‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...
காப்பகங்களில் வாழும் ஆதரவற்றோரைப் பாதுகாக்க வேண்டிய தங்களது கடமையிலிருந்து அரசும் குடிமைச் சமூகமும் தோல்வியடைந்துவிட்டன.
சமத்துவமற்ற, ஆணாதிக்கச் சமூகத்தில் நிலவும் சமூக, கலாச்சார, பொருளாதாரச் சூழலில் கொடூரமான மனம் படைத்தவர்களிடமிருந்து எளிதில் பலியாகக்கூடிய பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால் இவர்களைப் பாதுகாக்க வேண்டிய மக்கள் நல அரசும் குடிமைச் சமூகமும் தங்களது நிறுவனங்களின் மூலம் இவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. சமீபத்தில் பீகாரிலும் உத்திரபிரதேசத்திலுமுள்ள குழந்தைக் காப்பகங்களில் பெண்களும் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக ஆளானமை அரசும் குடிமைச் சமூகமும் பாதுகாவலர்கள் என்ற தம் பணியை ஆற்றுவதில் தோல்வியுற்றிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பல சமயங்களில் ‘பாதுகாவலர்’களே குற்றமிழைப்பவர்களாக இருப்பது நீதியின் சிதைவும் அபத்தமுமாகும். சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015 ஜெஜெ சட்டம் (Juvenile Justice Care and Protection of Children) இயற்றப்பட்ட பிறகும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இருந்தும் இது நடந்துள்ளது.
பீகாரில் முஸாபர்பூரிலுள்ள குழந்தைக் காப்பகத்தில் நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை 2017இல் டாட்டா சமூக அறிவியல் கழகம் நடத்திய தணிக்கையில் அம்பலமானது. அந்தக் காப்பகத்திலிருந்த 42 பேரில் 34 பேர் ஏழிலிருந்து பதினேழுவயதிற்குட்பட்ட சிறுமிகள். இவர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வல்லுறவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீகாரிலுள்ள வேறு காப்பகங்களிலும் பதினான்கு பேர் இத்தகைய அவலங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; இந்தக் காப்பகங்களில், தேவையான மிக அடிப்படை வசதிகளும் மிக அடிப்படையான சுதந்திரங்களும் இல்லாதிருப்பதையும் இந்தத் தணிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதில் வேதனையை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில் முஸாபர்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் ஏழு பேர் பெண்கள். இவர்களே ‘பராமரிப்பாளர்கள்’ ‘ஆலோசகர்கள்’ பணியில் இருப்பவர்கள்.
உத்திரபிரதேச தியோரியாவிலுள்ள காப்பகத்தில் நடந்த பாலியல் வல்லுறவு பற்றி அங்கிருந்த 10 வயது சிறுமி தப்பித்து வந்தபோது தெரியவந்தது. அங்கிருக்கும் சிறுமியர் இவ்வாறான தொல்லைகளுக்கு ஆளாவதை அந்தச் சிறுமி காவல்துறையிடம் தெரிவித்தார். அந்தக் காப்பத்தில் பதினெட்டுச் சிறுமிகள் காணாமல் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காப்பகம் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இயங்கிவந்திருக்கிறது.
போதுமான சட்டங்கள் இல்லாமையாலல்ல, மாறாக கண்காணிப்பும் ஆய்வு செய்ய வேண்டிய குழுக்களும் இல்லாமைதான் இன்றைய பிரச்சனைக்குக் காரணம். எல்லா குழந்தைக் காப்பகங்களும் ஜெஜெ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழந்தைப் பாதுகாப்பு அதிகாரி, குழந்தை நலக் குழு, சிறார் நீதி வாரியம் ஆகியன இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இவர்களது செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதால் இந்தக் காப்பகங்களை நடத்துவதில் ஏராளமான அதிகார முறைகேடுகளும் நிதி முறைகேடுகளும் மலிந்துகிடக்கின்றன. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி 32% குழந்தைக் காப்பகங்கள் மட்டுமே ஜெஜெ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன; 33% காப்பகங்கள் எந்த அமைப்பின் கீழும் பதிவு செய்யப்படவில்லை. இந்தக் காப்பகங்களைச் சமூகத் தணிக்கைகளுக்கு உட்படுத்தி இங்கு நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பது என்பது ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தக் காப்பகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கடமை. நடப்பது என்னவெனில், எந்த வழக்கமான ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாமலே இயங்க இந்தக் காப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன; அல்லது முஸாபர்பூர் குழந்தைக் காப்பகத்தில் நடந்ததைப்போல் பல அரசு அமைப்புகள் வழக்கமான ஆய்வு மேற்பார்வையிடல்களைப் பல ஆண்டுகளாக மேற்கொண்ட போதிலும் மிகப் பரவலாக நடக்கும் வல்லுறவு எவையும் கண்டுபிடிக்கப்படுவதில்லை.
அனைத்துக் குழந்தைக் காப்பகங்களும் முழுமையான சமூகத் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திற்கு இப்போது உத்திரவிடப்பட்டுள்ளபோதிலும், மாநில அரசுகளும் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளன. எனினும் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கை ஏற்கெனவே நாசமாக்கப்பட்டுவிட்டது. இந்த விசாரணைகள் பல வல்லுறவு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்துள்ளன. மேலும் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முஸாபர்பூர் வழக்கை விசாரிக்கையில் காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பு, நலன்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி இந்தியாவெங்கிலும் இத்தகைய காப்பகங்களில் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகிய குழந்தைகளின் எண்ணிக்கை 1575. இதிலிருந்து தப்பிக்கும் இந்தக் குழந்தைகள் மீண்டும் இதே காப்பகங்களில் பாலியல்கங்களுக்கு ஆளாகின்றன. தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றாலும் பல சமயங்களில் அரசின் நடவடிக்கை அத்துடன் நின்றுவிடுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் நிலைமையை மாற்றுவதிலோ அல்லது இந்தக் காப்பகங்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உட்படுத்துவதிலோ அக்கறை காட்டப்படுவதில்லை. இப்போது எழும் கொந்தளிப்புகள் அடங்கிய பிறகு பிரச்சினை அப்படி கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் என்பதே யதார்த்தம்.
வன்முறை மிகுந்த, சூழ்ச்சியான சூழல்களுக்குப் பலியாகும் குழந்தைகளும் பெண்களும் தங்களது நலன் குறித்த விஷயங்களில் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். அரசு, அதன் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற தங்கள் மீது அதிகாரம் கொண்டவர்களின் அல்லது சமூகத்தின் கருணையில் வாழ வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். அரசின் பாதுகாப்பில் இருக்கும் இவர்களின் நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர, சக மனிதர்களைக் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் தகுதியற்றவர்களாகப் பார்க்கும், வன்முறையை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் பழங்கால, ஆணாதிக்கப் பார்வையை மாற்ற வேண்டும். எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலுள்ள மக்களும் எல்ல உரிமைகளும் கொண்ட குடிமக்களாக மதிக்கப்படுவதும் அவர்கள் தொடர்பான விஷயங்களில், நலன்களில் அவர்களது கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்தக் குழந்தைக் காப்பகங்கள், விடுதிகளில் நிலவும் மோசமான நிலையின் காரணமாக இங்குள்ள சிறார்களும் ஆதரவற்ற பெண்களும் அவர்களது ‘பாதுகாவலர்’களிடமிருந்தும் பல்வேறு இன்னல்களிலிருந்தும் மீட்கப்பட வேண்டும். இத்தகைய காப்பகங்களில் வாழச் சபிக்கப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகள், சுயமதிப்பு ஆகியவை மீண்டும் நிலைநாட்டப்படும் முன்னர் இந்தக் காப்பகங்களை நடத்திக்கொண்டிருக்கும் குற்றவாளிகள், கயவர்கள் களையெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். இத்தகைய காப்பகங்களை நடத்துபவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும்; அவர்களது பின்னணியை ஆராய வேண்டும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
ஆகஸ்ட் 18, 2018
தமிழில்: க. திருநாவுக்கரசு