தீவிளி

ஓவியம்: ரோஹிணி மணி
‘அந்திமந்தாரையையும் நிசாகந்தியையும் பூத்த வுடனே பறித்து இந்தப் பித்தளைப்பெட்டியில் பச்சைக் கற்பூரமிட்ட துணி முடிச்சுடன் ஒரு வெள்ளிக்காசையும் வைத்து தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். பின் இருபத்து நான்கு நாட்கள் கழித்து, ஒற்றையிதழ் செம்பருத்தியையும், தாமரையையும் முக்கியமாய்ப் பெண்/ஆணின் ஜீவநீர் பட்ட துணி (சூதக/இந்திரியம்), தலைமுடியையும் சேர்த்துப் பெட்டியிலிட வேண்டும். நாற்பத்தெட்டாம் நாளில் ஆலம் சுற்றிக் கரைத்து வாசலில் கொட்டிவிட்டுப் பெட்டியைத் திறந்து வாடிய பூக்களைத் தோட்டத்தின் வாயுமூலையில் புதைத்துவைத்து விட்டு வெள்ளிக்காசை எடுத்துக்கொண்டு செல்லக் காரிய பலிதம்.’
நாற்பத்தெட்டாம் நாள் காசின் சில்லிப்பு உள்ளங்கையில் குறுகுறுக்க பூரணி வீட்டுக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தான். அந்தப் பூக்களுக்காக எப்படியெல்லாம் அலைந்திருப்பான். நிசாகந்தியில் அவளைப் போலவே ஒரு மர்மமிருக்கிறது. அவளுக்குக் கழுத்தில் ஒரு மரு புதிதாகத் தோன்றியிருக்கிறது. அலுவலகத்தில் அவன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது முதலில் அவள் கழுத்துதான் தெரியும். அப்புறம் கொஞ்சம் எக்கி முகத்தைப் பார்ப்பான். மருவை லேசாக நிரடிவிட வேண்டுமென்ற ஆவலை அடக்கிக் கொண்டு இந்த நாளுக்காகக் காத்திருந்தான்.
ஊரடங்கியிருந்தது. லேசான புழுக்கம். இரவு மழைவரக்கூடும். நிலவைச் சுற்றி வளையம் தெரிந்தது. வட்டமிட்டுச் சரியாக வராமல் ஓரத்தில் அழித்ததுபோல் தேய்பிறை நிலவு. உள்ளுக்குள் பதற்றம். ஒதுக்குப்புறமான இடத்தில்தான் அவள் வீடு. வீட்டில் யாரும் இல்லையென்பதை அறிந்திருந்தான். வளைவு திரும்பி தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஆள் நிற்பது தெரிந்தது. செம்பருத்தி நிறத்தில் புடைவையணிந்து மாடத்தில் நின்றிருந்தாள். தயங்கி வெள்ளிக்காசைத் தடவியபடியே அண்ணாந்து பார்த்தான். மனதுக்குள் தாளில் பார்த்த வரிகள் ஓடின. இருந்தும் நம்பிக்கையற்று நின்றான். பூரணி திரும்பினாள். அவனைக் கண்டதும் முகம் மாறியது. இவனுக்கு உள்ளங்கை வியர்த்தது.
என்றுமில்லாது பூரணியின் முகத்தில் வியப்பும், உவகையும் பளீரிட்டது. முந்தானையைச் சுழற்றியபடியே திரும்பி ஓடியவள் இறங்கிவந்து வாசற்கதவைத் திறந்தாள். இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு உள்ளழைத்துச் சென்றாள். அமர வைத்தாள். பாதிக் கண்கள் மூடியிருந்தன.
நெருங்கி அமர்ந்தாள். உடல்மொழியே வேறாக இருந்தது. தன்னிடம்தான் இப்படி நெருங்குகிறாளா என்று பதற்றத்துடன் “பூரணி” என்றான். “ம்” உதடுகள் அழுந்தின. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் முகத்தை ஏந்தினான். நெற்றியில், கண்ணில் என முத்தமிட, படையலிடப்பட்டப் பொருளென அசைவின்றி வாங்கினாள். பின்னங்கழுத்தில் கூந்தலிடையே விரல்களை அளைக்கக் கண்களைப் பாதியாகத் திறந்தாள். அவள் விரல்கள் பரபரப்புடன் நடுங்கியபடி அவன்மேல் பரவின. கழுத்தில் பச்சை நரம்பு ஓடியிருந்தது. சாதித்துவிட்ட திருப்தியில் அகமகிழ்ந்து வேட்கைக்குப் பொருளாக ஒப்புக்கொடுத்தான்.
உள்ளறையைக் கைகாட்டிக் கூட்டிப்போனாள். படுக்கையில் அமர்ந்தான். கொஞ்சம் பயமாகயிருந்தது. அவனின் சட்டைப் பித்தானை கழட்டத் தொடங்கினாள். ரத்தம் உச்சந்தலையில் பாய்ந்தது. கன்னங்களிலும் கைகளிலும் சூடு பரவி ஆதிமிருகத்தை உசுப்பிவிட்டது. எல்லாம் சரியாக மிகச்சீராக எந்தத் தடங்கலுமற்று அவள்மேல் பரவத் தொடங்கிய நிமிடம் சட்டென நிறுத்தினான். மூக்கை உறிஞ்சினான். தலையை உதறினான். வேகமாய் விலகினான். இரண்டு முறை பெரிதாகத் தும்மினான். தும்மல் முடிந்தவுடன் இன்னும் கலங்கினான்.
அறை முழுவதும் ஒரு மணம் வியாபித்தது. படுத்துக் கிடந்தவள் ஏதோ கேட்டாள். என்னமோ சொன்னான். மனம் முழுவதும் அந்த வாசனைக்குள் போய்விட்டது. அசந்துபோய்க் கட்டிலிலிருந்து நகர்ந்து நாற்காலிக்கு வந்து திகைத்தபடி அமர்ந்தான். விலகலைப் பொறுக்க முடியாது சிணுங்கியபடியே அருகே வந்து கீழமர்ந்து அவன் தொடைமீது தலைசாய்த்தாள். வருடிக் கொடுக்க நினைத்த கைநகர வாசனை அவனை யோசிக்க வைத்தது. எங்கேயென நினைவின் அடுக்குகளில் துழாவினான். மணத்தின் அடுக்கில் புகுந்து காலத்தைக் கடந்து அங்கு போக விரும்பினான்.
பூரணியின் கூந்தல் முகத்தை மறைத்துப் பின்னால் விரிந்திருந்தது. பின்னங்கழுத்தும் முதுகும் இடுப்பும் பூனைமயிர்களுடன் சந்தன நிறத்திலிருந்தன. இல்லை எலுமிச்சை. இல்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நடுமத்திபோல. நடுவே பச்சையாய் நரம்புகள். தொடுவதற்காகவே மண்டலவிரதமிருந்து வந்தவன் மடிமேல் கவிழ்ந்து கிடந்தவளைத் தீண்டாது வாசனையிலேயே அமிழ்ந்திருந்தான். சுருள்சுருளாக எங்கேயோ போய்க் கொண்டிருந்தான்.
காதிலறைந்த அம்மாவின் கதறல், அப்பாவின் விறைத்திருந்த கால்பெருவிரல்களை இழுத்துக் கட்டிய காட்சி கண்முன் ஓடின. கைவிரல்கள் அவள் கூந்தலைத் தன்னிச்சையாக வருடப்போக, வாசனை இப்போது அதிகரித்தது.
ஒரே ஒரு கெம்புக்கல் நெளிமோதிரம் அம்மாவின் விரலில் நரம்புடன் பிணைந்து கிடந்தது. அம்மாவின் விரல்கணுக்களைத் தாண்டி எலும்புகள் முட்டிக்கொண்டிருந்தன. புழக்கடை வாசலில் எண்ணெயைத் தடவி தங்கம்மா அதைக் கழட்டிக் கொண்டிருந்தாள். கண்கள் எங்கோ நிலைகுத்தியபடி அம்மா கையை நீட்டியபடி அமர்ந்திருக்க மாமா துண்டால் வாயைப் பொத்தியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். தங்கம்மா வாய் நிறைய அப்பாவையும், லீனா சித்தியையும் ஏசிக்கொண்டே மேலும் எண்ணெயைக் கொட்டி ஒருவாறு கழட்டி மாமாவிடம் கொடுத்தாள். மாமா வாங்கிக்கொண்டு போய் பணம் வாங்கி வந்தார். அதற்குப் பின் அப்பாவின் சடங்குகள் தொடங்கின.
எதிரிலிருந்த மேஜையில் தந்தத்திலான வளையல் டப்பா கண்ணில் உறுத்தியது. மடியிலிருந்த பூரணியை விலக்கிவிட்டு எழுந்து சென்று தந்தப்பெட்டியைத் திறந்தான். அதிலிருந்துதான் வாசனை புறப்பட்டிருக்கிறதென உறுதியாக நம்பினான். அதில் சில சருகுகள் இருந்தன. இலைச்சருகுகள். வாசனை அதிலிருந்து வர சாத்தியமில்லை. நிமிர்ந்தபோது ரவிவர்மாவின் மோகினி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள். அம்மா அப்படிக் கைத்தூக்கி சந்தனம் பூசிக்கொள்வதைப் பார்த்திருக்கிறான். இறுதிக் காலங்களில் அங்கெல்லாம் கொப்புளங்கள் வந்துவிட்டிருந்தன. தங்கம்மா தூக்கித் துடைத்துவிட முடியாமல் கடைசியில் நார்க்கட்டிலில் கொண்டுவந்து போட்டாள். நாள்கணக்காகச் சாப்பிடாமலிருந்தும், படுக்கைப்புண் போட்ட பிறகும் அம்மாவின் தோல் சுருங்காமலிருந்தது. அம்மாவின் நிறத்திலேயே பூரணியைப் பார்த்த பிறகுதான் இந்தத் தணியாத மோகம் பற்றிக்கொண்டது.
நாற்காலியின் கீழே அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் சொருகியிருந்தன. இமைச் சிப்பியாய் பாதிக் கண்கள். மூக்குத்திக் கல், நாசி, கண்களின் இமைக்கற்றை எல்லாம் மோகங்கொண்டு விகசித்தன. உதடு இவன் முகத்தை நோக்கியபடியே ஈரமாய் இருந்தது. அவளின் ஒவ்வொரு அசைவும் கூடுவதற்காகத் துடித்ததை அவனால் உணர முடிந்தது.
வாசனையை மட்டும் விலக்கிவிட்டால், இந்த உணவை உண்ண முடியும். மறுபடி மூக்கைச் சுருக்கி மோந்துபார்த்தான். அப்பாவிடமிருந்த தைலக்குப்பியின் வாசனையா? அப்பா இடுப்பில் சொருகியிருப்பார். விக்ஸ் போன்ற களிம்பு. பச்சையாக இருக்கும். பச்சை மருந்தை எடுத்து காதோரம் இரு மடல்களிலும் தேய்த்துவிட்டு மூக்கில் வைத்து ஒரு இழு இழுப்பார். அம்மாவுக்கு அப்பாவைக் கண்கொட்டாமல் பார்க்கப் பிடிக்கும். நீளமான காலர் சட்டையுடன் ஏதோ ஒரு வாசம் கமழ அப்பாவைப் பார்க்கும் எவருக்கும் அவரைப் பிடித்துப்போகும்.
சித்தப்பா மூக்குப்பொடி போடுவார். இதே சமிக்ஞைகள். இப்படியேதான் மூக்கை ஒரு பக்கமாக இழுப்பார். இருவரும் ஜவ்வாதை விபூதியில் கலந்து நெற்றி நிறைய பூசிக்கொண்டு வருவார்கள். அந்தத் தெருவில் நுழையும்போதே வாசனை வந்துவிடும். அம்மாவுக்கு அத்தரும், சந்தனமும். கருநிறத்திலான பெட்டியைத் தூக்கிக்கொண்டுவரும் முஸ்தபா தாத்தா ஒவ்வொரு குப்பியாய்த் திறந்து கொடுக்க அம்மா வாங்கிக் கொள்வாள். பெரிய திண்ணையில் ஏதோ ஒரு வியாபாரி உட்கார்ந்திருப்பார். உள்ளிருந்து மோரும் பானகமும் கிடைக்கும். சற்று உள் தள்ளியிருந்த கிராமத்துக்கு வியாபாரத்துக்கு வரும் மனிதர்களுக்கு சந்திரன் வீடுதான் அடைக்கலம்.
அம்மா வீதியில் நடக்கும்போது ஒருபக்கம் கண்ணனைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பாவைக் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அவரின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் காலை எட்டி வைப்பாள். வீட்டினுள் நுழையும்போதே தங்கம்மா மூன்று கூரைகளிலிருந்து பிய்த்து வந்த சருகுகளை வைத்துத் திருஷ்டி சுற்றிப்போடுவாள். அம்மா அப்பாவைத்தான் மணப்பேன் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணம் செய்து கொண்டதையும் தங்கம்மாவைத் தாய்வீட்டுச் சீராகவே அம்மாவுக்குத் துணையாக தாத்தா அனுப்பி வைத்ததையும் தங்கம்மா சொல்லிச் சொல்லி ஆத்துப்போவாள்.

மரம் வெட்ட வந்தவர்களுடன் கேரளாவுக்குப்போன சித்தப்பா லீனா சித்தியைக் கட்டிக்கொண்டு வந்தார். அதற்குப் பின் வீட்டின் அடையாளம் முற்றிலுமாகச் சிதைந்துபோனது. லீனா சித்தி முந்தானையைச் செருகாமல் விடுபவளாய், கருப்பு ரவிக்கைக்கு வெள்ளை பிரா அணிபவளாய் இருந்தாள். திலகம், மை, ஸ்னோ குட்டைத் தலைப்பு என ஊரே வேடிக்கைப் பார்த்தது. அம்மா மருண்டாள். அவளின் நறுவிசு சித்தியின் படோடோபத்தோடு போட்டிபோட முடியாமலிருந்தது. வீட்டைப் பிரிக்கும் பேச்சுகள் ஆரம்பமாயிருந்தன. சித்தப்பாவுக்குத் திடீரென மவுசு கூடிப்போயிருந்தது. அவர் ஆரம்பித்த வியாபாரங்கள் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்க அவருக்கு மரியாதை அதிகமாகிக்கொண்டிருந்தது. எல்லாம் லீனாவின் தனிப்பட்ட பூஜைகளால்தான் என எல்லாரும் பேசிக்கொண்டார்கள். அப்பாவின் தேவை குறைய ஆரம்பித்து சித்தப்பாவைப் பார்க்க ஆட்கள் வர ஆரம்பித்தனர்.
அம்மா அவனைச் சித்தியிடம் போகவே விடமாட்டாள். சித்தி கூப்பிட்டு கைநிறைய தேனை விடுவாள். கதவின் பின்னால் போய் நின்று முழுவதையும் நக்கிவிட்டுத் துடைத்துக்கொண்டு செல்வதைச் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள். அவளிடம் ஒரு பித்தளைப் பெட்டி இருந்தது. எங்கு சென்றாலும் எடுத்துப் போய்க்கொண்டிருப்பாள்.
எதிர்வீட்டு கனகசுப்பு மத்தியஸ்தத்துக்கு வரவழைக்கப்பட்டார். லீனா சித்தியும் சித்தப்பாவும் பணமாய் அசையும் சொத்துக்களாய் வேண்டுமென பிடிவாதப்பட்டதால் அப்படியே போகட்டுமென அம்மாவும் சொல்லிவிட்டாள். அம்மாவைப் பெற்ற தாத்தாவுக்கு அங்கு நடக்கும் எதுவும் சம்மதமாக இல்லை. அவருக்கு அப்பா குடும்பத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை.சித்தப்பாவும் சித்தியும் கனகசுப்புவின் வீட்டைக் குறைந்த விலைக்கு வாங்கி மராமத்துச்செய்து குடியேறினார்கள். பிரித்துக் கொடுத்த பங்கைவிட அதிகமாகச் சொத்து எப்படி வந்ததென அப்பா மலைத்துப்போனார்.
பெரிய காருடன் வலம் வந்த சித்தி சித்தப்பாவைக் கண்டு ஊரே அதிசயித்தது. எப்படியோ பெரிய ஜமீனிடம் பேசி அவர் வீட்டைப் படப்பிடிப்பிற்குக் கொடுத்தார்கள். ஊரில் எங்கெங்கோ படப்பிடிப்புகள் நடக்க ஆரம்பித்தன. லீனா சித்தியைக் கண்டால் ஊரில் எல்லாரும் வியந்தார்கள். சித்தப்பாவின் கைநிறைய மோதிரங்கள். என்ன சொன்னாலும் எல்லாரும் கேட்டார்கள். தயாரிப்பு என ஒரு படத்தில் சித்தப்பாவின் பெயர்கூட வந்தது. ஊரின் எல்லா மூலைகளிலும் பெண்கள் பல வண்ணங்களில் உடுப்புடுத்திக்கொண்டு ஆட படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது.
அப்பா அங்கங்கே சென்று நின்று பார்ப்பதும் வருவதுமாக இருந்தார். தாத்தா சொல்லி மாமா அப்பாவின் காரியங்களை எடுத்துப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவிடம் லீனா சித்தியைப் பற்றி அப்பா பேசிக்கொண்டே இருக்க அம்மா அலைக்கழிந்தாள்.
அப்பாவின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. படப்பிடிப்பு முடிந்து ஊர் காலியான பிறகும் அப்பா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாமலிருந்தார். இலை, பூ என எதை எங்கு கண்டாலும் மோந்துபார்ப்பார். அம்மா பரிமாறும்போது குனிந்து ரசத்தைக் கையில் வாங்கி வாசம் பார்ப்பார். அப்புறம் இது அதிகமாயிற்று. வீட்டில் இருள் பரவ ஆரம்பித்தது. அப்பா கண்ட நேரங்களில் வீடு திரும்பினார். அப்பாவின் கண்ணில் பெரிய கட்டி வந்தது. புருவங்களை நெரித்து சித்தப்பாவின் வீட்டைப் பார்த்தபடி நெடுநேரம் திண்ணையில் அமர்ந்திருப்பார். அம்மா மிகக் கலவரமுற்றிருந்தாள். கண்ணனும் தாத்தாவும் பின் தாழ்வாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
“எனக்கு பயம்மாருக்குப்பா. லீனா கண்ணைப் பார்க்க முடியலப்பா. என்னமோ மை வெச்சுருக்காளாம். ஊர்ல பேசிக்கறாங்க. இவரு வேற இப்படி ஆயிட்டாரு. சொத்துப் பிரிக்கறதுக்கு முன்னாடி லீனா நம்ம வீட்டு கொல்லையில எதையோ எடுத்துட்டிருந்தா. நம்ம தங்கம்மாவுக்கும் அவளுக்கும் என்னமோ சண்டை. கேட்டதுக்கு தங்கம்மா இதுவரைக்கும் மூச்சு விடல. ஆனா, அன்னிலருந்துதான் சொத்தை பிரிச்சுக் கேக்க ஆரம்பிச்சாங்க. இப்ப உங்க மருமகனை பாருங்க. அவளை சுத்தி சுத்திபோய் நிக்கறாங்க. ஏதோ விட்டத்தை பார்த்து யோசிச்சுட்டே இருக்காங்க. எனக்கு பயம்மாருக்குப்பா.”
தாத்தா தலையை ஆட்டிக் கொண்டார். பேசாமல் சாப்பிட்டு முடித்தவர் “ தங்கம்மாவை எப்பவும் கூடவெச்சுக்க, நீ இனிமே காட்டுப்பக்கம் ஒதுங்கக்கூட போகக் கூடாது. வீட்லயேதான் கட்டிக் கொடுத்துட்டேன்ல. அதே போதும். நான் தர்மபுரி கோட்டைக்குப்போய் சாயபுகிட்ட தாயத்து மந்திரிச்சு வாங்கிட்டுவரேன். தைரியமா இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அம்மாவுக்கும் அவனுக்கும் தாயத்துகள் கட்டப்பட்டன. தங்கம்மா எப்போதும் உடனிருந்தாள். எதிர்வீட்டைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என அவனிடம் சொல்லியிருந்தார்கள். லீனா சித்தி கையில் சாக்லேட்டுகளை நீட்டியபடியே இவனை அழைப்பாள். மீசை அரும்பத் தொடங்கியிருந்தது, அவள்முன் அரைச் சட்டையுடன் நிற்கக் கூச்சமாயிருந்தது. மெல்ல பால்யம் கண்ணனை விட்டு நகரத் தொடங்கியிருந்தது.
தென்னந்தோப்பில் குடியிருந்த பழனி அதிகாலையில் வந்து கதவைத் தட்டினான். சித்தி தென்னந்தோப்பிற்கு வந்து தன்னை வெளியில் போகச் சொல்லுவதாகக் கூறி அழுதான். அம்மா அப்பாவை எழுப்ப அப்பா எழவில்லை. அப்பாவுக்குத் தூக்கம் அதிகமாயிருந்தது. தாத்தாவும் மாமாவும் ஓடினார்கள். அதேபோல் ஒவ்வொரு சொத்தாக லீனா சித்திக்கு அப்பா எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தார். தாத்தாவுக்கும் மாமாவுக்கும் எதையும் தடுக்க முடியவில்லை. வயலையும் எழுதிக் கொடுத்துவிட்டார் எனத் தெரிந்த அன்று தாத்தாவுக்கு நெஞ்சுவலி வந்து பட்டென இறந்துபோனார். அம்மா லீனா வீட்டின் முன்னால் நின்று மண்ணை வாரியிறைத்தாள். லீனா ஆங்காரமாய் வெளியில் வந்து ஏதோ சொல்ல, தங்கம்மா அம்மாவைக் கையால் பொத்தி வீடுவந்து சேர்த்தாள். “வேணாம் பானு. அவ கண்ணை பார்க்காத. வேணாம்”,
அப்பாவை எதிலிருந்தும் மீட்க முடியவில்லை. கண்களில் குழிவிழுந்து மொத்த சதையையும் உறிஞ்சியதுபோல் ஆகிக்கொண்டிருந்தார். இந்தத் திண்ணையிலிருந்து எதிர் திண்ணைக்குப் போய் உட்கார்ந்துக்கொண்டார்.
தங்கம்மா அப்பா வீட்டை விட்டுக் கிளம்பும் போதெல்லாம் காலில் விழுவாள். “அங்க போகாதீங்க மாப்ளை. ரதமாட்டம் பாப்பா இருக்கு. அதெல்லாம் சீக்கு. உங்களுக்கு ஒட்டிக்கும். உங்க ஒரு துளி ரத்தத்தைக்கூட மிச்சம் வைக்க மாட்டா. பானுவை காபந்து பண்ணி உங்களைக் கோட்டை விட்டுட்டனே” என்று அழ அழ அப்பா கிளம்பிப்போவார். பின்னால் போகும் அம்மாவை தங்கம்மா தடுப்பாள். இவனால் வீட்டில் இருக்க முடியாது. இரவு தூங்கும்போதுகூட அப்பாவிடம் அம்மாவை விடாமல் தன் சேலையில் அவள் சேலையை முடிந்து வைத்திருந்தாள்.
ஒருநாள் அப்பா அம்மாவை எழுப்பினார். முடிச்சு தடுக்க அம்மாவின் சேலையை அப்படியே கழட்டிவிட்டு அப்பா இழுத்தார். அம்மா சிரித்தபடி அப்பாவுடன் உள்ளே செல்வதைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டான். அம்மாவின் சிரிப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. அடுத்த நாளில் அம்மாவுக்குக் குளிர்ஜுரம் கொண்டது. தூக்கி தூக்கிப்போட்டது. டாக்டர்கள் வந்து பார்த்தும் சரியாகவில்லை. மாமாதான் அங்கும் இங்குமாய் அலைந்துகொண்டிருந்தார். தங்கம்மா தனியே கிளம்பிப் போய் சாயபுவுடன் அடுத்த நாள் மாலையில் வந்தாள். அப்பா ஓவெனக் கத்தினார். ‘வெளிய போ... வெளிய போ’ என கத்திக்கொண்டே வந்தவர் சாயபுவின் வாசத்தை மோப்பம்பிடித்து அசையாமல் நின்றார். கத்தை மயிலிறகை அப்பா முகத்தில் ஏதோ சொன்னபடி தடவ அப்பா அசையாமல் நின்றார். வாய் ஒருபுறம் கோணி எச்சில் வழிந்தது. தங்கம்மாவிடம் தூரமாய் உட்காரவைக்கச் சொன்னார்.

அம்மாவுக்குச் சில வைத்தியங்கள் செய்தார். ஓதினார். குடத்துக்குள் புகையைப்போட்டு அந்த நீரைக் குடிக்கச் செய்தார். அம்மா அடுத்தநாள் மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். மாமாவும் தங்கம்மாவும் கண்ணனையும் சேர்த்துக் காலில் விழச் செய்தார்கள். மாமாவையும் கண்ணனையும் தனியாக அழைத்து சாயபு சொன்னார். “ இது வேற மார்க்கம். எந்த பக்கமும் சபல படாம இருக்கணும். முக்கியமா இந்திரியம் வெளிய போவக் கூடாது. புரியுதாடா?”
இவன் புரியாமல் பார்க்க மாமா, “நான் சொல்லிக்கறேன்” என்றார்.
சாயபு “டேய், நீ சின்னப் பையனில்ல. எனக்குத் தெரியும். உன் அம்மாவோட ரத்தத்தை எடுக்க அந்தப் பிசாசு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்திருக்கா. தங்கம்மா காப்பாத்திட்டா. பெண்ணுக்கு ரத்தம், ஆணுக்கு இந்திரியம். அதுல நனைச்சு வசியம் வெச்சா மீள முடியாது. உங்க தாத்தா கூச்சநாச்சப் பட்டு மருமவன்கிட்ட சொல்ல முடியாம லேசா எச்சரிச்சுவிட்டுட்டாரு. உன் அப்பா சந்திரன் அவ்வளவுதான். ஒன் சித்தப்பனும் சித்தியும் ஊரையே வசியம் பண்ணி வெச்சுருக்காங்க. இந்த வசியத்தை முறிக்க முடியாதுடா. எச்சரிக்கையா இரு. அவ கண்ணைப் பார்க்காதே. வசியம் வெச்சு வெச்சு கைதேர்ந்துட்டாங்க. ஆனா, அவ புழுத்து சாவறதை நீ பார்ப்ப. நீ பார்க்கணும்.”
மாமாவைப் பார்த்து “டேய். அவனுக்கு எல்லாம் சொல்லிக்கொடு. இந்த வசியம், மந்திரம், தந்திரம்லாம் குடும்பத்துல ஒருத்தருக்கு பிடிச்சதுன்னா. எல்லாருக்கும் வரும். அப்பன் புத்தி இவனுக்கு வராமப் பார்த்துக்க. அது சும்மாருக்காது. வா... வான்னு எந்த வயசானாலும் கூப்டுட்டே இருக்கும். பத்திரம்” என்றபடிக் கிளம்பிப்போனார்.
அடுத்த பெளர்ணமிக்கு அப்பா இறந்துபோனார். அதற்குள் இன்னும் மெலிந்திருந்தார். அப்பாவைத் தூக்கும்போது
கனமே தெரியவில்லை. சித்தப்பா கடைசிக் காரியங்கள் செய்ய வர, அம்மா பெரிதாய் சண்டைபோட்டுச் செய்யவிடாமல் துரத்தினாள்.
அந்த வீட்டையும் விற்றுவிட்டு திருச்சிக்கு மாமாவுடன் வந்து சேர்ந்தார்கள். சில வருடங்கள் கழித்துச் சாயபு சொன்னபடியே சித்தி படுக்கையில் கிடந்து புழுவைத்து இறந்துபோனதாகத் தகவல் வந்தது. திம்திம்மென அம்மாவுக்குக் காவலாய் நின்ற தங்கம்மா அம்மா இறந்த அடுத்த வாரமே ஃபேனில் தொங்கிப்போனாள். மங்கிய பொழுதாய் மிச்ச வருடங்கள் கழிந்திருந்தன.
தத்திதத்தி வாங்கி வைத்திருந்த வேலையைத் தவிர உலகில் ஒன்றுமே இல்லை என்றானபோது சித்தப்பா வந்து சேர்ந்தார். ஒரு கண்ணில் அடிபட்டுச் சுருங்கிப்போயிருந்தது. ஒரு முடிகூட இல்லை. மஞ்சளில் உடுத்தியிருந்தார். உடை, பை எல்லாம் மஞ்சள். நெற்றியில் விபூதியோ சந்தனமோகூட இல்லை. மஞ்சள் மட்டுமே.
அம்மாவின் போட்டோவுக்கு அடியில் பத்திரங்களை வைத்தார். அம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டபடி “இவ்ளோதான் இருக்கு. என்னை விட்ரு” என்றார். கண்ணனிடம் திரும்பி, “இன்னிக்கு ஒருநாள் மட்டும் இங்க இருந்துக்கட்டுமா” என்று கேட்டார். “வேணாம் கிளம்பு” என்றதும் “மாமா பாவம் இருந்துட்டு போகட்டும்” என்று சொன்னார். கண்ணன் வெளியில் படுத்துக் கொண்டான். அடுத்தநாள் எழுந்தபோது சித்தப்பா வீட்டில் இல்லை. ஆபிஸ் போகும்போதுதான் தெரிந்தது பக்கத்துத் தெருவிலிருந்த கிணற்றில் விழுந்திருக்கிறார். பேசாமல் கடந்து சென்றான்.
விடாமல் போலீஸ் வந்தபோதும் தொடர்பில்லை, தெரியாது என முடித்துக்கொண்டான். பத்திரங்களைப் பார்த்து ஊருக்குப்போய் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு நல்ல வீடாய்ப் பார்த்து இந்த ஊரிலேயே வாங்கினான். தரகரை அழைத்து நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொன்னான். பெண்ணுக்கு இரண்டாவதாக இருந்தாலும் பரவாயில்லை. வயது நாற்பதாயிற்று ஏதோ ஒன்று. என்று கேட்டி ருந்தான். மாமாவும் படுக்கையில் விழுந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டி ருந்தார்.
அப்போதுதான் ஆபிஸில் பூரணி புதிதாய்ச் சேர்ந்தாள். அம்மாவின் நிறம். கிட்டே போனால் எரிந்து விழுந்தாள். மணமானவள். பிடிகொடுக்காமல் போனாள். கணவன் அச்சுபிச்சு என அவளுடன் பார்த்தபோது தெரிந்துவிட்டது. இதுவரை எதன்மீதுமில்லாத பித்து பூரணியிடம் அதிகமாகிக் கொண்டேபோனது. என்னசெய்தாவது அடைந்தால் போதும்.
சித்தப்பாவின் பை என போலீஸ் கொடுத்துப் போனதைத் திறந்தான். லீனா சித்தியின் பித்தளைப்பெட்டி நிறைய சுருண்ட தலைமுடிகள், ரத்தக்கறை படிந்த துணிகள், நீர்முள்ளி விதை, வசம்பு, அன்னாசி மொக்கு, வெப்பாலை அரிசி என தனித்தனி முடிச்சுகள். நிறைய குறிப்புகள். சந்திரகலை நாடி, சூர்யகலை நாடி என என்னென்னமோ எழுதியிருந்தது. ஊன்றிப் படித்தான். ஒவ்வொன்றாகச் செய்துபார்த்தான். வெள்ளிக்காசை எடுத்துக் கிளம்பும்போது மாமா கனைத்தார். அருகில் போனால் சிரமப்பட்டு, வாயசைத்து “வேணாம் கண்ணா” என்றார். அதற்குள் முகத்தசைகள் அங்குமிங்குமாக இழுபட்டன. வெகுவாகப் போராடி சொல்லி முடித்துவிட்டு அயர்ந்தார். அதையும் தாண்டி இங்கு வந்து நின்றாலும் தொட முடியாமல் ஏதோ தடுத்துக் கொண்டிருக்கிறது.
பூரணியை அடையத்தான் இத்தனை போராட்டமும். அவளைத் தொட்டாலே வாசனை மேலெழுந்து சித்தத்தைக் கலக்கியது. தந்தப்பெட்டியை உறுத்தான். தூக்கிச்சென்று சன்னலின் வழி வெளியே எறிந்தான். மடங்கி உட்கார்ந்து அவனைப் புரிபடாமல் பார்த்துக்கொண்டிருந்தவளை வேகமாக நெருங்கி மேலெழுப்பினான். சேலை நுனி இவன் காலில் மிதிபட்டிருக்க நழுவும் உணர்வில்லாது சிரித்தபடி எழுந்து அவனுடன் இழைந்தாள். பெரிதாகச் சிரித்தாள். அந்த இரவின் அதே சிரிப்பு. அப்பாவைக்கண்ட அம்மாவின் அதே பித்தேறிய சிரிப்பு. காதில் தங்கம்மா கத்துவதுபோல் பிரம்மை. மணம் தீவிரமடைந்தது.
மொத்தமாக உடைந்து அவள் காலில் அம்மாவெனக் கதறி விழுந்தான். பூரணி சிரிப்பை நிறுத்தினாள். தங்கம்மாவின் குரல் அவளின் காதில் தெளிவாகக் கேட்டது “அவன் கண்ணைப் பார்க்காதே”.
மின்னஞ்சல்: savithavenkatakrishnanv@gmail.com

சவிதா: சேலத்தைச் சேர்ந்தவர். 2020ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சென்னையில் வசிக்கும் சவிதா சின்னத்திரையில் நெடுந்தொடர் வசனங்களை எழுதுகிறார்.
