வரலாற்றில் நிற்பவர்
டாக்டர் கே.என். பணிக்கர் வரலாறானார். இந்திய வரலாற்று உருவாக்கத்துக்கு நவீன முறையியலையும் மானுட அணுகுமுறையையும் தனித்துவமான அரசியல் உணர்வையும் வழங்கிய வரலாற்று ஆய்வாளர். வரலாற்றின் பாதையில் நடந்தும் வரலாற்றைப் போராட்டமாக மாற்றியும் சரித்திரத்தில் வாழ்ந்த கே.என். பணிக்கர் இந்திய வரலாற்று ஆய்வுலகுக்குக் கேரளம் கொடையளித்த சிந்தனையாளர்.
திருச்சூர் மாவட்டத்திலுள்ள தைக்காடு கிராமத்தில் 1936இல் கே.என். பணிக்கர் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நாட்கள் அவை. அது மட்டுமல்ல, கேரள சமூகத்தின்மீது மறுமலர்ச்சியின் ஒளிக்கதிர்கள் படர்ந்துகொண்டிருந்த காலம். இவற்றின் அதிர்வுகள் மாணவராக இருந்த பணிக்கருக்கு உந்து விசையாயின. “நான் வளர்ந்தது காலனியாதிக்கத்தின் கடைசி நாட்களில் என்றபோதும் வரக் காத்திருந்த சுதந்திரத்தின் விடியல் புத்துணர்வு அளிப்பதாக இருந்தது. பள்ளியில் குறைந்தது மூன்று ஆசிரியர்களாவது கதராடை அணிந்தவர்கள். அதில் ஒருவர் வார்தா மாதவன் நாயர். காந்திஜியின் வார்தா ஆசிரமத்தில் சிறிது காலம் வசித்தவர். அதனாலேயே அந்தப் பெயரைப் பெற்றிருந்தார்” என்று பணிக்கர் நினைவுகூர்ந்திருக்கிறார். இளமையில் கிடைத்த சமூக, அரசியல் அறிமுகம் மெல்லமெல்ல வளர்ந்து தனித்துவமான வரலாற்றுப் பார்வையாக மாறியது. சாவக்காடு போர்ட் ஹைஸ்கூல், பாலக்காடு, அரசு விக்டோரியா கல்லூரி, ராஜஸ்தான் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றார்.
கே.என். பணிக்கர் ஆசிரியராகத் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார். 1962இல் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் தில்லிப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் ஆசிரியரானார். 1972இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 2000 வரை அங்கேயே பணியில் தொடர்ந்தார். பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் வருகைதரு பேராசிரியராகவும் ஆய்வறிஞராகவும் செயலாற்றினார். 2000–2004 ஆண்டுகளில் காலடி ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். எனினும் ஆசிரியப் பணியின்மீது எப்போதும் தனி வாஞ்சை கொண்டவராக விளங்கினார். திட்பமானதும் அறிவியல் சார்ந்ததுமான நவீனக் கல்விப்புல முறையியலைச் செயல்படுத்தினார். வகுப்பறைகளை விவாதக் களமாக்கிச் சிந்தனைச் சூழலை உருவாக்கினார். சமூக உணர்வில் ஊன்றிய வரலாற்று ஓர்மையை மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முயன்றார்.
வரலாற்று ஆய்வைப் புதிய அறிவியலாக மாற்றுவதில் பணிக்கர் காத்திரமான பங்களிப்பைச் செய்தார். கல்விப்புலத்தின் மரபான முறைகளை விடுத்து நவீன காலத்தின் புதிய அறிவியல் முறைகளை இணைத்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டார். “டி.டி. கோசாம்பிக்குப் பிறகு வரலாற்று ஆய்வில் ஈடுபட்ட மகத்தான ஆய்வறிஞர்களுக்குரிய இடம்தான் பணிக்கர் அடைந்த இடம். ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் வரையானவர்கள் இந்த வரிசையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நிகராகப் பணியாற்றியே அவர் வரலாற்று ஆய்வுக்கு அறிவார்ந்த துறை என்ற அடையாளத்தை ஏற்படுத்தினார். படைப்பூக்கத்தாலும் அறிவுத் திட்பத்தாலும் முழுமை பெற்றவை அவரது ஆய்வு நூல்கள்’’ என்று மலையாள எழுத்தாளரும் பேராசிரியருமான சுனில் பி. இளயிடம் குறிப்பிடுகிறார்.
கே.என். பணிக்கர் இந்திய வரலாற்றைக் குறித்து மாறுபட்ட அணுகுமுறையை மேற்கொள்வதற்காக ஆரம்பம் முதலே முயன்றார். காலனிய வரலாற்றுருவாக்க மரபிலிருந்து இந்திய வரலாற்றுருவாக்க முறைகளை விடுவிக்க விரும்பினார். இது இந்திய வரலாற்று ஆய்வில் வழி மாற்றமாக அமைந்தது. “என்னுடைய வரலாற்றாக்கக் காலகட்டத்தில் மதச்சார்பற்ற, அறிவியல் சார்ந்த வரலாற்றுருவாக்கத்தின் செல்வாக்கு வலுவானதாக இருந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் பலர் இந்திய வரலாற்றைச் செழுமைப்படுத்திய காலகட்டம் அது. அவர்களது அறிவியல் நோக்கிலிருந்து எனக்கான அகப்பார்வையைக் கண்டடைந்தேன்’’ என்று தனது வழியைக் குறிப்பிட்டார். ஜதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜும்தார், சுரேந்திரநாத் சென் ஆகியோர் கையாண்ட அணுகுமுறைகளே பணிக்கரிடம் செல்வாக்குச் செலுத்தின. பின்னர், காலனிய எதிர்ப்புக் கண்ணோட்டமுள்ள வரலாற்றுருவாக்கத்தில், பணிக்கர் தனித்த பாதையில் பயணம் மேற்கொண்டார்.
கேரளத்தின் அரசியல் கடந்தகாலத்தைப் பற்றி அவதானிப்புகளையும் ஆய்வுகளையும் கே.என். பணிக்கர் மேற்கொண்டிருந்தார். மலபார் எழுச்சி தொடர்பான அவரது ஆய்வு கவனத்துக்குரியது. ‘மலபார் எழுச்சி – நிலவுடைமைக்கும் முடியாட்சிக்கும் எதிராக’ என்ற அவரது நூல் வரலாற்று ஆய்வில் வேறுபட்ட ஒன்று. மலபார் எழுச்சி (மலபார் கலகம்) பற்றி ஏராளமான கருத்துக்களும் முடிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்டு நிற்கும் வரலாற்றுருவாக்கத்தையே பணிக்கர் முன்வைத்தார். எழுச்சிக்கு அடிப்படையாக இருந்த ஒவ்வொரு அலகையும் நிகழ்வுகளையும் நுட்பமாக ஆராய்ந்தார். அந்தப் போராட்டத்துக்கு உந்துதலாக இருந்த சமூக, வர்க்கத் தொடர்புகளைக் கண்டறிந்தார்.
இந்திய வரலாற்றை வகுப்புவாதமாக்க நடைபெற்றுவரும் முயற்சிகளை கே.என். பணிக்கர் தொடர்ந்து எதிர்த்தார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பின்னர் இந்திய வரலாற்றை இந்துக் கலாச்சாரப் பின்னணியில் நியாயப்படுத்தி விளக்க நடைபெற்ற முயற்சிகளை அம்பலப்படுத்தினார். அதுபோன்ற முயற்சிகள் பல்வேறு தளங்களில் வளர்ந்துவந்தபோதெல்லாம் அவற்றின் அபாயங்களை முன்னெடுத்துக் காட்டினார்.
இத்தாலிய வரலாற்றாளர் அந்தோனியோ கிராம்ஷியின் பண்பாட்டு வரலாற்று அணுகுமுறைகளையே கே.என். பணிக்கர் ஏற்றிருந்தார். அத்துடன் நவீன மார்க்சிய வரலாற்று நோக்கையும் பின்பற்றினார். மதச்சார்பற்ற தேசியத்தில் வேர்கொண்ட சிந்தனைகளையும் கருத்துக்களையுமே எப்போதும் முன்னிறுத்தினார். அணுகுமுறைகளிலும் விவாதங்களிலும் ஜனநாயக முன்மாதிரிகளையே கடைப்பிடித்தார். இடதுசார்புள்ள பண்பாட்டு, அரசியல் கருத்துக்களின் பாதையிலேயே சென்றார். வகுப்புவாதத்துக்கும் பாசிசத்துக்கும் எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்கவும் தயாராக இருந்தார். அதனால்தான் இந்திய அளவிலும் குறிப்பாகக் கேரளத்திலும் கே.என். பணிக்கருக்குத் தவிர்க்க இயலாத இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர், வரலாற்று ஆராய்ச்சியாளர், நிர்வாகப் பொறுப்பாளர், கலாச்சாரச் செயல்பாட்டாளர் ஆகிய நிலைகளில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கே.என். பணிக்கர் நிறைந்தும் நிலைத்தும் நிற்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழில்: என்னெஸ்
பிரதீப் பனங்காடு – மலையாளத்தில் மூத்த இதழாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
மின்னஞ்சல்: panangad2020@gmail.com
