அப்புண்ணியின் கதை
ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் புத்தக வடிவத்தில் பதிப்பிக்கப்பட்ட முதல் நாவல் நாலுகெட்டு. 1958 ஆம் வருடம் இதே ஆகஸ்ட் மாதம் பிரசுரமானது. அவரது 23 ஆம் வயதில் எழுதப்பட்ட இப்படைப்பின் வெளியீடு, மலையாள நாவல் மண்டலத்தில் ஒரு புதிய நட்சத்திரம் பிறந்ததற்கானஅறிவிப்பாக இருந்தது. கேரள சாகித்ய அகாடமி அந்த ஆண்டின் சிறந்த நாவலுக்கான விருதை அளித்துக் கௌரவித்தது.
கேரள வாஸ்து சாஸ்திரக் கட்டடக்கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மேல்சாதிக்காரர்களின் பழைமையும் தனித்தன்மையும் கொண்ட கேரள பாணி வீடுகள் நாலுகெட்டுகள் என்று அழைக்கப்பட்டன. வீட்டின் நடுமத்தியில் வெளிச்சம் விழக்கூடிய முற்றமும், நான்கு திசைகளிலும் வடக்கினி, தெற்கினி என்றெல்லாம் அழைக்கக்கூடிய வசிப்பிடங்களாலான கட்டட அமைப்பை நாலுகெட்டு வீடுகள் கொண்டிருந்தன. பொருளாதார நிலைமைக்கேற்ப இரண்டு நாலுகெட்டுகளை ஒன்றிணைத்த எட்டுக்கெட்டு வீடுகளும், நான்கு நாலுகெட்டுகளை ஒன்றிணைத்த பதினாறுகெட்டு வீடுகளும் தெற்கு மலபார் பகுதிகளில் இருந்தன.
நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, நில சீர்திருத்தச் சட்டம், ஜன்மிமுறை ஒழிப்பு, கூட்டுக்குடும்ப அமைப்பின் சரிவு போன்ற கேரளத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களின் விளைவாகப் பெரும்பாலான இந்தக் கட்டடத்தொகுப்புகள் பிரித்து நீக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பரவலாகப் பாதிக்கப்பட்டார்கள். கூட்டுக்குடும்ப முறை, தனிக்குடும்ப முறைக்கு வழிவிட்ட இயல்பான பரிமாணமாக அது இருந்தது.
இந்த மாற்றங்களுக்குக் குழந்தைப்பருவம் தொட்டு, சாட்சியாக இருந்து அதனுடைய கசப்புகளை நேரடியாக அனுபவித்த எம்.டியின் மனநிலையும், ஆத்மசாரமும், புனைவும் இழைசேர்த்து நெய்யப்பட்டதுதான் நாலுக்கெட்டு நாவல். இதய ரத்தத்தால் படைக்கப்பட்ட நாவல் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவதற்கான காரணமும் அதுதான்.
தெற்கு மலபாரின் ஒரு நாயர் குடும்ப வீட்டைச் சேர்ந்த அப்புண்ணியின் குழந்தைப்பருவம் முதல் கிட்டத்தட்ட அவனது 28 வயது வரையிலான காலகட்டத்தின் கதையே இந்நாவலின் உள்ளீடு. அப்புண்ணியின் பார்வையில் நாவல் விரிகிறது. மூத்த சகோதரனின் அனுமதி இன்றி, பேர்போன பகடை விளையாட்டுக்காரன் கோந்துண்ணி நாயரைத் திருமணம் செய்துகொண்டதற்காக குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாருக்குட்டித்தான் அப்புண்ணியின் தாயார். நம்பூதிரி இல்லங்களில் வாசல் பெருக்கி, பாத்திரம் தேய்த்து, வீட்டுவேலை செய்து அவள் மகனை வளர்க்கிறாள். தறவாடு என்றழைக்கப்படும் குடும்ப வீட்டில் கால் வைப்பதற்கான தகுதிகூட அப்புண்ணிக்கு மறுக்கப்படுகிறது.
கோந்துண்ணி நாயாருடன் கூட்டுச் சேர்ந்து, மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்து வந்த செய்தாலிக்குட்டி, உணவில் விஷம் வைத்து கோந்துண்ணி நாயரைக் கொல்கிறான். கோந்துண்ணியின் மரணத்திற்குப் பிறகு தாய் மகன் ஆகியோரின் வாழ்க்கை கையறுநிலையை எட்டுகிறது. ஒருமுறை தனது தறவாட்டு வீட்டில் நடக்கும் களம் எழுத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற அப்புண்ணியை அவனது பெரிய தாய்மாமன் நாயைத் துரத்தியடிப்பதைப் போல கழுத்தைப் பிடித்து விரட்டுகிறார். அன்றுமுதல் அப்புண்ணிக்கு எல்லோர் மீதும் வன்மம் எழுகிறது. நிரபராதியான அம்மாவையும் அவன் வெறுக்கிறான். அம்மாவின் இயலாமைக்கு உதவிக்கரம் நீட்டிய சங்கரன் நாயரையும் எதிரியாகக் காண்கிறான். பெரிய தாய்மாமனிடம் இவனுக்காகக் குரல் கொடுத்து அவன் மீது சிறு ஆதரவைக் காட்டுகிறார் சின்ன தாய்மாமன்.
அவனது எதிரிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்த செய்தாலிக்குட்டி- தற்செயலாக அவனது வாழ்க்கையில் பிரவேசித்து, தன்னம்பிக்கையூட்டி,எதிர்கால வாழ்வைத் தீரமுடன் எதிர்கொள்வதற்கான தைரியத்தைத் தந்து, அவனுக்குள் மாற்றத்தை நிகழ்த்துகிறான். இச்சம்பவம் கதையின் முக்கிய திருப்புமுனை.
செய்தாலிக்குட்டி தந்த மனதிடத்தைப் பக்கபலமாகக் கொண்டு தறவாட்டில் வசிக்கத் தொடங்கிய அவனுக்குக் காதலுக்கு நிகரான அனுபவங்கள் வாய்த்தபோதிலும் வன்மம் நுரைத்துப் பொங்கும் அவனது மனம் அத்தகைய மெல்லிய உணர்வுகளுக்கு இடம் தர மறுக்கிறது.
வயநாட்டில் தேயிலைத்தோட்டத்தில் வேலைக்குப் போய் வசதியும் திறமையும் மிக்க இளைஞனாகத் திரும்பிவந்த வேளையில் பெரிய தாய்மாமனின் தறவாடு இயல்பான வீழ்ச்சியை எட்டி இருந்தது. இனிமையான பழிவாங்கல் என்கிற விதமாக தாய்மாமனிடமிருந்து நாலுகெட்டு வீட்டை விலைக்கு வாங்குகிறான். தனது அறியாமையால் ஒதுக்கிவைக்கப்பட்ட அம்மாவை அங்கு அழைத்துச் செல்கிறான். இந்த நாலுகெட்டைப் பிரித்து எறிந்து, காற்றும் வெளிச்சமும் தவழும் சிறிய வீட்டைக் கட்டத் தீர்மானிக்கிறான். வெறுத்து ஒதுக்கிய சங்கரன் நாயரை தனது நாலுக்கெட்டு வீட்டுக்கு வரவேற்கும் பரந்த மனம் படைத்தவனாக அப்புண்ணி மாறிவிடுகிறான். இங்கு நாவல் நிறைவு பெறுகிறது.
கேசவதேவ், தகழி போன்ற படைப்பாளிகளுக்குப் பிறகு மலையாள இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தை அடையாளப்படுத்தி, இலக்கிய ரசனையை மாற்றி நிறுவி, மனித இயல்புகளை யதார்த்தமாக விவரிக்கும் படைப்பு நாலுகெட்டு. நிலவுடைமை அமைப்பை மட்டுமல்ல, மனிதமனதின் பழமைகளின் நூலாம்படைகளைத் துடைத்துச் சுத்தப்படுத்திய நாவலும் கூட. அறுபது ஆண்டுகளாக நாயகன் அப்புண்ணியைப் போலவே இந்த நாவல் இன்றும் இளமையும் புதுமையும் கொண்டிருப்பதை வாசிப்பின் மூலம் உணரமுடியும்.
எம்.டி என்கிற இரண்டெழுத்தில் அழைக்கப்படும் எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு கடல். மலையாள இலக்கியத்திற்குள் ஏராளமான அலைகளை உருவாக்கித் தந்த கடல். வள்ளுவநாடு என்றழைக்கப்படும் மலபாரின் தொன்மங்களையும், மொழிநடைகளையும் வாசகர்களுக்குப் பரிசளித்த இலக்கிய ஆளுமை. எம்.டி.யின் ஒவ்வொரு கதையும் ஒரு வரலாறு. முந்தைய நாயர் தறவாடு, மருமக்கத்தாய முறை, நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி இவற்றைச் சொல்லும் கேரள சமூக அமைப்பைப் பற்றிய வரலாறு.
எம்.டி தனது கதாபாத்திரங்களைத் தனது குடும்பத்தில் இருந்தே கண்டெடுக்கிறார். அவரது புனைவுலகம் தன்வரலாற்றுச் சாயலைக் கொண்டது. ஏழ்மையையும் தனிமனித உறவுகளில் ஏற்படும் விரிசல்களையும் கடந்தகால காதலையும் அவரது ஒவ்வொரு கதையிலிருந்தும் மீட்டெடுக்க இயலும். எம்.டி இருட்டும் கண்ணீரும் வறுமையும் அவலமும் தாண்டவமாடும் வீழ்ந்த தறவாடுகளின் கதைசொல்லி. அவரது கதைகளில் கூட்டுக்குடும்பத்தின் பிரச்சினைகளையும் அதனுடைய சிக்கல்களையும் மனித உணர்வுகளின் அமுக்கப்பட்ட பெருமூச்சுகளின் திணறல்களையும் பாதி சாத்தப்பட்ட இருள்படிந்த ஜன்னல் இடுக்குகள் வழியாகக் காணலாம். மேலே குறிப்பிட்ட கண்ணீர், ஏழ்மை, அவலம், தென்மலபாரின் மொழிநடை, தறவாடுகளின் வீழ்ச்சி போன்றவை இல்லையெனில் எம்.டி என்கிற கதைசொல்லி இல்லை என்கிற விமர்சனம் எழுந்தபோது அதை மறுக்கும் விதமாக மஞ்ஞீ, இரண்டாம் இடம் போன்ற கதைக்களங்களை கொண்ட நாவல்கள் மூலம் தொட்டதை எல்லாம் பொன்னாக்கிக் காட்டும் இலக்கியக் கலைஞனாகத் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
வெளிவந்து அறுபது ஆண்டுகளில் நாலுக்கெட்டு நாவல் ஐம்பதாம் பதிப்பைக் கடந்து விட்டது. விற்றுத்தீர்ந்த பிரதிகள் ஐந்து லட்சத்தைத் தாண்டி விட்டன. இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை, இந்திய கிளாசிக் நாவல் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் தனக்கே உரிய பதிப்பு அழகியலோடு தற்போது பதிப்பித்துள்ளது. ஏற்கெனவே இரண்டு பேர் இந்நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இது மூன்றாவது மொழியாக்கம்.
மூலமொழியை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் செல்கிறோம் என்பதுதான் ஒரு மொழிபெயர்ப்பாளன் எதிர்கொள்ளும் சவால். இந்த சவாலில் நண்பர் குளச்சல் யூசுஃப் வெற்றி அடைந்திருப்பதற்கான சான்றுதான் இந்த மொழியாக்கம்.
மதுரை காலச்சுவடு புத்தக வெளியீட்டு விழாவில் (31 ஆகஸ்ட் 2018) பேசியதன் கட்டுரை வடிவம்
மின்னஞ்சல்: nirmalyamani@gmail.com