தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் திறவுகோல்

இங்கிவரை நாம் பெறவே
ஆளுமைகள் பற்றிய பார்வைகள்
(கட்டுரைகள்)
ஜெ. சுடர்விழி
வெளியீடு :
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு,
நாகர்கோவில் - 629 001
பக். 176
ரூ. 220
பேராசிரியர் சுடர்விழியின் ‘இங்கிவரை நாம் பெறவே’ நூல் தமிழ் ஆய்வு வரலாற்றில் புதிய தடத்தைப் பதித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி இன்றைய காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த அசைவியக்கத்தை, குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் ஆவணங்களைப் பேச வைத்திருக்கும் முறையும் இந்நூலின் தனித்தன்மைகள். பொதுவாக ஆளுமைகள் சார்ந்த பதிவுகளைப் பொறுத்தவரைக் கொஞ்சம் கவனம் பிசகினாலும் தனிமனித வழிபாட்டிற்குள் சென்றுவிடக்கூடிய ஆபத்து உண்டு. அதனை மிக இலாவகமாகக் கையாண்டிருக்கிறார் சுடர்விழி. மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. அவற்றுள் நான்கு கட்டுரைகள் புனைவாளுமைகள் தொடர்பானவை. தெரிந்த ஆளுமைகள் - தெரியாத செய்திகள்; தெரியாத ஆளுமைகள் - புதிய செய்திகள் என்று ஒத்தும் உறழ்ந்தும் கட்டுரைகள் வாசகரை ஈர்க்கின்றன. இவர் பணியாற்றிவரும் கிறித்தவக் கல்லூரிப் பின்புலம் சார்ந்து பல கட்டுரைகள் பயணப்படுவதும் குறிப்பிடத்தகுந்தது.
முதல் கட்டுரை உ.வே. சாமிநாதையரின் கடிதங்களில் தொடங்குகிறது. குறிப்பாகக் கிறித்தவக் கல்லூரி தமிழாசிரியர் உடனான கடிதத் தொடர்பு கவனம் பெறுகிறது. சின்னசாமி பிள்ளை ஒரு கடிதம், பரிதிமாற் கலைஞர் ஆறு கடிதங்கள், மறைமலையடிகள் பத்து கடிதங்கள், கா.ஸ்ரீ. கோபாலாச்சாரியார் இரண்டு கடிதங்கள், அனவரத விநாயகம் பிள்ளை இரு கடிதங்கள் என பத்தொன்பது கடிதங்கள் அவற்றை எழுதியவர்களின் வரலாற்றை அச்சூழலுடன் விவரிப்பதாக இக்கட்டுரை இருக்கிறது. ‘இக்கடிதக் கருவூலம் முறையாகப் பயன்கொள்ளப்பட்டால் பல நூறு ஆய்வுகளுக்கான திறப்பாக அமையும்” என்பதில் சந்தேகமில்லை.
தென்னூல் எழுதிய, மரபுப் பாவடிவங்களில் பயிற்சி மிகுந்த பாவலராக மட்டுமே அறியப்பட்ட பாவலரேறு பாலசுந்தரனார் குறித்த பதிவுகள் வியப்பளிக்கின்றன. ‘பாவலரேறு ச. பாலசுந்தரனார்: கருங்கல் சிற்பி பேராசிரியரான கதை’ என்ற தலைப்பே வாசகரைக் கவர்கிறது. அவருக்குள் சிற்பக் கலை சார்ந்த ஈடுபாடும் அதில் ஆற்றலும் இருந்தமையை இப்பதிவு எடுத்துக் காட்டியுள்ளது.
குறிப்பாகத் தஞ்சை குளத்து மேட்டுத் தெரு வடவாற்றுப் படித்துறைப் பிள்ளையார் சிலை பாலசுந்தரனாரால் செதுக்கப்பட்டது என்ற செய்தி வரலாற்றில் கவனத்தில் வராத ஒன்று. கவிஞர் தமிழ் ஒளி இவர் வகுப்புத் தோழர்; ஈரோடு தமிழன்பன், சரவணத் தமிழன், பொ. வேல்சாமி ஆகிய அறிஞர்கள் இவரிடம் படித்தவர்கள். இன்னும் இவருடைய கவியரங்கப் பணிகள், நாடக ஆக்கங்கள், இலக்கண/அகராதிப் பணிகளென பாலசுந்தரனாரின் வரலாற்றையே ஒரு கட்டுரைக்குள் வடித்திருக்கிறார் சுடர்விழி.
இத்தொகுப்பில் முக்கியமான பதிவாக இருப்பது ‘ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற அபூர்வ மாணவர்’. இங்கு பேராசிரியர் சுடர்விழி முன்வைத்திருக்கும் தர்க்கம் குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் பரவலாகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பணியாற்றுகின்ற நிறுவனங்களில் அவர்களுடன் பயணித்த சக ஆளுமைகள் குறித்த கவனம் இருக்காது. அவர்கள் ஏதேனும் குறிப்பிடத்தக்க பணிகள் நிகழ்த்தியிருந்தாலும் அது அந்த ஆளுமைகளின் புகழ் வெளிச்சத்தில் கரைந்திருக்கும்; அப்படி ஒருவராக வி.மு. சுப்ரமணிய ஐயரை அவர் அடையாளங்காட்டுகிறார்.
மு. அருணாசலம் பன்முக ஆளுமை, இந்திய இலக்கியச் சிற்பிகள்- மு. அருணாசலம் என அறிஞர் மு.அருணாசலம் குறித்து சுடர்விழி கொண்டிருக்கும் கவனம் தனித்தன்மையுடையது. கவிமணியின் கவிதைகள் வெளிவருவதில் மு. அருணாசலம் ஆற்றிய பங்கு இன்றுவரை பெரிதாகப் பேசப்படாததாகவே இருக்கிறது. இதுபோன்ற பதிவுகள் சுவாரசியமாக இருப்பதோடு தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. ரசிகமணி, ச. வையாபுரிப் பிள்ளையுடன் மு. அருணாசலத்திற்கு இருந்த தொடர்பு; கடித உரையாடல், அதனூடாக ஏற்பட்ட கவிமணிமீதான ஈடுபாடு என இப்பதிவு கவிமணியின் வரலாற்றில் கவனம் பெறாத சம்பவங்களை விவரித்துச் செல்கிறது.
மாதவையாவிற்கு 150ஆவது ஆண்டு. ஆனால் தமிழ்ச் சூழலில் இதுகுறித்த கனத்த மௌனமே கவிந்திருக்கிறது என்ற தார்மீகக் கோபத்துடன் ‘மானுடம் போற்றிய மாதவையா’ என்ற பதிவைத் தொடங்கியிருக்கிறார் சுடர்விழி. தமிழ்ச் சூழலில்தான் இந்த மௌனம். தமிழ் நாவலின் தொடக்க கால ஜாம்பவான்களாக ராஜம் ஐயரையும் மாதவையாவையுமே கமில் சுவலெபில் தனது ஆய்வுகளில் சுட்டியிருக்கிறார். 1915இல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விக்டோரியன் லிட்டரேச்சர் அண்ட் கல்ச்சர் இதழில் மீனாட்சி முகர்ஜி ‘synthesizing Hindu and Christian Ethics in A.Madhavaiah’s Indian Engish Novel Clarinda’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். டேவிட் சுல்மனும் தனது ஆய்வில் மாதவையாவின் நாவலைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டும் ஏன் இந்தக் கள்ள மௌனத்தைச் சாதிக்கிறது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் உரையாடலுக்கு உட்படுத்தியிருக்கிறார். சுயசாதி விமர்சனமும், சனாதன எதிர்ப்பும் மாதவையாவை அந்நியப்படுத்துகின்றனவா? பிராமண சமூகத்தில் பிறந்து இந்து மதத்தின் அடித்தளத்தையே அசைத்துப்பார்க்கக்கூடிய சாதி ஒழிப்பு, காதல் திருமணம், சாதி மீறிய திருமணம், பெண் விடுதலை என்று எழுதியதால் இந்தப் புறக்கணிப்பா? இந்தக் கேள்விகளில் இருக்கிற வெப்பம் வாசகரையும் பிணைத்துக்கொள்கிறது. ‘மாதவையா’ என்னும் அபூர்வம் என்று குறித்திருப்பது முழுவதும் பொருத்தமானது. அவருக்கும் கிறித்தவக் கல்லூரி முதல்வர் மில்லருக்குமான உறவு கவிதைத் தன்மையுடன் இழையோடுகிறது.
கிறித்தவக் கல்லூரியின் இருபெரும் ஆளுமைகளான சூரியநாராயண சாஸ்திரியார், மறைமலையடிகள் ஆகியோரைக் குறித்த இரண்டு கட்டுரைப் பதிவுகளும் புதிய செய்திகளைத் தாங்கியவை. பொதுவாக வரலாற்றில் சில நேரங்களில் ஆதாரமற்ற செய்திகள் கூட உண்மையாகப் பதியப்பட்டுவிடும். சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் ஆனதற்கான காரணமும் அப்படித்தான். மறைமலையடிகளுடன் இணைத்து இவரையும் தனித்தமிழ் இயக்க முன்னோடியாக, அதற்காகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட ஆளுமையாகவே வரலாறு காட்டியுள்ளது. இதனை சுடர்விழி கேள்விக்குட்படுத்துகிறார். வரலாற்றினூடான சில ஆதாரங்களோடு இதனை மறுக்கவும் செய்கிறார். உண்மையில் ஆங்கிலக் கவிதை வடிவமான சானெட்டைத் தமிழில் முயற்சித்துத் தனிப்பாசுரத் தொகைக்கு என வழங்கிய சூரியநாராயண சாஸ்திரியார் அதற்கான புனைபெயராகவே பரிதிமாற் கலைஞர் என்று பதிவு செய்திருக்கிறார். அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். புதிய வடிவம் எத்தகைய வரவேற்பினைப் பெறுமோ என்ற ஐயமே அவரைப் பரிதிமாற் கலைஞராக்கியிருக்கிறது. ஞானபோதினி இதழில் ‘மதிவாணன்’ என்ற தொடர் சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரிலும் தனிப்பாசுரத் தொகை புனைபெயரிலும் வெளிவந்திருக்கிறது. 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து தமிழியலின் பல துறைகளில் தடம்பதித்த அறிஞரின் மொழிக்கொள்கை தர்க்கப் பூர்வமானது. தமிழ்மொழியின் அழகே அதன் சமகாலத் தன்மைதான்; “மொழிநூல் கற்றக் கலைஞரின் நிதானமும் அறிவியல் உணர்வும் வெற்றி பெற்றன” என்று இப்பதிவை சுடர்விழி முடித்திருப்பது சூரியநாராயண சாஸ்திரியாரின் தர்க்க அறிவை உணர்த்துகிறது.
தமிழ்ப் பண்டிதர் மறைமலையடிகள் வகுப்பில் பாடம் எடுக்கும் முறைமை தனித்துவமானது. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையின் பின்புலம் அவருடைய ஆசிரியப் பணியே. புத்தகம் வாசிப்பதில் மறைமலை அடிகளுக்கு இருந்த பேரார்வம் வியக்கவைக்கிறது. பல தருணங்களில் கடனாகப் பெற்று அவர் வாசித்திருக்கும் செய்திகள் சென்ற தலைமுறை அறிஞர்களிடம் இருந்த மொழிமீதான அதீதக் காதலை உணர்த்துகின்றன. ‘தமிழ்ப் பண்டிதர் பணியில் மறைமலையடிகள்’ என்ற இக்கட்டுரையும் இதுவரை கவனத்தில் வராத செய்திகளையே வாசகர்களிடம் சேர்க்கிறது. இப்படித் தமிழ் ஆய்வு வரலாற்றில் புதிய போக்கினை வடிவமைத்த அறிஞர்களைக் குறித்த பதிவுகளோடு புனைவாளுமைகள் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
‘அம்பையின் கதைகளில் ஜன்னல்’ என்ற குறியீட்டின் வழி விரியும் பெண்ணுலகத்தை விவரித்திருப்பது சுடர்விழியின் புனைவுசார் ஆய்வின் விகசிப்பினை உணர்த்துகிறது. சமகால அரசியலின் முகத்தைத் தோலுரிக்கும் இமையத்தின் படைப்புகளையும் அதன் அரசியலையும் எடுத்துப்பேசுவது ‘காலத்தை ஆவணப்படுத்தும் கலைஞன்: இமையம்’ என்ற பதிவு. கதைகளெங்கும் பாவிப் பறந்து திரியும் குருவிகளின் மூலம் சமூக விடுதலையை வேண்டிநிற்கும் பாமாவின் படைப்புகளைப் பற்றிய பருந்துப் பார்வை; நான் மனிதனாக வாழ விரும்புகிறேன் அதற்காகவே எழுதுகிறேன் என்று யாரும் காண விரும்பாத, மறுக்கின்ற சமூகத்தின் இருண்ட பக்கங்களையும் கதைகளாக்கிய அழகிரிசாமி குறித்த பதிவு என நான்கு கட்டுரைகளும் வெவ்வேறு தடத்தில் பயணிக்கின்றன.
சமகால அறிஞரான ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆவண - ஆய்வு முறையியலை உரையாடலுக்கு உட்படுத்தியுள்ள முறை சுடர்விழியின் ஆய்வுப்புலமையையும் சேர்த்தே நமக்கு உணர்த்துகின்றது. ஆவணங்களைத் தேடுவது கடினமான பணி; அதேசமயம் கண்டடைந்த ஆவணங்களை வாசகர்களுக்குக் கொண்டு செல்வது அதைவிடக் கடினமானது. அதனை சலபதி எவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறார் என்பதே ‘தேற்றம் என்பது உறுதி’, ‘இங்கிவரை யான்பெறவே’ ஆகிய பதிவுகள். இறுதியாகச் சமகால அறிவு மரபில் காலச்சுவடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அதில் விரியும் கட்டுரைகளின் கனபரிமாணம் எத்தகையது என்பதை விரிவாக அலசுகின்ற பதிவு ‘இத்திசைதான் எல்லை இலது’. பாரதியியலில் புதிய ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் ய. மணிகண்டனின் பேருழைப்பினை இப்பதிவில் விரிவாகப் பேசியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய அறிவுப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள உதவும் திறவுகோலாக இருக்கிறது.
மின்னஞ்சல்: mimohanakareem1987@gmail.com
