உரையாடலுக்கு இடமளிக்கும் செயல்பாடே இன்றைய தேவை
தத்துவவாதிகளின் பங்களிப்பு அவர்கள் எந்த அளவு உலகளாவிய சிந்தனைகளை நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இந்தப் போக்கு 20ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் மாறியது. அதாவது, மனித அறிவின் செயல்பாடு, சமூகக் காரணிகளுக்குக் கட்டுப்பட்ட செயல்பாடென வலியுறுத்தப்பட்டது. இதனையே ‘அறிவை அறிவதில் ஏற்பட்ட இடையூறு’ (epistemological break) என அழைத்தார்கள். இரண்டு உலக யுத்தங்களுக்குப் பிறகு நிலவிய பனிப்போர்ச் சூழலே இதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் நீட்சியாக, நலிந்த பிராந்தியங்களை ஆக்கிரமிக்கும் போக்குப் பரவலானது. இவற்றுக்குப் பொருளாதார வேட்கை காரணமாக இருந்ததால், இந்தப் போர்கள் முதலாளித்துவத்துக்கு அனுசரணையாக இருப்பதோடு, தமது அதிகாரத்தையும் அரங்கேற்றின. இந்த விதத்தில் இது காலனி ஆதிக்கத்தைவிடவும் கோரமானதாக இருந்தது. இதில் அமெரிக்கா முன்னிலை வகிப்பதைச் சென்ற நூற்றாண்டு நெடுக நாம் பார்த்துள்ளோம். இதில் பாதிக்கப்பட்ட தேசங்கள் பெரும்பாலும் கிறித்துவம் சாராதவையாக இருந்ததால், இந்த யுத்தங்கள் பண்பாடுகளை அழிக்கும் செயல்பாடுகளாகவும் இருந்தன. அதனால் அதிகாரத்தை எதிர்க்கும் தத்துவச் செயல்பாடுகளும் பல்வேறு நிலைகளில் இயங்க வேண்டியிருந்தது.
ஜெர்மானிய அறிஞர் ஹேபர்மாஸை (Jürgen Habermas) தத்துவவாதியாகவோ, சமூகவியல் கோட்பாட்டாளராகவோ சுருக்கி விட முடியாது. ஏனெனில் தத்துவத்தின் செயல்பாடே இன்று பெருமளவு மாறியிருக்கிறது. இந்தப் பண்பாட்டு யுத்தங்களின் பின்னணியில் மதம், தத்துவம், சமூகம், இலக்கியம் எனப் பல தளங்களில் சிந்தித்த ஹேபர்மாஸுக்கு, இந்த 97 வருட நீண்ட வாழ்க்கைப் பயணம் மனநிறைவைக் கொடுத்திருக்க முடியாது என்றே கூற வேண்டும். இந்த மனநிலையே அவரது சிந்தனாமுறையை வடிவமைப்பதாகவும் இருந்தது. ஏனைய ஜெர்மானிய அறிஞர்களைப் போலப் புத்தொளி மரபைப் பெருமளவு வியந்த ஹேபர்மாஸ் சமூகவியலாளர்களான மாக்ஸ் வெபர் (Max Weber), ட்ரக்கிம் (Emile Durkheim) போன்றோரால் ஈர்க்கப்பட்டு, மதம் என்பதைச் சமூக இயக்கத்தின் அங்கமாகப் புரிந்துகொண்டார். இந்தச் சமூகக் கண்ணோட்டமே அவரது தத்துவார்த்தமாகப் பல்வேறு எழுத்துகளில் தொடர்ந்து வந்துள்ளது.
ஹேபர்மாஸுடன், பிற ஜெர்மானிய அறிஞர்கள்/ படைப்பாளிகளைக் குறித்த விவாதங்களைத் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்ததில் ஜெர்மானியக் கலாச்சார மையமாக இருந்த மாக்ஸ்முல்லர் பவனுக்கு முக்கியப் பங்கு உள்ளது. கருத்தரங்குகள், அரங்கச் செயல்பாடுகள், ஓவியக் கண்காட்சிகள் எனப் பலதரப்பட்ட செயல்பாடுகள் இந்தத் தத்துவ, பண்பாட்டுச் சூழலைப் புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்தன. இச்செயல்பாடுகளில் தமிழ் சிறுபத்திரிகைகளின் பங்கு பெருமளவு இருந்தன.
ஹேபர்மாஸின் சிந்தனாமுறையைக் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் பார்க்க முடியும்:
1. கருத்துப் பகிர்வுடன் கூடிய நமது செயல்பாட்டின் (communicative action) தேவையை வலியுறுத்தும் பாங்கு.
2. பகுத்தறிவையும் விமர்சனப்பூர்வமாக (critical rationality) அணுகும் அதே தருணம், பகுத்தறிவையே கேள்விக்குள்ளாக்கும் பின்நவீனத்துவவாதிகளிடமிருந்து விலகியிருக்கும் பாங்கு.
3. விவாதங்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பொதுவெளியில் நடத்த வேண்டிய தேவையை வலியுறுத்தும் பாங்கு.
4. எல்லாவிதமான தத்துவங்களையும் கேள்விக் குள்ளாக்குவதன் மூலம் செயல்திறனற்ற, நிர்க்கதியான நிலைக்கு நம்மைத் தள்ளும் பின்நவீனத்துவத்தை உதறித் தள்ளும் அதே வேளை பழைமைவாத மார்க்சியத்திலிந்து விலகிச் சமூக அக்கறையோடு சிந்திக்கும் பாங்கு.
அவரது பங்களிப்புக் குறித்துப் பேச முனையும் நாம் ஜெர்மானிய மார்க்சிய மரபில் அவரது தனித்துவம் குறித்தும், பிரெஞ்சு மார்க்சிய மரபுடன் அவருக்கிருந்த உறவு குறித்தும் கவனிக்க வேண்டும். இதனைத் தத்துவ அளவிலும், செயல்பாடுகள் அளவிலும் பார்க்கலாம். நவீன பிரெஞ்சு வரலாற்றில் 1968இல் சார்பான் (Sorbonne) பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் புரட்சி முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த மாணவர் போராட்டம், மெல்ல தொழிலாளர்களின் உரிமைகளுக்கானதாக வளர்ந்தது. பின்னர் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காகவும், இனவாதத்துக்கு எதிரானதாகவும் உருவெடுத்தது. இந்தப் பன்முகப் போராட்டம் ஜெர்மானிய மாணவர்களின் கவனத்தை ஈர்த்தபோது பிராங்பர்ட் மார்க்சிய அறிஞரான ஹெர்பர்ட் மார்க்குவிசுடன் (Herbert Marcuse) பிற அறிஞர்களின் ஆதரவையும் பெற்றது. பின்னர் அது ஐரோப்பியக் கண்டம் தழுவிய போராட்டமாக உருமாறியது. ஏனையோரின் நிலைப்பாட்டிலிருந்து விலகிய ஹேபர்மாஸ், அம்மாணவர்கள் எதிர்காலத்திற்கான திட்டங்களைவிடப் போராட்டத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால் சனநாயகத்திற்கு எதிரான பாதையில் செல்லுவதாகக் கூறினார். இந்தப் பின்னணியில்தான், அவர் கருத்துப் பகிர்வுடன் கூடிய செயல்பாடுகளை வலியுறுத்தியதோடு, பகுத்தறிவின் விளைவாக உதித்த போராட்டத்தை விமர்சனப்பூர்வமாக அணுக வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார். இவையாவும் தமிழ்ச் சூழலில் பல தருணங்களில் கோட்பாடுகளாகச் சுருக்கப்பட்டன. வேறு சிலர் இதனைச் சாதியச் சமூகத்தை எதிர்க்கும் போராட்டங்கள் அனார்க்கிசப் போக்காக மாறிவிடாமல் சனநாயகத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என்ற அம்பேத்கரின் கருத்தோடு இணைத்து விவாதித்தனர்.
பின்னாளில், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒட்டி, ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்குள்ளான விரிசல்களைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காகப் பிரெஞ்சு தத்துவவாதியான தெரிதாவுடனான தனது விமர்சனத்தைக் கடந்து அவருடன் இணைந்து 2000இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (“February 15 or What Binds Europeans Together: A Plea for a Common Foreign Policy, Begining in the Core of Europe”). இது சமூக நலனைப் பின்னுக்குத் தள்ளிக் கருத்தியலை முன்னிருத்தும் அறிவுஜீவிகளை விமர்சிக்கும் செயலாக அமைந்திருந்தது.
கருத்தியலாகச் சுருக்காமல், சமூகத்தில் கலை, இலக்கியத்திற்கான இடத்தை அளிக்கும் பிராங்பர்ட் மார்க்சிய அறிஞர்கள் படைப்பாளர்களைப் பொறுப்பாளியாகப் பார்ப்பதைத் தவிர்த்து வந்ததோடு நுகர்வோருக்கான பொறுப்பையும் கவனப்படுத்துவார்கள். இந்தக் கருத்தை ஹேபர்மாஸ் நவீன/பின்நவீனத்துவம் பற்றிய கருத்தாக முன்வைக்கிறார். அதாவது, சமகாலத்தைக் கடந்து நிற்கக்கூடிய இலக்கியம் பல காலங்களில் உருவாகியுள்ளதால் செவ்வியல் இலக்கியத்தை மட்டும் காலம் கடந்த உன்னத இலக்கியம் எனக் கூறிவிட முடியாது என்கிறார். அதேபோல் நவீனம் என்பதையும் தற்காலத்தோடு சுருக்கிக் பார்க்க முடியாது என்று கூறும் இவர், நவீனம் என்பதை முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெறும் முயற்சியாகக் காண்கிறார். இங்கு எந்திரத்தனமாக நவீன படைப்புகளை உருவாக்குபவர்கள் சந்தையின் தேவைக்கேற்ப இயங்குபவர்கள் எனவும், சமூகப் பொறுப்பில்லாதவர்கள் எனவும் சாடுகிறார். மாறாக, சமூகப் பொறுப்போடு நவீனத்தை முன்னெடுப்பவர்களை அடையாளம் கண்டு அதனை வளர்த்தெடுப்பதை நம் அனைவரின் பொறுப்பாகக் (“Modernity: an Incomplete Project”-இல்) காண்கிறார். இந்தப் பின்னணியில், இக்காலத் தமிழ் இலக்கியத்தில் கரிசல் இலக்கியத்தை ஒரு மரபுசார்ந்த நவீன இலக்கியமாக முன்வைத்ததை விளங்கிக்கொள்ளலாம். இதைப் பின்னாளில் சமூகக் கண்ணோட்டத்தோடு கூடிய தத்துவார்த்தச் சொல்லாடலாக வளர்த்தெடுத்தார்.
அவரது இந்தச் சமூக/தத்துவக் கண்ணோட்டம் (மேற்கத்திய) கோட்பாடுகளை அவற்றின் சூழலிலிருந்து பிரித்து நவீனத்தைச் சந்தைக்கடையாக மாற்றுபவர்களை அடையாளம் காணவும், சமூகப் பொறுப்பிலிருந்து வளர்த்தெடுக்க வேண்டிய நவீனம் நம் முன் சவாலாக இருப்பதை அடையாளம் காணவும் நமக்கு உதவுகிறது. இக்கண்ணோட்டத்தில் ஹேபர்மாஸின் எழுத்துக்களை நமது வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.
மின்னஞ்சல்: razhagu@gmail.com
