குல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்
அன்பின் புத்தகத்தில் அது எழுதப்பட வேண்டும்
அதற்கு மேலான புத்தகத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை
எனது பெயரை அழித்து விடு அல்லது நீ விரும்பியபடி எழுது
அன்பின் புத்தகத்தில் நான் எழுதப்பட வேண்டும் என்பது விருப்பம்.
-உமர் கய்யாம்
(குல்தீப் நய்யாருக்குப் பிடித்த கவிதை)
இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளின்போது நேரடியாகப் பார்த்து எழுதிய குல்தீப் நய்யாரின் விமர்சனப் பதிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கூப் என்று சொல்லப்படுகிற எல்லோருக்கும் முந்தி அவர் தந்த நம்பகமான செய்திகள் அவரைத் தனித்துவம் மிக்க பத்திரிகையாளராக அடையாளம் காட்டின. அரசியல் போக்குகள் குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய செய்திகளைச் சொல்வதற்காக அரசியல்வாதிகள் அவரை அணுகினார்கள். இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்றவர்களை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இந்த அளவுக்கு வாய்ப்புப் பெற்ற பத்திரிகையாளர் எவரும் இருக்க மாட்டார்கள். அரசியல் தலைவர்களின் நெருக்கமானது, தனித்துவமிக்க செய்திகளை எல்லோருக்கும் முந்தி பெறுவதற்கும், கிடைத்த செய்திகளைச் சரிபார்க்கவுமே உதவியிருக்கிறது. அதனை மக்களுக்காக மக்களிடம் கொண்டு சேர்க்கத் தனது எழுத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அதேசமயம், சுயநல நோக்குடன் அந்த அரசியல் தலைவர்களுக்குச் சாதகமாக எழுதியிருப்பதை அவரது செய்திகளில் பார்க்க முடியாது. மக்களின் பார்வையில் பிரச்சினைகளை அணுகி, அவற்றைச் செய்திகளாக்கியவர் அவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அருண்சோரி, சண்டே எம்ஜே அக்பர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பிரீதீஷ் நந்தி போன்ற பிரபல பத்திரிகையாளர்கள், பிற்காலத்தில் அரசியல் கட்சிகளோடு தங்களை இணைத்துக் கொண்டு பயன் பெற்றவர்கள். அவர்களிலிருந்து விலகித் தனித்து நிற்கிறார் குல்தீப் நய்யார்.
பாகிஸ்தானில் கவிஞர்கள் முகம்மது இக்பால் பெய்ஸ் அகமது பெய்ஸ் ஆகியோர் பிறந்த சியால்கோட்டில் பிறந்தவர் குல்தீப் நய்யார். பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து தில்லிக்கு வந்தவர். படித்தது லாகூரில் சட்டப்படிப்பு. ஆனால், இந்தியப் பிரிவினை அவரது வழக்கறிஞர் ஆசைக்கு அணைபோட்டுவிட்டது. தில்லிக்கு வந்த அவருக்கு அஞ்சம் என்ற உருது நாளிதழில் வேலை கிடைத்தது. அஞ்சம் என்றால் முடிவு என்று அர்த்தம். ‘முடி’விலிருந்து அவரது பத்திரிகைப் பணி ஆரம்பித்தது. அப்போது வயது 22.
அந்தப் பத்திரிகையில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. வஹாதத் என்ற மாலை பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தியாவில் உருது பத்திரிகைக்கு எதிர்காலம் இல்லையென்று கூறி ஆங்கிலப் பத்திரிகையில் அவரைச் சேரச் சொன்னது சுதந்திரப் போராட்ட வீரரும் கவிஞருமான மௌலானா ஹஸ்ரத் மொஹானி. அதையடுத்து, அமெரிக்காவில் இவான்ஸ்டனிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இதழியலில் எம்எஸ்சி பட்டம் பெற்றார். பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. நேரு அமைச்சரவையில் இருந்த கோவிந்த் வல்லபந்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியின் செய்தித் தொடர்பாளரானார். நேரு மரண மடைவதற்கு முன் அந்த வேலையிலிருந்து விலகி, யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியராக இருந்தார். அதையடுத்து ஸ்டேட்ஸ்மேன் நாளிதழின் தில்லி பதிப்பு ஆசிரியராக இருந்தார். அதையடுத்து கோயங்காவின் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1980களில் பிரிட்டிஷ் ஹை கமிஷனராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, உறுப்பினர் நிதியைக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுத் திட்டங்களுக்கென ஒதுக்கினார்.
1980களுக்குப் பிறகு எந்த பத்திரிகையிலும் அவருக்கு முழு நேர வேலை வழங்க யாரும் முன்வரவில்லை. இது குறித்து அவரே பதிவு செய்திருக்கிறார். அதனால் அவரது பத்திரிகை எழுத்துப் பயணம் அத்துடன் முடிந்து விடவில்லை. ‘ஙிமீtஷ்மீமீஸீ tலீமீ லிவீஸீமீs’ என்ற பிரபலமான பத்தி எழுத்து மூலம் வாசகர்களுடன் சாகும்வரை தொடர்புகொண்டிருந்தார். ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் சுமார் 80 பத்திரிகைகளில் அவரது பத்திக் கட்டுரைகள் வாரந்தோறும் வெளியாகி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவருக்கென தனி வாசகர் கூட்டத்தை உருவாக்கியது. அவரது அரசியல் கருத்துகளோடு முரண்பட்டவர்களைக்கூட, அவர் என்ன சொல்கிறார் என்று படிக்க வைத்ததில்தான் அவரது வெற்றி அடங்கியிருக்கிறது.
“தெரிந்தோ தெரியாமலோ கொள்கை வகுப்பாளர்கள் வகுக்கும் முடிவுகளை மக்களுக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளுக்கும் அவர்களது அதிகாரிகளுக்கும் விளக்கியிருக்கிறேன். நான் எல்லாரையும் சந்தோஷப்படுத்தியிருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால் என் மனச்சாட்சிக்கு உகந்தபடி நடந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய பார்வையில் மக்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம். நான் அவர்களுக்கு உறுதியாகச் சொல்வதெல்லாம் இதுதான். நான் என்ன நினைத்தேனோ அதைத்தான் எழுதியிருக்கிறேன். யாருக்கும் பயந்தோ, யாருக்கும் சாதகமாகவோ எழுதியதில்லை” என்று தனது ‘ஸ்கூப்’ புத்தக முன்னுரையில் எழுதியிருக்கிறார் குல்தீப் நய்யார்.
பஞ்சாபியும் உருதும் தெரிந்த குல்தீப் நய்யார், தொடக்கத்தில் நிருபராக இருந்து பத்திரிகை ஆசிரியராகவும் உயர்ந்தவர். இந்திய விடுதலைக்கு முன் காந்தியின் மரணத்திலிருந்து, அகில இந்திய அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்து செய்தியாக எழுதும் வாய்ப்புப் பெற்றவர். இந்த அளவுக்கு வாய்ப்பு கிடைத்த பத்திரிகையாளர்கள் யாரும் இருப்பார்களா என்பது சந்தேகமே.
அஞ்சம் பத்திரிகையில் பணிபுரிந்தபோதுதான், மகாத்மா காந்தி சுடப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று அந்தச் செய்தியை எழுதினார். Ôமகாத்மா காந்தி என்று அழைக்கப்பட்ட மனிதர் தற்போது உயிருடன் இல்லை. நாதுராம் கோட்ஸே என்ற இந்து வெறியன் அவரைக் கொன்றுவிட்டான். அதற்கு மேலும் அவன் ஒரு காரியத்தைச் செயதிருக்கிறான். மதத்தின் பெயரால் வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட முயன்றிருக்கிறான். . .” இப்படி செல்கிறது அவரது ரிப்போர்ட். அவரை உலுக்கிய இந்தச் சம்பவம் பத்திரிகைப் பணியிலேயே அவரைத் தொடர்ந்து இருக்கவைத்ததாகக் கூறியிருக்கிறார்.
‘இந்துக்களும் முஸ்லிம்களும் என் இரு கண்கள்’ என்ற காந்தியின் வார்த்தைகளை உண்மையாக்க எத்தனை காலம் பிடிக்குமோ என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கப் பாடுபட்டார். 1999இல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பின் பேரில் லாகூருக்குச் செல்லும் பேருந்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் செல்லும் குழுவில் இடம் பெற்றவர் குல்தீப் நய்யார். இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வாஹா எல்லையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் (பாகிஸ்தான், இந்திய சுதந்திர தினங்கள்) மெழுகுவத்தி ஏற்றிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1992இல் பன்னிருவருடன் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு, 2011இல் ஒரு லட்சம் பேர் வரை திரண்டனர்.
பத்திரிகை எழுத்துகள் மூலம் பாகிஸ்தானிலும் நன்கு அறிமுகமான குல்தீப் நய்யார், அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையேயுள்ள நட்புறவின் அவசியத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பின்புலமாக இருந்திருக்கிறார். இந்திய விடுதலையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஜலீல் அகமது கானுடன் இணைந்து இரு நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்த முயன்றார். எல்லை கடந்து மீன் பிடித்ததற்காக தண்டனை காலம் முடிந்த பிறகும் இரு நாடுகளிலும் சிறைச்சாலைகளிலும் இருக்கும் மீனவர்களை மீட்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டவர்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிந்திய கால கட்டம், நேரு மரணத்திற்குப் பிறகு பிரதமராக சாஸ்திரி தேர்வு, இந்திய பாகிஸ்தான் யுத்தம், அதைத் தொடர்ந்து வங்கதேசம் விடுவிப்பு, தாஷ்கண்ட் ஒப்பந்தம், தாஷ்கண்டில் சாஸ்திரியின் மரணம், புதிய பிரதமராக இந்திராகாந்தி தேர்வு, இந்திரா ஆட்சிக் காலத்தில் அவசரநிலைப் பிரகடனம், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது, மீண்டும் இந்திரா ஆட்சியைப் பிடித்தது, இந்திராவின் மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமர் பதவிப் பொறுப்பேற்பு, ராஜீவ் மறைவுக்குப் பிறகு நரசிம்மராவ் பதவியேற்பு, பிறகு மன்மோகன் சிங், மோடி ஆகியோரது ஆட்சிக் காலம்....இப்படி நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் எழுதியிருக்கிறார்.
பத்திரிகைத் தணிக்கை முறை அவசர நிலை காலத்தில் நாட்டிலிருந்த பெரும் பாலான பத்திரிகைகள் அடக்கு முறை களுக்குப் பயந்து ஆளும்கட்சிக்கு ஊதுகுழலாகத் திகழ்ந்த காலத்தில், ‘பத்திரிகைத் தணிக்கை அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது, என்றும் அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்குக் கடிதம் எழுதியவர். பத்திரிகைத் தணிக்கை முறை அமலில் இருந்தபோதும்கூட, இந்திரா காந்தியை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அவரது பெயரைக் குறிப்பிடாமல் ‘வேண்டாம் மிஸ்டர் புட்டோ, வேண்டாம்’ என்ற கட்டுரையை எழுதினார். ஜார்ஜ் வாஷிங்டனை மேற்கோள் காட்டி சுதந்திரம், ஜனநாயகத்தின் பெருமைகளைச் சொல்லும் விதமாக அமெரிக்க சுதந்திரதினத்தைப் புகழ்ந்து எழுதப் பட்ட கட்டுரையும் வெளியானது. இவரது கட்டுரைகள் வெளியிடப்படுவதற்குத் தடை விதித்த, அன்றைய அரசு, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணிபுரிந்த குல்தீப் நய்யாரைக் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்தான். அக்காலத்தில், பத்திரிகைத் தணிக்கை முறைக்கு எதிராக அவர் காட்டிய உறுதி இன்றைக்கும் பத்திரிகையாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
1980களில் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறுத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து அதற்கான பத்திரிகை யாளர் போராட்டங் களை முன்னெடுத்தவர். பத்திரிகை நிறுவனங்களில் வெளிநாட்டுப் பங்கு மூலதனம் 26 சதவீதம் வரை இருக்கலாம் என்ற மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்தார். ஜனநாயகத்துக்குக் கருத்துச் சுதந்திரம் அவசியம் என்பதால் அதற்காக எப்போதும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. மனித உரிமைகளுக்காகவும் அவ்வகைப் போராட்டங்களுக்காகவும் தொடர்ந்து எழுதியதுடன் அதற்காக நேரில் களத்திலிறங்கிய சம்பவங்களும் உண்டு. ஜனநாயகத்திலும் சமூக நல்லிணக்கத்திலும் மதச் சார்பின்மையிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் அவர் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டதை அவரது எழுத்துகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
அவசர நிலை காலம் முடிவுக்கு வரப் போகிறது என்றும் தேர்தல் வரப்போகிறது என்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதியது அன்றைய பரபரப்புச் செய்தி. அவர் எழுதிய சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ. கானுடனான குல்தீப் நய்யாரின் பேட்டி, லண்டனிலிருந்து வெளிவரும் தி அப்சர்வர் இதழில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது என்ற தகவலை வெளிக்கொண்டு வந்தது. இதுமாதிரி, அவரது தனித்துவம் மிக்க, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, எல்லோருக்கும் முந்தித் தந்த பல கட்டுரைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரது ‘ஸ்கூப்’ என்ற புத்தகத்திலும் ‘பியான்ட் தி லைன்ஸ்’ என்ற அவரது சுயவரலாற்று நூலிலும் அவரது பத்திரிகையுலக அனுபவங்கள் விரிவாகப் பதிவு பெற்றுள்ளன. செய்திகளை எப்படி கண்டறிந்து, அது குறித்த தகவல்களைச் சரிபார்த்து எப்படி வெளியிடுவது என்பதையும் தகவல்களை யூகத்தின் அடிப்படையில் சரிபார்க்காமல் வெளியிடக் கூடாது என்பதையும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உண்மையிலேயே நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் எல்லோரும் முந்தி செய்திகளைத் தருவதற்கு என்ன பாடுபட வேண்டும் என்பதையும் செய்திகளின் நம்பகத்தன்மை முக்கியத்துவத்தையும் இந்தப் புத்தகங்களைப் பார்த்து இதழியல் மாணவர்கள் புரிந்துகொள்ளலாம். இவற்றைப் படிக்கும்போது, இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்வுகளை நேரில் பார்த்ததுபோல இருக்கும். ஒருமுறை அமைச்சரவைக் கூட்ட நிகழ்வைப் பற்றி இவர் எழுதியிருந்ததைப் பார்த்து, அவரே அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதைப் போல எழுதியிருக்கிறார் என்று வாய் பிளந்து நின்றனர். அரசியல் சதுரங்கத்தில் எப்படியெல்லாம் காய் நகர்த்தப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் அந்த நிகழ்வுகளின் பின்புலத்தில் மறைமுகமாக நிகழ்ந்த வெளிவராத பல செய்திகளையும் இந்தப் புத்தகங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.
வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவா தத்துவங்களைத் திணிப்பதைவிட, வளர்ச்சியிலும் நல்ல ஆட்சி தருவதிலும் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது கடைசிக் கட்டுரையில் கேட்டுக்கொண்டார். அகதிகளா அல்லது வாக்கு வங்கிகளா என்ற அந்தக் கட்டுரையை எழுதியபோது அவருக்கு வயது 95. இக்கட்டுரையை எழுதிய சில மணி நேரங்களிலேயே அவரை மரணம் தழுவியது. எழுபது ஆண்டு காலத்துக்கு மேலாக நம்மைப் பற்றிய, நம்மைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகளைப் பற்றித் தொடர்ந்து எழுதியவர் இனி இல்லை. வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா சொல்வதைப் போல, பணத்துக்காவும் புகழுக்காவும் இல்லாமல் மனசாட்சி சொல்வதைத் கேட்டு நடந்தவர் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார். குல்தீப் நய்யார் நமது காலத்தின் குரல். அவரது மறைவுக்குப் பிறகும் அவரது மனசாட்சியின் குரல் பத்திரிகைகளின் பக்கங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மின்னஞ்சல்: pondhanasekaran@yahoo.com