மேற்கொண்ட பயண அனுபவங்களையும் அங்குள்ள கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள், கவிதை வாசிப்பு, ஆய்வுப் பணிகள் குறித்தும் சேரன் பகிர்ந்துகொண்டார்
இந்த விடயங்களை கவிதை, கலை இலக்கியங்களின் ஊடாகக் கற்பிக்கும்போது, அவற்றுக்குத் தனியான வீச்சும் தனித்துவமான தாக்கமும் இருக்கின்றது என்ற கருத்தினை வலியுறுத்தினார்.
போரிலக்கியம் பற்றிய விவாதம்
அத்தோடு ‘போர் இலக்கியம்’ என்ற பொதுமைப்படுத்தற் சொற்பயன்பாட்டின் பொருத்தமின்மை குறித்தும் சில கருத்துகளை முன்வைத்தார். பொதுவாக எழுதப்படுகின்ற போர்கள் சார்ந்த இலக்கியங்களுக்கும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களின் அனுபவங்களை எழுதும் இலக்கியங்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. பின்னையதற்குள் தனித்துவமான வலிகள், அஞர் (Trauma) உள்ளது. இது உலகளாவிய இனப்படுகொலை இலக்கியங்களுக்குள் இருக்கின்றன. இருதரப்பு போர் செய்யும்போது படையினரின் பாதிப்புகளை எழுதுவிப்பற்குப் பணம் செலவிடப்படுகிறது. ஊடகவியலாளர்களை இராணுவம் களமுனைகளுக்கு அழைத்துச் சென்று தமது தரப்பு இழப்புகள், அழிவுகளை எழுத வைக்கிறது. ஈழத்தின் இறுதி யுத்தத்தின்போது ஹிந்து குழும ஊடகவியலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதை நாம் அறிவோம். ஆப்கானிஸ்தான் போரில் கனடியப் படைகள் ஈடுபட்டபோது (2001-2014) அங்கு கவிஞர்கள், நாவலாசிரியர்கள், ஓவியர்கள், நடன தாரகைகளை அழைத்துச் சென்றது. இராணுவத்தைப் பற்றி கவிதைகள், நாவல்கள் எழுதுவதற்கும், ஓவியங்கள் தீட்டுவதற்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவர்கள் ‘உடன்படு’ ஊடகவியலாளர்கள், ‘உடன்படு’ எழுத்தாளர்கள் (Embedded Journalist, Embedded Writers) என அழைக்கப்படுகிறார்கள்.
இந்த வகையில் இனப்படுகொலை இலக்கியம் வேறு, பொதுவான போர் இலக்கியம் வேறு. இனப்படுகொலை இலக்கியத்திற்குள் பெரும் அனுபவங்களும் வலிகளும் இருக்கின்றன, அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவையிரண்டையும் பொதுமைப்படுத்துவது பொருத்தமானதல்ல என வலியுறுத்தினார் சேரன். உலகம் முழுவதும் 600க்கு மேற்பட்ட இனக்குழு மக்கள் வாழ்கிறார்கள். அரசில்லாத தேசங்கள், தேசிய இனங்கள். அரசுக்கும் தேசங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது என்றார்.
தொலைவு தரும் பொறுப்பும் பொறுப்பின்மையும்
இன்னொரு விடயம் நேரடி அனுபவம் இல்லாமல் தூர தேசங்களில் இருந்தபடி மற்றவர்களுடைய துன்பத்தை எழுத முடியுமா என்ற கேள்விகளும் விமர்சனங்களும் பல மட்டங்களில் முன்வைக்கப் படுகின்றன. குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் இருந்தபடி முள்ளிவாய்க்கால் அவலத்தை எழுத முடியுமா? பாலஸ்தீன வலிகளை எழுத முடியுமா? அப்படி எழுதுவது போலியானது, வருமான மீட்டலுக்கானது என்ற கறாரான விமர்சனங்கள் நிலவுகின்றன. அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற சேரன் ‘தொலைவு தரும் பொறுப்பு’, ‘தொலைவு தரும் பொறுப்பின்மை’ எனும் இரண்டு எதிரெதிர் நிலைகளுக்குள்ளாகவே அத்தகு எழுத்துகளை மதிப்பிட வேண்டும் என்றார். அறிவனுபவத் தோடும் அவை தரும் பொறுப்புணர் வோடும் தூரத்து வலிகளை எழுத முடியும், பகிர முடியும், கடத்த முடியும் என்ற கருத்துகளையும் உணர்வுத்தோழமையின் பெறுமதிகளையும் முன்வைத்தார்.
இயற்கைக்கெதிரான மானிட மேலாட்சி, செயற்கை நுண்ணறிவு - கலை இலக்கியங்களின் எதிர்காலம்
மனித மேலாண்மைக்குப் பிந்திய காலத்தின், செயற்கை நுண்ணறிவுப் பாவனை பரவத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில் கலை இலக்கியங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த சிந்தனைகளைப் பகிருமாறு சேரனிடம் நான் கேட்டபோது பின்வரும் விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்:
இயற்கைக்கெதிராக மானிட மேலாட்சியை முன்னிலைப்படுத்திய போக்கு நீண்ட நெடுங்காலமாக நிலவிவருகின்றது. நவீன, பின்-நவீன, உலகமயமாக்கல் ஆகிய எவ்வாறான பேரில் அழைத்தாலும் இதுவரையான அரசியல், பொருளாதாரப் போக்குகள் மானிட மேலாட்சியை முன்னிலைப்படுத்தி வந்துள்ளன. இயற்கையையும் ஏனைய உயிரினங்களையும் அவற்றின் பன்மைத்துவத்தையும் ஒதுக்கிவைத்த போக்குகளாக இருந்து வந்துள்ளன. காலநிலை நெருக்கடி, சுற்றுச்சூழல் அழிவு, பெருந்தொற்று என்பன மனிதர்களை மையமாக வைத்து, இயற்கைக்குக் குந்தகமாக எல்லாவற்றையும் கையாண்டதன் விளைவுகள் என்றார்.
சமூக ஊடகத் தொழில்நுட்ப கண்காணிப்பு, செயற்கை அறிவுத்திறன் (Artificial intelligence) என்பவற்றினால் தனிமனித சுதந்திரமும் அந்தரங்கமும் இல்லாமற் ஆக்கப்படுகின்றது. இப்போதுள்ளதும் இனிவரப்போகும் காலமும் மானிட மேலாட்சிக்குப் பின்னான காலம். இந்தக் காலத்தில் இலக்கியங்களும் கவிதைகளும் எப்படி இருக்கப்போகின்றன, அவற்றின் பிரதிபலிப்பு, அவை சந்திக்கப்போகின்ற புதிய சவால்கள், புதிய பரிமாணங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிட்டார்.
காலச்சுவடு: பதிப்பகம், இதழியல்
பதிப்புத்துறையில் தனித்துவம் மிக்க தடம்பதித்து, செயற்பாட்டு ரீதியாக ஒரு தொடர்ச்சியைப் பேணிவருகின்ற பதிப்பகம் காலச்சுவடு பற்றிப் பேசுவதென்றால் அதற்கான விதையிட்டவர் கண்ணனின் தந்தையாரும் தமிழின் முன்னோடி எழுத்தாளுமைகளில் ஒருவருமான சுந்தர ராமசாமியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சிறுகதை, நாவல், கவிதை விமர்சனம், அனுபவப் பதிவுகள், மொழியாக்கம் எனப் பல்பரிமாணத் தளங்களில் இயங்கியவர். படைப்புகளைப் பற்றிய காத்திரமான இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்தவர். இலக்கிய உரையாடல்கள், விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர். இதழியல், பதிப்புத் துறைகளிலும் அவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
பதிப்பக, இதழியல் துறையை காலச்சுவடின் ஊடாகப் புதிய தளங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார் கண்ணன். உலகின் பல்வேறு மொழிகளிலிருந்து இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருதல் - தமிழ் இலக்கியத்தை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்லுதல் எனும் இருவழிச் செயற்பாடு. தமிழ் இலக்கியங்களை வெளிநாட்டுப் பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தி, மொழிபெயர்ப்புகள், சர்வதேச கூட்டுறவுகள் மூலம் உலகளாவிய கவனம் பெற்ற-அறியப்பட்டப் பதிப்பகமாக விளங்குகின்றது.
தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகச் சமகால இலக்கியத்திற்குரிய சர்வதேசக் கவனத்தை உருவாக்கிவருவதில் காலச்சுவடு பதிப்பகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியா-பிரான்ஸ் பதிப்பக ஒத்துழைப்புக்காக பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ விருது பெற்றுள்ளார். இது காலச்சுவடு பதிப்பகத்தின் சர்வதேச அங்கீகாரத்தின் ஒரு குறியீடாகப் பார்க்கத்தக்க விருது. பதிப்புத் துறையை நிறுவனமயம், தொழில்முறை நேர்த்தியுடன் முன்னெடுக்கின்மை முக்கியமான அடைவு.
‘உணர்வுத் தோழமை: காலச்சுவடும் நாமும்’ எனும் தலைப்பில் சேரன் உரையாற்றினார். சேரனை நண்பராக, கவிஞராக, கல்வியியலாளராக நன்கு அறிந்தவர் கலாநிதி சர்வேந்திரா. 1980களில் யாழ். பல்கலைக் கழக காலம் தொட்டு அந்த நட்பு தொடர்கிறது. கவிதை, அரங்குசார் செயற்பாடுகளிலும் தாயகத்தில் ஒரே தளத்தில் செயற்பட்ட அனுபவங்களும் இருவருக்கும் உண்டு. ‘கலை இலக்கிய வாழ்வில் சேரன் 50:’ எனும் பொருளில் அவர் உரை நிகழ்த்தினார். இந்த அரை நூற்றாண்டு (மூன்று தலைமுறை) காலநீட்சியில் சேரனின் கவிதைகளின் இயங்குதளம் அந்தந்த காலங்களின் சமூக- வாழ்வியல்- அரசியல் - ஜனநாயகம், அறம், மானுடம் சார் பிரதிபலிப்புகளாக, கோரல்களாக, குரல்களாக இருக்கின்றன என்றார் சர்வேந்திரா. கலை இலக்கியத்திற்கு அப்பால் சேரனின் கல்வியியற் பங்களிப்புகள் குறித்தும் சர்வேந்திரா பகிர்ந்துகொண்டார்.
கவிதை மொழிவு
சேரனின் கவிதைகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்கின்ற பணியை நான் அறிந்தவரையில் சமகாலத்தில் அதிகம் மேற்கொண்டு வருபவர் சேரன். அவருடைய பல கவிதைகள் இருபது வரையான மொழிகளில் வாசிக்கப்பட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டும் உள்ளன. ஆங்கிலம், டச், மலையாளம், வங்காளம், ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன.
அவருடைய தமிழ்க் கவிதைகள் உலகின் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதும் வாசிக்கப்படுவதும் முக்கியமான இலக்கியப் பணி மட்டுமல்ல. கவிதைகளின் உள்ளடக்கத்தின் நிமிர்த்தம் அதுவொரு காத்திரமான அரசியல் செயற்பாடும்கூட. நிகழ்வில் பாலஸ்தீன மக்களின் அவலங்களைப் பற்றிய தனது கவிதைகளை (காசா: துயிலற்ற அன்னையர்) சேரன் மொழிந்தார். ஒஸ்லோவில் கலை, இலக்கியத் தளங்களில் இயங்கும் நண்பர்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். நிகழ்விற்கு நான் தலைமை வகித்தேன். உரையாக - உரையாடலாக - பாடலாக - கவிதையாக அன்றைய அரங்கம் நிகழ்ந்தது.
மின்னஞ்சல்: svrooban@gmail.com
