பாதுகாப்பின்மையின் பதற்றம்

இதோ நம் தாய்
(நாவல்)
வயலட்
வெளியீடு:
சால்ட் பதிப்பகம்
115, மாஸ் ரெஸிடென்ஸி அப்பார்மென்ட்ஸ், S3, 2-ம் தளம்,
கோடம்பாக்கம், சென்னை-4
பக். 70 ரூ. 150
மேலை நாட்டு மெய்யியலாளர்கள் வாழ்க்கையை விசாரித்து எழுதியிருக்கிறார்கள். மேலை நாடுகளைப் பொருத்தவரை அவை ஆன்மிகம் சார்ந்தது அல்ல. ஆனால் இந்திய மரபில் இவை யாவும் ஆன்மிகம் சார்ந்தவையே. அதை விசாரிக்கும் மெய்யியலாளர்களும் கேட்ட வரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டுவிடுகிறார்கள். புத்தர் தொடங்கி இந்த நூற்றாண்டுவரை பலரையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் வாழ்க்கை முன்பில்லாத அளவு செளகர்யம்மிக்கதாகவும் அதேவேளை சிக்கலானதாகவும் இருக்கிறது. இந்த முரண் நமது வாழ்க்கையின் மீதும் படர்ந்து நெருக்கடிகளுக்கு வழிவகுக்கிறது. இந்தப் பின்னணியில் நமது வாழ்க்கையை விசாரிக்க வேண்டியது தேவையானதும் அவசியமானதும்கூட. பயன்படுபொருள்களின் பெருக்கம், தகவல் தொடர்புப் புரட்சி எல்லாம் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக மாற்றியிருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் அகவயமாகப் பாதுகாப்பின்மையின் பதற்றம் நவீன வாழ்க்கைக்குச் சற்று மேலே எப்போதும் பறந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சிக்கலை, தனிமனப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டுச் சாதி, வர்க்கபேதம், இனம் போன்ற பலரீதியிலும் அணுகலாம். இந்த நவீன வாழ்க்கையின் சிக்கலை நவீனமான முறையில் வயலட் ‘இதோ நம் தாய்’ குறுநாவலில் அணுகியிருக்கிறார்.
சோரன் கீர்க்கே கார்ட் தொடங்கி நீட்சே, சார்த்தர் எனப் பலரும் நமது வாழ்க்கையின் இருப்புப்பற்றி விசாரித்திருக்கிறார்கள். இந்தப் பெரும் அபத்தத்தைத் தனது நாவல் வழி காம்யூவும் விசாரித்திருக்கிறார். இவருக்கு முன்பே தஸ்தயேவ்ஸ்கி போன்ற மாபெரும் புனைவாளர்கள் இந்தப் பாதையில் விளக்கேற்றியுள்ளனர். ஆனால் நவீன வாழ்க்கையின் சிக்கலைச் சொன்ன விதத்தில் வயலட்டின் இந்த நாவலை காம்யூவின் தொடர்ச்சி எனலாம். காம்யூவைப் போல் அவ்வளவு தீவிரமாக வாழ்க்கையின் சங்கை இந்த நாவல் பிடிக்கவில்லை. என்றாலும் தீர்க்கமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த நாவல் ஓர் இருப்பின் குழப்பங்களை அகவயம் சார்ந்தும், சமூக அரசியல் சார்ந்தும் அணுகியுள்ளது.
இந்த நாவலின் தொடக்கப் பகுதியின் புத்தரின் தம்மபதம் மொழிபெயர்ப்பு, பதிப்பித்தல் தொடர்பாகத் தொடங்குகிறது. ஓர் அரசியல் பிரதியாக அது சில கேள்விகளை முன்வைக்கிறது. புத்தர், ஒரு புரட்சி யாளர். அவரது சிந்தனைகளை, மார்க்கத்தை இந்த நாவல் சுவீகரித்துக் கொண்டுள்ளது. மேரி மாதாவின் தாய் அம்சத்தையும் நாவல் பரிசீலிக்கிறது. இந்த முரண், நவீன வாழ்க்கையின் குழப்பத்துக்கான ஒரு பதமாக நாவல் வெளிப்படுத்துகிறது.
இந்த நாவலின் பிரதான கதாபாத்திரங்களுக்குப் புத்தர் தொடர்பான பெயர்களே சூட்டப்பட்டுள்ளன: ஆனந்தி (ஆனந்தர் புத்தரின் அணுக்கச் சீடர்), கெளதமி (புத்தரின் வளர்ப்புத்தாய்-சித்தி), யசோதா (புத்தரின் மனைவி). இவை அல்லாமலும் கதாபாத்திரங்கள் வருகின்றன. ஆனால் இவைதான் நாவலை முன்நகர்த்திச் செல்கின்றன. பிரதான கதாபாத்திரமான ஆனந்திக்கு ஏன் சித்தர்த்தா எனப் பெயர் சூட்டப்படவில்லை என்கிற கேள்வி எழுகிறது. ஆனந்தர், புத்தரின் நினைவாக இருந்தவர். புத்தரின் போதனைகள் பலதும் இவரால் நினைவுகூரப்பட்டவையே. இந்த நினைவுகளைச் சுமப்பது என்கிற அம்சத்தை நாவல் கைக்கொண்டுள்ளது. அது ஒரு பாரமே. ஆனந்தியின் நினைவின் சுமையை அயர்ச்சியுடன் நாவல் வெளிப்படுத்துகிறது. இந்த நினைவே நாவலாகப் புனையப்பட்டுள்ளது. ஆனந்தரின் முக்கியமான இன்னொரு இயல்பு அவருக்கு புத்தரின்பால் இருந்த பற்று. ஆனந்தரால் புத்தர் இருக்கும்வரை பற்று துறக்க முடியாது என்பதைப் புத்தரே சொல்லியிருக்கிறார். ஆனந்தர், அழகாகவும் பற்றுச் சபலத்துடனும் இருந்ததாக இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ ‘க’ நாவலில் விவரிக்கிறார். புத்தருக்கும் ஆனந்தருக்குமான உறவை அழகாக விவரிக்கும் நாவல் அது. ஆனந்தி பெயர் காரணம் இவை எல்லாமுமாக இருக்கலாம் என நாம் சேர்த்துக் கூட்டி வாசிக்கலாம்.
வயலட்டின் நனவோடை உத்தி நாவலுக்குப் பலம் சேர்க்கிறது. தனது கதைக்கு வசீகரமான மொழியை அவர் பழக்கப்படுத்தியுள்ளார். லா.ச.ரா., நீல. பத்மநாபன் போன்றோர் தமிழில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். என்றாலும், வயலட்டின் இந்த நாவலை வர்ஜினியா வூல்ஃப்பின் ‘மிஸஸ் டாலவே’ நாவலுடன் திருத்தமாக ஒப்பிடலாம். ஒரே நாளில் நடக்கும் அந்தக் கதையில் காதல், ஓர்பால் ஈர்ப்பு, உலகப்போர் அரசியல் எனப் பலவும் பேசப்பட்டிருக்கும். வயலட்டின் இந்த நாவலும் சென்னையில் ஒரு வாடகை வீட்டின் பூட்டப்பட்ட அறைக்குள் ஆனந்தியின் நினைவாக விரிகிறது. அந்த வீட்டின் அஃறிணைகள் ஒவ்வொன்றும் ஒரு பாத்திரமாக எழுந்து நினைவை மீட்டிக் கதையை வரைந்திருக்கின்றன. அன்பென்னும் பூனை இந்த நாவலுக்குள் ஒரு உருவகமாகத் தொழிற்பட்டுள்ளது.
அம்மா என்கிற புனித அடையாளத்தையும் இந்த நாவல் மிக லேசாகக் கேள்விக்குட்படுத்த விரும்பியுள்ளது. இது நாவலின் இன்னொரு பக்கம். தாய் கெளதமியுடன், தன் பால் மாற்றம் குறித்து ஆனந்திக்குப் பிணக்கு இருக்கிறது. அம்மா, ஆனந்தியைத் தன் உடமைப் பொருளாகப் பார்க்கிறாளோ என்கிற கேள்வி எழுகிறது. வீட்டிலிருக்கும் பூனையையும் பூச்சிகளையும் ஆனந்தி அம்மாவாக நேசிக்க முயல்கிறாள். ஒரு மரவட்டை ஆனந்தியிடம் கேட்கிறது: ‘உன்னால உண்மையிலேயே என்னப் பாத்துக்க முடியுமா?’ முடியும் என நினைப்பது கற்பிதம்தானே என்பதை நாவல் உணர்த்துகிறது. ஆனந்திக்குத் தன்னுடைய அடையாளம் சார்ந்த சிக்கல் எழுகிறது. அது இயல்பானது என அவ்வளவு எளிதில் அதைச் சுவீகரிக்க முடியவில்லை. உண்மையும் நடப்பும் வெவ்வேறானவை எனப் புத்தர் சொல்வதுபோல நாவலும் பலவற்றையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
அரசியல், தனிமனிதப் பிரச்சினை என அகமும் புறமுமாக நாவல் பல அம்சங்களைக் கையாண்டுள்ளது. ஆனால் அதில் குழப்பம் இல்லை. படைப்புக்கான துணிச்சல் ஆரோக்கியமாக வெளிப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்: mankuthirai@gmail.com
