கற்பனையல்ல கதையல்ல!
நம்ப முடியாதவை எனக் கருதப்படும் பல நிகழ்வுகளை ஆவணப் படுத்துவதன் மூலம் எதிர்வரும் தலைமுறையினர் நெஞ்சில் நம்பிக்கையைப் பதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலை, இருப்புப் பாதையில் அமைந்துள்ளது வையம்பட்டி. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தைச் சார்ந்த அவ்வூர்; ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர். 1970 ஜூனில் அவ்வூரிலுள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்தபோது, என் வாழ்விலும் வையம்பட்டியின் வரலாற்றிலும் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்களோடு சாதனைகள் படைக்கப்படுமெனச் சற்றும் எண்ணவில்லை.
பள்ளித் தாளாளரின் துணைவியாரே தலைமை ஆசிரியை. 1963-64இல் தொடங்கப்பட்ட அப்பள்ளியில் 1964-65 முதல் அவர் தலைமை ஆசிரியை. அப்பொழுது ஐந்து ஆண்டுக்கால ஆசிரியப் பணி நிறைவுற்றால்தான் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும் என்ற விதி கிடையாது. தாளாளர் திருவில்லிப்புத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவியார் கேரளாவைச் சேர்ந்தவர். இருவரும் வார்தா ஆசிரமத்தில் தொண்டர்களாக இருந்தபோது திருமணம் நிகழ்ந்தது; நிறையக் குழந்தைகள்.
பள்ளி ‘ட’ வடிவக் கூரைக் கொட்டகையிலும் அலுவலகம் ஓட்டுக் கட்டடத்திலும் இயங்கி வந்தது. ஆசிரியர் கதராடை அணிய வேண்டுமென்பது முக்கிய நிபந்தனை. என்னிடம் தொடக்கத்தில் ரூ.1000 கேட்டனர். ரூ.500 கொடுத்துவிட்டு மீதியைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளச் சொன்னேன். அதுதவிர ஆசிரம வளர்ச்சி நிதியாக மாதா மாதம் ரூ.10 கேட்டனர்.
தலைமை ஆசிரியையின் குணநலன்கள் பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு ஒத்துப்போகாத நிலையில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் போராட்டங்கள் நடக்குமென்றும் அவற்றுக்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அறிந்தேன். அப்பாவி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.
அற்பக் காரணத்துக்காகப் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்க்குத் தலா ரூ.10 அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு 1970 ஜூன் கடைசி வாரத்தில் நடந்தது. அதை எதிர்த்து பேச்சிமுத்து, நல்லுச்சாமி, ராமச்சந்திரன், வெள்ளைச்சாமி ஆகிய மாணவர்கள் தலைமையில் ஜூலை முதல் வாரம் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. ஜூலை 2வது வாரம் நிர்வாகி, தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவப் பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஊர்ப் பிரமுகர்கள் அடங்கிய கூட்டத்தை மணப்பாறை வட்டாட்சியர் கூட்டி மீண்டும் பள்ளி அமைதியாகச் செயல்பட ஏற்பாடு செய்தார்.
ஆனால் பள்ளி திறந்ததும் அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்து வந்த உடற்கல்வி ஆசிரியர் பெ. நடராஜனுக்கு ‘மெமோ’ வழங்கிச் சில நாட்களில் அவரைப் பணிநீக்கம் செய்தார் நிர்வாகி. அவரை மீண்டும் பணியிலமர்த்த திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்தும் நிர்வாகி அதைச் செயல்படுத்த மறுத்துவிட்டார். உடற்கல்வி ஆசிரியர், இயக்குநருக்கு மேல்முறையீடு செய்துவிட்டுப் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் பணியில் தீவிரமாக இறங்கினார்.
தமிழாசிரியர் த. ராஜகோபாலன் தம் துணைவியாராகிய இடைநிலை ஆசிரியை ராஜலட்சுமியுடன் பள்ளியின் தொடக்கம் முதல் பணியாற்றி வந்தார். பள்ளிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதி நிர்வாகி அவருக்கும் ‘மெமோ’ வழங்கினார். தமிழாசிரியரின் விளக்கத்தால் மனநிறைவடையாத நிர்வாகி நவம்பர் 14இல் அவரைப் பணி நீக்கம் செய்தார். தமிழாசிரியர் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு மேல்முறையீட்டை அனுப்பிவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பெ. நடராஜனுடன் சேர்ந்து பள்ளிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார்.
அவ்விருவரின் பணி நீக்கத்துக்குப் பிறகு நிர்வாகியின் சந்தேகப் பார்வை என் மீது விழுந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் சேர்ந்து அரசுப் பள்ளியைக் கொண்டுவர முயல்வதாக எனக்கு ‘மெமோ’ வழங்கப்பட்டது. என் விளக்கம் செல்லுபடியாகும் வகையில் பதில் அளித்தேன். பல ‘மெமோ’க்களை வாங்கினேன்; ஏற்ற முறையில் பதில் எழுதினேன்.
பள்ளிக்கருகில் புகைவண்டி நிலையம் இருந்தது. நிலையத் தலைமை அதிகாரி தீனதயாளு நாயுடு, உதவி அதிகாரிகள் ஹரிராவ், தெய்வம் ஆகியோருடன் உடற்கல்வி ஆசிரியர் மூலம் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அவர்களுடைய குழந்தைகள் சிலர் தனியார் பள்ளியில் பயின்று வந்தனர்.மணப்பாறை வட்டத் திமுக செயலாளராக இருந்த வெங்குசாமி தனியார் பள்ளிக்கு எதிரான புகார்களை அமைச்சர் மட்டத்திற்குக் கொண்டு சென்றார்.
கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தவல்லி தனியார் பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியர் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் கடுப்பாகிப் போனார். 1971, ஜூன் முதல் நாளில் என்னைப் பணிநீக்கம் செய்வதாக நிர்வாகி இரண்டு மாத நோட்டீஸ் வழங்கியபோது, பள்ளிக் கல்வி இயக்குநருக்கு மேல்முறையீடு செய்துவிட்டு முதன்மைக் கல்வி அலுவலருக்கும் மாவட்டக் கல்வி அலுவலருக்கும் நகல்களை அனுப்பினேன்.
மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவிப்பின்படி வெங்குசாமி, வையம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன், அப்போதைய தலைவர் தங்கராஜ் உள்ளிட்டுப் பல பிரமுகர்கள் அடங்கிய கூட்டம் வையம்பட்டிப் பயணியர் விடுதியில் நடந்தது. உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலையில் கூட்டம் கலைந்தது.
வெளியில் வந்த தலைவர் தங்கராஜை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் வழிமறித்தார் புகைவண்டி நிலையத் தலைமை அதிகாரி தீனதயாளு நாயுடு. அந்த இரவு நேரத்தில் தூறல் விழுந்துகொண்டிருந்தது. “எனக்காக இந்தக் காரியத்தை முடித்துத் தர வேண்டும் தங்கராஜ். செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பரிதாபமான குரலில் கூறினார் நாயுடு.
“ஆமாம் தங்கராஜ்” என்று வற்புறுத்தினார் டாக்டர் ரகமத்துல்லா. தலைவர் தங்கராஜ் புதிதாகத் தொடங்கப்படவுள்ள அரசுப் பள்ளிக் குழுவின் தலைவர் என்பது உறுதியாயிற்று.
நிலைய உதவி அதிகாரி தெய்வம், தனியார் பள்ளி ஆசிரியர்களிடத்தில் “அரசுப் பள்ளி வரப்போவது உறுதி. நீங்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இடத்தைப் பெற ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார். அவர்கள் அதற்குச் சம்மதிக்கவே பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.10,000 அரசுக்குச் செலுத்தப்பட்டது.
1971 ஜூன் 4ஆம் தேதி தனியார் பள்ளி மீண்டும் கோடை விடுமுறைக்குப் பின் தொடங்கியது. பள்ளிக்குச் சென்ற என்னை வகுப்புகளுக்குச் செல்லக் கூடாதென தாளாளர் ஆணையிட்டுள்ளதாக ஏவலர் என்னிடம் கூறினார். அன்று பிற்பகல் 3.00 மணிக்குத் தாளாளர் அழைத்தார்; சென்றேன். சட்டப்படி என்னைப் பணிநீக்கம் செய் வதற்கான நடவடிக்கை அது என்பது எனக்குத் தெரியும்.
மறுநாள் 05.06.71 அன்று எனக்குப் பணிநீக்க ஆணை வழங்கப்பட்டது. சுதந்திரப் பறவையானது போன்ற உணர்வே ஏற்பட்டது. விடுமுறையில் குடும்பத்தை ஊருக்கு அனுப்பியவன் திரும்ப அழைக்கவேயில்லை. தலைவர் தங்கராஜின் முழு நேரச் செயலாளராக மாறினேன். உரிய நேரத்தில் என் பணிநீக்கத்துக்கு எதிரான மேல்முறையீட்டைப் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பினேன்.
திடீரென்று ஒருநாள் மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தவல்லி அரசுப் பள்ளி அமையவிருக்கும் இடத்தைப் பார்வையிட வந்தார். புகைவண்டி நிலையத்தில் நின்றுகொண்டு அதற்கு எதிர்த்தாற் போலிருந்த முட்புதர்க் காட்டைக் காட்டினோம். “ஆகா! அருமையான இடம்!” என்றார். ஒரு வாரத்திற்குள் அவ்விடம் திருத்தப்பட்டு ‘ப’ வடிவில் கொட்டகை போடப்பட்டது.
தலைவர் சென்னை சென்று ஒரு வாரமாகியும் தகவலேதும் வரவில்லை. உடற்கல்வி ஆசிரியர் நடராஜன் “நாம் சென்னை சென்று வந்தாலென்ன?” என்று சொன்னார். நிலைய அதிகாரி எங்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்.
இரண்டு நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வையம் பட்டிக்குத் திரும்பிவிட்டார். நான் மேலும் இருபது நாட்கள் சென்னையில் நண்பர்களின் அறையில் தங்கினேன். திருவெறும்பூர்ச் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காமாட்சியுடன் தங்கிய தலைவரைக் காலையும் மாலையும் சந்திப்பேன். அன்றாடம் அவர் யார் யாரைச் சந்தித்தார் என்ற விவரம் கூறினார்.
ஒருநாள் மாலை “ஆர்டர் வாங்கியாச்சு” என்று அவர் சொன்னதும் “என்ன அண்ணாச்சி? ஒன்பது வரையும் ஆர்டர் இருக்கு. நமக்கு 10, 11 வேணுமே” என்றேன். அவர் சற்றும் பதறாமல் “வாங்க, ஊருக்குப் போவோம். மற்றதப் பெறகு பாத்துக்கலாம்,” என்றார்.
ஜூலை 14இல் நாங்களாகவே அரசுப் பள்ளியைத் தொடங்கினோம். அதுவரையிலும் ரயில்வே துறையில் அதிகாரி முதல் கேங்க் ஊழியர் முடிய எவர் வீட்டுக் குழந்தையும் தனியார் பள்ளிக்குச் செல்லாதிருந்தனர் என்பது மிக முக்கியமாகும்.
அன்று மதியமே தனியார் பள்ளியிலிருந்து 6 முதல் 11 முடிய படித்த ஏராளமான மாணவ, மாணவியர் தங்கள் புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு அரசுப் பள்ளிக்கு ஓடிவந்துவிட்டனர்!
தனியார் பள்ளியிலிருந்த ஆசிரிய, ஆசிரியைகள் மறுநாள் அரசுப் பள்ளிக்கு வந்தனர். ஒரேவொரு காவலர் தவிர ஏனைய அலுவலர்களும் அரசுப் பள்ளிக்கு வந்துவிட்டனர். குளித்தலை கல்வி உதவி ஆய்வாளராக இருந்த சோமரத்தினம், ஜூலை 29இல் வையம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முறைப்படியான ஆவணப் பதிவுகளைச் செய்யத் தொடங்கினார்.
மாணவர் சேர்க்கைக்காகத் தனியார் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியையிடம் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். தலைமை ஆசிரியை விண்ணப் பத்திலேயே “M.E.R. (Madras Educational Rules) விதிகளின்படி ஆண்டின் இடையில் மாற்றுச் சான்றிதழ் தர முடியாது” என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
இச்சிக்கலை எப்படித் தீர்ப்பது? மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தவல்லி ஆய்வுக்காகத் தனியார் பள்ளிக்குச் சென்று அனைத்து வகுப்பு மாணவ, மாணவியரின் பெயர்ப் பட்டியலை எடுத்துக்கொண்டார்.
“அரசுப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பெயர், பிறந்த தேதி, சாதி, ஐந்தாம் வகுப்பில் படித்த ஆண்டு ஆகிய விபரங்களைப் பெற்று வந்து சேரலாம்” என்ற ஆணையைப் பிறப்பித்தார். அந்தச் சிக்கல் எளிதில் தீர்ந்தது.
ஒன்பதாம் வகுப்பு முடியவுள்ள அரசுப் பள்ளியில் 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் வந்து அமர்ந்துள்ளனரே, அவர்கள் நிலை என்னாவது? பள்ளித் தலைவருக்காக விரிவான மடல்களை இயக்குநருக்கு எழுதினேன். தலைமை ஆசிரியரும் நடப்பு நிலைமைகளைத் தெளிவாக விளக்கி எழுதினார்.
05.09.71இல் 10, 11ஆம் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கிப் பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து கடிதம் வந்தது. இது எத்தகைய சாதனை! இடையில் தலைவர் தங்கராஜுக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டார்கள். ஆனால் தனியார் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட, நீங்கிய ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளியில் பணி பெற்றுத் தந்த பிறகே திருமணம் என்று உறுதியாகக் கூறிவிட்டார். நாங்கள் இலவசமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே தமிழாசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என மூவர் புதிதாக நியமிக்கப்பட்டனர். விரைவில் பிற ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. நாங்கள் வேலை செய்ய அவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர்!
தலைவருடைய இடைவிடாத முயற்சியால் 17.11.71இல் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். பட்டதாரி ஆசிரியர்களும் தமிழாசிரியர்களும் 29.11.71இல் பணியில் சேர்ந்தனர். எங்கள் அனைவருக்கும் வையம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே வேலை கிடைத்தது குறித்து மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பெருவியப்பு.
எங்களுடைய பணி நியமனத்தின்போது தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது 11ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி பயிலும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பிலேயே எஸ்.எஸ்.எல்.சி. புத்தகம் பதிவு செய்யப்படும். எனவே தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வந்தவர்களும் 9, 10 வகுப்புகளுக்கான பதிவை அங்கு செய்திருக்க வேண்டும். ஆனால் தலைமையாசிரியை அதைச் செய்து கொடுப்பாரென நம்ப முடியாது.
அரசுப் பள்ளியில் தலைமையாசிரி யராக இருந்த கே.ஆர். ராமமூர்த்தி அத்தகைய மாணவர்களுக்கு 9, 10ஆம் வகுப்புகளில் படித்த காலத்திற்குரிய பள்ளிக் குறிப்புகள் எழுதாமல் இருப்பதற்குத் தமிழகக் கல்வி இயக்குநர் விலக்கு அளித்துள்ளதை அவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
அதேபோன்ற 9ஆம் வகுப்புப் பதிவுக்கு விதிவிலக்கு கிடைத்துள்ளது. 11ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் மீண்டும் அனைத்துப் பாடங்களையும் தேர்வில் எழுத வேண்டும் என்ற விதி இருந்தது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவ்வாறு தோல்வியுற்றவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம்.
அவ்வாறு 1971 மார்ச்சில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதித் தோல்வியுற்ற 12 மாணவர்கள் 1971 ஜூன் மாதத்தில் வையம்பட்டி தனியார் பள்ளியில் சேர்ந்திருந்தனர். அவர்கள் அரசுப் பள்ளிக்கு வந்துவிட்ட நிலையில் தலைமை ஆசிரியர் கே.ஆர். ராமமூர்த்தியின் முயற்சியால் அவர்களுக்குப் புதிய எஸ்.எஸ்.எல்.சி. புத்தகங்கள் 9, 10ஆம் வகுப்புப் பதிவுகள் பதிவதிலிருந்த விதிவிலக்குடன் வந்து சேர்ந்தன. மேற்கூறப்பட்ட சாதனைகளை அதற்கு முன்போ பின்போ நாம் கேள்விப்பட்டிருக்க முடியாது.
எங்களுக்கு அரசுப் பள்ளியில் பணி கிடைப்பதற்கு முன் ஒருநாள் இரவு பெய்த மழையால் வகுப்புகளுக்குள்ளும் மைதானத்திலும் நீர் தேங்கி நின்றது.
காலையில் அரசு நியமனம் பெற்ற இரண்டு ஆசிரியர்களுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கே.ஆர். ராமமூர்த்தி ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கலாம் என்றார். தனியார் பள்ளியினரின் நகைப்புக்கு அஞ்சி இரண்டு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்க வேண்டினோம்.
இடைநிலை ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப், விவசாய ஆசிரியர் திருநாவுக்கரசு, அலுவலக உதவியாளர் கி. ராமசாமி, மாணவன் புல்லம நாயக்கர், மாணவி கோ. தேவகி ஆகியோருடன் நானும் சேர்ந்து இரும்புச் சட்டிகளைக் கொண்டு அரும்பாடுபட்டு நீரை வெளியேற்றினோம். ஊர்ப் பெரியவர்களின் துணையால் மணல் அடித்து மூன்றாம் நாளில் பள்ளி தொடங்க ஏற்பாடு செய்தோம்.
தனியார் பள்ளித் தாளாளரின் திறமைகள்மீது எங்களுக்கு எப்போதுமே அச்சமுண்டு. நான் நினைத்தவாறே அவர் நீதிமன்றம் சென்று தம் பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுவந்தார். இரண்டாவதாக ஓர் ஆசிரியர் குழுவை நியமித்து உற்சாகமாக இயங்க ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் விவசாய ஆசிரியர் திருநாவுக்கரசு தனியார் பள்ளிப் புதிய ஆசிரியர்கள் சிலருடன் நல்ல நட்பில் இருந்தார். தனியார் பள்ளியில் 2வது குழுவில் அறிவியல் ஆசிரியராக இருந்த வி. சத்தியமூர்த்தி 10.01.1975இல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
19.01.75இல் ஒன்றியப் பெருந்தலைவர் ரெங்கசாமி கூட்டிய சமரசக் கூட்டம், 22.01.75இல் மாவட்டக் கல்வி அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஆகியவற்றின் முடிவுகளைத் தாளாளர் செயல்படுத்தவில்லை என்பதால் 17.02.75 முதல் பள்ளிக்கு எதிரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக 01.02.75இல் துண்டுப் பிரசுரம் வெளியிட்ட சத்தியமூர்த்தி உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆதரவாக மின்வாரிய ஊழியர்கள் செயல்பட்டனர்.
தனியார் பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கும் தாளாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முற்றி அவர்கள் அனைவரும் கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்டனர். தனியார் பள்ளித் தாளாளர் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசாணை எண் 394 (கல்வி) நாள் 21.02.77 என்பதைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி 1977-78 கல்வியாண்டு முதல் தன்னுடைய பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும் அரசினர் பள்ளி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்படுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. எத்தகைய பேரிடி!
அவசர நிலையின் நீட்சியாகப் பிறப்பிக்கப்பட்ட இவ்வாணை மாணவிகள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் தங்கராஜ் அரசுத் தலைமைச் செயலாளருக்கு 14.4.77இல் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி அரசாணை எண் 394 (கல்வி)ஐ ரத்து செய்யக் கோரினார்.
ஆளுநரின் ஆலோசகரான சுப்ரமணியம் 11.05.77இல் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரைப் பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் தங்கராஜ் நேரில் சந்திக்கும்படி தந்தி மூலம் தெரிவித்தார். தற்செயலாகச் சென்னையிலிருந்த குளித்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன், வையம்பட்டிக்குப் பக்கத்து ஊரான இளங்காக்குறிச்சித் தலைவர் முகம்மது அலி ஆகியோரையும் உடன் அழைத்துக்கொண்டு கல்வித் துறைச் செயலாளரை 12.05.77 அன்று சந்தித்தார்
தங்கராஜ்.
அரசாணையை ரத்து செய்ய வேண்டிய காரணங்களைத் தெளிவாகப் பட்டியலிட்ட கடிதத்தைச் செயலரிடம் தந்தார். “அரசாணையை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் முகம்மது அலி.
1977-78ஆம் ஆண்டுக் கல்வியாண்டுத் தொடக்க நாளன்று அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக மீண்டும் பணியில் அமர்ந்த சோமரத்தினம் காலையில் கொடி வணக்கம் முடிந்ததும், “அரசாணையின்படி இனி இப்பள்ளி ஆண்கள் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதால் பெண் குழந்தைகள் உடனடியாகப் பெற்றோருடன் வந்து மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்ல வேண்டும்” என்று அறிவித்தார்.
அந்நேரம் அங்கு வந்த தலைவர் தங்கராஜ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் சங்கம ரெட்டியார், தண்டபாணிப்பிள்ளை உள்ளிட்ட பலர் தலைமை ஆசிரியரைச் சந்தித்தனர்.
“புதிய அரசாணை தொடர்பாகக் கல்வித் துறை எங்களுடன் தொடர்பிலுள்ளது. எனவே பெண் பிள்ளைகள் இங்குதான் தொடர்ந்து படிப்பார்கள்” என்று தங்கராஜ் கடுமையாகக் கூறவே குழந்தைகள் வகுப்புகளுக்குச் சென்றார்கள்.
அவ்வாண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்றனர். 10, 11ஆம் வகுப்பு இரண்டுமே எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளாகி ஒவ்வொரு வகுப்பிலும் பத்துக்கும் கூடுதலான மாணவியர் இருந்தனர். சில நாட்கள் கழித்து மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணராவ் பள்ளிக்கு வந்தார். ஆசிரியர்களான எங்களிடம் “மாணவிகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் எழுதாதீர்கள். அவர்களுடைய விடைத்தாள்களைத் திருத்தாதீர்கள். அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்காதீர்கள்” என்றார்.
வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதுவதைத் தவிர மற்ற அனைத்தையும் நாங்கள் செய்தோம். இதற்குப் பிறகு நாள்தோறும் பள்ளிக்கு உளவுத்துறைக் காவலர்கள் வருவது வழக்கமாகிவிட்டது. அவர்கள் வந்ததை அறிந்த மறுகணமே சங்கம ரெட்டியார் வருவார். காவலர்களிடம் “அந்தத் தனியார் பள்ளி தொடங்க எல்லா உதவிகளையும் செய்தவன் நான். அதன் போக்கு பிடிக்காததால் அரசாங்கப் பள்ளியைக் கொண்டு வந்திருக்கிறோம். பெண் பிள்ளைகள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள்” என்று அமைதியாகக் கூறுவார்.
தலைவர் தங்கராஜ் கல்வித் துறையுடன் இடைவிடாத தொடர்பு கொண்டிருந்தார். ஆர். ராஜு ரெட்டியார், சு. காடப்பன். எம். கோபால் அடங்கிய நடவடிக்கைக் குழு 02.07.77இல் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டது. 08.07.77இல் பேரணிக்கு அழைப்பு விடுத்தது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சிபிஎம் தலைவர்கள் எங்கள் அழைப்பின் பேரில் பள்ளிக்கு வந்தனர். என்னிடமுள்ள கோப்புகளைப் பார்வையிட்ட ‘தீக்கதிர்’ துணையாசிரியர் பரமேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் “அவசர நிலையின் அத்துமீறல் இங்கும் தொடர்கிறதா!” என வியந்து, மணப்பாறை தோழர் ஜக்கரியாவைத் தொடர்புகொள்ளக் கூறினர்.
காலாண்டுத் தேர்வும் முடிந்தது. அரசாணை ரத்து செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும் பெற்றோர்கள் திடமான நம்பிக்கையுடன் இருந்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளராக இருந்த பொ. ராமசாமி களத்தில் குதித்தார். தலைவருடன் சென்னை செல்லும் வாய்ப்பை நழுவவிட்டதற்கு ஈடாக அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் மேலவை உறுப்பினருமான முத்துசாமி கல்வித்துறை அதிகாரிகளைச் சந்தித்துக் கூடுதலான அழுத்தம் கொடுக்கச் செய்தார்.
மேலும் பொ. ராமசாமி இப்பிரச்சினையில் தீவிரமாக இறங்கியுள்ளார் என்ற செய்தி பெற்றோர்களிடத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
மாணவிகள் சார்பில் 11ஆம் வகுப்பு சி. வசந்தி என்பவர் 05.10.77இல் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தின் மூலம் 17.10.77 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. உளவுத்துறையானது மாணவியைச் சந்தித்து உண்ணாவிரதம் தொடங்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டது.
அந்தக் காலகட்டத்தில் பள்ளி இலக்கிய மன்றத்தில் சொற்பொழிவாற்றக் குமரி அனந்தன் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவியர் அவரைச் சூழ்ந்து நின்றனர். “தனியார் பள்ளியில் மொத்தம் 13 மாணவியரே உள்ளனர்” என்று அவர்கள் கூறியதைக் கேட்ட குமரி அனந்தன் “ஒன் திரீயா!” என வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
அரசுப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பயில்வதாகவும் அரசின் அனுமதி தேவையென்றும் அவர்கள் கூறியதும் தம்மாலான உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார்.
வையம்பட்டி ஒன்றிய அஇஅதிமுக சார்பில் சுப்புரத்தினம் 03.07.77இல் கல்வித்துறைக்கு வலுவான மனுவை அனுப்பியது அதற்குரிய பணியைச் செய்தது. அரையாண்டுத் தேர்வும் முடிந்தது. மாணவியரின் பெயர்கள் வருகைப் பதிவேட்டில் எழுதப்படாமலேயே. ஜூன் முதல் டிசம்பர் முடிய இவ்வாறு வருகைப்பதிவேட்டில் பெயர் எழுதப்படாமலே பள்ளிக்கு வரும் மாணவிகளை வேறெங்காவது கண்டிருக்கிறோமா? பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பினார்கள்.
கல்வித்துறை ஆணையரும் செயலாளருமான ரெங்கபாஷ்யம் தம் 29.12.77 நாளிட்ட குறிப்பாணை மூலம் அரசாணையை ரத்து செய்தார். தனியார் பள்ளியும் அரசுப் பள்ளியும் மீண்டும் இருபாலர் பள்ளிகளாயின.
தனியார் பள்ளியில் சிக்கல் கூடியது. அரசாணை 1534 (கல்வி) 04.08.78இன்படி தனியார் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பத்து ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி களில் பணி வழங்கப்பட்ட செய்தி வியப்புக்குரியது. மேற்படி ஆசிரியர் களுக்கு நடுப்பட்டி திமுக பிரமுகர் சுந்தரராஜன் அரும்பாடுபட்டுப் பணி பெற்றுத் தந்தார்.
அரசு உயர்நிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக 1978 ஜூலையில் தரம் உயர்த்தப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். பட்டதாரி ஆசிரியைகளான அன்னாள் ஜெயமலர், கஸ்தூரி ஆகியோர் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர். 1979 ஜனவரியில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டு மாவடிக்கு நான் மாற்றப்பட்டேன். எதிர்பாராத விதமாக நண்பர் திருநாவுக்கரசுடன் தனியார் பள்ளித் தாளாளர் மணமேல்குடியிலுள்ள என் வீட்டுக்கு ஒருநாள் வந்தார்.
“என் பள்ளி மூடப்பட்டுவிட்டது. நான் மேல்முறையீடு செய்த வழக்கில் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தொகையைத் தந்தார். அத்துடன் தீர்ப்பு நகலையும் கொடுத்தார்.
அவர் என்னைப் பணிநீக்கம் செய்தது செல்லாதென்றும் 01.06.71 முதல் 28.11.71 முடிய உள்ள பணியில்லாக் காலத்துக்குத் தம் சொந்தப் பொறுப்பில் எனக்குச் சம்பளம் வழங்க வேண்டுமென்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாததால் அவர் மீது குளித்தலை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிட்டியது.
கரூர் சார்பு நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதிலும் எனக்கு வெற்றி கிடைத்ததால் என்னைத் தேடி வந்திருக்கிறார். என் சக ஆசிரியர்கள் ஏழு பேருடைய பணிப் பதிவேடுகளைக் குளித்தலை மாவட்ட நீதிமன்றத்தில் கொடுத்திருப்பதாகக் கரூர் மாவட்டக் கல்வி அலுவலரிடம் உண்மைக்கு மாறான செய்தியைக் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் அவ்வாசிரியர்களிடம் ஆளுக்கு ரூ.1000 வீதம் வாங்கியிருந்ததாக அறிந்தேன். அவர் தந்த தொகையுடன் ரூ.500 கூடுதலாகக் கேட்டேன். ரூ.250 அனுப்புவதாகச் சொல்லி என்னிடம் வழக்கை முடித்துக் கையெழுத்து வாங்கினார். சொன்னபடியே பணம் அனுப்பிவைத்தார்.
வீடு தேடி வந்தவருக்கு மரியாதை செய்வதற்காகவே நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கை வாங்கிக்கொண்டு பிரச்சினையை முடித்தேன்.
தனியார் பள்ளியில் என்னுடன் சிறிது காலம் பணியாற்றிய சி. இளங்கோவன் வையம்பட்டி அரசு மேலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக 2002-2005இல் பணியாற்றிய செய்தி மகிழ்ச்சிக்குரியது. பள்ளியின் பெயர் A.A அரசு மேல்நிலைப்பள்ளி எனச் சுருக்கப்பட்டிருந்ததை இளங்கோவனே ‘அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி’ என விரிவுபடுத்தியுள்ளார்.
என் மாணவர் கவிஞர் வையை முருகன் அப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியதும் மகிழ்வுக்குரியதே.
1979 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் கோவை மணிமாறன், சென்னை வடிவேல், தஞ்சை கோகுல்தாஸ், குமாரவாடி தங்கராஜ் ஆகியோர் இணைந்து குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்ச்சியைச் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தினர். சில ஆசிரியர்களுடன் நானும் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வியாளர் பொன். தனசேகரன் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றும் மாணிக்கவேல், கலைச்செல்வி, குமாரவாடி கருப்பையா போன்ற முன்னாள் மாணவர்கள் தொடர்பிலுள்ளனர். வையை முருகன் மே, 2017இல் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிநிறைவுற்றதை மகிழ்வுடன் கூறினார்.
தாளாளரின் செயல்கள், கல்வித் துறையின் அலட்சியம் போன்றவற்றால் பணி வரன்முறைப்படுத்தலில் கோளாறு ஏற்பட்டுப் பதினொரு ஆண்டுக்கால ஊதிய உயர்வுப் பணஇழப்பு, பணிமூப்புக் கிட்டாமை, பதவி உயர்வு இல்லாமை போன்றவற்றையெல்லாம் தாண்டி வையம்பட்டியில் தலைவர், பெற்றோர் - ஆசிரியர் கழகம், பெரியோர்கள், சக ஆசிரியர்கள், புகைவண்டி நிலைய அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து நம்ப முடியாதவற்றைச் சாதித்த பெருமை பிறவிப்பயனைத் தந்துள்ளதாகவே எண்ணுகிறேன்.
சான்றுகள்
1. பட்டதாரி ஆசிரியர்கள் பணி ஆணை
2. பேச்சிமுத்துவுக்கு விதிவிலக்கு
3. சவுந்தராஜனுக்கு விதிவிலக்கு
4. சுப்ரமணியத்துக்கு விதிவிலக்கு
5. சத்தியமூர்த்தி உண்ணாவிரத அறிவிப்பு
6. பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் கடிதம் 14.04.77
7. பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் கடிதம் 12.05.77
8. மூவர் நடவடிக்கைக் குழு - துண்டுப் பிரசுரம்
9. மாணவியர் உண்ணாவிரதம் - துண்டுப் பிரசுரம்
10. அரசாணை ரத்து செய்யப்பட்ட குறிப்பு
11. 2வது குழுவுக்கு அரசுப் பள்ளிகளில் பணி
12. கரூர் சார்பு நீதிமன்றத் தீர்ப்பு - 21.11.79
13. கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் கடிதம் 18.11.79