தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்
வைரமுத்துவுக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார்கள். 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட கண்டன அறிக்கையொன்று வெளியானது. சில எழுத்தாளர்கள் ஞானபீட அமைப்புக்கு நேரடியாகவே கடிதம் அனுப்பித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். ஆங்கில ஊடகங்கள் இந்த எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டன. தமிழ் ஊடகங்கள் பொதுவாக வைரமுத்துவை ஆதரித்தன; எதிர்ப்பு பற்றி மௌனம் காத்தன. சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப் (CAG), அனைத்திந்திய முற்போக்கு மகளிர் சங்கம் (AIPWA) போன்ற அமைப்புகள் ஆங்கிலத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டபோது அதை விமர்சித்து சுந்தர ராமசாமி விரிவானதொரு கட்டுரை எழுதினார் (போலி முகங்கள் - சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு). அகிலனுக்கு ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டதைப் பலரும் ஆதரித்த சமயத்தில் சு.ரா.வின் கண்டனக் குரல் ஒலித்தது. அகிலனுக்கு இந்த விருதை வழங்கியதில் என்ன தவறு என்று விளக்கிய சு.ரா., நல்ல எழுத்து என்றால் என்ன, அகிலனைப் போன்றவர்கள் இத்தகைய அங்கீகாரம் பெறுவதால் ஒரு மொழிக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பவற்றையெல்லாம் விரிவாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதியிருந்தார். இலக்கியத்திற்கான அடிப்படை அளவுகோல்களையும் தெளிவுபடுத்தியிருந்தார். இப்போதைய ஞானபீடச் சர்சையின்போதும் இந்தக் கட்டுரையைப் பலரும் பொருத்தமாக நினைவுகூர்ந்துள்ளார்கள்.
சிற்றிதழ்ச் சூழலில் புழங்கிவந்த பல்வேறு அளவுகோல்களும் மதிப்பீடுகளும் இன்று தமிழ் எழுத்துப் பரப்பில் பலராலும் இயல்பாக ஏற்பைப் பெற்றிருக்கின்றன. கறாரான சில விமர்சகர்களின் செயல்பாடுகளாலும் தீவிர இதழ்களின் வீச்சினாலும் சாத்தியமான தாக்கம் இது. இந்தத் தாக்கத்தை இப்போதைய ஞானபீடப் பரிசுக்கான எதிர்ப்பில் தெளிவாகக் காண முடிகிறது. வைரமுத்துவுக்கு ஏன் இந்த விருதை அளிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களையும் விருதுகளைப் பெற அவர் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்பதையும் பலரும் திடமாக முன்வைத்திருக்கிறார்கள். அவர்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலும் இந்த விருதின் பொருத்தமின்மையையும் அறச் சிக்கலையும் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் பலனாக இத்தகைய எதிர்வினைகள் மிகவும் வேகமாக வெளிப்பட்டுப் பலரையும் சென்றடைந்தன. மரபார்ந்த மையநீரோட்ட ஊடகங்கள் பலவும் வைரமுத்துவுக்குத் துதிபாடிக்கொண்டிருந்தபோது சமூக ஊடகங்கள் அறிவுச் சமூகத்தின் மனசாட்சியாக ஒலித்தன.
ஞானபீடப் பரிசு ஒருவரது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பை முன்னிட்டு வழங்கப்படுகிறது. அதுபோலவே, ஒரு மொழிச்சூழலில், அந்த மொழிச் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் ஆளுமைகளுக்கே ஞானபீடப் பரிசு வழங்கப்படுகிறது. ஞானபீடத் தேர்வுக் குழுவில் தேர்ந்த இலக்கிய ஆளுமைகள் எப்போதும் முன்னிலைப்பட்டதாகத் தெரியவில்லை. கவனம் பெறாமல்போகும் ஆளுமைகளை இந்திய அளவில் கவனப்படுத்தும் பொறுப்பை அது எப்போதும் எடுத்துக்கொண்டதில்லை. ஒரு மொழியின் அடையாளமாகக் கொண்டாடப்படும் ஆளுமைகளுக்கு இந்திய அளவிலான அங்கீகாரத்தை வழங்கும் பணியை மட்டுமே அது செய்கிறது. பிற இந்திய மொழிகளில் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் அம்மொழிகளின் இலக்கிய உலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்கள். மைய நீரோட்ட ஊடகங்கள், அரசியல் அமைப்புகள், வெகுஜனப் பண்பாட்டு அமைப்புகள், கல்விப் புலங்கள் ஆகியவற்றால் போற்றப்படுபவர்கள். யு.ஆர். அனந்த மூர்த்தி, சிவராம் காரந்த், அம்ரிதா ப்ரீதம், தகழி சிவசங்கரப் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை வைத்து இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
தமிழில் இதுவரை ஞானபீடப் பரிசு பெற்ற மூவருமே – அகிலன், ஜெயகாந்தன், வைரமுத்து – பொதுச் சமூகத்தின் மதிப்பைப் பெற்றவர்கள். ஞானபீடப் பரிசுக்குத் தகுதி பெற்றவர்களாக இலக்கியவாதிகள் கடந்த காலங்களில் முன்னிறுத்திய அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன் முதலானோர் இந்த வரையறைக்குள் அடங்கவில்லை. ஞானபீடத்திற்கு எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கும் கல்வியாளர்கள் மேற்படி ஆளுமைகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். அரசியல் அமைப்புகளும் மைய நீரோட்ட ஊடகங்களும் இதர பண்பாட்டு அமைப்புகளும் கல்விப்புலமும் தமிழின் நவீன இலக்கியம் தொடர்பான ஒவ்வாமையையும் புறக்கணிப்பையுமே வெளிப்படுத்திவந்திருக்கின்றன. அசோகமித்திரனுக்கு சாகித்திய அகாதெமி விருது அளிக்கப்பட்டதும் அதை ரத்துசெய்ய வேண்டும் என்று அமைச்சர் தமிழ்க் குடிமகன் தனக்குக் கடிதம் எழுதியதாக அகாதெமியின் அப்போதைய தலைவர் யு.ஆர். அனந்தமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். சிகரம் செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் அசோகமித்திரனைப் பழிக்கும் நிகழ்வொன்று அன்றிரவே சன் டீவியில் ஒளிபரப்பப்பட்டது.
இதே அமைப்புகள் வைரமுத்துவையும் அவரைப் போன்றோரையும் கொண்டாடிவருகின்றன. முதல்வர் வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்தியிருக்கிறார். முதல்வர் இல்லம் தேடி வரும் வாய்ப்புடைய எழுத்தாளர்கள் தமிழில் வேறு யாரேனும் உள்ளனரா? தமிழக அரசே 50 ஆண்டுகளாகப் புறக்கணித்தவர்களை ஞானபீடம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியை எழுப்ப நமக்கு என்ன தகுதியுள்ளது? இந்நிலையில் வைரமுத்து தமிழ்ச் சமூகத்தின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற எழுத்தாளராகக் கருதப்பட்டு ஞானபீடப் பரிசு வழங்கப்படுவதில் எந்த வியப்பும் இல்லை. இச்சர்ச்சையில் பெரும்பான்மையான தமிழக முற்போக்காளர்களின் மௌனம் குறிப்பிடத்தகுந்தது. அதன் மதிப்புறு தலைவராகத் திரைக்கலைஞர் ரோகிணி இருக்கும்போதிலும் தமுஎகச முழு மௌனம் சாதிக்கிறது. இன்னும் சிலர் வைரமுத்துவை எதிர்ப்பது சனாதனத்தின் குரல் என்று நிறுவ முயல்கின்றனர். உதாரணத்திற்கு, கலையின் சிறப்பைப் பற்றிப் பேசுவதே இந்துத்துவப் பார்வை என்னும் ரீதியில் எழுத்தாளர் அழகிய பெரியவன் எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆணாதிக்கப் போக்கையும் சுயசாதிப் பெருமிதத்தையும் வெளிப்படையாகவே காட்டும் வைரமுத்துவுக்கு முட்டுக்கொடுக்க அம்பேத்கரையும் பெரியாரையும் துணைக்கு அழைத்துள்ளார். இலக்கியத்தரம் என்பதே சனாதனச் செயல் என்று கவிஞர் கரிகாலனும் வாதிக்கிறார்.
எல்லா மொழிகளிலும் பொழுதுபோக்கு எழுத்தும் பிற கலை வடிவங்களும் இருக்கின்றன. ஆனால், சீரிய கலை இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிய தெளிவு அச்சமூகங்களுக்கு இருக்கிறது. மலையாளத்திலோ கன்னடத்திலோ வெகுமக்கள் விரும்பும் பொழுதுபோக்குக் கேளிக்கைப் படைப்புகள் பண்பாட்டின் அடையாளமாகவோ பெருமிதமாகவோ முன்னிறுத்தப்படுவதில்லை. தங்களுடைய சிறந்த படைப்பாளர்களையே அந்தச் சமூகங்கள் கொண்டாடுகின்றன. தங்களது பண்பாட்டு அடையாளங்களாகப் போற்றுகின்றன. ஆனால் தமிழின் சிறந்த எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அறிந்த அளவில் மதிப்பளிக்கவும் இல்லை. அவர்களுடைய பெயர்கள் சிறு வட்டத்தை விட்டு வெளியே செல்வதில்லை. நவீன இலக்கியவாதிகளில் விதிவிலக்காக கி.ரா.வுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அரச மரியாதை கிடைத்தபோது அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஜெயகாந்தனுக்கு மட்டுமே அவர் தீவிரமாகச் செயல்பட்டுவந்த காலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்தது. உலகத் தரத்தில் எழுதும் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பெரும்பாலானோரும் குடத்திலிட்ட விளக்காகவே வாழ்ந்து மறைய வேண்டிய நிலையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வைரமுத்துவின் மீதான பாலியல் புகார்களை முன்வைத்தும் ஞானபீடப் பரிசு விமர்சிக்கப்பட்டது. கூடுதலாக அவர் எழுத்துக்களில் விரவியிருக்கும் ஆணாதிக்க மதிப்பீடுகளையும் நஞ்சு கலந்த ஆண்மையின் வெளிப்பாடுகளையும் குறிப்பிட வேண்டும். ஆனால், அரசியல் அரங்கிலும் பொது மேடைகளிலும் வெகுஜன ஊடகங்களிலும் வைரமுத்து மீடூ குற்றச்சாட்டுகளுக்கு முன்பு இருந்த அதே பிம்பத்துடன் கம்பீரமாகவே காட்சியளிக்கிறார். தமிழக அரசின் (அறிவிக்கப்படாத) அரசவைக் கவிஞருக்கு உரிய அந்தஸ்து அவருக்குக் கிட்டிவருகிறது. வைரமுத்துவின் மீதான புகார்கள் குறித்துப் பொருட்படுத்தத்தக்க அலசலோ இரு தரப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் செய்திக் கட்டுரையோ தமிழின் மையநீரோட்ட ஊடகம் எதிலும் வந்ததில்லை. தமிழின் பொதுப் பண்பாட்டு அடையாளங்களைத் தீர்மானிக்கும் அமைப்புகள் எந்த மதிப்பீடுகளுடன் செயல்படுகின்றன என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற தருணங்கள் நாம் எத்தகைய சூழலில் இருக்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கே நினைவுபடுத்துகின்றன.
வைரமுத்துவுக்கு ஞானபீடப் பரிசு அறிவிக்கப்பட்டதும் பல எழுத்தாளர்கள் சீற்றத்துடன் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். ஜெயமோகன், இதைத் தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று எழுதினார். ஆனால், ஜெயமோகனின் இந்த எதிர்வினைக்கு அதன் சொற்கள் உணர்த்தும் பொருள்களின் மதிப்பைக் கொடுக்க இயலாது. நவீன இலக்கியம், நவீன இலக்கியவாதிகள் ஆகியோரைப் பற்றி ஏராளமாக எழுதிக் குவித்திருக்கும் ஜெயமோகன் கல்கி, சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் எழுத்துக்களையும் பாராட்டி எழுதியிருக்கிறார். 1999ஆம் ஆண்டில் கல்கி நூற்றாண்டு விழாக்களில் மேடை ஏறி அவரை வியந்து பாராட்டியதில் தொடங்கி ‘பொன்னியின் செல்வ’னுக்குத் திரைக்கதை எழுதியதுவரை கல்கிக்கு மேலும் புகழ் சேர்த்தவர், ‘திசைகளின் நடுவே’ தொகுப்பின் முன்னுரையில் சுஜாதாவைத் தனது முன்னோடி எழுத்தாளராகவும் அங்கீகரித்தவர் ஜெயமோகன். குறிப்பாக வைரமுத்துவைப் பாடலாசிரியராக மட்டுமின்றிக் கவிஞராகவும் புகழ்ந்திருக்கிறார். மரபின் மைந்தன் முத்தையா எழுதிய ‘ஒரு தோப்புக் குயிலாக’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் வைரமுத்து ஏன் சிறந்த கவிஞர் என்பதை விளக்குகிறார்:
“முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்க முடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாகக் கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம்போலப் பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.”
இப்படிப்பட்ட கவிஞருக்கு அகில இந்திய விருது கிடைப்பதில் அவமானப்பட என்ன இருக்கிறது என்பதை ஜெயமோகன்தான் விளக்க வேண்டும். சந்தர்ப்பவாதமும் அறச்சீற்றமும் நேர்க்கோட்டில் இணைய முடியாது.
வைரமுத்து ஞானபீடப் பரிசு பெற்றதை அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் விமர்சிக்கும் ஜெயமோகன், இது குறித்த வருத்தத்தைப் பெண்கள் பலர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக உருக்கமாக எழுதியிருக்கிறார். ஆனால் வைரமுத்துமீது அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட இந்தப் பல ஆண்டுகளில் (இந்த விருது அறிவிப்புவரை) இதுபற்றி ஜெயமோகன் பேசியதில்லை. இப்போது வைரமுத்துவைத் தாக்குவது என்ற கொள்கை முடிவெடுத்ததும் பலர் தொடர்ந்து கவனப்படுத்திவந்த மீடு பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்கிறார். கோணங்கிக்கு எதிராக இளையர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது அவரை ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவர் ஜெயமோகன். இப்போது வைரமுத்துவின் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை விமர்சிக்கும்போது அந்த எதிர்ப்புக் குரல் நம்பகத்தன்மை இல்லாமல் சரிந்துவிடுகிறது.
ஞானபீடப் பரிசு தொடர்பான விவாதங்களில் இன்று உயிரோடு இருப்பவர்களில் ஞானபீடப்் பரிசு பெறத்தக்கவர்கள் பற்றிய பரிந்துரைகளை யாரும் அதிகமாக முன்வைக்கவில்லை என்பதையும் கவனிக்க முடிகிறது. இன்று தீவிர இலக்கியப் பரப்பில் பல்வேறு தரப்பினரிடையே புழங்கிவரும் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் சில பெயர்களைப் பரிந்துரைக்க முடியும். அம்பை, தியடோர் பாஸ்கரன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பெருமாள்முருகன், எஸ். ராமகிருஷ்ணன், ஆ.இரா. வேங்கடாசலபதி, இமையம் ஆகியோரின் பெயர்களை முன்வைக்கலாம். படைப்புத்திறன், தொடர்ச்சியான செயல்பாடு, பன்முகப் பரிமாணங்களிலான எழுத்துச் செயல்பாடுகள், இலக்கியச் சூழலில் பெற்றுள்ள விமர்சன அங்கீகாரங்கள், குறைந்தபட்ச சமூக அங்கீகாரம் முதலான அளவுகோல்களின் அடிப்படையில் இந்தப் பெயர்களைச் சுட்டலாம். இதுபோன்ற பரிந்துரைப் பட்டியல்கள் எவ்வகையிலும் முழுமையானதாக இருக்க முடியாது. குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான சில போக்குகளைச் சுட்டிக்காட்டக்கூடியவை இவை. பரிந்துரைப்பவர்களின் பார்வையும் அளவுகோல்களின் தன்மையும் மாறும்போது இவற்றில் சில பெயர்கள் உள்ளே வரலாம்; சில வெளியே போகலாம்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் போன்ற எழுத்தாளுமைகளுக்குத் தமிழ்ப் பொதுச் சமூகத்தின் அங்கீகாரம் எந்த அளவில் இருக்கிறது என்ற வினாவை எழுப்பிக்கொள்ளலாம். இலக்கியத் தகுதி அற்றவர்கள் வீற்றிருக்கும் பீடங்களுக்கும் இவர்களுடைய இடங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டுமெனில் தீவிர இலக்கியப் பரப்பின் அளவுகோல்கள் பொதுப் பண்பாட்டுத் தளத்தில் மேலும் பரவலாக வேண்டும். பரவலான அறிந்தேற்பைப் பெற வேண்டும். அதற்கான செயல்பாடுகளைப் பல தளங்களிலும் முன்னெடுக்கும்போது தமிழின் சிறந்த படைப்பாளிகள் தமிழின் பொதுப் பண்பாட்டுத் தளங்களில் கொண்டாடப்படுபவர்களாக இருப்பார்கள்.
•••
ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதமி விருது

தமிழ் இலக்கியப் பரப்பில் தொய்வின்றி இயங்கிவரும் ச. தமிழ்ச்செல்வனுக்கு ‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற அவரது ஆய்வு நூலுக்காக 2025ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. விருதுபெறும் தமிழ்ச்செல்வனுக்குக் காலச்சுவடின் வாழ்த்துக்கள்.
