டிரம்பின் கறுப்பின அடையாள நீக்கம்
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்பு களிலுள்ள கறுப்பின வரலாறு தொடர்பான அடையாளச் சின்னங்களை நீக்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதியன்று உத்தரவிட்டார். அது அமெரிக்க அரசிதழான ஃபெடரல் ரெஜிஸ்டரில் (Federal Register) ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. அதில் அவர் ‘கறுப்பின அடையாளம்’ என்று வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் நோக்கம் அதுதான் என்பதை அதன் உள்ளடக்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது. டிரம்ப் தரப்பு கறுப்பினத்தாரையும் உள்ளீடாகக் கொண்ட வரலாற்றின் மீது நேரடியான தாக்குதலைத் தொடங்கி விட்டதையே உத்தரவு வெளிப்படுத்தி யிருக்கிறது.
சமீபகாலமாகச் சில அரசாங்க அமைப்புகள், அருங்காட்சியங்கள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் பாகுபாட்டுக்கு ஆதரவான வாதங்களை ஊக்குவித்து உண்மையான வரலாற்றை மங்கச் செய்துள்ளன. அவை இன அடையாளம், அடிமைத்தனம், சமூகநீதி ஆகியவை பற்றித் தரும் தகவல்கள் ஒருதலைப்பட்சமாகவும் எதிர்மறையாகவும் இருக்கின்றன. அமெரிக்காவின் உண்மை வரலாறு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதாக அந்த உத்தரவு கடுமை காட்டியிருக்கிறது
