
உண்மையான காதலன்
எனது ஆண்கள்
(தன்வரலாறு)
நளினி ஜமீலா
தமிழில்: பா. விமலா
ரூ. 190
நான் வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலாளி ஆனவள் அல்ல. ஆனால், பாலியல் தொழிலாளி என்று வெளியே தெரியவந்ததும் நான் தீர்மானித்தது அல்ல; துரோகத்தால்தான். ஆண் எந்த அளவிற்கு அழகும் இனிமையும் உடையவனாக இருக்கமுடியும் என்றும் அதேநேரம் எந்த எல்லை வரை குரூரம் காட்ட முடியும் என்றும் முதல் வாடிக்கையாளனில் இருந்தே நான் அனுபவித்து அறிந்தேன். இல்லையென்றால் கால்கேர்ள் என்ற பதவியில் வெளியே தெரியாமல், பிரச்சனைகள் இல்லாமல் தொடர்ந்து சென்றிருப்பேன். தெருவில் நிற்க வேண்டுமென்றால் நல்ல வலிமை வேண்டும். அது மோசமானது என்று நான் சொல்லவில்லை. நான் தெருவிலிருந்து எப்போதுமே ஓடிஒளிந்திருக்கிறேன். அன்றும் இன்றும் எனக்கு அது பயம்தான்.
முதன்முதலாக ஒரு போலீஸ்காரனுடன்தான் சென்றேன். ஒருத்தனுடன் சென்றால் ஐம்பது ரூபாய் கிடைக்கும். பத்து நாளைக்கு அதை வைத்து என்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றலாம். பத்து நாள் கழித்து இதைப்பற்றி யோசித்தால் போதும் என்பதே அன்று என்னுடைய கணக்கு.
அன்றைய இரவு ராம நிலையத்தில் (அன்று அது நாடகாலயம்) போனபோது எனக்கு எப்படிப்பட்ட ஆள் வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கசவு முண்டும் துண்டும் எல்லாமுமாக வருகின்ற நாயர்களையும், நம்பூதிரிகளையும் நாங்கள் மரியாதையோடுதான் பார்த்திருந்தோம். ஈழவ சமூகத்தில்தான் என்னுடைய பிறப்பு. இங்கே, அந்நிலையில் உள்ள ஒரு ஆள் உண்டு என்னுடைய படுக்கை அறையில் என்னோடு சேர்ந்து, என்னுடைய விருப்பத்திற்கு, என் உடலை விரும்பி, சேர்ந்து உண்பதும் குடிப்பதுமெல்லாம் செய்கின்ற ஒரு ஆள். அதனுடைய த்ரில் இப்போதும் மனதிலிருந்து மறையவில்லை. உண்மையைச் சொன்னால் முதல் கணவனை நினைப்பதைக்காட்டிலும் கதகதப்பானது அவரைப்பற்றிய நினைவு. என்னுடைய கற்பனையிலுள்ள கணவனாகவோ காதலனாகவோ இருந்தார் அவர். கனவில் யாரும் பாயில் படுக்க வேண்டும் என்று விரும்பமாட்டார்கள் அல்லவா? மெத்தையில் படுத்துக்கொண்டு, விருப்பம் போல மது அருந்தும், கனவு போன்ற ஒரு நிலையில் என்னுடைய கணவனோடு சேர்ந்து மது குடித்திருக்கிறேன். ஆனால் அது கள்ளச்சாராயம்தான். ஆனால், வந்தவனோ, சினிமாவில் கனவு சீனில் வரும் காதலனைப் போன்ற ஒருவன். நல்ல கரை உள்ள கசவு முண்டை மார்பில் போர்த்திக்கொண்டு வந்தான்.
விலையுயர்ந்த ஒரு புடவையை நான் முதன்முதலாகக் கட்டுவது அன்றுதான். சிவப்பில் கருப்பும் வெள்ளையும் பூக்களுள்ள நல்ல அழகான புடவையை ரோஸி அக்கா எனக்காக வாங்கித் தந்திருந்தார். ராம நிலையத்தில் ஆளுயரக் கண்ணாடி இருந்தது. நான் அதில், என்னுடைய அழகைப் பார்த்துக் கொண்டேன். இப்போது போலப் புடவையைச் சுருட்டிச் செருகிக்கொள்வதெல்லாம் இல்லை. நீண்ட கூந்தல் எனக்குண்டு. முடியையெல்லாம் விரித்துபோட்டு, அப்படி நிற்கும்போதுதான் அவன் இரண்டு அறைகளுக்கு இடையிலுள்ள நடைக்கூடம் வழியாக வந்தான். ஒரேநாள் என்றால்கூட அது என் மனதில் இருந்து மறையவில்லை.
உண்மையைச் சொன்னால், என்னுடைய சிந்தனையில் ஒரு வாடிக்கையாளன் என்று சொன்னால், பழைய வேட்டி கட்டி, சாதாரணமான சட்டை அணிந்த ஒரு உருவம்தான் இருந்தது. பின்னர் செக்ஸுக்காக என்னிடம் வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு அழகு குறைவாகவும் எனக்கு அதிகமாகவும் இருக்கும் என்றொரு எதிர்பார்ப்பும் உண்டு. இதற்கு நேர்மாறாக, சந்தனப் பொட்டும் வைத்து முற்றிலும் வேறுபட்டு, இப்போதைய சினிமாவில் மம்மூட்டி வருவதைப்போல ஒரு ஆள். நான் திகைப்புடன் கேட்டேன், ‘ரோஸி அக்கா. . . இது.’
‘ஆங். . . இதுதான் நான் சொன்ன போலீஸ் ஆபீஸர்.’ போலீஸ் என்று சொல்லும்போது நமக்கு பெரிய மீசையெல்லாம் வைத்த ஒரு ஆள் அல்லவா மனதில் வருவார்? இவன் போலீஸ் தோரணையில் இல்லை. அன்றைய வழப்படி சொன்னால், ஒரு எஜமானன் தோரணையில்தான்.
ஊர் எது, வீடு எது என்று இருக்கும் முதல் கேள்வி என்று நினைத்திருந்தேன். இங்கே அப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் எதுவுமில்லை. என்னை அழைத்தான். நான் பின்னால் சென்றேன். இலக்கிய மொழியில் சொன்னால் நாணம் கொண்டவளாக. காரணம் திருமணம் முடித்து, இரண்டு குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறேன் என்றாலும் இந்தச் சூழலில், மொத்தத்தில் மாறுபட்ட மனநிலையில்தான் இருந்தேன். அங்கே சென்றபோது ஒரு முழுபாட்டில் மது இருந்தது. என்னிடம் ‘குடிப்பியா’ என்று கேட்டான். ரோஸி அக்காதான் பதில் சொன்னார் ‘குடிப்பா.’ அப்படியென்றால் தேவையானதை எடுத்துக் குடிக்கச் சொன்னான். எனக்கு ஒரு துளி போதுமானதாக இருக்கும் என்றுதான் அவன் நினைத்தான். நானோ, உடனே பெரிய டம்ளரில் முக்கால் பகுதி மது ஊற்றினேன். ‘தண்ணி ஊத்து, தண்ணி ஊத்து’ என்றான் அவன். கொஞ்சம் தண்ணீர் ஊற்றினேன். அவன் பிரமித்து, ‘நல்ல போதையுள்ள சரக்கு’ என்று சொன்னான். ரோஸி அக்கா, ‘அவளுக்குச் சாராயம் காய்ச்சுறதுதான் வேல, பிரச்சனயில்ல, குடிச்சிருவா’ என்று சொன்னார். நான் பயந்து, மிடறு மிடறாகக் குடிப்பேன் என்றெல்லாம் அவன் நினைத்தான். எனக்கோ அப்போது சபைக் கூச்சம் இருந்தது. நான் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். மொத்தத்தில் அவன் திகைத்துப் போயிருப்பான். இதற்கு நேர்மாறாக, கொஞ்சம் மதுவில் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். எனக்கோ, இரண்டாவது முறை குடிப்பதைப் பற்றிதான் சிந்தனை. இரண்டாவது முறை டம்ளரில் ஊற்றும்போது பாதியானதும் ‘போதும்’ என்று சொன்னான். ஒரு பொதுமரியாதைக்காக நானும் நிறுத்தினேன்.
பிற்காலத்தில் அதைப்பற்றி நினைக்கும்போதெல்லாம், குழந்தைப்பருவத்தின் ஒரு உண்டு. ஒரு ஆள் என் முன்னால் உட்கார்ந்துகொண்டு இப்படித் திகைக்கிறான், அதற்கிடையே வேறொரு ஆளும் உண்டு. பெரிய மீசைக்காரனான அரசியல்வாதி. அவனைப் பார்த்தால்தான் உண்மையில் போலீஸ். அவன் வேறொரு ரீதியில் ஒரு கமெண்ட் சொல்கிறான், ‘ஆங். . . சுப்பிரமணியனோட பொண்டாட்டி ஆனதற்கான குணமெல்லாம் இருக்குது.’ என்னுடைய கணவன் ரவுடிதான், சாராயம் காய்ச்சுபவன்தான், பொண்ணுங்ககூட போகிறவன், சீட்டாடுபவன். சுருக்கமாகச் சொன்னால் ‘புருஷ லட்சணங்கள்’ எல்லாம் சேர்ந்த ஒருவன். நல்ல ஆரோக்கியம் உள்ளவன், உடல் உறுதியானவன். எந்த விஷயத்தையும் விட்டதில்லை. அப்போதே அவனுக்கு ஐம்பத்தைந்து வயதுள்ள காதலி இருந்தாள். என்மீதான இரண்டு பேருடைய பார்வையில் இருக்கும் வித்தியாசம்தான் அவனுடைய கமெண்டில் தெரிகிறது.
இவ்வளவு மென்மையாகப் பழகி, ஒரு இரவு முழுவதும் என்னோடு இருந்த இந்த ‘அழகான ஆண்’ மறுநாள் என்னைக் காட்டிக்கொடுத்தான். அவன் கிடைத்தால், ‘எதுக்காக நீங்க இத என்கிட்ட செஞ்சீங்க’ என்று எனக்கு கேட்க வேண்டுமென்று இருந்தது. அதைப்பற்றி இப்போது நினைக்கும்போதும், உண்மையைச் சொன்னால் எனக்கு வருத்தம்தான் வருகிறது. எனக்கு அந்த நேரத்தில் அழ வேண்டும் என்றுதான் தோன்றியது. ‘எப்படி ஒரு மனிதனால் இவ்வளவு குரூரமாக முடியும்?’ நான் பின்பு ஒருத்தனிடமும் இவ்வளவு குரூரத்தையும் பார்க்கவில்லை; அவ்வளவு மென்மையையும்.
அவனால் என்னுடைய கனவு ஆணாக இருந்து, இப்படி நிறம் மாற முடிந்தது ஆண்மைத்துவத்தில் இருக்கும் கபடத்தின் இறுதி எல்லைதான். ‘ஏன்டீ. ராத்திரி சார் கூட படுத்தா, சார் எங்ககிட்டே எதுவும் சொல்லமாட்டாருன்னு நினச்சியா’ என்றுதான் ஏ.எஸ்.ஐ. என்னை அடிக்கும்போது மறுநாள் கேட்டான். அவன் என்னை ஒன்பது அடி அடித்தான். அவன் உட்பட, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வரை உள்ளவர்கள், ‘சார் கூட படுத்த பொண்ணு’ என்றுதான் சொன்னார்கள். அதிலிருந்து, அவர்களைவிட உயர்ந்த பதவியில் உள்ளவன்தான் என்னுடைய கனவு ஆண் என்பது புரிந்தது.
பின்னர் நான் அவனைப் பார்த்ததே இல்லை. பார்த்திருந்தால், ‘என்கிட்ட எதுக்காக இதச் செஞ்சீங்க’ எனக்குக் கேட்க வேண்டும் என்று உண்டு. ஒருவேளை, ஒரு திரைப்படம் எடுப்பேன் என்றால், இதைத்தான் கதையாகத் தேர்ந்தெடுப்பேன்.
நூலிலிருந்து ஒரு பகுதி