டிசம்பர் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
டிசம்பர் 2025
    • கட்டுரை
      இதுவா ஊடக அறம்-?
      ஆர்எஸ்எஸ்ஸும் காரல் மார்க்ஸும்
      டிரம்பின் கறுப்பின அடையாள நீக்கம்
      பிறழ் தகவல்களின் காலம்
      சுந்தர ராமசாமி (எனக்கு) எழுதிய இரண்டு கடிதங்கள்
      இலங்கையரா? இந்தியரா?
    • கதை
      தீவிளி
      கருநாகங்கள்
    • பாரதியியல்
      ‘ஜீவ வாக்கு’: காலமும் மூலமும்
    • உரை: காலச்சுவடு 30 சேரன் 50
      உணர்வுத் தோழமை
    • கற்றனைத்தூறும்-13
      என்ன செய்யப் போகிறோம்?
    • நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சி
      நீர்வாழ் நினைவுகள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • பதிவு: காலச்சுவடு 30 சேரன் 50
      30 50
    • மதிப்புரை
      பாதுகாப்பின்மையின் பதற்றம்
      தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் திறவுகோல்
    • கவிதைகள்
      சவால்
      ஆறுதல் பரிசு
      உங்களில் ஒருவன்
    • தலையங்கம்
      பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்
    • கவிதை
      சுதாரிப்பு
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2025 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

‘எல்லோர் கைகளிலும் கறை’ நவம்பர் இதழின் தலையங்கம் வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களச் சூழல், அரசு நிர்வாகம், மக்கள் மனநிலை, மீடியாக்களது பார்வை ஆகியவற்றை நடுநிலையோடு தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது இதழியலின் தார்மீகப் பொறுப்பையும் சமூக சிந்தனையாளர்களது அறப்பார்வையையும் சார்ந்தது. இத்துடன், இன்றைய இளைய சமூகத்தின் பொதுமானுட நலம் சார்ந்த ஆரோக்கியமான சிந்தனையின் முக்கியத்துவத்தைத் தொட்டு, அதைக் கொஞ்சம் கூடுதலாக வலியுறுத்தாமல் தலையங்கம் விட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

கரூர் கூட்டத்தில் கூடியவர்கள் அனைவரும் ‘தற்குறிகள்’ என்ற கூற்று முற்றிலும் மேலோட்டமானது. இதே ‘தற்குறிகள்’ தங்கள் கட்சிகளுக்கு ‘ஓட்டுப்போடக் கூடிவிட்டால்’ அவர்கள் ‘அறிவு ஜீவிகளாகி’ விடுவார்கள். அதுவேறு விஷயம். ஆனால் இன்றைய இளைய சமுதாயம் அறிவார்ந்து நன்கு பக்குவப்பட வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. அப்படியானால், புதிதாகத் தொடங்கப்பட்ட த.வெ.க.வின் தலைவர் - நடிகரை மிக விரும்பி (பின்பற்றி அல்ல) கூடும் இளைஞர்கள் பக்குவம் இல்லாதவர்களா? என்ற கேள்வி எழும். சமீபத்தில் ஒரு முதுகலை பயிலும் கல்லூரி மாணவியிடம் யதார்த்தமாகப் பேசும்போது “அவர் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம், ஊழலற்ற, நடுநிலை நிர்வாக முறை எல்லாம் கொண்டு வரப்போகிறாரா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அது பற்றியெல்லாம் எங்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. ஆனால் விஜய் அண்ணாவின் இன்னொசன்ட் ஃபேஸ், அவரது இளமை துடிக்கும் பேச்சு, இதெல்லாம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அவரை நாங்கள் ஓடி ஓடிப் பார்ப்போம். கூடுவோம். நல்லவேளை நாங்கள் கரூர் தள்ளுமுள்ளு கூட்டத்திற்குப் போகவில்லை” என்று சிரித்துக்கொண்டே கடகடவெனப் பேசி முடித்தார். இது பற்றி என்ன சொல்வது?

புதிய கட்சி தொடங்குவதும், முதலமைச்சராக வர விரும்புவதும், புதிய அரசியல் மாற்றம் கொண்டு வரத்துடிப்பதும் இதில் சினிமா மோகம் கலப்பதும் தமிழகத்திற்குப் புதிதல்ல. இதனை எதிர்ப்பது ஆதிக்க மனப்பான்மை என்பதுடன், மேலும் மேலும் பல புதிய புதிய குழப்பங்களும் அலங்கோலங்களும் அரங்கேறி சமூக விபரீதங்கள் அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ண உள்ளோட்டம் அதில் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றையத் தேவை. இப்படித்தான் 41 உயிர்கள் பலியாகிப் பல புதிய சர்ச்சைகளும், அரசியல் சூதாட்டங்களும் அரங்கேறி வலம் வருகின்றன. விஜய் மட்டுமா தாமதமாக வந்தார்? மற்ற அரசியல் தலைவர்கள் தாமதமாக வந்ததில்லையா? என்பது தலையங்கம் எழுப்பியுள்ள கேள்வி. யாராக இருந்தாலும் நேரங்காலம் தவறி வந்து, பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது கூடவே கூடாது. ஆனால் இதற்கு முன் பல அரசியல் கூட்டங்களில் அன்றைய ‘இன்றைய தலைவர்கள் நடுஇரவு’ பின் இரவுகளிலெல்லாம் வந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான சுயகட்டுப்பாடற்றத் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக வரலாறு இல்லை. சரி, தாங்க முடியாத இவ்வளவு தாமத்தை ஏற்படுத்திக் கூட்டத்தினை ஏன் சோதனைக்குள்ளாக்க வேண்டும்? என்ற கேள்வி தலையங்கத்தில் இல்லை.

கும்பமேளா, மகாமகம் விளையாட்டு மைதானக் கூட்ட நெரிசல்கள், உயிர்ப்பாதிப்புகளைத் தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. எல்லாமும் முறைகேடுகள்தான், தேவையற்ற கூப்பாடுகள்தான். ஆனால் அந்த நிகழ்வுகளுக்கான காரணங்கள், அவற்றில் கலந்துகொண்ட மக்களின் மனநிலை ஆகியவற்றை கரூர், நாமக்கல் கூட்டங்களின் அவலங்களோடு ஒப்பிடலாமா என்பதை சற்று சிந்திக்க வேண்டி உள்ளது.

சி. பாலையா
புதுக்கோட்டை

•••

‘எல்லோர் கைகளிலும் கறை’ நவம்பர் மாதத் தலையங்கம்  மிக நேர்த்தியாக விருப்பு வெறுப்பின்றி பிரச்சினையின் தன்மையை அலசி ஆராய்வதாக இருந்தது. கரூரில் நடைபெற்ற துயரம் நாகரிக மனித சமூகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. அறிவியல், தொழில்நுட்பம், என அனைத்தும் விண்ணை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஓர் அரசியல் கட்சி நடத்தும் கூட்டத்தில் எந்தவித ஒழுங்குமுறைகளும் இல்லாமல் அந்தக் கட்சி தலைவரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் கால் கடுக்க நின்றதோடு மணி கணக்கில் நின்று குடிக்கக் கூடத் தண்ணீர் இன்றி சோர்ந்துபோய் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதனால் 41 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்தச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது. இந்த மக்களிடையே  இருக்கும் அரசியல் என்ன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது.

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு ஆட்களைக் காசு கொடுத்துத் திரட்டும் போக்கு அதிகரித்துவிட்டது. அரசியல் கட்சிகள் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த பணத்தில் இப்படி மக்களை ஒன்று திரட்டி இதுதான் தங்கள் கட்சியின் பலம் என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்வது ஒரு வித மாயத் தோற்றமே. ஓர் அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கூட்டத்திற்கு வருகிறவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது, அந்த அரசியல் கட்சியின் தார்மீகக் கடமை. ஆனால் அங்கு அதுபோன்ற எதுவும்செய்து தரப்படவில்லை என்பது கூடுதல் சோகம். நடிகர்கள் கட்சி ஆரம்பித்த உடனே நாட்டை ஆளத் துடிக்கிறார்கள். மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள்.

முதலில் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே மக்களை ஆட்சிசெய்ய அதிகாரம் செலுத்த நினைக்கும் போக்கை என்னவென்பது? மக்களுக்கு நடிகர்களின் பிம்பங்கள்தான் கண்களுக்குத் தெரிகிறது. பல நடிகர்கள் தங்களைச் சக மனிதர்களாகப் பாருங்கள். நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் என்று விளக்கம் அளித்து வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி நடிகருடைய படம் வெளி வந்தால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம், தள்ளுமுள்ளு, கட்அவுட்டுக்கு மாலை இடுவது, பால் அபிஷேகம் செய்வதென இளைஞர்கள் நடந்துகொள்வது சரியா என்பதை யோசிக்க வேண்டும். நடிப்பு என்பது நடிகருடைய தொழில்.  அவர் நடித்த படத்தைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த ஒரு நடிகரையும் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு கொண்டாட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

கரூர் சம்பவம் மிகப் பெரிய பாடத்தை அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் மக்களுக்கு அரசியல் கட்சிகள் அரசியல் பழக்க வேண்டும். மக்களுக்கு அரசியல் பழக்காமல் அவர்களைக் கையேந்தும் நிலையிலேயே வைத்திருப்பது மிகப்பெரிய அவலம். மக்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுகின்ற அளவிற்கு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி

•••

‘எல்லோர் கைகளிலும் கறை’ தலையங்கம் கண்டேன். அது உண்மைதான் என்றாலும்கூட இந்தப் பெருந்துயரத்திற்கு முதல் காரணம், முக்கிய காரணம் விஜய் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். வாரத்தில் ஒரு நாள் மட்டும், அதுவும் இரண்டு இடங்களில் மட்டும் கூட்டம்; அந்த இரண்டு கூட்டங்களிலும்கூட வருவதாகச் சொல்லப்பட்ட நேரத்தைக் காட்டிலும் மிக மிகத் தாமதமாக வந்தது, காவல்துறை 500 மீட்டருக்கு முன்பாகவே பேசுங்கள் என்று சொன்னதைக் கேட்காதது, மொத்தத்தில் ஒரு நடிகரைப் பார்க்க வந்த கூட்டமே. ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் பார்க்க வந்த தொண்டர்கள் கூட்டமாக இல்லை. எங்கோ நடந்த விபத்துகளுக்கும் பெரும் துயரங்களுக்கும் தான் முதன்மையான காரணமாக இல்லாவிட்டாலும்கூடப் பதவியை ராஜினாமா செய்த தலைவர்களைக் கண்ட நாடு இது. குறைந்தபட்சம் தார்மீகப் பொறுப்பு எடுத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்காதது சம்பவம் நடந்த காலகட்டத்தில் அதிர்ச்சியின் உச்சம். பெருந்துயரத்தின் மத்தியில் ஒரு பொறுப்பாளர்கூட அந்த இடத்தில் இல்லாதது எதைக் காட்டுகிறது? இதையெல்லாம் சுட்டிக்காட்டாதது குறை. இறுதியாக, இன்று காவல்துறையைக் கை காட்டும் நாம் அனைவரும் இந்தப் பெரும் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று கடைசிவரைகூட இருந்தது காவல்துறை என்பதை மறந்துபோய்விட்டோம்.

என். பாபு அருள் ஜோஸ்
களக்காடு

•••

நவம்பர் இதழுக்குச் சிகரம் வைத்தாற் போன்று அமைந்திருந்தது ஜோ டி குருஸின் நேர்முகம். ஓர் எழுத்தாளனின் முழு வரலாற்றை அரவிந்தன் நேர்முகத்தில் கொண்டு வந்திருப்பதற்குப் பாராட்டுகள். அறிவு பின்புலம் அற்ற சிறைக் கைதியே தன் எழுத்தின் பின்புலத்திற்குக் காரணம் என்பதையும் அவன் சொல்லித்தான் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை வாசித்தேன் என்பதைக் கூறும்போது பாசாங்கற்ற நல்ல எழுத்தாளனைக் காண முடிகிறது.

தனது பரதவ மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல ‘ராஷ்டிரீய ஸ்வயம்’ போன்ற ஒரு கட்டமைப்பே பின்னால், தான் ‘பரதவா சேவா சங்கம்’ எனப் பெயரிட நினைத்ததற்குக் காரணம் என்பதையும் ஆர்எஸ்எஸ்ஸின் வழிமுறைகளும் வலிமையான தேசத்தைக் கட்டமைக்க வேண்டுமென்கிற நோக்கமும்தான் ஆர்எஸ்எஸ் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்பதையும் நேர்மையோடும் துணிவோடும் கூறுவது எழுத்தாளன் சமய பேதமற்றவன் என்பதை உணர்த்துகிறது.

மோடியின் தன்னிச்சையான செயல்பாடுதான் என்னை அவர்பால் ஈர்த்தது என்றும் ஆர்எஸ்எஸ்ஸால்கூட அவரைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் மோடியைச் செயல்படும் தலைவராகப் பார்த்தேனே தவிர அவரது செயல்பாட்டுக்குப் பின்னுள்ள சித்தாந்தங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லையென நேர்மையுடன் கூறுவது பாராட்டத்தக்கது.  ஒரு நம்பிக்கைக்குள் இருப்பதில் தவறில்லை. ஆனால் மற்ற நம்பிக்கைகளையும் மதிக்கத் தெரிய வேண்டும் என்று கூறுவதும் ஆதித் தமிழ் மீனவச் சமூகத்தில் இருப்பவள்தான் குமரி; அவள் எங்கள் குலச்சாமி. ஆதித்தாய் என்று கூறுவதும் சமய வேறுபாடு என்றுமே எனக்குக் கிடையாது என்று கூறுவதை மெய்ப்பிக்கிறது. அந்தச் சமய நல்லிணக்கம் எனக்கு என் தாய் கற்பித்த, ‘அம்மாவின் எழுத்தின் நீட்சிதான்’ நான் என்று கூறுவது தாயன்பைப் புலப்படுத்துகிறது.

‘இன்றைய இளைஞர்கள் புத்தகம் போட்டுவிடத் துடிக்கிறார்கள்; எழுதுபவரெலாம் எழுத்தாளனாக முடியாது. எழுத்தாளன் என்றால் பரந்துபட்ட அறிவு வேண்டும். எனக்கு அது இல்லை’ என்றும் ‘தன்னை ஒரு எழுத்தாளனாகக் கூற கூச்சமாக இருக்கிறது’ என்றும் அவர் கூறுவது எழுத்தாளனுக்குரிய தகுதியை இன்றைய இளம் எழுத்தாளனுக்கு உணர்த்துவதாய் உள்ளது. சுருங்கக்கூறின் குருஸின் நேர்முகம் நல்ல எழுத்தாளரை, அவரது கோட்பாடுகளை அறிய துணை செய்வதாகக் கொள்ளலாம்.

கா. ஆபத்துக் காத்த பிள்ளை
நாகர்கோவில்

•••

‘கரூர் பெருந்துயரம்’ தலையங்கம் அனைவருக்குமான பொறுப்பைச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளது. அப்படி ஒரு உலகம் நவீனத்திலும் ‘படிநிலை’ சமநிலை இல்லை என்பதைக் கூறியது. ‘எனது காலத்தின் குரல்’ உரையில் படைப்பாளிகளின் கடமை சரியாகக் கூறப்பட்டுள்ளது. காயங்களுக்கு மருந்தான கதையும் கவிதையும் காலத்தை வென்று வாழும். பாரதியியல் ய. மணிகண்டன் மூலம் அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம்போல் பாரதியைப் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தகவல்களுடன் மிக மிக அருமை. ‘பிரிவினைவாதப் பயங்கர’த்தில் பல்வேறு வரலாற்று உண்மைகளை வாசித்து அறிய முடிந்தது.

தேசியம் சட்டப்பூர்வமானது - சட்டவிரோதமானது நல்லதோர் புரிதலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள் மனவலி ஒன்று இருந்துகொண்டே இருக்கும். நேர்காணல்கள் மனவலி போக்கும் மருந்தாகவும் அமைந்துவிடும். வசிப்பிட மக்களின் உணர்வுகளை உள்வாங்கி வெளியிடுபவரே சிறந்த படைப்பாளியாக முடியும். தான் வாழ்ந்த இடத்தையும் மக்களின் நிலையையும் உள்ளுணர்வும் ஆக்கி எழுத்துக்களாகியுள்ளார் ஜோ டி குரூஸ். நோபல் பரிசு இலக்கியம், வேதியியல் ‘அழிவுக்குக் கட்டியம் கூறும்’, ‘எழுத்து புதிய உலகம் புதிய அறைகள்’ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் மக்கள் விழிப்போடு செயல்பட்டு வாழ்ந்தால் அழிவைக் கட்டுப்படுத்த இயலும், சரியான வார்த்தைகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் தொடர்ந்து உழைப்பும் அர்ப்பணிப்பும் வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்பவனே ஓர் ஆய்வாளன், மிக மிகச் சரியே.

சீனி மணி
பூந்தோட்டம்

•••

காலச்சுவடு இதழில் வெளியாகும் தலையங்கம் பட்டைதீட்டிய வைரத்திற்குச் சமமாகவும் உண்மையாகவும் நடுநிலையுடன் அணுகக் கூடியவை.  நவம்பர் மாத தலையங்கம் கரூர் பெருந்துயரம் குறித்து ‘எல்லோர் கைகளிலும் கறை’ குறித்து என்னுடைய விமர்சனத்தை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.

கரூர் துயரத்தில் நம் அனைவரின் கரங்களிலும் குருதிக்கறை படிந்துள்ளது. இதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறேன். மறுப்புக்கான விளக்கங்களையும் காரணங்களையும் இங்கே பதிவுசெய்ய நினைக்கிறேன்.

மனித உயிர் மிக உயரிய ஏதாலும் ஈடுசெய்ய முடியாதது. அத்தகைய மனித உயிரை அற்பக் காரணங்களுக்காக, மலிவாக மாய்த்துக்கொள்கிற காலம். இதற்குச் சாட்சி, தினசரிச் செய்தித்தாள்களை வாசித்து இப்படியுமா செய்வார்கள் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான காரணங்கள் சிந்திக்கும் திறன் இல்லாதது, தன்நலத்தையே பிரதானமாகக் கருதிப் புரிதல் இல்லாமல் சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. ரசிக்கக்கூடிய, உணரக்கூடிய (தொட்டு, கண்களால் பார்த்து உள்வாங்கக்கூடிய) எவ்வளவோ விஷயங்கள் எண்ணில் அடங்காத அளவிற்கு அண்டம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அவற்றை அனுபவிக்க மனிதரின் வாழ்வுக் காலமே போதாது.

இறைவனால் இயற்கையாகப் படைக்கப்பட்டதை அனுபவிக்க மறந்து, செயற்கையாக உருவாக்கப்படும், நிஜமற்ற திரைப் பிம்பங்களுக்கு மயங்கி, வாழ்க்கையை அத்தோடு பிணைத்துக்கொண்டு நிஜமான வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். இந்த நிகழ்வானது திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்க முடியும்?

இந்த நவீன காலத்தில் வீட்டிலோ, சுற்றத்திலோ, நாட்டிலோ, பொதுவெளியிலோ தவறோ அல்லது விபத்தோ எதிர்பாராமலோ நடக்கும் என்று தெரிந்தோ நடந்துவிட்டால் யாராவது இந்த நிகழ்ச்சிக்கு நானே, நாங்களே காரணமும் பொறுப்பும் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் பக்குவமும் தைரியமும் உண்டா? மனிதன் வளர வளரச் சிந்திக்கத் தெரிகிறதோ இல்லையோ அடுத்தவரைக் காரணம் காட்டித் தப்பித் தன்னைப் புத்திசாலி என்று நினைக்கிறான். இந்தச் சூழலில் யார் பொறுப்பேற்க முடியும்?

பெருமாள்முருகன் “யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாத கூட்டம் என்றும் கட்டுப்படுத்த யாரும் இல்லாத கூட்டம்” என்று பதிவிட்டிருக்கிறார். கடந்த கால வரலாற்றின்படி கி.பி. 16ஆம், 17ஆம் நூற்றாண்டுக் காலங்களில் யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாத கூட்டமாக, பெருந்திரளாகச் சிறுவர்கள்முதல் பெரியவர்கள்வரை தங்களின் நியாயமான சமூக வாழ்க்கை வாழவும், அடக்குமுறை, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் புரட்சியாக (ரஷ்ய மற்றும் தொழிலாளர்) ரஷ்யாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் புரட்சி வெடித்தது. புரட்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தீர்வு காணப்பட்டது. கரூரில் அரங்கேறிய பெருங்கூட்டம் தன்னிலை மறந்து அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டுத் திரை நாயகனை நேரில் காணக் கூடியது. இதன் பின்புலத்தை என்னவென்று கணிப்பது?

அரசாங்கம் பெருந்திரளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்ற விமர்சனம் எல்லோராலும் மிகவும் எளிமையாகச் சொல்லப்படுகிறது. அதன் உண்மைத் தன்மை தீவிரப் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

புகழும் பணமும் இருந்தால் எதையும், எப்படியும் சாதிக்க முடியும் என்ற கற்பனைக் கண்ணோட்டத்தோடு அரங்கேறியதே இந்த கரூர் பெருந்துயரம். கட்சியை நடத்திச் செல்லும் தலைமைக்குத் தேவையான அத்தியாவசியமான அடிப்படைக் குணாதிசயங்கள்கூடத் தெரியாமல் நடத்திய கூட்டம், கட்சி சார்ந்தவர்களாலும், பின் தொடர்ந்தவர்களாலுமே விபரீதத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதே செய்தித்தாள்களும் ஊடகங்களும் வெளியிட்ட செய்தி. அப்படியிருக்க எல்லோர் கைகளிலும் கறை என்று பொதுவாகச் சொல்வது ஏற்புடையதாக இருக்குமாவென்று தெரியவில்லை.

ஜி. சிவகுமார்
சென்னை

•••

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.