பூட்டனாரும் பேய்பூதங்களும்

ஓவியங்கள்: மணிவண்ணன்
வட இலங்கையின் அச்சுவேலிக் கிராமத்தில் இருந்த தாடித்தாத்தாவின் வளவில் இரண்டு பிரதானமான கட்டடங்கள் இருந்தன. அவற்றிற்கு இடையே இருந்த முற்றம், மாமரங்களும் பலாமரங்களும் நிழல் தரும் சோலையாக இருந்தது. கிழக்கிலங்கை திருகோணமலையில் இருந்து பாடசாலை விடுமுறைகளுக்கு நானும் எனது ஐந்து சகோதரர்களும் அச்சுவேலிக்குப் போகும்போது, தாத்தா வசித்த கட்டடத்தில் நாங்கள் தங்குவதற்கு என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்குப் பிரியமானது மற்றக் கட்டடம்தான். அது ‘சாலை’ என்று அழைக்கப்படும் விசாலமான வரவேற்புக் கூடம். அதன் ஒரு பக்கம் முற்றத்தையும் வானத்தையும் நோக்கித் திறந்தபடி இருந்ததால் வெளிச்சமும் காற்றோட்டமும் அங்கு தாராளம். இந்தக் கட்டடத்தோடு இருந்த அறை ஒன்றில்தான
