நீர்வாழ் நினைவுகள்

நீர்ப்பரணி
(நாவல்)
எம்.எம். தீன்
வெளியீடு:
படைப்பு பதிப்பகம்
#8 மதுரை வீரன் நகர்,
கூத்தப்பாக்கம், கடலூர்-&-2
ரூ. 300

காலம், நதி, மனிதம் என முக்கூட்டுக் கலவையாக ‘நீர்ப்பரணி’ நாவல் நீள்கிறது. இப்போதெல்லாம் சில நாட்கள் மழை தொடர்ந்து பெய்தாலே நாம் காலநிலை மாற்றத்தைப் பேசுகிறவர்களாக ஆகிவிடுகிறோம். ஆனால் உலகின் மீது இரசாயனப் புகை படியும் முன்னர் தாமிரபரணியை ஒட்டிய பகுதிகளில் நூறு நாட்கள் மழை பெய்திருப்பதாக ஒரு செய்தியை நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்தச் செய்தியின் மையத்திலிருந்துதான் நாவல் உருவாகிறது. இது பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. அந்த மழையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் தாமிரபரணி, தான் அதுவரை காலமும் போற்றிப் பாதுகாத்த மக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு நடைபோடும் கொடூரத்தன்மையையும் பெறுகிறது. அது செய்யும் அழிமானங்களை இருபத்தைந்து பக்கங்களுக்கும் அதிகமாக நாவலாசிரியர் விவரித்திருக்கிறார். விவரிக்க விவரிக்க நாமே வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்போலத் தவிக்கிறோம். அந்நேரம் இரவும் கவிந்துவிட்டால் மக்களின் இதயமும் புத்தியும் பேதலிக்க ஆரம்பித்துவிடுகின்றன. யாரும் யாரையும் காப்பாற்ற முடியாத நிர்க்கதியில் மானுட இனம் பரிதவித்துத் துடிக்கலாகிறது. வானம் இடிந்துவிழுகிற மாதிரி எங்கெல்லாமோ இருந்து வெடியோசைகள் எழும்பி மக்களைக் கதிகலங்கச் செய்கின்றன. பெரு வெள்ளத்தின் முழுமையான கோர வடிவத்தையும் நாவல் ஒருங்கே திரட்டுகிறது. வீட்டுச் சுவர்களுக்குள் பவித்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கன்னிப் பெண்களெல்லாம் வெள்ளப் பெருக்கின்போது ஏதாவதொரு வீட்டின் முற்றத்தில் ஒதுங்கிக்கொள்கிறார்கள். குழந்தைகள் பசியால் அழுவதைப் பார்க்கும் நமக்குப் பெரியவர்களும் அதே பசியால் மாய்ந்து மருகிக்கொண்டு ஓலமிடுவதைப் பார்க்க முடிகிறது.
திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த பொறியாளர் மூன்று நாட்களாகக் கோபுரத்தின் மூன்றாவது அடுக்குவரை ஏறித்தான் தன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தாசில்தாரின் உத்தரவு எப்படியிருக்கிறது? அவரவர் வீட்டு மாடிகளிலும் கோவில்களிலும் மக்களைப் பத்திரமாகத் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார். தாசில்தாராக இருக்கின்ற மாணிக்கம் பிள்ளை இதுபோன்ற வெள்ளத்தைத் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை.
மனிதர்கள் மட்டுமன்று சிறு புட்களும் சின்னஞ்சிறு செடிகளும் மரங்களும் மிருகங்களும்கூடக் கெஞ்சத் தொடங்கிவிடுகின்றன. தமிழ் நாவல்களில் வேறேதாவது இந்த அளவுக்குப் பெருமழையையும் பெருவெள்ளத்தையும் வர்ணித் திருக்கின்றனவா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு வெள்ளத்தின் முழு வீரியத்தையும் நெஞ்சம் பதறப் பதற விவரிக்கிறார் நாவலாசிரியர் எம்.எம். தீன்.
‘நீர்ப்பரணி’ என்ற தலைப்பைச் சூட்டிவிட்டு இந்த நூறு நாள் மழையையும் அது பெருக்கெடுத்தோட வைத்த வெள்ளத்தையும் உள்ளம் நடுங்கச் சொல்வது மட்டும்தான் இந்த நாவலின் நோக்கமா? அப்படியல்ல. அதில் நாவல் வெவ்வேறு தரப்பினரின் வாழ்க்கைப்பாடுகளையும் சொல்ல முனைந்திருக்கிறது. தாமிரபரணியின் கரையைத் தொட்டு எல்லாத் தரப்பு மக்களும் வாழ்கிறார்கள். சாதி, மதம், இனம் கடந்த அதிசயிக்கத்தக்க வாழ்க்கை முறைகளெல்லாம் நெஞ்சம் நெகிழும்படி இடம்பெற்றுள்ளன.
முக்கியமான பலிபீடமாக இருப்பது சவராமங்கலம் கிராமம்தான். இங்கு தாயாபிள்ளையாக முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்கிறார்கள். அதனையொட்டியே சுங்கநாதபுரம், தோப்பூர், அப்பன்கோவில், திருவைகுண்டம் எனப் பல ஊர் மக்களும் அணியணியாய்த் திரண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறைமை இருக்கிறது; இந்த வாழ்க்கை முறைமைகளை ஏதோவொரு பொதுச்சரடு இணைக்கிறது.
சவராமங்கலம் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்படும் நிலையில் சில உயிரிழப்புகள் நேர்ந்துவிடுகின்றன; சிலர் கிராமத்தைக் காலிசெய்துவிட்டு வேறெங்காவது பிழைப்பைத் தேடி ஓடுகிறார்கள். எல்லோராலும் அப்படி ஓடிவிட முடியாது. அதே சமயம் தொடர்ந்து தம்முயிர்களையும் வாழ்க்கைச் சேமிப்புக்களையும் வெள்ளத்திற்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆகையினால் வாழ்வதற்கொரு பூமி தேவைப்படுகிறது. அதற்கு யாரை நாடுவது? அது ஜனநாயக இந்தியா அல்ல; வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த காலம். நம்முடைய செல்வங்களைத் தம்முடைய நாட்டிற்கு வாரியெடுத்துச் செல்வதற்காகவே ஆண்டுகொண்டிருக்கின்ற பிரிட்டிஷ்காரர்களிடம்தான் தாம் வாழ வெள்ளப் பாதிப்பில்லாத நிலத்தை வேண்டி முறைப்பாடு செய்ய வேண்டும். அந்தப் பிரிட்டிஷார் இந்த அப்பாவிகளின் கோரிக்கைகளைச் செவிமடுக்கிறார்களா? இந்தக் கேள்வியைத் தகர்த்தெறிகிறார்கள் கேம்பல் துரை, பேட் துரை, பர்கிட் துரை, வுட் ஹவுஸ், பக்கிள் துரை போன்றோர். வெவ்வேறு காலங்களின் வெவ்வேறு ஆட்சியாளர்களாய் அவர்கள் செயல்படுகிறார்கள்.
சவராமங்கலத்திலிருந்தோ அல்லது அதற்கும் முன்னரோ இடம்பெயர்ந்து வாழ வேண்டியிருந்த மக்களுக்கு மேலே குறிப்பிட்ட துரைமார்கள்தான் பத்திரமான இடங்களை ஒதுக்கி அவர்கள் வாழும் வகைக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அவ்வாறாக நதியின் வடக்குப் பக்கமாக வாழும் சவராமங்கலத்து மக்களை அதே நதியின் தெற்குப்புறமாக இடம்பெயரவைத்துக் குடியேறச் செய்கிறார் கேம்பல் துரை. அந்த இடத்தைத் தேடிச் செல்வதற்கான முயற்சிகள் அனைத்தையும் நாவல் விவரிக்கிறது. நாவலாசிரியர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். அதன்பொருட்டாக இந்த நாவலை அவரால் மிகத் தெளிவாக எழுதிச் செல்ல முடிகிறது. நத்தம் புறம்போக்கு நிலங்களைக் குடியிருப்புகளாக மாற்றிக்கொடுப்பதென்றால் அதற்கான விதிமுறைகளும் அரசாணைகளும் தாறுமாறாகப் பின்னிக் கிடக்கின்றன.
வெள்ளைக்காரர்கள் வகுத்தளித்த விதிமுறைகளை அவர்களே மாற்றிக்கொடுப்பதென்றாலும் அதிகாரப் பீடத்தை அணுக வேண்டியுள்ளது. அதற்கான சட்ட ஷரத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டிய அருகதை படைத்தவர்களாக இருப்பவர்கள் தாமிரபரணிக்கரையின் வழக்கறிஞர்கள்தான். ஐயர் சாதி வழக்கறிஞர்களும் முஸ்லிம் வழக்கறிஞர்களும் நெல்லை மண்ணை வியர்க்க வியர்க்க வைத்துத் தந்திரமாக வாதிடும் முறையை வழக்கறிஞரான நாவலாசிரியர் திறம்பட விவரிக்கிறார். பிரிட்டிஷாரின் விதிமுறையே என்றாலும் அதிலும் தேர்ந்து, அரசின் மென்னியை எந்த இடத்தில் பிடிக்க வேண்டுமென்ற கலையெல்லாம் அவர்களுக்குச் சர்வ சாதாரணமாக இருக்கிறது. நில ஒதுக்கீட்டிற்காக மெட்ராஸுக்குச் செல்லும் ஊர்க்காரர்களை வக்கீல்மார்களும் வெள்ளைக்காரர்களுமாகக் குளிரக் குளிர வைத்துவிடுகிறார்கள். அந்தக் குளுமைக்கான நன்றியைத் தெரிவிப்பதற்காக அதே துரைமார்களின் பெயர்களைத் தங்களின் வாழ்விடங்களுக்கு வைத்துக்கொள்கிறார்கள்.
நாவல் ஆறு பகுதிகளாக விரிவடைந்திருக்கிறது. வெள்ளத்தின் பேரழிவை நெல்லை மாவட்ட தஸ்தாவேஜுகளின் மூலமாகச் சொல்கிற நாவலுக்குக் காலங்களைப் பாகுபடுத்திக் காட்டுவதும் முக்கியமான கூறுதான். 1850, 1873, 1910, 1920, 1933, 1934 ஆண்டுகளில் நிகழ்கின்ற வெள்ளப் பெருக்குகள்தான் நாவலை நகர்த்திச் செல்கின்றன. ஆகவே முதல் நாயகப் பாத்திரம் காலத்திற்குத்தான். கிட்டத்தட்ட 84 ஆண்டுகளின் வரலாறாக இருப்பதால் இது தலைமுறைகளின் நாவலாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளத்தின் சீற்றத்தையொட்டியும் அது ஏற்படுத்தும் பேரிடரையொட்டியும் கேம்பலாபாத் என்ற சிற்றூர் அமைவதைச் சொல்லும் நாவலுக்கு இன்னும் வேறுவேறு மனிதர்கள்தான் கதாபாத்திரங்களாக வர வேண்டியுள்ளது. சின்னக் கிராமமாக இருந்தாலும் சவராமங்கலத்திற்கும் வேற்றூர்களிலிருந்து மனிதர்கள் வருகிறார்கள்.
சிலோனிலிருந்து கொப்பூழியின் மனைவியாக ஒரு சிலோன்காரி வருகிறாள். ஊரும் உறவும் பேரும் அறிந்துகொள்ள முடியாதவராக பூனைகளைக் கூட்டிக்கொண்டு பூனைப்பெத்தா வருகிறார். இதெல்லாம் ஊருக்குள் கசமுசாவாக இருந்தாலும் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறது சவராமங்கலம். பூனைப்பெத்தாவுக்குக் குடியிருக்கத் தனி வீட்டை ஒதுக்கிக்கொடுக்கிறது. சிலோன்காரி செய்துகொடுக்கும் வட்டிலாப்பத்திற்கும் மரியாதை கொடுக்கிறது. பின்னொரு கட்டத்தில் தனது கழுத்தில் கிடக்கும் பூசாந்திரத்தை அடமானமாக வைத்துக் கடன் கேட்கும் சிலோன்காரிக்கு அடமானம் இல்லாமலே கடன் கிடைக்கிறது. ஒன்றோடொன்று ஐக்கியப்படும் வாழ்க்கை நம் இரத்தத்தில் பொதிந்துகிடக்கும் உணர்வாக இப்படியெல்லாம் நடக்கிறதை நீர்ப்பரணியில் காண்கிறோம். வெள்ளத்தில் மகளைப் பறிகொடுக்கிற பால்கார கிருட்டினக் கோனார் அங்கே வாழப் பிடிக்காமல் கண்காணாத திசைக்குப் போகப் புறப்பட்டபோது கிராமமே கண்ணீர்மல்க வழியனுப்பிவைக்கிறது.
திருவைகுண்டத்தில் தொழில் செய்யும் மோகனாவின் வீட்டிற்கு வீராபுரத்திலிருந்தும் கல்லிடைக்குறிச்சியிலிருந்தும் வில்வண்டி போட்டு வருகிறார்கள். கொக்கோகத்தில் வர்ணனையாகும் அத்தினி, சித்தினி, பத்தினியின் பேருருவமான மோகனா, உயர்குலத்திற்கான கந்தர்வப் பெண்ணாகத் தான் படைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறாள். ஆனால் ராஜாக்கனி வைத்தியரின் வர்ணிப்பில் மோகனாமீது மையல் கொள்கிற சவராமங்கலத்துச் சண்டி சம்சு அவளின் வீட்டுக்குப் போகிறான். ஆரம்பத்தில் சரசமாடுகிற மோகனா, சண்டி சம்சுவின் பேரைக் கேட்டதும் தீக்கங்கை மிதித்தவள்போலத் துள்ளியெழுகிறாள். அவன் ஒரு துலுக்கன் என்றறிந்ததும் விரட்டியடிக்கிறாள். தான் சூத்திரர்களுக்காகப் படைக்கப்பட வில்லையென்றும் அவனிடம் கத்துகிறாள். தான் அவமானப்படுத்தப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாத சம்சு தன் உழவனை உயர்சாதிக்காரனைப் போல உருமாற்றி அவளிடம் அனுப்பிவைத்துப் பழிதீர்க்கிறான். அதன்பின் தான் உயிர்வாழ்வதில் யாதொரு பயனுமில்லை என்கிற முடிவில் மோகனா தற்கொலை செய்துகொள்கிறாள். இப்படியொரு பெரும்பாவத்தைத் தான் செய்துவிட்டோமோ என்ற மனசாட்சி உறுத்தலில் ஊரைவிட்டே மாயமாகிறான் சம்சு. நாவலின் உயிர்த்துடிப்பான காட்சிகள் இவை.
வெள்ளப் பெருக்கு உருவாக்கிய பெரும் சேதங்கள் ஒரு சாராருக்கு; மறு சாராருக்கு அதுவே வாரி வழங்குகிறது. தங்கள் வீட்டின் ஒழுக்கரைப் பெட்டியைத் திருடர்கள் திருடிக்கொண்டு போக முடியாத அளவில் காங்கிரீட் கலவையினால் தரையோடு தரையாகப் பூசி வைத்ததுடன், அறையின் வாசலையும் குறுக்கி வைக்கிறார்கள். ஆகவே ஒழுக்கரைப் பெட்டிக்கு ஆயுசுக்கும் ஒரு பீடம் கிடைத்து விட்டதென்று நம்புகிறார்கள். ஆனால் தாமிரபரணியின் வெள்ளச் சீற்றம் எல்லா நம்பிக்கை களையும் தகர்க்கிறது. ஒழுக்கரைப்பெட்டி வெள்ளத்தில் கரை புரண்டு மணலில் புதைவதை நாவல் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஒழுக்கரைப் பெட்டியின் சொந்தக்காரர்களின் கண் முன்னாலேயே பக்கத்துக் கிராமத்து ஆட்கள் அதைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள். அனாமத்துப் பொருளாகப் பெற்றுக்கொண்டதைக் கொடுக்க முடியாதென்று சொல்கிறார்கள் அதனைக் கைப்பற்றியவர்கள். இன்னும் இப்படியான பொருள்களைக் கைப்பற்ற வருபவர்கள் தங்களுக்கு வரும் எதிர்ப்பை அடக்க ஆயுதங்களோடு வருவதுதான் வேடிக்கை. அவ்வாறான அனாமத்துப் பொருட்களால் வறிய நிலையிலிருந்தவர்கள் மாடிமீது மாடி கட்டிப் பெருவாழ்வு வாழ்வதையும், தங்கள் வீட்டுப் பெண்மக்களைச் சீரும் சிறப்புமாகக் கட்டிக்கொடுப்பதையும் பார்க்க வேண்டிய அவலங்களும் நிகழ்கின்றன.
நாவலின் உச்சமாகப் பூனைப்பெத்தாவின் வருங்காலம் பற்றிய கணிப்பு அபாரமான முறையில் இடம்பெற்றிருக்கிறது. அரைக் காசம்மா தர்காவிற்குள் வருகின்ற பூனைப்பெத்தா அங்கே நிற்கிற உதுமானை ஓரிடத்தில் அமரவைக்கிறாள். இனி என்னென்ன இங்கே நடக்கப்போகின்றன என்கிற எதிர்காலக் காட்சிகளையெல்லாம் அவருடைய மனக்கண்களில் கொண்டுவருகிறாள். பகையும் பூசலுமாய்க் கிடக்கின்றவர்கள் தத்தம் கசப்புகளை மறந்து ஒருங்கு கூடுவதையும், திருமண உறவுகள் ஏற்பட்டுக் குழந்தைக் குட்டிகளோடு வாழ்வதையும், கேம்பலாபாத் வாசிகள் சென்னையில் பெரும்பெரும் தொழில்களில் ஈடுபட்டுப் பேரும் புகழுமாய்த் திகழ்வதையும், ஊருக்குள் அழகான பள்ளிவாசல் கட்டப்படுவதையும் ஒவ்வொரு காட்சியாக உதுமானின் கண்களில் காட்சிப்படுத்துகிறாள் பூனைப்பெத்தா. இதன்மூலம் நாவலுக்கு இன்னொரு பரிமாணத்தை வழங்குகிறார் தீன்.
வாழ்வும் தாழ்வும் இன்பமும் துன்பமும் உறவும் பிரிவும் போன்ற எல்லாவற்றையும் வரையறுக்கக்கூடிய வாழ்வு எத்தகையதென்று இந்த நாவல் காட்டினாலும், அது மட்டுமே தான் அல்ல என்று ‘நீர்ப்பரணி’ காட்டுகிறது.
மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com
