ஜனவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேர்களை அறுக்க முடியாது
      பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
      ஓமைக்ரானை வரவேற்கலாமா?
      நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
      கல்வியைத் தொற்றிய கொரோனா
      கல்வி இனி?
      அழிவின் தொடக்கத்தில்
      தமிழ் சினிமா எனும் மாமத யானை
      நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
      மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
      கெம்பின்ஸ்கி ஹோட்டல்
      உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
    • கதை
      நான் கொன்ற பெண்
      நிலவுண்ணும் மண்
      அத்தாட்சி
      ஈர்ப்பு விசை
    • சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
      இயற்கையும் எழுத்தும்
      நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
      கிருஷ்ணனும் அவர் காமிராவும்
      மகராசாவின் வெள்ள நாக்குட்டி
      கிருஷ்ணனின் செய்தி
    • உரையாடல் : கணேஷ் தேவி-டேவிட் ரீச்
      நாம் ஹரப்பனின் குழந்தைகள்
    • பத்தி
      கடைசிப் பக்கங்கள்
    • புத்தகப் பகுதி
      எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
      சுகிப்பும் எதிர்ப்பும்
      உண்மையான காதலன்
      தமிழும் அறபும்
    • வினோத் துவா (1954 - 2021)
      காட்சி ஊடகத்தின் முதல்வர்
    • 25 (1996 - 2021) ஆண்டுகள்
      25 (1996 - 2021) ஆண்டுகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ஊடகம் - அரசு - நீதி
    • அசாமியக் கவிதைகள்
      சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
    • ஞானபீட விருதுகள்
      நீல்மணியும் மாஸோவும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2022 புத்தகப் பகுதி சுகிப்பும் எதிர்ப்பும்

சுகிப்பும் எதிர்ப்பும்

புத்தகப் பகுதி

சுகிர்தராணி கவிதைகள்
(1996  - 2016)
ரூ. 375

சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி கார் (Rupi Kaur) எனும் பஞ்சாபி – கனடியக் கவிஞரின் கவிதா நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நான் வாழ்கிற தொறன்ரோ நகரிலிருந்து அவர் நிகழ்வு நடந்த இடம் அவ்வளவு தொலைவு அல்ல. ரூபி கார் இளையவர். ‘இன்ஸ்டா கவிகள்’ (Insta Poets) என்று வழங்கப்படும் பல கவிகளைப்போல இன்ஸ்டாகிராம் மூலம் உலகின் கவனம் பெற்றவர். அவருடைய கவிதை நூல்கள் ஐந்து மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றிருக்கின்றன. அவருடைய கவிதைகள் ஆழமற்றவை. வலியையும் குருதியையும் இளந்தலைமுறையின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்று சொல்லிக் கிள்ளுபவை. இன்ஸ்டாகிராமில் மாதவிடாய்க் குருதிப் படிவோடு அவர் வெளியிட்ட அவருடைய படம் இருமுறை நீக்கப்பட்டாலும் பின்னர் வெளியிடப்பட்டது. அப்போது அவர் பல்கலைக்கழக மாணவர். பெண்மையின் நுண்வலிகளைப் பொதுவெளியில் பேசவைப்பது அவருடைய எண்ணமாக இருந்தது. (அவருடைய கவிதைகள் சில நர்மதா குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காவிரி இணையச் சிற்றிதழில் வெளியாகியுள்ளன.)

நிகழ்வில் அவருடைய கவிதைகள் ஏமாற்றம் தந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனினும், அவர்  கவிதைகளை நிகழ்த்துகிற / வாசிக்கிற முறை, இதுவரை கவிதைப் பக்கமே எட்டிப் பார்த்திராத புதிய இளைய தலைமுறையை அவர் ஈர்க்கிற பாங்கு, நவீன காட்சித் தொழில்நுட்பங்களுடனும் நிறங்கள், செழித்த ஆடைகள், மேடைகளுடனும் அவரது வெற்று வார்த்தைத் திரட்டுகள் பெறும் கவர்ச்சி, மிகுந்த அவதானத்துக்குரியது என எனக்குத் தோன்றியது. செவிநுகர் கனிகளாக இருந்த கவிதைகள் பிற்பாடு காட்சிக்கும் கட்புலக் கலையாக்க நெறிக்கும் என மாறி, இப்போது  இவையிரண்டோடு ஓவியங்கள், கணினிக் கலை போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களும் கலந்து ஆக்கப்படும் புதிய உயிரியாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தினது அழகியல், அரசியல், இலக்கிய  வீச்சு எப்படிப் பரிணாமம் அடையும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கவிதையை நிகழ்த்துவதில் உணர்வுற மொழிவதில் சுகிர்தராணியும் வல்லவர் எனினும் சுகிர்தராணியின் கவிதைகளுக்கும் ரூபி காரின் கவிதைகளுக்கும் இடையே ஒரு பெரும்பாலை இருக்கிறது. ஏன் ரூபி காரின் கவிதைகளை இங்கு சொல்ல நேர்ந்தது என்பதை  நான் விளக்க வேண்டும்.

நிகழ்வில் ரூபி கார் வாசித்த, நிகழ்த்திய கவிதையொன்றின் தலைப்பு: ‘The Orgasm’ (புணர்வின் பெரு உச்சம்) என்னும் கவிதை. கவிதை இதோ:

“It was as though
Someone had slid Ice cubes
Down the back of my Shirt”

“யாரோ என் சட்டைப் பின்புறத்துள் 
பனிக்கட்டிகளை நழுவவிட்ட
மாதிரி இருந்தது
அது.”

காம உச்சத்தை உறைபனிக் கட்டிகளுடன் சேர்த்துப்பார்க்கிற சிக்கலும் தவிப்பும் எதிர்ப்பும் அனுபவங்களாகச் சாத்தியம் எனப் புரிந்துகொள்ள முடியும். 

அந்தக் கவிதையைக் கேட்டபோதுதான் காமத்தையும் சுகிப்பையும் அவற்றின் செழிப்பையும் நேரடியாகவும் ஆனால் வெறும் சொற்களால் மட்டுமே திறந்துவிட முடியாத மந்திர வாயில்களூடாகவும் சுகிர்தராணி தன் கவிதைகளூடாக எம்மை அழைத்துச்சென்ற கவிதைகள் பல நினைவில் எழுந்தன. என்னுடன் கூடவந்தவர் கனடாவின் ஆங்கிலப் பத்திரிகையாளர். இலக்கிய விமர்சனமும் அவ்வப்போது  கவிதைகளும் எழுதுபவர். கனடிய இலக்கிய உலகில் மதிப்பார்ந்த இடத்தில் இருப்பவர்.

“என்ன இது? இதெல்லாம் கவிதையா? ஆச்சரியமாக இருக்கிறதே” என மிகுந்த விசனப்பட்டார். அப்போதுதான் சுகிர்தராணியின் காமத்/தீ/பூ/-க்கள் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்த நேர்ந்தது.

குருதி படர்ந்த வாய், எரிமலையின் பிளந்த வாய், இயற்கையே உடலாகும் அதிசயம், விருட்சமாகும் முலைகள், மயிர்க் கால்கள் சிலிர்க்கும் தோல் என ஏராளமான படிமங்களும் காட்சிச் சிதறல்களும் கொட்டிக் கிடக்கும் சுகிர்தராணி கவிதைகள் பற்றி அன்று ஒரு நீண்ட உரையாடல் தொடர்ந்தது. சுகிப்பின் வண்ணங்களும்  வடிவங்களும் தன்னிலை இழக்காமல் துய்க்கும் துணிவும் எவ்வளவு முக்கியமானது என, சுகிர்தராணி கவிதைப்படுத்தியிருக்கிறார் என்று நான் நண்பருக்குக் கூறினேன்.

இந்த முன்னுரையை எழுதத் தொடங்குகிறபோது அந்த நாள் நினைவு மேலெழுந்தது. ரூபியையும் சுகிர்தராணியையும் ஒப்பிடுவது அல்ல என் எண்ணம்.

சுகிர்தராணியின் கவிதைகளை மீளவும் வாசிக்கிறபோது அவற்றில் வெளிப்படுகிற கவிக் குரலும் நுண்ணுணர்வும் சீற்றமும் பிழைகாணில் பொறாத உள்ளக் கிளர்ச்சியும் ஈழக் கவிதைகளையும் – குறிப்பாக ஈழப் பெண்கவிகள் பலரையும் – எனக்கு நினைவூட்டின. அவருடைய கவிதைகள் எதிர்ப்புக் கவிதைகள். சிலவேளைகளில் கட்டுப்படுத்தப்பட்ட கோபமும் சிலவேளைகளில் உக்கிரம் தெறிக்கும் கோபமுமென மாறிமாறி வீசுபவை.

“குருதியையும் அழிப்பையும் கண்ணீரையும் வெஞ்சினத்தையும் மட்டுமே திருப்பித்திருப்பி எழுதுகிறார்களே, நமக்கு அது சலித்துப்போய்விட்டது” என்று முணுமுணுக்கிற விமர்சனக் குரல்களை நாம் கேட்கிறோம். தமிழ்நாட்டிலும் தலித் மக்களின் குரலும் அனுபவமும் அவைதாம் என்பதையும் அவற்றின் விளைவான, ‘அஞர்’ -தலைமுறைகளாகத் தொடர்ந்தும் தரும்  தீராத அகவலியைத் கருத்தில் கொள்வதில்லை. ‘கொலையும் செய்வாள் பறைச்சி’ என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. தமிழில் அரசியல் கவிதைகள் என்று பேசுகிறபோது சுகிர்தராணியின் கவிதைகளை விட்டுவிட்டுப் பேசமுடியாது. கட்சி அரசியல் சார்ந்து எழுதப்பட்ட கவிதைகள் சில  ‘தமிழின் முதலாவது அரசியல் கவிதை’ எனக் கொண்டாடப்பட்ட நிலை தமிழக இலக்கியச் சூழலில் சில தரப்பினரிடையே நிலவியது. ஆழமும் அறமும் சார்ந்து எழுதப்பட்ட சுகிர்தராணியின் கவிதைகளை நாம் அவற்றுடன் ஒப்பிட முடியாது. ஈழ இனப்படுகொலையின் பாதிப்பில் அவர் எழுதிய, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘இன்னுமொரு விதை’, ‘காட்டு வேர்’, ‘இசைப்பிரியா’ போன்ற கவிதைகள், படைப்பாக்கமும் அரசியலும் பிழையற இணைந்த உணர்வுத் தோழமையுடன் எழுதப்பட்ட சிறப்பான கவிதைகள் எனக் கருதுகிறேன். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவருடைய சினத்தைப் பெண்ணியத்துக்குள்ளும் பெண்ணியல்சார்ந்த முனைப்புகளுக்குள்ளும் மட்டுமே குறுக்கிவிடத் தேவையில்லை. உடல் என்பதே அரசியல்தான். வர்க்கம், பாலினம், உழைப்பு, பாலியல்பு, ‘இனம்’ ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் உடலே மையமாக இருக்கிறது.

பெண்ணாகவும், ‘பறைச்சி’ என ஒடுக்கப்பட்ட பெண்ணாகவும் இருக்கிற கவிஞர் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட பெண்களைப்போலவே, எந்தக் கணமும் நொறுங்கிவிடக்கூடிய அல்லது நொறுக்கப்படக்கூடிய உள்ளார்ந்த அனுபவத்தையும் வாழ்வையும் கொண்டவர். சமூக விஞ்ஞானங்களிலும் புதிய இலக்கிய ஆய்வுகளிலும் இதனை நாம் Embodied Vulnerability என்று பயன்படுத்துகிறோம். அது எழுப்பும் அரசியல் வேறு. அந்த அனுபவம் தரும் இலக்கியப் பரிமாணம் வேறு. அதுதான் சுகிர்தராணியின் கவிதையின் அடித்தள ஒலியாக இருக்கிறது. அதனால்தான் “காயத்துடன் இருக்கிறது என் கவிதை”  எனவும் எப்போதும் “அதிர்ந்து கொண்டிருக்கிறது எங்கள் சதை” எனவும் எழுதுகிறார் அவர். அந்தத் தளத்திலும்  எதிர்ப்பு அரசியலின் மொழியும் மொழிகையுமே  சுகிர்தராணியின் கவிதைகள் என்பது என் எண்ணம்.

அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்து இப்போது அவர் எழுதுகிற கவிதைகள்வரை  கூர்ந்து வாசிப்பவர்களும் சுவைஞர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். கவிஞரின் அனுபவங்களும் சிந்தனைகளும் வெளிப்பாட்டு முறைமையும் மொழியின் வழியும் எவ்வாறு மாறியும் புடமிடப்பட்டும் வந்திருக்கின்றன என்பதுதான் அது.  ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ எனும் அம்பையின் படிமம் கிளர்த்திய அதிர்வைச் சுகிர்தராணி, ‘முதுகின் மேலொரு வீடு’, ‘முதுகின் மேலொரு சேரி’ என இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறார். ‘பதினான்கு அம்புகள்’ என்ற கவிதையில் இராமனை நோக்கி மட்டுமல்ல, ஆண்களை நோக்கியும் அவர் வீசுகிற கொள்ளிக் கணை ஒப்புவமை அற்றது.

அவருடைய அகக் கவிதைகள் அகத்திணைக் கவிதைகள்தான். முகமற்ற நாயகர்கள், பெயரற்ற உறவு, புனைவுகளாலும் அனுபவங்களாலும் ஒளி கசிய மறைக்கப்பட்ட நளிர்மிகு வரிகள். அவற்றோடு  கூடவே பிரசவத் தழும்புகள் அரசியல் நுண்வரலாறாக மாறும் புதிய படிமங்கள். அவருடைய சுகிப்பும் ஒருவழிப்பாதையாக ஒளிரும் தருணங்களையும் அவர் இந்தத் தொகுதியில் ஆங்காங்கே நளினமாகத் தூவியிருக்கிறார். இருளின் நிழலில் ஒருவழித் திளைப்பையும், நிராகரிப்பின் துயரில் விளையும் கவிதைகளிலும் கலவியின் வாசனையை அலையவிடுகிறார் கவி. விரகத்தால் நெய்யப்பட்ட இரவாடைகளின் மொழி எப்படி இருக்கும் என்று சுகிப்பும் சுவைப்பும் தெரிந்தவர்களிடம் மட்டுமே கேட்க முடியாது என்பதை எம்மிடம்  “இரத்தம் பிசுபிசுக்கும் மொழியில்” காதோடு சொல்பவர் கவி சுகிர்தராணி.

பிழை காணில் பொறாத உள்ளம்கொண்ட சுகிர்தராணியின் கவி நெஞ்சிலிருந்து பிறப்பவை பெண்களுடைய தளை நீக்கமும் மானுடம் சுடரும் விடுதலையும் எதிர்ப்பும். 

அவற்றால் விளைந்த கவிதைகள்  நமக்குப் பெருங்கொடை.

நூல் முன்னுரையிலிருந்து

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.