இற்று வீழும் வளையங்கள்
குணநலன், குறிக்கோள், பண்பாடு, அறிவு ஆகிய முதன்மைக்கூறுகளை முறையாகக் கட்டமைக்க உதவுவதே கல்வி. அடிப்படைக் கல்வியோடு அறம், தலைமைப் பண்புகள், திறமைகளைக் கண்டறிதல் ஆகியவையே பள்ளிகளின் பணியாகக் கருதப்படுகிறது. கற்றல் என்பது சுதந்திரமான செயல்பாடு. ஆசிரியர் கற்றலைத் தூண்டுபவர் மட்டுமே. 5 வயது முதல் 17 வயதுவரை மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றனர். அவர்களைச் சமூக மனிதராக மாற்றுவதற்குப் பள்ளிகள் ஆசிரியரையே சார்ந்திருக்கின்றன.
இன்றைக்குக் கற்றல் - கற்பித்தல் குறித்த பார்வை வெகுவாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் கற்பித்தலில் நவீன முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பிற துறைகள் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு வளர்ந்துள்ள நிலையில், கல்வித்துறையில் மிகக் குறைவான மாற்றங்களே நிகழ்ந்துள்ளன.
விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்துவிட்டன. கல்வி நம் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகியிருக்கிறது. தரமான கல்வி