அகராதியியல் துறையில் புலமை பெற்றவர்
அகராதியியல் வல்லுநராக அறியப்பட்டவரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் வ. ஜெயதேவன் அவர்களை 1988 முதல் அறிவேன். 1988 – 1989ஆம் கல்வியாண்டில் எம்.பில். படிப்பிற்காகத் தமிழ் மொழித்துறையில் சேர்ந்திருந்தேன். பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை எனத் தினம் இரண்டு வகுப்பு எங்களுக்கு நடக்கும். துறையில் ஏழு பேராசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர் வரிசையில் நான்காவதோ ஐந்தாவதோ இருந்த ஜெயதேவன் வாரம் ஒரு மணிநேரம் மட்டும் வகுப்பெடுக்க வருவார். பருத்த உருவம் கொண்டவர். உடலை அசைக்காமல் கைகளை மட்டும் லேசாக வீசியபடி நிதானமாக நடந்து வருவார். அவர் தலைமுறையைச் சார்ந்த ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்ட புகைப்பழக்கம் அவருக்கும் இருந்தது. தொடர்புகைப்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். சற்றே அருகில் நின்று பேசினால் புகை வாடையைத் தவிர்க்க முடியாது.
உருவத்திற்கு ஏற்ற கனத்த குரல் எனினும் மெல்லப் பேசும் இயல்புடையவர் என்பதால் அது தெரியாது. வகுப்பெடுக்கும்போதும் மெதுவாகத்தான் குரல் வரும். பல்கலைக்கழக வகுப்பறையில் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருப்பர் என்பதால் பிரச்சினையில்லை. பள்ளி ஆசிரியர் தகுதியாகக் கல்வியியல் படிப்பு இருக்கிறது, ஆனால் கல்லூரி ஆசிரியர் பணிக்கு அப்படி ஏதும் இல்லை என்பதால் எம்.பில். பாடத்திட்டத்தில் ‘பயிற்று முறைகள்’ பாடம் வைத்திருந்தனர். அதில் ஒருபகுதியை ஜெயதேவன் நடத்தினார். தமிழாசிரியர் என்றால் கத்திப் பேச வேண்டும், இடையிடையே நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளிவிட வேண்டும் என்று பொதுப்புத்தியில் நிலவும் எண்ணத்திற்கு முரணானது அவர் கற்பித்தல் முறை. கரும்பலகையை அளவாகப் பயன்படுத்திக்கொண்டு ஆய்வுக் கோணத்தில் தாம் எடுத்த பொருளை விவரிப்பார். குரல் மெல்ல வரும் என்பதாலும் ஒவ்வொரு தொடரும் முக்கியமானதாக இருக்கும் என்பதாலும் ஐம்புலன்களையும் அவர்பால் வைத்துக் கவனிக்க வேண்டும். பயிற்றுமுறையில் அகராதி நோக்கு புலப்படும். தொகுத்தல், பகுத்தல், வரிசைப்படுத்தல், அளவான சொற்களில் விளக்கம் என அமையும். சந்தர்ப்பம் நேர்கையில் வெவ்வேறு வகையான அகராதிகளையும் அறிமுகப்படுத்துவார். தமிழ் இலக்கியம் ஓர் அறிவுத்துறையென மனதில் பதியுமாறு அவர் வகுப்பு இருக்கும்.
என் மனைவி பி. எழிலரசி தம் முதுகலைப் படிப்பை அஞ்சல் வழியில் கற்றார். வார விடுமுறை நாட்களில் வேலூரில் வகுப்பு நடக்கும். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேலூருக்கு வந்து வகுப்பு நடத்துவார்கள். அக்காலத்தில் அஞ்சல் வழி வகுப்பு நடத்துவது ஆசிரியர்களுக்குக் கூடுதல் வருமானம் தருவதாக இருந்தது. ‘அஞ்சல் வழிதானே’ என்று ஒப்பேற்றிவிட்டுச் செல்லும் பேராசிரியர்களே மிகுதி. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தும் சிலரில் ஜெயதேவனும் ஒருவர். வகுப்புக்குச் சரியான நேரத்துக்கு வருவதும் ஒருநிமிடம்கூட வீணாக்காமல் நடத்துவதும் என அமையும் அவர் வகுப்பை, இப்போதும் என் மனைவி சிலாகிப்பார். பாடப்பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டு அதையொட்டி “இப்படி ஒரு கேள்வி கேட்டுக்குவமா?” என்று வினா எழுப்பி அதற்குரிய பதிலை விவரித்து, ஆய்வுக் கட்டுரையில் ஒரு கருத்தை நிறுவுவது போல முடிப்பாராம். அஞ்சல் வழிக்கு ஏற்ற முறையில் தம் வகுப்பை அமைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
அவர் எழுதிய ‘அகராதியியல்’, ‘தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு’ ஆகிய இரண்டு நூல்களும் எனக்குப் பல திறப்புகளைத் தந்தவை. அத்துறையை என் விருப்பங்களில் ஒன்றாகக் கொள்ளவும் அவை உதவின. அகராதியியல் துறையில் பெரும்புலமை பெற்ற அவர் அதற்கேற்ப அகராதிகளை உருவாக்கவோ, அத்துறை சார்ந்த நூல்களை எழுதவோ செய்யவில்லை என்பது பெருங்குறை. இவ்விரு நூல்களும் அவர் பல்கலைக்கழகப் பணிக்கு வரும் முன் எழுதியவை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ‘தமிழ்ப் பேரகராதி’யின் மறுபதிப்பை உருவாக்குதல் உள்ளிட்ட சில பணிகளில் பங்களிப்பு செய்திருக்கிறார். ஆனால் பணிக்காலத்தில் தம் துறை சார்ந்து எதுவுமே செய்யவில்லை என்பதுதான் என் மனப்பதிவு.
சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகச் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அச்சிட்டுப் பல்லாண்டுகளாக விற்பனை செய்யாமல் கிடங்கில் அடுக்கிக் கிடந்த தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்) படிகளைச் சில திட்டங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டு சேர்த்தார். நல்ல கட்டமைப்பில் ஏழு தொகுதியாக அமைந்த அவ்வகராதிக்குக் கணிசமான கழிவு கொடுத்தார். அவற்றை விற்பனை செய்யப் பல்கலைக்கழக மாணவர்களைப் பகுதி நேர விற்பனைப் பிரதிநிதிகளாக்கி ஊக்கப்படுத்தினார். ஏழு தொகுதி கொண்ட நூற்கட்டை இருபத்தைந்துக்கும் மேலாக வாங்கி நானே விநியோகித்திருக்கிறேன். அ. சிதம்பரநாத செட்டியார் உருவாக்கி 1963இல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘ஆங்கிலம் – தமிழ் அகராதி’யின் தேங்கிய பிரதிகளை விற்பனை செய்யவும் புதிய பதிப்பை வெளியிடவும் அவர் முயற்சி எடுத்தார். பல்கலைக்கழகம் வெளியிட்டுப் பல்லாண்டுகள் மறுஅச்சாகாத நூல்கள் பலவற்றையும் மீளவும் அச்சிடவும் காரணமானார். அவர் இயக்குநராக இருந்த காலத்தில் பதிப்புத்துறை முசுவாக இயங்கியது; லாபத்தையும் சம்பாதித்தது.
துறைப் புலமையும் கற்பிக்கும் ஆற்றலும் நிர்வாகத் திறனும் கொண்ட அவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கே உரிய வாய்ப்புகளை எல்லாம் பயன் கொண்டார். பதவி சார்ந்த உள்ளரசியலிலும் ஈடுபட்டார். துறைத்தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லவும் நேர்ந்தது. இத்தகையவற்றில் தம் ஆற்றலையும் நேரத்தையும் செலவழிக்காமல் துறை சார்ந்து செலவிட்டிருந்தால் அகராதித் துறை சார்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருக்க முடியும். அதைத் தமிழுக்கு நேர்ந்த பெரும் இழப்பாகவே கருதுகிறேன்.
அவருடன் நான் சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்வுகள் ஒருபோதும் மறக்க இயலாதவை.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு உதவித்தொகை பெற்று முனைவர் பட்ட ஆய்வாளரான நான் விதிமுறைப்படி முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக முதுகலை மாணவர்களுக்கு யாப்பருங்கலக் காரிகை பாடத்தில் இருக்காது. இளங்கலையிலேயே பெரும்பாலும் அதைப் பயின்றிருப்பார்கள். ஆனால் எங்கள் துறையில் அது பாடத்தில் இருந்தது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியலைத் தவிர்த்துவிட்டு எட்டு இயல்களை மட்டும் பாடத்தில் வைக்கும் மரபுக்கு மாறாகச் செய்யுளியலையும் வைத்திருந்ததால் அதனுடன் ஒப்பிட்டுக் கற்க யாப்பருங்கலக் காரிகை தேவை எனக் கருதியிருக்கலாம். யாப்பில் எனக்கு ஈடுபாடு இருந்ததால் அப்பாடம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் பாடம் நடத்தினேன். யாப்பிலக்கணத்தை ஆழ்ந்து கற்கவும் கல்லூரி ஆசிரியர் ஆன பிறகு பல்லாண்டுகள் தொடர்ந்து யாப்பிலக்கணம் கற்பிக்கவும் அவ்வனுபவம் உதவியது.
ஒருசமயம் பொற்கோ உருவாக்கிய ‘இலக்கணக் கலைக்களஞ்சியம்’ நூலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது எழுத்து, சொல் இலக்கணத்திற்கான களஞ்சியம். அதைப் போல யாப்பிலக்கணத்திற்கும் ஒன்றை உருவாக்கலாம் எனத் தோன்றியது. அப்போது முதுகலை பயின்றுகொண்டிருந்த மாணவர் சிலரையும் ஈடுபடுத்தி எல்லோர் பெயரையும் போட்டு அக்களஞ்சியத்தைச் செய்யலாம் எனத் திட்டமிட்டேன். மாணவர்களும் ஆர்வமாக இருந்தனர். இதைப்பற்றி ஜெயதேவனிடம் கலந்து ஆலோசனை பெறலாம் என்று நினைத்துப் பேசினேன். யோசனை அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதை மாணவர்கள் பெயரில் வெளியிட்டால் கவனம் பெறாது என்று கூறித் தம் பெயரில் வெளியிடலாம் என்று மறைமுகமாக உணர்த்தினார்.
ஆலோசகராக அவர் பெயரைப் போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உழைத்து உருவாக்குபவர்களுக்கு என்ன இடம் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அடுத்தடுத்த பதவி உயர்வுகளைப் பெற நூல் வெளியீடுகளும் தேவை. அதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளக் கருதினாரோ என்னவோ. அந்தப் பேச்சு எனக்கு உடன்பாடாக இல்லை. அவர் மேல் வைத்திருந்த மதிப்புக்கு உகந்ததாகவும் இல்லை. அத்திட்டத்தையே கைவிட்டோம். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சிலர் செய்த அகராதிகளை அவர் பெயரிலும் மாணவரோடு சேர்ந்தும் வெளியிட்டுக் கொண்டது பின்னால் நடந்தது.
‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’க்கு 2001ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த நூல்களுக்கான விருது கிடைத்தது. அதை வெளியிட்ட நண்பர் பி.ர. சண்முகசுந்தரம் நூலை அனுப்பிவைத்திருந்தார். அதைத் தேர்ந்தெடுத்தவர் ஜெயதேவன். அதன் முன்னுரையில் ‘இலக்கணத்தில் மிகுந்த புலமை கொண்டவரும் நான் மிகவும் மதிக்கும் பேராசிரியருமான திரு. பொற்கோ அவர்களிடம் இந்த அகராதியைப் பற்றிச் சொல்லி ஆலோசனை கேட்க ஒருமுறை சென்றேன். கைப்பிரதியை வரிசையாக வாசிக்கச் சொன்னார். ஓரிரு பக்கங்கள் வாசித்தேன். ‘அடைப்பீ’ என்றொரு சொல் வந்தது. அது அவருக்குப் பிடிக்கவில்லை. ‘இடக்கரடக்கல்’ பற்றி எனக்கு விளக்கிச் சொல்லிவிட்டு இதுபோன்ற சொற்களைத் தவிர்க்கும்படி கூறினார். நவீனச் சிந்தனைகளின்பால் ஈடுபாடு கொண்டுள்ளவர் என்றாலும் இலக்கணம் மீறாத பழைய மனோபாவம் கூடிய அவருடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. ஆனால் சொல்பதிவைப் பற்றியும் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு குறித்தும் அவர் கூறிய சில யோசனைகள் ஆக்கப்பூர்வமாக எனக்குப் பயன்பட்டன” (ப.8, 9) என்று எழுதியிருந்தேன்.
பொற்கோவுடனான என் கருத்து மாறுபாட்டை அவருக்கு எவ்வகையிலும் மதிப்புக்குறை நேராத வகையில்தான் பதிவு செய்திருந்தேன். ஆனால் அது ஜெயதேவனுக்குப் பிடிக்கவில்லை. அகராதியியலாளராக அணுகியிருந்தால் அவர் என் பக்கம்தான் நின்றிருப்பார். ஆனால் ஆசிரியரை எதிர்த்து மாணவர் எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டு நூலை விருதுக்குத் தேர்வு செய்யத் தயங்கியிருக்கிறார். அகராதித் துறையில் போட்டிக்கு வேறு தரமான நூல் இல்லாத காரணத்தால் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’ தேர்வு பெற்றது. இதைப் பற்றி அவர் என்னிடம் பேசவில்லை எனினும் பின்னர் தகவல் அறிந்தேன்.
பல்கலைக்கழகத்தில் எட்டாண்டுகள் ஆய்வாளராக இருந்தவன் என்பதால் அங்கிருக்கும் சூழலை நன்கறிவேன். ஆகவே பல்கலைக்கழகப் பதவிக்குச் செல்ல எனக்கு ஆர்வமில்லை. எனினும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நேர்காணலுக்கு வல்லுநராக வந்திருந்தவர் ஜெயதேவன். என் செயல்பாடுகளை அறிந்தவர் என்பதால் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். “நீங்கள் பென்சன் திட்டத்தில் இருக்கிறீர்கள். இது பென்சன் இல்லாத பதவி. பரவாயில்லையா?” என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே பென்சன் திட்டத்தில் இருக்கும் ஒருவர் அப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பென்சன் திட்டத்திலேயே தொடரலாம் என்று நான் நினைத்திருந்ததைச் சொன்னேன். “அதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன” என்றார் அவர். “உடனே என்னால் முடிவெடுக்க முடியவில்லை” என்று சொன்னேன். “சரி, உங்கள் சார்பாக நானே முடிவெடுக்கிறேன்” என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். எனக்கு அப்பணி கிடைக்கவில்லை. பேராசிரியர்கள் பா. மதிவாணன், பெ. மாதையன் ஆகியோர் பிற்காலத்தில் ஓய்வூதியம் பெற பட்ட பாட்டைப் பார்த்தபோது என் சார்பாக ஜெயதேவன் எடுத்த முடிவு மிகச் சரியானது என்று தோன்றியது.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com
