கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா
புனிதங்களாகக் கருதப்படுவனவற்றையும் விமர்சிப்பதற்கான உரிமை மதச்சார்பின்மை கொள்கையின் அடிப்படையாகும்
காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு பஞ்சாப் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 295- A வில் திருத்தத்தைக் கோரும் இந்திய தண்டனைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2018வானது குரு கிரந்த் சாஹிப், குரான், பைபிள், பகவத் கீதையை அவமதிப்பது என்பதை ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் சிரோன்மணி அகாலி தளத்திற்கும் இடையிலான மோதலே இந்த மசோதாவிற்கான உடனடியான அரசியல் பின்னணியாகும். இதற்கு முன்னர் அகாலி தளம் தலைமையிலான ஆட்சியில் குரு கிரந்த் சாஹிப் அவமதிக்கப்படுவதைத் தண்டனைக்குரியதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை மீறுவதாக இருப்பதாக மத்திய அரசு இந்த மசோதாவை 2017இல் திருப்பியனுப்பியது. பிற மதங்களின் புனித நூல்களையும் சேர்த்திருப்பதன் மூலம் இந்த மசோதாவை நியாயப்படுத்த முயற்சிசெய்கிறது இப்போதையை பஞ்சாப் அரசாங்கம். ‘சர்வ தர்ம சம்பவா’ (அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்படுதல்) என்பதைப் பஞ்சாப் அரசாங்கம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறது என்பதை, மதச்சார்பின்மையைத் தலைகீழாக அது ஆக்கியிருப்பதை இந்த மசோதா காட்டுகிறது. முற்போக்கான வகையில் புனிதத்தை கீழ்நிலைப்படுத்துவதும் புனிதத்திலிருந்து புனிதமின்மைக்குத் தொடர்ந்து மாறுவதும்தான் மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பதற்கான பொருள்.
இந்த மசோதாவில் மதநிந்தனை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும் அதன் உள்ளார்ந்த தர்க்கமானது மதநிந்தனைக்கு எதிரான சட்டங்களையே ஒத்திருக்கிறது. ஆனால் தாராளவாத மக்களாட்சிக்கு எத்தகைய ஆபத்தை மதநிந்தனைச் சட்டங்கள் உருவாக்கும் என்பது பற்றிய மைய நீரோட்ட வாதங்கள் சில மதச்சார்பின்மை பற்றிக் குறைந்தபட்ச தெளிவையே கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புனித நூல்களின் புனிதத்தன்மையைக் கறைப்படுத்துவதை அரசு அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பதில் தவறு காண்கின்றனர் சிலர். இம் மசோதாவின் முரண்நகையை அம்பலப்படுத்தச் செய்யப்படும் முயற்சி இந்த மதநிந்தனைச் சட்டத்தின் அரசியல் நோக்கத்தை அம்பலப்படுத்தத் தவறிவிடுகிறது. சில கருத்துகள்/சிந்தனைகள்/நெறிகள்/விழுமியங்கள் ஆகியவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூறுவதானது அதிகாரத்தின் சில வடிவங்கள் விமர்சனத்திற்கோ கேள்விக்கோ உட்படுத்தப்படுவதற்கு அப்பாற்பட்டது என்று கூறுவதைப் போன்றது. புனிதம் என்ற வெளியை உருவாக்குவது, அதற்கு எல்லைகள் வகுப்பது, விரிவுபடுத்துவது என்பது வலுவாகக் காலூன்றியுள்ள அதிகாரத்திற்கு எதிரான போக்கைத் தடுப்பதற்கான அரண்களை உருவாக்கும் அரசியல் செயல்பாடே இது (வெறும் இறையியல் விவகாரமல்ல). நாம் வாழும் உலகின் அதிகாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த புனிதம் என்ற விஷயம் எப்போதுமே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் புனிதத்தைப் பாதுகாக்க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எந்த முரண்நகையும் இல்லை.
பிற புனித நூல்களுடன் பகவத் கீதையைச் சேர்ப்பதன் மூலம் இந்த மசோதா மதநிந்தனை எனும் ‘யூத கிறித்துவ’ கருத்தாக்கத்தை இந்து மதத்திற்கு இறக்குமதி செய்கிறது என்று மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். இது பன்மைத்துவம், சகிப்புத்தன்மையின் பாரம்பரியங்களை மீறுவதாகக் கருதப்படுகிறது. நாத்திக, வேதமல்லாத, வேதத்திற்கு எதிரான போக்கு கொண்டோரைத் தண்டிக்கும், சமூக விலக்கம், சாதி விலக்கம் செய்யும் வரலாற்று உண்மைகளை இந்தப் பார்வை கவனிக்கத் தவறுகிறது. புனித நூல்களிலிருந்து விலகிச்செல்லும் விஷயத்தில் காட்டப்படுவதாகத் தோன்றும் சகிப்புத்தன்மையானது நடைமுறையிலிருந்து விலகிச்செல்வதற்கு, குறிப்பாக சாதிய அடிப்படையிலான நெறிகளிலிருந்து விலகிச்செல்வதற்குக் காட்டப்படும் தீவிரமான, வன்முறை மிகுந்த எதிர்ப்பு ஒன்றுமில்லாது செய்துவிடுகிறது. இந்திய சமூகத்திலும் அரசியலிலும் மதநிந்தனைச் சட்டங்கள் பெறக்கூடிய சமூக அங்கீகாரத்திற்கான மூலங்களை இந்த இரண்டாம் வகையான விமர்சனம் காணத் தவறுகிறது. இந்த இரண்டு வகையான விமர்சனங்களுக்கும் பொதுவான அம்சமாக இருப்பது, புனிதம் என்ற விஷயத்தையே விமர்சனத்திற்குள்ளாக்குவதில் உள்ள தயக்கமே. மதநிந்தனையாகப் பார்க்கப்படும் இத்தகைய விமர்சனம் மதச்சார்பின்மைக் கொள்கையைப் பேணி வளர்க்க மிகவும் அவசியம். மதச்சார்பின்மைக் கொள்கை விஷயத்திலான உறுதி அரிக்கப்பட்டுவரும் நிலையில் இத்தகைய சட்டத்தின் விளைவுகளை விளக்க இந்த தயக்கமான விமர்சனங்கள் போதுமானவையல்ல.
சமீப காலங்களில், மத நம்பிக்கையை அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை அவமதித்துவிட்டதான அடிப்படையில் நாடகங்களை, புத்தகங்களை, கலைப் படைப்புகளைத் தடை செய்யக் கோருவது அதிகரித்துவருகிறது. மிகச் சமீபமாக, மத நூல்களை நியாயமான விமர்சனத்திற்கு உட்படுத்துவதிலிருந்து விலக்குவதற்காகச் செய்யப்படும் முயற்சிகள் மிகவும் குரூரமாகிவிட்டன. மும்பையில் இரண்டு நாடக அரங்குகளுக்கு வெளியே இந்துத்துவா குழுக்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இது தெளிவாகத் தெரிந்தது. புனிதங்கள் என்று கொண்டாடப்படும் விஷயங்களை, கடவுள்களைக் கிண்டலடிக்கும் நாட்டுப்புறப் பாரம்பரியங்களின் அடிப்படையில் உருவான பிரபலமான மராத்தி நாடகம் நடத்தப்பட்ட போது இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்தன. பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை நியமித்துக்கொண்டவர்கள் பழைமைவாதத்திலிருந்து விலகிச்செல்லும் போக்கு பரவுவதைக் கண்டு வெறி கொள்கின்றனர். பஞ்சாப் சட்டமானது பிற மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கைகள் பிற சமூகங்களிடமிருந்தும் குழுக்களிடமிருந்தும் எழுவதை ஊக்குவிக்கும். ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருக்கும் பிரிவினரின் விளக்கத்தைச் சரியான விளக்கமென இத்தகைய சட்டங்கள் ஏற்பதன் மூலம் அவர்களது நிலை வலுப்படுத்தப்படுவதால் மதத்தை, சமூக நடைமுறைகளை, நம்பிக்கைகளை, நெறிகளை விமர்சிப்பது என்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது. இதைவிட அதிக ஆபத்து என்னவெனில் தீவிரவாத அல்லது சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் கும்பல்களிடம், உங்கள் செயல்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது என்று மறைமுகமாக இத்தகைய சட்டங்கள் உணர்த்துவதுதான். ஆகவே இந்தச் சட்டம் கும்பல் வன்முறையை ஊக்குவிக்கும் சட்டம் என்றே பார்க்கப்பட வேண்டும். பசு வெட்டப்படுவதற்கு எதிரான சட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் பசுப் பாதுகாவலர்களின் வன்முறையிலும் இத்தகைய சட்டமியற்றல்களின் பயங்கரமான விளைவுகளைப் பார்த்திருக்கிறோம். தனிமனிதர்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் எதிராகப் பேசப்படும் ஆபத்தான, அச்சத்தை ஏற்படுத்தும் பேச்சுக்கள், குற்றங்கள் குறையாத, தண்டிக்கப்படாத நிலையில் புனித நூல்களுக்குத் தரப்படும் சட்டப் பாதுகாப்பு நமது அரசிலும் சமூகத்திலும் மதச்சார்பின்மைக் கொள்கை எந்த அளவிற்கு அரிக்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் மானியாகும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 15, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com