கருநாகங்கள்

ஓவியம்: றஷ்மி
இஷா (ராத்திரி) தொழுகைக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. குர்ஆனைப் பையில் வைத்துக்கொண்டு மழையில் நனையாமலிருப்பதற்காக அதைத் தனது துப்பட்டாவால் மூடிக்கொண்டு, தலையிலிருந்து வடிந்துகொண்டிருந்த தண்ணீரை உதறிக்கொண்டே ஓடிவந்த தரன்னும், ‘அம்மீ, அம்மீ’ என்று கத்தினாள். அயிலை மீன் கருவாட்டைக் கரியடுப்பில் வைத்துப் பதமாகச் சுட்டுக்கொண்டிருந்த ரஃபியா அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை. ஓடிக்கொண்டே வந்த தரன்னும், “அம்மீ, ஹசீனாவும் அவளோட அம்மாவும் பள்ளிவாசல்லே உக்காந்திருக்காங்க” என்றாள்.
“அட... ஏனாம்?”
“அதென்னமோ அவுங்களோட பஞ்சாயத்து இன்னைக்கு இருக்குதாமே?”
“ஓ... அப்பிடியா?”
ரஃபியை அரபி மதரசாவுக்குப் படிக்கத்தான் அனுப்பி னார்கள
