‘ஜீவ வாக்கு’: காலமும் மூலமும்
இலக்கியக் கலைவானின் எல்லாத் திசைகளிலும் சிறகடித்த பெருமைக் குரியவர் பாரதி. கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் எனக் களங்கள் பலவற்றிலும் கவின்முகம் காட்டியவர். மொழிபெயர்ப்பிலும் முத்திரை பதித்தவர்.
ஷெல்லி, ஷேக்ஸ்பியர், பைரன், மில்டன், ஜான் ஸ்கர், மாட் ரால்ஸ்டன் ஷர்மன், விக்டர் யூகோ, புருதோன் எனப் பல உலக அறிஞர்களின் படைப்புகளின்மீது ஓரவிழிப் பார்வை செலுத்தி மொழிபெயர்ப்பு முத்துகளைப் பரிசளித்த பாரதி, ‘வேத ரிஷிகளின் கவிதை’, ‘பகவத்கீதை’ மொழிபெயர்ப்பு என்றெல்லாம் வடமொழி நூல்களின்பால் முழுமைப் பார்வையைச் செலுத்த முயன்றவர். இந்திய விடுதலை இயக்கக் காலத்தின், களத்தின் தேவை நோக்கி அற்றை நாள்களில் ‘இந்திய ஞான மரபு’ என முன்னெடுத்து விதந்தோதப்பட்ட நூல்களைக் கூடுதல் பார்வைகொண்டு நோக்கியவர் பாரதி. சமகால இந்தியாவின் விழிப்புக்கு வித்திடும் பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதர’ப் பாடல், விபின சந்திர பாலரின் சொற்பொழிவு, திலகரின் சொற்பொழிவு, தாகூரின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலியவற்றிலெல்லாம் திளைத்து எழுச்சியும் மகிழ்ச்சியும் பெற்ற பாரத
