கடிதங்கள்
மருதன் எழுதியுள்ள ‘வரலாறு விடுதலை செய்யும்’ என்னும் கட்டுரை வரலாற்றைத் தெளிவாக ஆய்ந்து எழுதப்பட்டதாகும். திமுக 1956இல் திருச்சியில் கூட்டிய மாநில மாநாட்டில் வாக்களிப்பு மூலம் 1957 பொதுத் தேர்தலில் பங்கெடுப்பதென்று முடிவு செய்தது. சமூக இயக்கமாக இருந்த அமைப்பைத் தேர்தல் களத்துக்குக் கொண்டு வந்ததன் மூலம் அதன் அரசியல் போக்கு விரிவடைந்தது.
கலைஞர் கருணாநிதியின் பேச்சும் எழுத்தும் வீரியம் அடைந்து தொண்டர்களை உற்சாகமுறச் செய்தன. அனைத்திந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்று இல்லை என்ற மாயையைத் தகர்ப்பதில் திமுக வெற்றி கண்டது. 1962இல் சீனப் படையெடுப்பின்போது திமுக தடை செய்யப்படும் என்ற கருத்து மேலோங்கியபோது அண்ணா மிகவும் சாதுரியமாக நிலைமையைக் கையாண்டார்.
நாடாளுமன்ற மேலவையில் அண்ணா பேசும்போது “பிரிவினைக் கோரிக்கையைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அவ்வாறே உள்ளன” எனத் தெளிவாகக் கூறினார்.
குமாரபாளையம் பொதுக்குழுக் கூட்டத்தில் ஈ.வெ.கி. சம்பத் கேட்ட கேள்விகள் இறுதிவரை சாகாவரம் பெற்றவையாகவே நிலைத்துவிட்டன. அவர் மீதும் கண்ணதாசன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் உண்மையான பதிலைக்கூற வழியற்றவையே. ஏ.வி.பி. ஆசைத்தம்பி சிறிது காலம் சம்பத்துடன் இருந்துவிட்டு மீண்டும் அண்ணாவின் பக்கம் சாய்ந்துவிட்டார்.
முன்னாள் மேயர் சிட்டிபாபுவையும் சாத்தூர் பாலகிருஷ்ணனையும் சிறைக் கொடுமைகளுக்குப் பலி கொடுத்த பிறகும் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” எனக் கலைஞரால் எவ்வாறு கூற முடிந்ததென்பது இன்றளவும் வியப்புக்குரியதே.
ஈழத் தமிழர் பிரச்சினையில் முள்ளிவாய்க்கால் போரின்போது ஆட்சியை இழந்து அளவிலாப் புகழ் பெறும் வாய்ப்பைக் கலைஞர் நழுவவிட்டதும் பேரிழப்பே.
தெ. சுந்தரமகாலிங்கம் வத்திராயிருப்பு - 626132
காலச்சுவடு செப்டம்பர் இதழில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திரை எனும் கொல்லிப்பாவை’ கட்டுரை கண்டேன். அதன் கடைசிப்பத்தி கட்டாயம் நமது ஞாபக அடுக்குகளில் வைக்கப்பட வேண்டியது. திரைமொழியும் அதன் வழியும் இன்றைக்கு நம்முன் பெரும் சவாலாக இருக்கின்றன.
தினசரிகளில் தினம் தினம் வெளியிடப்படும் அதன் இடைவிடாத விளம்பரங்களே அதற்குச் சாட்சி.அரசியலைப் போலவே திரை அரசியலும் சற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். திரையும் சின்னத்திரையும் நம்மை அறியாமலேயே நம்மை, நமது இருப்பை, நமது வெறுப்பைக் கட்டமைக்கின்றன. பெரியதிரை நாட்டையும் சின்னத்திரை வீட்டையும் நன்கு கவனித்துக் கொல்/ள்கின்றன.பிறகு யாருக்கு என்ன கவலை...கண்டு ரசிப்பதைத்தவிர.திரை விமர்சனம் என்பது இங்கு குறை/நிறைகளைச் சுட்டிக்காட்டும் ஒன்றல்ல...! விளம்பரத்தின் இன்னொரு வடிவமே அது. கடும் விமர்சனத்திற்குரிய திரைப்படங்கள்தான் பெரும் வசூலை அள்ளித்தரும் என்ற சூட்சும ரகசியம் திரையீட்டாளர்களுக்குத் தெரியாதா என்ன.?அதுவும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி என்றால் சொல்லவே வேண்டியதில்லை. முதலீட்டாளர்களுக்கு நல்ல வசூல் வேட்டைதான்.
என்றைக்குத் திரைமொழி கலையாக, இலக்கியமாகப் பார்க்கப்படும் பக்குவத்தைப் பெறுகிறதோ அப்போது இந்தியத் திரைப்படங்களுக்கு நல்லதொரு விடிவுகாலம் உண்டு. போகிற போக்கைப் பார்த்தால் அப்படியொரு திரைக்கலைக்கான அறிகுறிகள் புலப்படவே இல்லை. எதிர்வரும் காலம்தான் இதற்குச் சரியான பதிலைத்தர வேண்டும். அதுவரை புலம்புவதைத் தவிர வேறுவழியில்லை. இந்த நிலையில், இன்றைக்கு நமது எழுத்து ‘மேதை’களை நாம் அணுக வேண்டியதிருக்கிறது. பணம் என்றால் பேசாத நாவும் ‘பேநா’வழியே பேசத்துடிக்காதா என்ன..? மெய்யான எழுத்து மேதைகள் மீண்டும் மீண்டு வருவார்களா, இல்லை காலவெள்ளத்தில் கடைமடைக்குப்போய்ச் சேர்வார்களா?
எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி , ஈரோடு - 3
‘இனியவையும் இன்னாதவையும்’ கட்டுரை கலைஞர் கருணாநிதி பற்றி, மிகவும் பல அரிய இலக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்களை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காட்டியது. அவருடன் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விதம் அருமை.
கோவிந்தராஜன், மின்னஞ்சல் வழி
பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கேரளம் முன் மாதிரி மாநிலமாகக் கொண்டாடப்பெற்ற சூழலில், தற்போது சில மாஃபியாக்களும் அரசியல் அடிவருடிகளும் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் எண்ணத்தோடு கிளம்பியிருப்பது வருத்தம் தருகிறது. இயற்கையைப் பாழ்படுத்தாமல் காடழிப்பு, மரக் கொள்ளை, மணல் மாஃபியாக்கள் இல்லாத மாநிலம் எனும் நற்பெயரை எடுத்திருக்கிற கேரளம், இன்று தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பெருத்த அவலம்.
சூழலியலாளர் மாதவ் காட்கிலின் அறிவுரைகளைப் பின்பற்றியிருப்பின் ஓரளவு தப்பித்திருக்க முடியும். இந்த வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான திருச்சூர், எர்ணாகுளம், செங்கனூர் போன்ற நகரங்கள் வடிகால் வழியின்றித் திணறின. எதிர்காலத்தில் சரியான வடிகால் அமைப்புகள் நிறுவுவது அவசியம் எனும் சில படிப்பினைகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது. இவ்வகவுரை தமிழகத்துக்கும் வழிகாட்டுகிறது.
நவீன் குமார் , நடுவிக்கோட்டை
‘இனியவையும் இன்னாதவையும்’ படித்தேன். நானும் கலைஞரைப் பார்த்திருக்கிறேன் (நான் தலைமைச் செயலகத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவள்) பார்க்க விரும்பியும் இருக்கிறேன். அது அவர் மீது நான் வைத்த அபிமானத்தால்தான். கலைஞர் அதிகாரிகளைப் பாராட்டி நான் கேட்டிருக்கிறேன். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மிகவும் மரியாதையுடன் கூப்பிடுவார்; நடத்துவார்.
இன்றும் சொல்லப்போனால் அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்கும்போதெல்லாம், தலைமைச் செயலகச் சங்கம் அவரை வரவேற்க ஒரு கூட்டம் போடும். சங்கத்தலைவர்கள் பேசியவுடன் கடைசியில் அந்தக் கரகரத்த குரலில், எங்களின் ஒத்துழைப்பை கேட்பார் பாருங்கள்! அடேங்கப்பா, அப்ளாஸ் அள்ளும்! வானத்திற்கே கேட்கும். கலைஞர் எளிதில் அணுகக்கூடியவர்; பெண் அதிகாரிகளைப் பெருமைப்படுத்துவார். எனக்குத் தெரிந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரைத் தலைமைச் செயலராக ஆக்கினார். மேலும் பெண் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கமாட்டார்கள் என்றும் நினைத்திருந்தார். ‘கட்டுரை எழுதிச் செலவு வைச்சிட்டே’ என்று கலைஞர் சொன்னது அவரிடம் கருணை இருந்தது என்பதைத்தானே காட்டுகிறது. ஆனால் கலைஞர் மிகவும் சிக்கனமானவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். கட்டுரையாளர் கவிஞரை, கலைஞர் மிகவும் பாராட்டியுள்ளார்; இந்தப் பாராட்டும் குணம் அவரிடம் அதிகமாகவே இருந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து; பொறுப்புத் துறப்பு எதற்கு? கட்சியிலோ அல்லது கம்யூனிஸ்டாகவோ இருக்க வேண்டியதில்லை கலைஞரைப் பாராட்ட!
ஜெ. பாலசுப்பிரமணியம் கட்டுரை 100க்கு 100 உண்மை. சாதியும் மதமும்தான் இன்றைய நிலைப்பாடு. சாதி ஒழிய வேண்டும். மதம் தனிப்பட்ட மனிதனின் விருப்பமாக வேண்டும்.
ஞா. சிவகாமி, சென்னை & 116
செப்டம்பர் மாத காலச்சுவட்டில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திரை எனும் கொல்லிப்பாவை’ என்ற கட்டுரையை மிகவும் ரசித்து வாசித்தேன். வாசிக்க வாசிக்கத்தான் அட. . . ஆமால்ல. . . என்ற வியப்புக்குறியும் என்னுள்ளே தொடராகத் தோன்றியது. சினிமா குறித்து நிச்சயம் யாரும் இதற்கு முன்பு அணுகாத கோணம் அவருடையது. சினிமா என்றாலே... எவ்வளவு பெரிய சிந்தனையாளரும் கூட வரைமுறையற்றுக் கும்பிட்டுக் குனியும்போதில் சலபதி அதிலொரு சின்னச் சலனத்தை ஏற்படுத்திவிட்டார்.
நம்மில் பலருக்கும் சினிமா என்றால் ஏன் இப்படி நேர்கிறது? நேர்மையாக அது குறித்துச் சிந்தித்தவர்கள் எத்தனை பேர்? எழுத்தாளர்களின் - சிந்தனையாளர்களின் கதியே இதுவெனில், சாதாரணர்களின் கதி என்ன? சிந்திக்கச் சிந்திக்க வெறுமையே பரவுகிறது.
இங்கு ஆரம்பம் தொட்டே சினிமா என்றால் பிரம்மாண்டம்தான்; சினிமா நடிகர்கள் கடவுள்தான்; அதன் வேறுவேறு பணியாளர்கள் குட்டிக் கடவுளர்கள், அல்லது இஷ்ட தேவதைகள். இப்படியான ஒரு தொடர்போக்கில் எழுத்தாளர்களும் மயங்கி நிற்பதில் வியப்பேதுமில்லை. சினிமாவுக்குக் கதை வசனம் எழுதி அதனால் வாழ்க்கையில் கணிசமான உயர்நிலையை எட்டிவிட்ட எழுத்தாளப் பெருமக்களின் உதாரணம் யாருடைய மனத்திலும் தேங்கி நிற்கும் அம்சம்தானே? இதில் பெருமாள் முருகன் என்ன விதி விலக்கு?
குறைந்தபட்சம் இங்கு ஒரு சத்யஜித்ரே, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற செய்ந்நேர்த்தியுள்ள கலைஞர்கள் இல்லை என்பதால், இருப்பவர்களில் திறமையானவர்களையெல்லாம் ‘ஆளுமைகள்’ என அழைத்துப் பழக்கப்பட்டு விட்டார்கள் போலும். மிஷ்கினைக் கூட ஏதோ பெரிய இயக்குநர் என்றார்கள். அவரும் நகல் எடுப்பவர்தான் என்று அறிந்ததும் என் ஆர்வம் வற்றிவிட்டது. சுவாரஸ்யத்துக்காக, வெகுஜன இயல்பைக் குறி வைத்துப் படம் எடுப்பவர்களெல்லாம் ஆளுமை என்றால், நிஜமான ஆளுமை எப்படி இருப்பார் என்றே தெரியாமல் போய்விட்டது.
புதுமைப்பித்தனின் ‘வாக்கும் வக்கும்’, என்.ஆர். தாசன் போன்றவர்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்று சொல்லப்படுகிற பாலசந்தரே இது போன்ற செயல்களைச் செய்தார் எனில், மற்றவர்கள் குறித்து என்ன சொல்ல? கட்டுரையின் இறுதி முத்தாய்ப்பு வரிகள் என் இயல்புக்கு ஏற்ப என்னை மிகவும் கவர்ந்தது. சலபதி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கே.எஸ். முகம்மத் ஷுஐப், காயல்பட்டினம்
செப்டம்பர் 2018இல் பழனி கிருஷ்ணசாமியின் ‘அசோகமித்திரனின் மானுடப்பக்கம்’ கட்டுரையில் Optimism, Pessimismஎன்கிற ஆங்கில வார்த்தைகளால் பகுத்தறிவுரீதியான கருத்தியல் ரீதியான விளாசல்களைப் பொறித்துத் தள்ளியுள்ளார். கருத்தியல் கலகத்தை உருவாக்குவது இலக்கியத்தின் நோக்கமாக இருக்க இயலாது. இன்று திரைப்படம், இலக்கியம் என எல்லாத் துறைகளுக்கும் ‘மாற்று வெளி’ ஒன்று தேவைப்படுவதை உணர்ந்தவர்கள் நாம். Alternative Space மூலம் மட்டுமே வெவ்வேறு கோணங்களின் வெவ்வேறு பார்வைகளைக் கருத்தரிக்கச் செய்வது இலக்கியத்தின் அடுத்த கட்ட நகர்வைச் சாத்தியபடுத்தவே ஒழிய கருத்தியல் போர் புரிய அல்ல? மற்றபடி வாழ்வின் நோக்கம் சார்ந்து மானிடனின் துயரங்களையும் அவலங்களையும் அசோகமித்திரன் அளவுக்குப் பதிவு செய்த எழுத்தாளர்களைக் காண்பது மிக அரிது.
அடுத்ததாக, கே.என். செந்திலின் சிறுகதையான ‘இல்லாமல் போவது’ ராஜம்மாளின் தள்ளாமை, முதுமை, தனிமை, துயரங்களின் நீட்சியோடு வாழும் ஒருவருக்கு ஏற்படுகிற இயல்பான உளவியல் சிக்கல்களைக் கதை முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு வாசகரையும் ‘இல்லாமல் போவது’ எது என்கிற கேள்விக் கணையொன்றோடு கதை நம்மை ஒன்றவைத்து விடுகிறது. இந்த உலகத்தில் மானிடரிடம் இருக்க வேண்டியது அன்பு, அரவணைப்பு, சகிப்புத் தன்மை என்பதைச் சுட்டிக்காட்டி இவை மூன்றும் இல்லாமல் போவதைத் தான் கதை கோடிடுகிறது.
காலச்சுவட்டின் வெளியீடுகளில் பிரம்மராஜனின் கவிதைகள் வெளியான காலத்தை எனது அறிவை சுடராக்கிய காலம் என்பேன். அதற்கு அடுத்ததாக தற்போது வெளிவந்துள்ள இசையின் கவிதைகள் ‘இலக்கியப் பொற்காலம்’ என அழைக்கிற பெருமையைத் தந்துள்ளது. ‘உள்ளே’ படித்தவுடன் என்னை மெய்சிலிர்க்க வைத்த கவிதை இது ஒன்றே என்பேன். கவிதையின் வீரியத்தை எனக்குள் இறக்கிய பெருமை இசையையே சாரும். டீ டம்ளர்தான். அதில் ‘டீ’ இல்லை என்பதையே டீ கடைவாசல் பதிவு செய்கிறது. புறநகரின் வெறிச்சோடிய சாலை ஒவ்வொன்றிலும் அதிநவீன சொகுசு காரின் மேல் கூரை. டீ யைத் தவிர்த்து மதுவைத் தாங்கி வரும் டம்ளரை வைக்கும் தற்காலிக மேஜையாகி விடுவதைக் கவிதையாக்கிய ஒருவர் உண்டென்றால் அவர் இசையே! பிரேம்க்குள் சிக்குண்ட மாலை நேரத் தள்ளாட்டங்களில் அதிநவீன சொகுசு காரைத்தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.
பா. செல்வவிநாயகம், சென்னை - 82
‘வெள்ளம் புகட்டும் படிப்பினைகள்’ தலையங்கம், ஒவ்வொருவரியும் பொறுப்புணர்வோடு, நேர்மையாக, உண்மையாக எழுதப்பட்டிருந்தன. ‘வரமா சாபமா’கட்டுரை தமிழாக்கம் மிக நன்றாக இருந்தது. ‘காவல்துறையைக் கண்காணித்தல்’ தமிழாக்கக் கட்டுரை தேவைகளைக் குறிப்பிட்டு அளவாக ஆக்கப்பட்டிருந்தது. ‘தேவி மகாத்மியம்’ _ சுகுமாரனின் கவிதை, ஒருமுறை படித்தாலே நெஞ்சை நெருடும் வீரியமாக ஆன கவிதை. அவரின் ‘இனியவையும் இன்னாதவையும்,’ மிக அழகாக யதார்த்தமாக ஆக்கப்பட்டிருந்தது. ‘வரலாறு விடுதலை செய்யும்’ _ மருதன் கட்டுரை காலமானோர் மேன்மையை மட்டுமே எடுத்துரைக்க வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் எழுதப்பட்டது. அரசியல் உலகில், கலைஞர் ஒரு ராஜதந்திரி. கட்சியை நடத்தியதில் ஒரு மதியூகி. தமிழ் மொழியில் அவர் ஒரு பெரும் கலைஞர். தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படவேண்டியவர். இன்று தமிழ்நாடு இலவசங்களில், காசுக்கு ஓட்டு என்று பற்பல கீழ்மைகளை நோக்கி, அதல பாதாளங்களை நோக்கிப் போனதற்கு எந்தக் கட்சி (கள்) காரணம்? ‘தலித்களுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி’ மிக நேர்மையாக வரையப்பட்ட கட்டுரை. ‘கோதைமங்கலம்’ _ நாகப்ரகாஷின் கதை சன்னமான ஒரு பள்ளிக் காதலை அதன் இயலாமைகளுடன் எடுத்துரைக்கின்றது; படிக்கத் தொய்வில்லாமல் இருந்தது. ‘அசோகமித்திரனின் மானுடப்பக்கம்’ _ பழனி கிருஷ்ணசாமி பாதியில் நின்றுவிட்ட உணர்வை ஏற்படுத்திய கட்டுரை!
ஸ்ரீமதி,சென்னை - 37
தனது கட்டுரையில் இரண்டு இடங்களில் தான் கருணாநிதியின் அபிமானி அல்ல என்பதை சுகுமாரன் சுட்டிக்காட்டுகிறார். அது அவரது உரிமை. அதே சமயம், தனது கட்டுரைகளில் ஒன்று “கலைஞரின் கவனத்திற்குச் சென்றதைப் பெருமிதமாக உணர்ந்தேன்; இப்போதும் உணர்கிறேன்” _ என்று எழுதுகிறார். அது மட்டுமல்லாது, நீண்ட இடைவெளிக்குப்பின் தம்மை நினைவு கூர்ந்து ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதச்சொன்னதைக் கலைஞர் விசாரித்தபொழுது ‘பூரிப்புடன் தலையசைத்தேன்’ என்றும் பதிவிடுகிறார். மற்றுமொரு தருணத்தில் “பத்திரிக்கைக்காரன் வெட்கப்படக்கூடாது” என்று அவர் கூறியதும் “அவரைக் கைகுவித்து வணங்கியது ஏன் என்று இன்றுவரையும் விளங்கவில்லை” என்று சுகுமாரன் குறிப்பிடுவதுடன் “ஆறு ஆண்டு காலம் பார்த்து பார்த்து அவர் மீது தன்னியல்பாகவே ஓர் ஈடுபாடு உருவானது. அது அவரது ஆளுமையையொட்டி உருவானதே”... என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இதை முரண்பாடு என்று கருதுவதை விட கட்டுரை ஆசிரியரின் உள்மன வெளிப்பாடு என்றே கருத வேண்டும்.
அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, கலைஞர் மீது பலருக்கும் மறைக்க இயலாத ஈர்ப்பு உருவாகி இருந்தது என்பது எவ்வளவு எதார்த்தமானதோ, அதேபோன்று இக்கால அரசியலின் காற்றுத் திசைவேகங்களைக் கணக்கில் கொண்டு அவர் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் எடுத்த அரசியல் முடிவுகள்தான் அவரது கட்சியையும், அதன் பல்வேறு தாக்கங்களையும் இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதும் எதார்த்தமானதே!
கலைஞர் கருணாநிதியின் நீண்ட அரசியல் பயணத்தில், அவர் தவறுகளுக்கே முற்றிலும் அப்பாற்பட்டவர் என்று யாரும் வாதிட இயலாது. அதே சமயம், அவரது ஆரம்ப காலத்திலிருந்தே தமிழகத்தை முன்வைத்து மாநில உரிமைகளுக்காக அவருக்கே இயல்பான உத்வேகத்துடன் வாதிட்டு வென்று _ தோற்ற வரலாறுகளும் உண்டு. இத்துடன் நின்றுவிடாது, தாய்மொழி மீதும் தமிழ் இலக்கியக் கலாச்சாரங்கள் மீதும் தீராத தாகமும் ஈடுபாடும் கொண்டு விளங்கியதும், தொடர்வினை ஆற்றியதும் தமிழகம் நன்கறியும். இதனையே “கலைஞரின் எண்பதாண்டுகாலப் பொது வாழ்வைத் தமிழக அரசியல் வரலாற்றிலிருந்தும் தமிழக மக்களின் சமூக கலாச்சார வரலாற்றிலிருந்தும் பிரித்து விட முடியாது” எனக் கட்டுரையாளர் மருதன் மெத்தச் சரியாக மதிப்பீடு செய்துள்ளார்.
சி. பாலையா, புதுக்கோட்டை