இதுவா ஊடக அறம்-?
ஒரு பெண் தனது சுயமரியாதைக்காகக் குரலை உயர்த்தும்போது அவள் பிற பெண்களின் சுயமரியாதைக்காகவும் பேசுகிறாள் என்ற கூற்று ஒன்று உண்டு. அதை நேரில் பார்த்ததுபோல் இருந்தது நவம்பர் முதல் வாரத்தில் ‘அதர்ஸ்’ பட ஊடகவியலாளர் கூட்டத்தில் நடிகை கௌரி கிஷன் ‘ஊடகவியலாளர்களை’ எதிர்கொண்ட விதம்.
அதற்கு முன்பே இந்தப் படத்திற்கான ஊடகவியலாளர் கூட்டத்தில் கார்த்திக் என்கிற ஊடகவியலாளர் படத்தின் ட்ரெயிலரில் கதாநாயகன் கதாநாயகியைத் தூக்குவது குறித்த காட்சியைப் பற்றிக் கேள்விகள் எழுப்புகிறார். நாயகியாக நடித்த கௌரிக்கு அது சரியாகப் படவில்லை. இருப்பினும் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை பெண்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் கேள்விகள் நகைச்சுவையாகக் கருதப்படுவது பொதுவிதி. சம்பந்தப்பட்ட பெண் சுரணை யில்லாமல் இருக்கக் கடவது இன்னொரு விதி.
அந்த ஊடகவியலாளர் தனக்கான பதிலை வாங்காமல் ஓயவில்லை. ஒரு சின்னப் பெண் தனக்குப் பதில் சொல்லாமல் போக எப்படி விடுவது என அடுத்த வாரம் கூடிய ஊடகவியலாளர் கூட்டத்திலும் அதே கேள்வியைக் கேட்கிறார். அதுவும் கௌரியிடம் கேட்கவில்லை. அந்தக
