கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்
“தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பையும் மீறி, கொள்கைப் பற்றிலிருந்து கோடேஸ்வரம்மா சிறிதும் சமரசம் செய்துகொண்டதில்லை.”
(ஆளற்றபாலம் நூல் பற்றி அசோகமித்திரன் - தமிழ் இந்து நாளேடு)
செப்டம்பர் மாதம் காலச்சுவடு இதழில் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி ‘ஓயாத இயக்கம்’ என்று கட்டுரை எழுதியபோது கூட நினைத்திருக்கவில்லை, அடுத்த மாதமே அவரைப் பற்றிய அஞ்சலி கட்டுரை எழுத வேண்டி வரும் என்று. காலத்தின் புதிரை அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை
ஒன்றை அடுத்து ஒன்றாக வேதனைகள் வாழ்நாள் முழுவதும் தன்னைத் துரத்திக்கொண்டு இருந்தாலும், அவற்றை எதிர்த்து நின்று, தான் நம்பிய கட்சி கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் நிமிர்ந்த அந்த மாமனுஷியை வெறுமே போற்றுவதுடன் நின்று விடாமல் அவர் கடைப்பிடித்து வந்த சுயமரியாதையை, மனிதநேயத்தை நாமும் பின்பற்றி வருவது அவருக்குச் செய்யக் கூடிய உண்மையான அஞ்சலி.
பெண்பிள்ளைகள் தைரியமாக நடமாடக் கூடிய சமசமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தபோதிலும், சுயநம்பிக்கையுடன், தன்னலமற்ற போக்குடன், பத்துப்பேருக்கு பயன்படும் வகையில், எல்லோரும் நினைவு கூரும் வகையில் வாழ்ந்துவிட்டுப் போய் விட்டார் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா.
தன்மீது திணிக்கப்பட்ட எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையின் வழிகாட்டுதலின்படி வாழ்க்கை முழுவதும் போராடியவர் அவர்.
அந்த நாட்களில் முற்போக்கு முகாம்களில் ஆண் போராளிகளுக்குக் கிடைக்கும் அதே கவனம், பெண் போராளிகளுக்குக் கிடைத்திருக்கவில்லை. மறைவு வாழ்க்கையில் யாராவது பெண் போராளி கரு தரித்து விட்டால் அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது, வளர்ப்பது கட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் கருவைக் கலைத்துவிடச்சொல்லி மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்குப் பணிந்து போக வேண்டிய நிலைமை. அப்படியும் கட்சிக்காக அதனை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கருவைக் கலைத்து உயிருக்கே ஆபத்து விளைவித்த சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையிலும் கட்சிக் கொள்கை மட்டுமே உயிர் மூச்சாகப் பல பெண் போராளிகள் வாழ்ந்திருக்கிறார்கள். தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்றும் மக்கள் மனத்தில் நிலைத்திருப்பார்.
கௌரி கிருபானந்தன