ஏப்ரல் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2026
    • கட்டுரை
      புகழ்மொழி வீச்சம்
      இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டுவேலை
      காவல் இறப்புகள்: நிர்வாகத் தோல்வியா-?
      இஸ்தான்புல்: இருவேறு உலகங்களின் நகரம்
      ஈரான் போர்: எப்படித் தொடங்கியது? எவ்வாறு முடியும்?
      காசியில் பெரியார்
    • கதை
      இருவர்
      பூட்டனாரும் பேய்பூதங்களும்
    • அஞ்சலி: வ. ஜெயதேவன் (1947-2026)
      அகராதியியல் துறையில் புலமை பெற்றவர்
    • பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்கு
      தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்
    • அஞ்சலி: கே.என். பணிக்கர் (1936- 2026)
      வரலாற்றில் நிற்பவர்
    • கற்றனைத்தூறும் -16
      பிள்ளையோ பிள்ளை
    • கடிதங்கள்
      கடிதங்கள் 01.03.2026
    • அஞ்சலி: யூர்கென் ஹேபர்மாஸ் (1929 – 2026)
      உரையாடலுக்கு இடமளிக்கும் செயல்பாடே இன்றைய தேவை
    • அஞ்சலி: ஆர். பார்த்தசாரதி (1934–2026)
      ஆங்கிலச் சங்கிலியில் பிணைத்த தமிழ் நாக்கு
    • மதிப்புரை
      இருளில் நகரும் பெண்கள்
    • கவிதைகள்
      மம்தா சாகர்
    • அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026)
      அறத்துக்குச் சாட்சியானவர்
    • தலையங்கம்
      தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்
    • கவிதை
      முந்நூறு குழந்தைகள்
      ஆறு, ஒரு காலத்தில்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2026 அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026) அறத்துக்குச் சாட்சியானவர்

அறத்துக்குச் சாட்சியானவர்

அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026)
ச. தமிழ்ச்செல்வன்

1925ஆம் ஆண்டு பிறந்து, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாளன்று தனது 101ஆவது வயதில் காலமானார் தோழர் ஆர். நல்லகண்ணு.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அவரை, எந்தக் கட்சியைச் சார்ந்தவரானாலும் கட்சி எதையும் சாராதவராயினும் மதித்தார்கள்; கொண்டாடினார்கள். அவருடைய மறைவுச் செய்தி கேட்ட அன்று இரவே சாரை சாரையாக மக்கள் வந்து அஞ்சலி செலுத்திய காட்சியே அதற்குச் சான்று.

சூதும் வாதும் சுயநலமும் ஆட்சி செய்யும் களமாக மாறிவிட்ட தமிழ்நாட்டு அரசியல் பரப்பில், இவற்றுக்கு மாறாக மக்கள் எதிர்பார்த்து ஏங்கும் அறத்தின் அடையாளமாகத் தோழர் நல்லகண்ணுவை மக்கள் பார்த்தார்கள். எளிமை, தன்னடக்கம், தன்னை முன்னிறுத்தாத குணம், மக்களுக்காக எதையும் இழக்கத் தயாரான தியாக மனப்பான்மை போன்ற அருங்குணங்களால் ததும்பி நிற்கும் ஓர் ஆளுமையாக அவர் இருந்தார்.

நல்லகண்ணு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். 1925இல் ஒரு பணக்கார விவசாயிக் குடும்பத்தில் பத்துக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிய உடைகள், எளிய வாழ்முறை என்று அவர் ஏன் தேர்வு செய்துகொண்டார்?

அவருடைய மகள் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகிப் பணிக்குச் சென்ற நாளில் மகளுக்கு அவர் சொன்ன அறிவுரையில் அதன் காரணத்தைக் காணலாம்:

“நான் பணியில் சேர்ந்தபோது, ஆசிரியர் தொழில் அறத் தொழில். அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் எளிமையான பின்புலத்திலிருந்து வருவார்கள். பகட்டான உடை அணிந்து செல்லக் கூடாது. பிள்ளைகளோடு பிள்ளையாக ஐக்கியமாக உடை தடையாக இருக்கக் கூடாது என்று அறிவுரை கூறினார். அதை நான் இறுதிவரை பின்பற்றினேன். பணியில் இல்லாத சூழலிலும், எளிமையான புடவைகளையே உடுத்தத் தோன்றுமளவுக்கு அந்தப் பழக்கம் தொடர்கிறது.” (தோழர் நல்லகண்ணுவின் மகள் காசிபாரதியின் நேர்காணலிலிருந்து - சா. ஜீவபாரதி)”

பள்ளிக்கூடம் போன மகளுக்கே அப்படி ஆலோசனை சொன்னால், அதைவிடவும் வறுமையான பின்னணியில் வாழும் விவசாயத் தொழிலாளிகளையும் உழைப்பாளி மக்களையும் போராட அணி திரட்டப் போகும்போது, தன் உடைக் கலாச்சாரம் அவர்களோடு ஒண்ணுமண்ணாப் பழகுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்கிற தன்னுணர்வே அவரை எளிய உடைக்கு நகர்த்தியிருக்க வேண்டும். இந்த உணர்வுக்கு நானே ஆளாகியிருக்கிறேன்; அறிவொளி இயக்கத்தில் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்திக்கும்போது, என்னுடைய பேண்ட்டும் சர்ட்டும் பவுடரடித்த முகமும் என்னை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைக் குற்ற உணர்வோடு உணர்ந்திருக்கிறேன். இதுபற்றி என் ‘இருளும் ஒளியும்’ நூலில் எழுதியுமிருக்கிறேன்.

எளிய உடையை ஒரு ஃபேஷனுக்காக அல்ல, மக்களோடு ஒன்றுகலப்பதற்காக ஏற்றுக்கொண்டவர் ஆர்.என்.கே. இது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவான குணம் என்றுதான் கூறுவேன். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கட்சித் தோழர்களோடு கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது, “கம்யூனிஸ்ட்டுங்கிறீங்க, பேண்ட்டு சர்ட்டெல்லாம் போட்டிருக்கீங்க” என்று மக்கள் என்னிடம் கேட்டதுண்டு. என் முந்தைய தலைமுறைக் கம்யூனிஸ்ட்டுகள் அப்படித்தான் தங்களை மக்கள் முன் நிறுத்திக்கொண்டார்கள். பெரிய அளவுக்கு நடுத்தர வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்திராத காலத்தில், உழைக்கும் மக்களைக் கணக்கில் கொண்டே தோழர் நல்லகண்ணுவின் தலைமுறைக் கம்யூனிஸ்ட்டுகள் அவர்களின் வாழ்வோடு பொருந்திப்போகும்படியாகத் தங்களின் வாழ்முறையைத் தகவமைத்துக்கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளின் குணம் என்று சொல்லாமல், கட்சியைக் கத்தரித்துவிட்டு இது நல்லகண்ணுவின் குணம் என்று முதலாளித்துவ ஊடகங்கள் அவரை அதிமனிதராக்கிக் காட்ட முயல்கின்றன. இதை அவரே விரும்ப மாட்டார். யாருமே இப்படி வாழ முடியாது என்று சொல்வது, அவரை யாரும் பின்தொடர விடாமல் செய்யும் அரசியலாகும்.

தோழர் நல்லகண்ணு இடதுசாரி இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்தாலும், அவர் விவசாயிகள்-விவசாயத் தொழிலாளிகளின் தலைவராகவே பெரிதும் மதிக்கப்படுகிறார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை உருவாக்கும் பணியைத் தோழர் பி. சீனிவாசராவின் தலைமையில் மாவட்டம் மாவட்டமாகப் பயணித்து மேற்கொண்டவர் ஆர்.என்.கே.

தஞ்சை மண்ணில் எப்படிச் சீனிவாசராவ் மணலி கந்தசாமி, களப்பால் குப்பு, ஏ.எம். கோபு போன்ற தலைவர்கள் சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் இலக்காகி நின்ற பண்ணையடிமைகள் பக்கம் நின்று போராடினார்களோ, அதைப்போலத் திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணையார்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கள்ள மரக்கால் எதிர்ப்புப் போராட்டமும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களும் நடத்தியவர் ஆர்.என்.கே. அவரால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சுடலைமுத்து நம்பியார், கீழ ஆம்பூர் கசமுத்து போன்ற தோழர்களை நான் நேரில் சந்தித்தும் போராட்டங்களில் இணைந்து நின்றும் இருக்கிறேன். தோழர் நல்லகண்ணுவின் தாக்கத்தை அவர்களிடம் கண்டிருக்கிறேன்.

அறியும்போது ஆச்சரியமாக இருக்கும். தோழர் நல்லகண்ணுவின் அரசியல் நடவடிக்கை அவரது ஆறாவது வயதிலேயே தொடங்கிவிட்டது.  தூத்துக்குடியில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. பட்டினி கிடக்கும் அத்தொழிலாளிகளின் குடும்பங்களுக்காக இவருடைய கிராமத்தில் வீடு வீடாக அரிசி வசூல் செய்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அரிசி வசூலிக்கும் குழுவில் தன் ஆறாவது வயதிலேயே ஈடுபட்டவர் நல்லகண்ணு. 12-13 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டுப் புதிய பாதைக்கு வந்துவிட்டவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸில் இணைந்து காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். சுதந்திரம் பெற்றதும் நேரு அரசாங்கம் 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. கட்சி தலைமறைவு வாழ்க்கை முறைக்குள் சென்றது. நாடெங்கும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. எண்ணற்ற தோழர்கள் கொல்லப்பட்டனர்.

தோழர் நல்லகண்ணு டோனாவூரில் கைதுசெய்யப்பட்டுக் களக்காட்டுக்குக் காவல்துறை ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டபோது, நடுவழியில் ஜீப்பை நிறுத்திக் கீழே தள்ளிவிடப்பட்டார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அவரை அடித்து உதைத்ததோடு, சிகரெட் நெருப்பினால் அவரது மீசையைச் சுட்டுப் பொசுக்கினார். அப்போது போன மீசைதான்; திரும்ப அது வளரவே இல்லை. மீசையை வீரத்தின் அடையாளமாகத் தமிழ்நாட்டில் கருதுவோர் உண்டு. மீசையில்லாத தோழர் நல்லகண்ணுவின் வீரத்துக்கு இணையான வீரத்தைப் பொதுவாழ்வில் காட்டிய மீசைக்காரர் எவருமில்லை.

வெடிகுண்டு வைத்திருந்ததாக அவர்மீது பொய் வழக்குப் புனையப்பட்டு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகி விடுவதாக எழுதிக் கொடுத்தால், கேஸ் இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நீதிபதியே நல்லகண்ணுவின் குடும்பத்தாரை அழைத்துக் கூறியிருக்கிறார். அவரது உடன்பிறந்தவர்கள் சிறைக்குச் சென்று நல்லகண்ணுவிடம் பேசியிருக்கிறார்கள். அப்போது சொன்னாராம்: “நம் அப்பா அம்மாவுக்கு நாம் பத்துப் பிள்ளைகள். நீங்க ஒன்பது பேர் குடும்பத்துக்காக உழையுங்கள். நான் ஒரு ஆள் நாட்டுக்காக உழைக்கிறேன். அதனால் வீட்டுக்கு எந்த நட்டமும் வந்துவிடாது. என்னை இப்படியே விட்டுவிடுங்கள்.”

மிக இளம் வயதிலேயே – பள்ளிக் கல்லூரிக் காலத்திலேயே பெற்றோரின் செல்வாக்கிலிருந்து தன்னை அவர் விடுவித்துக்கொண்டதுதான் அவருடைய  பொது வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. அவர் நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியேட் படித்துக்கொண்டிருந்த காலத்தில், “இப்படி ஒழுங்காகப் படிக்காமல் கட்சி கட்சின்னு அலைந்து கொண்டிருந்தால் நான் உனக்குப் பீஸ் கட்ட மாட்டேன்” என்று அவருடைய அப்பா மறுத்துவிடுவாராம். குடும்பம் இப்படி அவரைக் கீழே இழுக்கப் பல பிரயத்தனங்களைச் செய்தபோதும், அவர் பறக்கத் தொடங்கிய வேகமே அவரை இழுத்துச் சென்றது.

பண்ணையார்கள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்து ராவ் பகதூர் பட்டங்கள் வாங்கிக்கொண்டு பல்லிளித்துக் கிடந்தார்கள். ஆட்சி மாற்றம் உறுதி என அறிந்தவுடன் அப்படியே பல்டி அடித்துப் பண்ணையார்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகினர். இந்தப் பச்சோந்திப் பண்ணைகளுக்கு எதிராகச் செங்கொடி இயக்கத்தில் இணைந்து விவசாயத் தொழிலாளிகளும் விவசாயிகளும் போராடியபோது, காங்கிரஸ் அரசின் காவல்துறை தொழிலாளிகளைத்தான் சுட்டது; பண்ணையார்களுக்குப் பக்கபலமாக நின்றது. தொழிலாளிகளுக்கு ஆதரவாகத் தோழர் நல்லகண்ணு அன்று உயர்த்திப்பிடித்த செங்கொடியைத் தான் இறக்கும் நிமிடம் வரை கீழே இறக்கவே இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது காங்கிரஸா, திமுகவா, அதிமுகவா என்கிற பேதமே இல்லாமல் எல்லா ஆட்சியாளர்களுமே பண்ணையார்களைத்தான் ஆதரித்தார்கள். எல்லா ஆட்சியாளர்களும் கம்யூனிஸ்ட்டுகளைத்தான் வேட்டையாடினார்கள். அந்த வரலாற்றை உருவாக்கிய தோழர்களில் ஒருவராகவும் அந்த வரலாற்றின் சாட்சியாகவும் 100 ஆண்டுகளைத் தாண்டி நம்மோடு வாழ்ந்துகொண்டிருந்தவர் தோழர் நல்லகண்ணு.

அவரை எந்த இடத்தில் சுரண்டினாலும் வரலாறு கொட்டும் என்று தோழர்கள் பேசிக்கொள்வதுண்டு. அது நூறு சதம் உண்மை என்பதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். ஒருமுறை எங்கள் அமைப்பின் சார்பாக ‘வரலாறும் உழைக்கும் வர்க்கமும்’ என்கிற தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கைப் புதுச்சேரி பிரெஞ்சு இந்திய நிறுவனத்தின் இந்தியவியல் துறையுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தோம். அதில் ஓர் அமர்வில் பேசத் தோழர் நல்லகண்ணுவை அழைத்திருந்தோம். நேர நெருக்கடியுடன் அந்தப் பயிலரங்கு ஓடிக்கொண்டிருந்தது. அவரிடம் பதினைந்து நிமிடங்களில் உங்கள் உரையை முடித்துக்கொள்ள முடியுமா என்று கேட்டோம். அவர் மறுத்துவிட்டார். நேரக் கட்டுப்பாட்டுக்குள் நின்று என்னால் சுதந்திரமாகப் பேச முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். நேரகாலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்காகப் பாடுபட்ட ஒருவரை நேரத்துக்குள் நின்று பேசச் சொன்ன தவறை உடனே உணர்ந்து, அவரை அவர் விருப்பப்படி பேச அழைத்தோம். மடைதிறந்த வெள்ளம்போல நீண்டது அந்த உரை. அவரது உரையில் வர்க்க எதிரிகளையும் அவரைத் தாக்கியவர்களையும் பற்றிக் குறிப்பிடும்போது கூடக் கண்ணியமான வார்த்தைகளில் குறிப்பிட்டது சிலிர்ப்பூட்டியது.

இந்த ஜென்டில்மேன் அடையாளம்தான் அவரிடம் எல்லோருக்கும் பிடித்துப்போன ஒன்றாக இருந்தது. வலுவான போராட்ட வரலாற்றைக்கூட மிக மென்மையான குரலில், மென்மையான வார்த்தைகளில் சொல்லிவிட அவரால் முடியும்.

பணம், பொருள்கள்மீது ஆசைப்பட்டவரல்லர். அவரது 80ஆவது ஆண்டு நிறைவை ஒட்டிப் பணம் வசூல் செய்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதை வாங்கி அந்த மேடையிலேயே கட்சிக்குக் கொடுத்தார். ஒரு கார் பரிசாகக் கொடுத்தார்கள். அதையும் கட்சிக்கே கொடுத்தார். தோழர் என். சங்கரய்யாவும் இதைப் போலவே தனக்குப் பரிசாக வரும் எந்தத் தொகையையும் கட்சிக்கோ அல்லது வேறு அமைப்புக்கோ கொடுத்துவிடுவார். இவர்கள் இப்படிச் செய்வதால் நமக்கு எப்பவாவது பணம் பரிசாகக் கிடைத்தால், அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூச்சமாகிவிடுகிறது.

தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்குமான சில நிகழ்வுகள் உண்டு. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெயிலோடு போய்’ அச்சானதும் சென்னையில் இருந்த சோவியத் நாடு அலுவலகத்திற்குச் சென்று தோழர் தி.க.சி.யைப் பார்த்து ஒரு பிரதியைக் கொடுக்கச் சென்றேன். அங்கே தோழர் நல்லகண்ணுவும் இருந்தார். அவருக்கும் ஒரு பிரதி கொடுத்துவிட்டு வந்தேன்.

தி.க.சி.யின் கார்டு வருவதற்கு முன்னர் தோழர் நல்லகண்ணுவின் இன்லேண்ட் லெட்டர் வந்துவிட்டது. புத்தகங்களை வாசிப்பதும் உடனுக்குடன் எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதி வாழ்த்துவதும் அவரது இயல்பு. எங்கள் தந்தையார் மே.சு. சண்முகம் எழுதிய நாவலான ‘பெரிய வயல்’ வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்திருந்தோம். அப்போதும் அவர் அந்த நாவலை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பேசினார். அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி; சாகும்வரை அதைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

2013இல் சிவகாசியில் புதுவீடு கட்டித் திறப்பு விழாவுக்கு அவரை அழைத்தேன். அப்போதும் தட்டாமல் வந்து திறந்து வைத்துப் பேசினார். என்னுடைய நூலகத்தைப் பார்த்துவிட்டு, “இவ்வளவு புத்தகங்களைச் சேகரித்திருக்கிறீர்கள்; எல்லோருக்கும் பயன்படும்படி செய்யுங்கள்” என்றார். “அவ்வளவு பரந்த மனசு எனக்கில்லையே தோழர்” என்றேன். “பொஸ்தகங்கள் உங்ககிட்ட இருக்கட்டும். ஒரு பட்டியலை மட்டும் பொதுவில் சுற்றுக்கு விடுங்க” என்றார். சரி என்று சொல்லி வைத்தேன். தேடித்தேடிச் சேகரித்த புத்தகங்களாச்சே என்றுதான் இப்போதும் தயங்கி நிற்கிறேன். அவருக்கு எல்லாமே மக்களுக்காக என்கிற மன அமைப்பு நிலைபெற்றிருப்பவர், பார்த்தவுடன் அப்படிச் சொல்லிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். இப்படியான மனநெருக்கடிகளை உண்டாக்கிவிடும் வாழ்முறை, சிந்தனைமுறை அவருடையது.

எவ்வளவோ சொகுசான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற அரசியல் தலைவர்களெல்லாம் 70-80 வயதுகளில் காலமாகிக்கொண்டிருக்க, அடியும் உதையும் பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்த தோழர் நல்லகண்ணு 101 வயதுவரை முழு நினைவாற்றலோடு கம்பீரமாக நடமாடிக்கொண்டிருந்தார். கார் பயணங்கள் வாய்க்கப்பெறாதவர்; மறுத்தவர். கட்சியின் ‘காலாட்படை’ என்றே குறிப்பிடப்பட்டவர். அதுவே அவரது உடலுக்கும் உள்ளத்திட்பத்துக்கும் உரமாக அமைந்திருக்கும்.

குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், கார் பயணங்கள் என ஆகிவிட்ட இந்த நடுத்தர வர்க்க வாழ்க்கையின் மீது சதா குற்றவுணர்வை ஏற்படுத்துவதாகத் தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை நம்முன் பிரசன்னமாகி, எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

              மின்னஞ்சல்: tamizh53@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.