டிசம்பர் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
டிசம்பர் 2025
    • கட்டுரை
      இதுவா ஊடக அறம்-?
      ஆர்எஸ்எஸ்ஸும் காரல் மார்க்ஸும்
      டிரம்பின் கறுப்பின அடையாள நீக்கம்
      பிறழ் தகவல்களின் காலம்
      சுந்தர ராமசாமி (எனக்கு) எழுதிய இரண்டு கடிதங்கள்
      இலங்கையரா? இந்தியரா?
    • கதை
      தீவிளி
      கருநாகங்கள்
    • பாரதியியல்
      ‘ஜீவ வாக்கு’: காலமும் மூலமும்
    • உரை: காலச்சுவடு 30 சேரன் 50
      உணர்வுத் தோழமை
    • கற்றனைத்தூறும்-13
      என்ன செய்யப் போகிறோம்?
    • நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சி
      நீர்வாழ் நினைவுகள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • பதிவு: காலச்சுவடு 30 சேரன் 50
      30 50
    • மதிப்புரை
      பாதுகாப்பின்மையின் பதற்றம்
      தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் திறவுகோல்
    • கவிதைகள்
      சவால்
      ஆறுதல் பரிசு
      உங்களில் ஒருவன்
    • தலையங்கம்
      பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்
    • கவிதை
      சுதாரிப்பு
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2025 உரை: காலச்சுவடு 30 சேரன் 50 உணர்வுத் தோழமை

உணர்வுத் தோழமை

உரை: காலச்சுவடு 30 சேரன் 50
சேரன்

அனைவருக்கும் வணக்கம். இந்தச் சிறப்பான நிகழ்வை இன்று ஒழுங்கு படுத்தியிருக்கிற என்னுடைய நண்பர்களுக்கு என் வாழ்த்தும் பணிவான வணக்கமும்.

காலச்சுவடின் நிறுவன ஆசிரியர் சுந்தர ராமசாமி பற்றிய சிறிய குறிப்பை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு சில மணிநேரங்களிலேயே இந்தியப் படையினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு வரத் தொடங்கிவிட்டனர். அப்போது நான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவீயூ என்கிற ஆங்கில வார இதழில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அந்த நேரம் என்னுடைய உள்ளுணர்வு சொல்லியது, இந்த நேரத்தில் இங்கு பணிபுரிவது அவ்வளவு உகந்ததாக இருக்காது என்று. அந்த எண்ணத்தோடு யாழ்ப்பாணத்தை விட்டுப் புகலிடத்திற்குச் சென்றுவிட்டேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தியப் படையினர் சட்டர்டே ரிவீயூ அலுவலகத்திற்குப் போய் “ருத்ரமூர்த்தி இருக்கிறாரா” என விசாரித்திருக்கிறார்கள். அப்போது சண்டை துவங்கியிருக்கவில்லை. அக்டோபர் மாதம்தான் சண்டை துவங்கியது. நான் நெதர்லாந்துக்குப் போய்விட்டேன். என்னுடைய நெதர்லாந்து விலாசம் யாருக்கும் தெரியாது.

அப்போது என்னுடைய யாழ்ப்பாண விலாசத்திற்குச் சுந்தர ராமசாமியிடமிருந்து ஒரு கடிதம் போயிருக்கிறது. தான் நடத்திவரும் காலச்சுவடு இதழை நிறுத்திவிடப் போவதாகவும், அந்த இறுதி இதழைச் சிறப்பிதழாக வெளியிடப்போவதாகவும் தன் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் அவ்விறுதி இதழில் என்னுடைய கவிதை கட்டாயம் இடம் பெற வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். அக்கடிதம் எங்கெல்லாமோ சுற்றி என்னிடம் வந்துசேர்ந்தது. நான் புகலிட வாழ்வில் இருந்தபோது எழுதிய முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கவிதைகளை அவருக்கு அனுப்பிவைத்தேன். அப்படித்தான் அவருடனான உறவும், என் புகலிடக் கவிதைகளின் தொடக்கமும் ஆரம்பித்தது.

அவருடைய காலத்தில் வந்த பெரும்பாலான பத்திரிகைகள் கலை இலக்கியத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தன. தமிழ்ச் சிற்றிதழ் மரபு கவிதை, சிறுகதை, விமர்சனம் என்றுதான் இருக்கும். விமர்சனங்கள் வந்தாலும் அவை ஆழமாகச் சமூகக் காரணங்களை நோக்கிப் போகவில்லை. பிற்பாடு சூழல் மாறுகிறது. காலச்சுவடு ஆசிரியராக கண்ணன் பொறுப்பேற்றபோது வேறு சூழல் நிலவியது. இதழ்கள் வெறுமனே கலை இலக்கியத்தோடு நிற்காமல் சமூக, பண்பாட்டு, அரசியல் சிந்தனைகள்பற்றி எழுதுவது, சமூகவியல், மானுடவியல் கட்டுரைகளை வெளியிடுவது, கலை இலக்கியத்தின் சமூகப் பின்னணியையும், வரலாற்றுப் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் ஆழமாகப் பார்வையிடுவது போன்ற இதழாகக் காலச்சுவடு மாறுகிறது. அத்தகைய இதழுக்கான தேவை தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்தது. அதற்கு முன்னால் நா. வானமாமலையின் ஆராய்ச்சி இதழ் இருந்தது. சில இலக்கிய இதழ்கள் இருந்தன. ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்துப் பொதுவான ஓர் இதழ், ஒட்டுமொத்தமான பரந்துபட்ட பார்வை, ஆய்வுச் சிந்தனை கொண்ட இதழ்கள் இருக்கவில்லை. அதைக் காலச்சுவடு நிறைவு செய்தது. இதை இடைநிலை இதழ்கள் என்கிறார்கள். ஆனால் அப்படிச் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இடைநிலை இதழ்கள் என்பன வேறு.

வெறுமனே கலை இலக்கிய இதழாக இல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட பண்பாட்டுப் பரிணாமங்களை இழுத்துக்கொண்டுவரும் முக்கியமான பங்களிப்பைக் கொடுத்த இதழ்களில் காலச்சுவடு முன்னோடியாக இருந்தது. அதற்குப் பின் இந்தப் பாணியைப் பின்பற்றி நிறைய இதழ்கள் வெளிவரத் தொடங்கின. இது என்னுடைய அவதானம்.

இவ்விடத்தில் காலச்சுவடின் வேறு மூன்று பங்களிப்புகளைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். முதலாவது, இங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். வழமையாகத் தமிழ் இலக்கியங்கள் அல்லது 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வெளிவரும்போது அதில் ஈழ இலக்கியங்கள் பற்றிய கவனம் இருக்காது. மலேசிய இலக்கியமோ, சிங்கப்பூர் இலக்கியமோ இருக்காது. ஆக, தமிழ் இலக்கியம் பற்றிய பார்வை தமிழ்நாட்டுக்குள் மட்டும் குறுக்கப்பட்ட ஓர் இலக்கியப் பார்வையாகத்தான் மிக நீண்ட காலமாக இருந்தது. தமிழ்நாட்டிற்கும், ஈழ இலக்கியத்திற்குமான தொடர்பும் புரிந்துணர்வும் மிகக் குறைவாகவே அந்தக் காலத்திலிருந்தது. ஆகவே தமிழ் இலக்கியம் என்று சொன்னால் அது தமிழ்நாட்டில் படைக்கப்படுகிற இலக்கியம். தமிழ்க் கவிதை என்றால் அது தமிழ்நாட்டில் எழுதப்படுவது, இப்படித்தான் நிலை இருந்தது. வெளியிலிருந்த ஒன்றிரண்டு பேரைச் சொன்னாலும், ஆழமான பரிமாற்றம், உறவுகள் இரு பக்கங்களிலும் நிகழவில்லை. பிற்பாடுதான் இந்த இலக்கியப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

அதற்குப் பெரும் பங்களிப்பைத் தந்திருப்பது காலச்சுவடு தான். தமிழ் இலக்கியமென்பது தமிழ்நாட்டிற்கும் மட்டும் உட்பட்ட இலக்கியமல்ல; தமிழ் என்பது தமிழ்நாட்டிற்கோ, யாழ்ப்பாணத்திற்கோ, மட்டக்களப்புக்கோ மட்டும் உரியதல்ல, தமிழ் என்பது உலகத் தமிழ்; தமிழ் மக்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அந்தந்த இடங்களில் இருந்தெல்லாம் இலக்கியம் வருகிறது. ஆய்வுகள் வருகின்றன, படைப்புகள் வருகின்றன. அவற்றை விட்டுவிட்டு வெறுமனே தமிழ் இலக்கியம், தமிழர்கள் இலக்கியம் என்றெல்லாம் பேச முடியாது. ஏனென்றால் தமிழ் என்பது மொழியால் அமைந்த ஒரு நிலம், மொழியால் அமைந்த ஓர் அடையாளம். மொழி என்பது எங்களுக்கு முக்கியம். அந்தச் சிந்தனையும் கூருணர்வும் நுண்ணுணர்வும் இன்னும் ஏராளமான எமது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிடையாது. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் தமிழைக் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்க முடியாது. அது புலம்பெயர்ந்தோர் என்று சொன்னாலும் சரிதான், தமிழ்நாடு என்று சொன்னாலும் சரிதான். காலச்சுவடு இதற்கு ஒரு வெளியை உருவாக்கிக் கொடுத்தது முதலாவது முக்கியமான பங்களிப்பு.

அதுமட்டுமின்றிப் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு வகை மாதிரிக்காக அன்றி, அதாவது ஒரு டோக்கன் (Token) செயல்பாடாக அல்லாமல் தொடர்ந்தும் சீரிய முறையில் பதிப்பித்து வருகிறது. அதைத் தொடர்ந்து உலகத் தமிழ் என்னும் கருத்தாக்கம், அது தொடர்பான சிந்தனை வீச்சு, அது தொடர்பான அணுகுமுறை என்பன இரண்டாவது முக்கியமான பங்களிப்பு.

ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உணர்வுரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பொருள்ரீதியாகவும் பங்களித்த ஏராளமான தமிழ்நாட்டவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியமான ஆட்களுக்குப் போராட்டத்தோடு இதயம் நிறைந்த ஈடுபாடு இருந்தது; புரிந்துணர்வு இருந்தது;  பரிவு இருந்தது. ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கான போராட்டத்தை ஈழத்தமிழ் மக்கள்தான் செய்ய வேண்டும். அந்தத் தன்னுரிமையையும், தனித்துவமான அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் மிகக் குறைவு. அந்த நேரத்தில்தான் இந்த ‘உணர்வுத் தோழமை’ என்கிற கருத்தை நான் முன் வைக்கிறேன். அது தோழமை உணர்வு அல்ல. ஆங்கிலத்தில் ‘Solidarity’ என்பார்கள். அதனுடைய சிறப்பு அம்சம், பெண்கள் விடுதலைப் போராட்டம் நடக்கும்போது, நான் போய் அவர்களுக்காகப் போராடுவதாகச் சொல்லி, அந்தப் போராட்டத்தை அபகரிக்க முடியாது, உங்களைவிட நான் நன்றாகப் பேசுவேன் எனச் சொல்ல முடியாது. அது உணர்வுத் தோழமை அல்ல. நாம் என்ன செய்யலாம் என்றால், நாங்கள் அவர்கள் பக்கத்தோடு நெருக்கமாக நின்று அவர்கள் சொல்வதை ஆழமாகக் கேட்டு அவர்களோடு தொழிற்படலாம். அது மாதிரி ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கட்சிகள், ஒருசில இடதுசாரிக் குழுக்கள், இன்னும் வேறுபட்ட தமிழ் தேசியக் குழுக்கள் பல நிலையில் நல்ல நோக்கத்தோடு, நேசத்தோடு நீங்கள் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனச் சொல்கின்றன. ஆனால் அது அப்படியல்ல, உணர்வுத் தோழமை என்பது உங்களுடைய போராட்டத்தையும், உங்கள் எதிர்ப்பையும் நீங்கள்தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய முடியாது. நாங்கள் உங்களுக்குப் பக்கத்தில் நின்று, உங்கள் போராட்டத்திற்கு ஆதரவைத் தருவோம் என்கிற புரிதலும் நிலைப்பாடும் ஆகும், நான் தொடர்புபட்ட நாளிலிருந்து காலச்சுவடின் எழுத்துக்களில், கட்டுரைகளில், ஆசிரியர் தலையங்கங்களில் அவர்கள் இத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த உணர்வுத் தோழமை இல்லாமல் வேறெந்த அரசியல் விடயங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. அந்தச் சுயநிர்ணயம், தன்னாட்சி, புரிந்துணர்வு மிக முக்கியம். அது முதல் தரமாகவும், முதலாவதாகவும் தமிழில், தமிழ்நாட்டில் வெளிப்பட்டது காலச்சுவடிலிருந்துதான். அதுதான் மூன்றாவது முக்கியமான பங்களிப்பு. அதனால்தான் நான் காலச்சுவடுடன் இத்துணை நீண்ட காலமாகப் பணியாற்றிவருகிறேன். இவைதான் நான் உங்களுடன் பகிர நினைத்த மூன்று கருத்துகள்.

அக்டோபர் 19 அன்று ஒஸ்லோவில் நடந்த ‘காலச்சுவடு 30 – சேரன் 50’ சந்திப்பில் சேரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

தொகுத்து எழுதியவர்: நவீன் ராஜன்

                   மின்னஞ்சல்: cheran@uwindsor.ca

 

வாசகர் கவனத்துக்கு...

ஜோ டி குருஸ் நேர்காணல்: கேள்வி-பதில் குழப்பம்

காலச்சுவடு நவம்பர் 2025 இதழில் ஜோ டி குருஸ் நேர்காணல் வெளியாகியது. அதில் குஜராத் கலவரங்கள் குறித்த கேள்வி-பதில்களில் கேள்விகளும் பதில்களும் குழம்பிய நிலையில் பிரசுரமாகியுள்ளன. இது கலவரங்களைப் பற்றிய பார்வைகள் சார்ந்த தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடும். அந்தப் பகுதியின் கேள்வி-பதில்களின் சரியான வடிவத்தை இங்கே தருகிறோம்.

கேள்வி: மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் குஜராத் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன… இன்னமும் ஏராளமான கலவரங்களுக்கு அவர்களின் சித்தாந்தம் ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளது. அவரை ஒரு தவறான முன்னுதாரணம் என நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: நான் மோடி தவறானவரென நினைக்கவில்லை. மோடி இடைநிலைச் சாதியிலிருந்து வந்தவர். பெரிதாக எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர். அவர் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். அதற்காகச் சில சமரசங்களைச் செய்துகொள்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரது பிரதான எண்ணமென்பது தேச முன்னேற்றத்தில் இருக்கிறது.மனிதாபிமான முறையில் பார்த்தால் குஜராத் படுகொலைகள் மிகவும் வருந்தத்தக்கதுதான்… ஆனால் நடந்த உண்மையென்று ஒன்று உள்ளது. நாம் உண்மைக்கு அருகில் இருக்கக்கூடிய வேறு சில விஷயங்களைப் பார்த்தபடி நின்றுவிடுகிறோம். எப்படிப்பட்ட ஆட்சி அதிகாரமாய் இருந்தாலும் மக்களின் தனிப்பட்ட கோபங்கள் சேரும்போது அதை யாராலும் தடுக்க இயலாது. நெருப்பு பற்றிக்கொள்கிறது. அதை வாயால் ஊதி அணைக்கலாம், பெரிதாக இருந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்கலாம். இன்னும் பெரிதாக இருந்தால் தீயணைப்புத் துறைக்குச் சொல்லலாம். ஆனால் தீயணைப்புத் துறை வந்தாலும் கட்டுக்குள் அடங்காத நெருப்பாக இருந்து, இத்துணை உயிர்கள் போகுமென்றால் என்ன செய்ய முடியும்.

இன்னொன்று, உங்களுடைய அனுபவம், படிப்பு, அறிவு சார்ந்து ஒன்றை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் நான் புரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா... உங்களுக்குத் தவறென்று படுவது எனக்குச் சரியென்றும் இருக்கலாம் அல்லவா...

கேள்வி: ஆனால் ஒரு இனத்தைப் பொது எதிரியாக முன்னிறுத்திச் செயல்படும் அமைப்பை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?

பதில்: இந்திரா காந்தியின் படுகொலையும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கும்பல் கொலைகளையும், வன்முறைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

கேள்வி: கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்திரா காந்தியின் கொலையின்போது நிகழ்ந்த படுகொலைகளுக்குப் பின் காங்கிரஸ் – சீக்கியர் அல்லது இந்து – சீக்கியர் என்ற சிந்தாந்த மோதல் கிடையாது. ஆனால் பிஜேபி முன்னெடுத்திருக்கும் அரசியலுக்குப் பின் மதம் சார்ந்த  சிந்தாந்த மோதல் இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது. இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

பதில்: நான் சாதாரண நிலையிலிருந்து பேசக்கூடிய அளவில் எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கவில்லை. அதிகாரமற்ற, விளிம்பு நிலையிலிருக்கின்ற கடலோர மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு வாய்ப்பு அமைந்தது. அதை நான் பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். எனக்காகப் பயன்படுத்த நினைத்திருந்தால் இன்று நான் வசதி வாய்ப்புகள் நிறைந்த ஒரு இடத்தில் இருந்திருக்கலாம். இன்று தமிழக அரசின் கனவு இல்லம் மூலம் கிடைத்த வீட்டில் அமர்ந்திருக்க மாட்டேன். கிடைக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்டு என் மக்களின் பாடுகளை அரசுக்குத் தெரியப்படுத்தினேன். கடலோரப் பேரிடர்களில் செய்த வேலைகள், மீன்பிடித் துறைமுகங்கள் ஏன் நிறைய வேண்டும், கடற்கரையை ஒட்டிய நகரங்கள் ஏன் வளர வேண்டும் எனப் பல்வேறு திட்டங்களை ஆய்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி அதன்மூலம் கடலோரத்திற்கான பல்வேறு திட்டங்கள் பெற்றுள்ளோம். இந்தத் திட்டங்களால் பாரம்பரியத் தொழில்களுக்குப் பாதிப்பு நேர்ந்துவிடக் கூடாதென்கிற அக்கறையோடும் இருந்துள்ளோம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.