பாலியல் சுரண்டல்களுக்கு எதிரான போர்
மலையாளத் திரையுலகில் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டியின் அறிக்கை அதிர்ச்சிகரமான பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதையொட்டித் திரையுலகிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை மலையாளத் திரையுலகின் ஆணாதிக்கப் போக்கையும் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியது. இப்போது ஹேமா கமிட்டியின் அறிக்கை இந்தப் போக்குகளைப் பற்றிய விரிவானதும் ஆதாரப்பூர்வமானதுமான பதிவுகளை அளித்திருக்கிறது.
2017ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வுசெய்யக்கோரி முதலமைச்சர் பிணராயி விஜயனிடம் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பான ‘Women in cinema collective (WCC)’ அமைப்பினர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழு கேரளத் திரைத்துறையில் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிமைப்பாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் உரையாடியது. ஒலிப்பதிவு, காணொலி எனப் பல வடிவங்களில் ஆதாரங்களைச் சேகரித்த இந்தக் குழு தன் அறிக்கையை 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று சமர்ப்பித்தது. ஆனால் கேரள அரசு இதை வெளியிடாமல் தாமதித்துவந்தது.
உயர் நீதிமன்றத்தில் பல சுற்றுச் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இது வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் ஐந்து பேர், இந்த அறிக்கை குறித்த கூடுதல் விவரங்களுக்காகக் கேரள மாநில தகவல் ஆணையத்தை அணுகினார்கள். இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, சில பகுதிகள் நீங்கலாக அறிக்கையை மனுதாரர்களுக்கு அளிக்கலாம் என்று தகவல் ஆணையம் தீர்ப்பளித்தது.
மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சஜிமோன் பாறையில் இந்த அறிக்கையை வெளியிடத் தடை விதிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கை தான் உட்படப் பலரது தனியுரிமையை மீறுவதாகவும் பழிவாங்கலுக்கும் துன்புறுத்தலுக்கும் அவர்களை ஆட்படுத்துவதாகவும் அவர் வாதிட்டார். இந்த மனுவை ஆகஸ்ட் 13ஆம் தேதி தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஒரு வாரத்தில் அறிக்கையை வெளியிடுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகே அறிக்கை பொதுவில் வெளியானது.
அறிக்கை வெளியான பிறகு பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேரள அரசு அமைத்துள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாநில அரசுக்குக் கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திரையுலகில் மட்டுமின்றி, சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர, ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரியவந்துள்ள ஊதிய சமநிலை, பணியிடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற பிற விஷயங்களையும் விசாரிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
290 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களைப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளார்கள். மலையாளத் திரைத்துறையில் ‘Adjustments’ அல்லது ‘Compromise’ (அனுசரித்துப்போகுதல், சமரசம் செய்துகொள்ளுதல்) போன்ற வார்த்தைகள் சகஜமாகப் புழங்குவதாகவும் பெண் களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொள்வதே இந்தச் சொற்களின் பொருள் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
திரைத்துறையில் உள்ள ஆண்கள் எந்தத் தயக்கமும் இன்றிப் பாலியல் உறவுக்கு அழைப்பார்கள். இவ்வாறு அழைப்பதை அவர்கள் தங்கள் பிறப்புரிமைபோல உணர்கிறார்கள். இம்மாதிரியான சமயங்களில் பெண்கள் மறுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு; மறுத்தால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல்போகும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அம்பலங்கள் உரிய ஆதாரங்களுடனும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடனும் வந்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன.பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களைப் பார்க்கும்போது அந்தப் பாதிப்பின் வலியையும் அதற்குப் பின்னால் இருக்கும் அதிகார, அராஜக ஆணாதிக்கப் போக்கையும் உணர முடிகிறது. அறிக்கையின் உடனடி விளைவாக மலையாளத் திரையுலகின் அதிகாரப்பூர்வமான அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும், அதன் தலைவர் மோகன்லால் உள்பட, பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள். இந்த அறிக்கையின் மீது மலையாளத் திரை உலகமும் காவல் துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
2018இல் எழுச்சி பெற்ற மீடூ (#MeToo) இயக்கத்திற்குப் பிறகு இது பெண்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான நிகழ்வு என்று சொல்ல வேண்டும். நடிகைகள், பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் எனப் பல தரப்பினரும் பாலியல் அத்துமீறல் குறித்து ஹேமா கமிட்டியினரிடம் பேசியிருக்கிறார்கள். இதுகுறித்து யாரும் பேச முடியாது என்னும் நிலையைத் திரைத்துறையைச் சேர்ந்த அதிகாரம் மிகுந்த ஆண்கள் உருவாக்கியிருந்தார்கள். இந்த அறிக்கை அந்தக் கவசத்தை உடைத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் குறித்து உடைத்துப் பேசியிருக்கிறார்கள். இள வயது ஆண்களைச் சுரண்டும் இயக்குநர்கள் குறித்தும் அறிக்கை பேசுகிறது. மைனர் குழந்தைகள்மீதான பாலியல் வன்முறையையும் பேசுகிறது.
இந்த அறிக்கை தமிழ் உள்ளிட்ட பிற மொழித் திரையுலகங்களில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள் மீதான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வழக்கம்போலவே தமிழ்த் திரையுலகில் வெவ்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துக்களை அறிக்கைகளாக வெளியிட்டு அமைதியாகிவிட்டார்கள். இங்கும் அதுபோன்ற விசாரணை நடக்க வேண்டும் என்ற குரல் பெரிதாக எழவில்லை; அப்படியானால் இங்கு அத்துமீறல் இல்லை என்று பொருளில்லை. அதை அழுத்தமான கோரிக்கையாக முன்வைப்பதற்கான துணிச்சல் இங்கே யாருக்கும் வரவில்லை என்றுதான் பொருள். “மலையாளத் திரையுலகம் அழுகியிருக்கிறது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதால்தான் சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம். எந்தக் கேள்வியும் எழாத இடங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்” என்று ஹேமா கமிட்டி பற்றி நடிகை பார்வதி திருவோத்து கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர் விமன் இன் சினிமா கலெக்டிவ் குழுவின் உறுப்பினர். மலையாளத் திரையுலகின் அதிகாரம்மிக்க ஆண்களை எதிர்த்துக் குரல் எழுப்பிவருபவர். தமிழ்த் திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அழுத்தமாகக் குரல் கொடுத்தவர்.
தமிழ்த் திரையுலகிலிருந்து வலுவான குரல் எழவில்லை என்றாலும் மரபார்ந்த ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய பேச்சு அடிபடுகிறது. அந்தப் பேச்சும் பெருமளவில் பாலியல் சுரண்டலின் நீட்சியாகவே அமைந்திருக்கிறது. இதைப் பற்றி விவாதிக்கிறேன் பேர்வழி என்று யூடியூப் தளங்களுக்குப் பேட்டி அளிப்பவர்கள் நடிகைகள் பலவிதமான சமரசங்களுக்கு உட்பட்டுத்தான் திரையுலகிற்குள் வருகிறார்கள், சமரசங்களின் மூலமாகத்தான் வளர்கிறார்கள் என்று பேசுகிறார்கள்; நடப்பது பாலியல் சுரண்டல் என்று பேசுவதில்லை. பல நடிகர்களும் பாலியல் சுரண்டல்களுக்குப் பேர்போனவர்கள் என்றும் பேசவில்லை. “நடிகைகள் எல்லாருமே அப்படித்தான்” என்று விஷமத்தனமான புன்னகையுடன் ஒருவர் சொல்லும்போது நடிகைகள் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் தரக்குறைவான படிமமே மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் இதைக் குறித்துக் கருத்துச் சொல்லும் ஊடகவியலாளர்களும் இதே குரலில்தான் பேசுகிறார்கள். ஆண்களை நுகர்வோராகவும் பெண் உடல்களை நுகர்பொருள்களாகவும் பார்க்கும் பொதுப்பார்வையே இந்தப் பேச்சுக்களில் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே மீடூ புகார் எழுந்துள்ளது. ஆனால் அதைத் தமிழ்த் திரையுலகம் எதிர்கொண்ட விதம் வெட்ககரமானது. திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பின்னணிப் பாடகர் சின்மயி உள்ளிட்ட பலர் புகார் கொடுத்தார்கள். சின்மயி இது தொடர்பில் ஊடகங்களைச் சந்தித்தபோது ஊடகவியலாளர்கள் அவரைக் கடித்துக் குதறாத குறையாகக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரையே கேள்விக்கு உள்ளாக்கும் போக்கும் அவர்களையே குற்றம்சாட்டும் போக்கும் பரவலாகக் காணப்படுகின்றன. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிப்பதற்காக ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் நியமிக்கப்பட வேண்டிய விசாகா குழுவுக்கான வழிகாட்டு நெறிகளில் பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சுமத்தும் போக்குக்கு எதிரான வழிகாட்டுதல்கள் இருக்கிறன. உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையைத் தமிழ் ஊடகவியலாளர்கள் அறியாதிருப்பதிலோ அறிந்தும் பின்பற்றாமல் இருப்பதிலோ வியப்பில்லை. இவர்களில் யாருமே குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவை நோக்கி எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. அரசு அமைப்புகள், முன்னணிக் கட்சிகள், இலக்கிய மேடைகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் வைரமுத்துவுக்குக் கிடைத்துவரும் மரியாதைக்கு ஒரு சிறு பாதிப்புக்கூட ஏற்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டதனாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்னும் ஆகப்பெரிய உண்மையை வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் முன்வைக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது அதிகாரப் பீடங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் பற்றிப் பாலியல் புகார்கள் எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் கேள்விகளையும் களங்கங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்னும் எழுதப்படாத விதியைத் தமிழ்ச் சமூகம் சிரமேற்கொண்டு பின்பற்றிவருகிறது.
“பாலியல் குற்றச்சாட்டுக்களில் குற்றம்சாட்டுபவரின் பின்னணியை வைத்து அந்தக் குற்றச்சாட்டை அணுகக் கூடாது. குற்றம்சாட்டுபவரின் சாதி, மதம், அரசியல் சார்புகள் ஆகியவற்றை வைத்து அவருடைய குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுக்களில் அடையாள அரசியலைக் கொண்டுவரக் கூடாது. வைரமுத்துமீது சின்மயி புகாரளித்தபோது சின்மயியின் சாதியையும் வைரமுத்துவின் திராவிட இயக்கச் சார்பையும் கருத்தில் கொண்டு பலர் அந்தக் குற்றச்சாட்டை அணுகினார்கள். இது தவறான அணுகுமுறை” என்று சமூக மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன் குறிப்பிடுகிறார். POSH சட்டத்தின்படி வழக்கின் உண்மைத் தன்மையை விசாரணை செய்வது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல், தொழில் நிறுவனங்கள், விளையாட்டுத் துறை, கல்வித் துறை, ஊடகத் துறை ஆகியவற்றிலும் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்கள் மலிந்திருக்கின்றன. நடக்கும் அத்துமீறல்களில் ஒரு சில மட்டுமே வெளிவருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது. தெஹல்கா இதழின் ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பாலின் மீதும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார். அவர்மீது வழக்குத் தொடரப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பிணையில் வெளிவந்த அவர் எட்டு ஆண்டுக் கால விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். இத்தகைய குற்றச்சாட்டுக்களோ அதையொட்டிய விசாரணைகளோ ஊடகத் துறையிலும் பிற துறைகளிலும் அதிகம் நடப்பதில்லை. விசாரணைக்கு உட்படாமல், எந்தத் தண்டனையும் பெறாமல் தொடர்ந்து தங்கள் அதிகாரம் தரும் அநியாயமான சுகங்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களே அதிகம். ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற விசாரணைக் குழுக்களை அமைத்து விசாரித்தால் பல குற்றங்கள் அம்பலமாகும்.
தமிழ் ஊடகத்தினர்மீதும் பாலியல் அத்துமீறல் புகார்கள் எழுந்துள்ளன. பெரிய ஊடக நிறுவனங்களுக்கெதிரான ஓரிரு புகார்கள் வெளிச்சம் பெற்றன. பிற துறைகளைப் போலவே வெளியில் தெரியாத அத்துமீறல்கள் ஊடகத் துறையிலும் அதிகம் என்று ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் ஊடகங்கள் பாலியல் சுரண்டல்களைத் தம்மளவிலாவது களைய முன்வர வேண்டும். இன்னமும் பல ஊடக நிறுவனங்களில் விசாகா குழு அமைக்கப்படவில்லை. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் குறித்த உருப்படியான புலனாய்வுச் செய்திக் கட்டுரைகளும் ஊடகங்களில் வருவதில்லை. பாலியல் சுரண்டல்களை ஊடகங்கள் பரபரப்பு மதிப்பைத் தாண்டிப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதே யதார்த்தம்.
பாலியல் சுரண்டல்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், “அப்போதே ஏன் சொல்லவில்லை?”, “முன்பு ஒப்புக்கொண்டு இப்போது புகார் எழுப்புவது ஏன்?” ஆகிய இரண்டு கேள்விகளைத் திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். மீடூ இயக்கம் எழுச்சிபெற்று முக்கியமான விவாதப் பொருளானபோது இதற்கான பதில்களைப் பலரும் கூறியிருக்கிறார்கள். பாதிக்கப் பட்டவர்கள் உடனடியாக அந்தப் பாதிப்பை வெளியில் கூற முடியாத சூழ்நிலைகள் பலவிதமாக அமையும். உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து என்பதிலிருந்து பணி அல்லது தொழிலில் பாதிப்பு வரைப் பலவிதமான இடர்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உடனுக்குடன் சொல்ல முடியாத நிலை மீடூ இயக்கம் உருவானதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று.
அப்போது சம்மதம்தெரிவித்துவிட்டு இப்போது புகார் செய்யலாமா என்ற கேள்வி சம்மதம் என்பதன் சிக்கல்களை உணராத மனநிலையிலிருந்து எழுகிறது. ஒருவருடைய உயிர், உடைமைகள், வாழ்வாதாரம், அவருடைய துறையில் அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புக்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் பாதுகாப்பு எனப் பல விஷயங்களைப் பணயம்வைத்துப் பாலியல் சுரண்டல்கள் நடக்கின்றன. இத்தகைய சூழல்களில் தெரிவிக்கப்படும் சம்மதத்தைச் சம்மதமாகவே கொள்ள முடியாது என்பது அடிப்படையான உண்மை. ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ, பொய் வாக்குறுதி அளித்தோ பாலியல் உறவுக்குப் பெறப்படும் சம்மதம் செல்லாது என்பதை இதுகுறித்த சட்டங்கள் அங்கீகரிக்கின்றன.
ஒரு துறையில் வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களே அவற்றுக்கான பேரங்களையும் விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இத்தகைய அதிகாரப் பீடங்களை ஆக்கிரமித்திருக்கும் ஆண்கள், வாய்ப்புகளை நாடி வரும் ஆண்களுக்கு ஒரு விலையையும் பெண்களுக்கு ஒரு விலையையும் நிர்ணயிக்கிறார்கள். இப்படி நிர்ணயித்த ஆண்களைக் கேள்விக்குட்படுத்தாமல் அவர்கள் தீர்மானித்த சுரண்டல் விதிமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கேள்விக்குட்படுத்துவது அறமற்ற செயல் மட்டுமல்ல, சுரண்டலுக்குத் துணைபோகும் குற்றமும்கூட.
ஹேமா கமிட்டி அறிக்கை பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட, பணியிடத்தில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி (POSH) ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல் புகார்களைப் பதிவுசெய்து விசாரிக்க உட்குழு ஒன்றையும் நிறுவனத்துக்கு வெளியில் இருப்பவர்களைக் கொண்ட வெளிக்குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். திரைத்துறையிலும் இத்தகைய குழுக்களை முறையாக அமைக்க வேண்டும்.
பாலியல் சுரண்டல்களின் வேர் சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையிலும் பெண்களைப் பாலியல் பண்டங்களாகப் பார்க்கும் மனநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. அதிகாரத்துடன் இது அழுத்தமாகப் பிணைந்திருக்கிறது. அதிகாரத்தை மீறுவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் அபாயங்களையும் கணக்கில் கொண்டு இந்தச் சுரண்டல்களை அணுக வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி, பொய் வாக்குறுதி அளித்துப் பெறப்படும் சம்மதத்தைச் சம்மதமாகச் சட்டம் கருதுவதில்லை. இதைப் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமல் யூடியூபிலும் இதர சமூக ஊடகங்களிலும் பொறுப்பற்ற முறையில் பெண்களை மேலும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசுபவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும். அப்படிப் பேசிவந்த டாக்டர் காந்தராஜ்மீது நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவர் நடிகை ரோகிணி அளித்த புகாரின் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆறுதலளிக்கும் நிகழ்வு.
எப்போது, எங்கே, எப்படி, எதற்காக நடந்திருந்தாலும் அத்துமீறல் அத்துமீறல்தான். காலம் கடந்தேனும் நீதி கிடைக்க வேண்டும். குற்றச்சாட்டுக்களை முறையாக விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். திரைத்துறை, அரசியல், தொழில் துறை, காவல் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளிலும் பாலியல் சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மலையாளத் திரையுலகம் அதற்கான அழுத்தமான முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சிறு பொறி பெருநெருப்பாக மாறிப் பிற மொழித் திரையுலகங்களிலும் பிற துறைகளிலும் நிலவும் பாலியல் சுரண்டல்களைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.