நாவல் கதை கவிதை சினிமா
இலக்கியம் வாழ் வாகிப்போன பிறகு இலக்கியக் கூட்டங்கள் நடை பெறும் நாளை நான் வேறெப்படி சொல்லக் கூடும். திருவிழாவின் போதெல்லாம் மழை தவறுவதில்லை. மழை இடியும் மின்னலு மான இருள் கப்பிய பொழுதில் மழை அங்கியோடு சிறு தூறல் வாய்க்கையில் வெளியேறி விட்டேன். அவ்வப்போது மின்னல் வழி காட்ட, சாலை கொஞ்சம் அனாதையாய்க் கிடந்தது. தூங்கா நகரை நெருங்குகையில் போக்குவரத்து நெரிசல், நெஞ்சினைத் தொடும் மழை நீர். ரயில் நிலையம் துறைமுகம் ஆகிவிட்டது. தக்கிமுக்கி நிகழ்வு நடக்கும் இடத்திற்குச் சென்றேன்.
குளச்சல் யூசுப் மொழி பெயர்த்திருந்த எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலு கெட்டு நூல்’ முதலில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து ஒரு பகுதியை யூசுப் வாசித்தார். நூல் மீதான தன்னுடைய பார்வையை நிர்மால்யா முன்வைத்தார்.
குமாரநந்தன் தனது ‘நகரப்பாடகன்’ தொகுப்பிலிருந்து கதை வாசித்துக் கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் ஏற்புரைக்குப் பதிலாக தங்கள் படைப்பின் சிறுபகுதியை வாசித்தனர். நூல் குறித்து சமயவேல் கச்சிதமான உரையை வழங்கினார். கட்டுரை வடிவில் இருந்தபோதும் காலம் கருதிச் சுருக்கமாகக் கதைகளை விலாவாரியாகப் பொருள் சார்ந்து பிரித்துக் கூறினார்.
அடுத்ததாக ந.ஜயபாஸ்கரனின் கவிதைத்தொகுப்பு. ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்.’
ந. ஜயபாஸ்கரன் தான் நினைவுகூர வேண்டியவர்களுக்காக சில நிமிடங்களை எடுத்துக் கொள்கிறேன் என்றார். அவர் எழுதிய கவிதைகளை வாசிக்க அரங்கம் பொது அமைதிக்கு வந்தது. நூல் குறித்துப் பேசிய லிபி ஆரண்யா தனக்கும் கவிஞருக்கும் ஏற்பட்ட அறிமுகத்தை ஒரு கதைசொல்லியாக அரங்கம் அதிரச் சிரிக்க வைத்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். கவிஞரும் கவிதையும் ஒன்றா வேறுவேறா என்றால் ஜயபாஸ்கரனைப் பொறுத்தவரை அவரும் கவிதைகளும் ஒன்றே. பசவண்ணனின் கவிதையில் உடலைக் கொண்டு செல்லும் கால்களே தூண்கள், சிரசே கலசம் என்பதைப் போல் கவிதைகள் தன்னுடலைக் கேள்வியாக முன்வைத்து சொக்கனிடமும் சொக்கியிடமும் நிற்கிறது என்றார். எமிலியின் மீதான ஈர்ப்பும் கவிதையில் இருப்பதைக் குறிப்பிட்டார்.
பெருமாள் முருகன் அவர்களின் திரைப்படம் தொடர்பான கட்டுரைத்தொகுப்பு ‘நிழல்முற்றத்து நினைவுகள்.’
பெருமாள் முருகன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையையும் மற்றும் முதல் பதிப்பின் முன்னுரையும் வாசித்தார். பேராசிரியர் பிரபாகரன் நிகழ்த்திய உரை அற்புதமானது. திரைப்படம் குறித்து நான்கு வகையான பார்வையில் எழுத்துக்கள் வருவதைக் கூறினார். திரைப்படத்தில் உள்ளடக்கத்தை அதிகம் பேசுவது அத்தனை சரியல்ல என்றார். “திரைப்படம் அளிக்கும் சுவை குறித்தும் பேசவேண்டும். திரையரங்கம் தான் சாதி மதங்களைத் தாண்டி ஒரு சமூகம் ஒன்றாக அமர்ந்த நிலையை உருவாக்கியது. ஆனால் சமீபத்திய போக்குகளில் சில திரைப்படங்களைத் திரையரங்கங்கள் தவிர்ப்பது வருத்தத்திற்குரியது; ஆய்வின்பாற்பட்டது. பெருமாள் முருகனின் கட்டுரைத் தொகுப்பு அந்த வகையில் புதிது கவனத்திற்குரியது” என்றார். ஸ்டாலின் ராஜாங்கம் நிகழ்ச்சியைக் கச்சிதமாகத் தொகுத்தார். புனைவு செந்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
ரமேஷ் கண்ணன்