இலங்கையிலிருந்து இரு நூல்கள்
தண்பதம்
(புதிய நோக்கில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்)
பதிப்பாசிரியர்கள்:
ஸ்ரீ பிரசாந்தன், எம்.எம். ஜெயசீலன்
வெளியீடு
பதிப்பு தமிழ் துறை
பேராதனை பல்கலைக்கழகம்,
இலங்கை.
பக். 800
ரூ. 138
தண்பதம் என்பதற்குப் புதுப்புனல் (புதிய) என்று சிலப்பதிகார உரையாசிரியர் பொருள் கூறுகிறார். ஒருவகையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையில் அமைந்ததால் தண்பதம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
நூலில் உள்ள 17 ஆய்வுக் கட்டுரைகளில் சிலப்பதிகாரம் பற்றி 13 கட்டுரைகளும், மணிமேகலைபற்றி மூன்று கட்டுரைகளும், இரட்டைக் காப்பியங்கள்பற்றி ஒரு கட்டுரையும் உள்ளன. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடந்த (2017) கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை எழுதியவர்களில் 15 பேர் இலங்கைத் தமிழர்கள்; இரண்டு பேர் தமிழகப் பேராசிரியர்கள். இவர்களில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடித்துறைப் புலத்தலைவர் அதியமானின் மைய உரை ஆழமானது.
சிலப்பதிகாரம், மணிமேகலை என இரண்டு நூல்களின் வரலாற்றுச் செய்திகளைத் தமிழகத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் ஒப்பிட்டு நிறுவியிருப்பது மைய உரையின் சிறப்பு.
இரட்டைக் காப்பியங்களில் கூறப்படும் புகார் நகரத்தைத் தொல்லியல் பார்வையில் விரிவாகவே அதியமான் ஆராய்ந்திருக்கிறார். பூம்புகாரில் 1993இல் நடந்த அகழாய்வுச் செய்திகளின்படி இந்த நகரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்திருக்கிறது. இங்குள்ள புத்த விகாரை கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தச் சான்றுகளின்படி சிலப்பதிகாரம் பழமையானது என்று உறுதியாகின்றது. இதனால் வையாபுரிப் பிள்ளையின் கணிப்புப் பொய்த்துப்போகின்றது. இப்படியாக 1963முதல் 2006வரை பூம்புகாரில் நடந்த அகழாய்வுகள் எல்லாமே பூம்புகாரின் பழமையை மட்டுமல்ல தமிழ்ப் பண்பாடு சார்ந்த காப்பியங்களின் பழமையையும் காட்டும் என்பதைப் படங்களுடன் மைய உரை விளக்குகிறது.
பழந்தமிழரின் இனவரைவியல் செய்திகள்குறித்து மிகக் குறைவான ஆய்வுகளே வந்துள்ளன; இந்தத் தொகுப்பிலுள்ள பாஸ்கரன் சுமனின் கட்டுரை இந்த வகையில் குறிப்பிடத்தகுந்தது. சிலப்பதிகாரத்தில் உள்ள கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகிய தலைப்புகளில் உள்ள செய்திகளைக்கொண்டு சங்கக் காலத்துச் சமூகத்திற்கும் சிலப்பதிகார காலச் சமூகத்திற்கும் உள்ள மாறுபாட்டை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
சங்கக் கால எயினர் கொள்ளையடித்தனர்; வழிப்பறி செய்தனர். இளங்கோ காலத்து எயினரின் நிலை வேறு. அவர்கள் வீர மறவராய் காளிக்குத் தங்களைப் பலி கொடுத்தனர். இந்த மரபு தமிழரிடம் தொடர்ந்தது. இது சடங்கியல் ரீதியாகப் பிற்காலத்தில் மாறிவிட்டது. வில்லிபாரதத்தில் வரும் அரவான் தன்னைப் பலி கொடுப்பதும் இந்த மரபுதான். இந்திய மகாபாரத மரபில் அரவானின் கதை வில்லிபாரதத்தில் மட்டுமே உள்ளது. இது சிலப்பதிகார எயினர் மரபின் எச்சம். இப்படியான புதிய சிந்தனையை இந்தக் கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பிற கட்டுரைகளும் ஆய்வு நெறிமுறைப்படி அமைந்துள்ளன. பொதுவாகக் கருத்தரங்கக் கட்டுரைகளில் காணப்படும் கூறியது கூறலோ ஏற்கெனவே சொல்லப்பட்ட சிந்தனைகளின் மாற்று வடிவமோ இந்தத் தொகுப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம்.
•••
Tourism and Monuments
of Archaeological Heritage in Northern Sri Lanka
P Pushpa Ratnam
Department of History
University of Jaffna,
Sri Lanka.
pages 270
இலங்கையின் வடபகுதியிலுள்ள நான்கு மாவட்டங்களின் மரபுவழிப் பண்பாட்டுத் தொல்லியல் எச்சங்களைச் சுருக்கமாகப் படங்களுடன் தருகின்ற அருமையான ஆங்கில நூல். இதன்ஆசிரியர் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர். நீண்ட அனுபவம், தொடர்ச்சியான கள ஆய்வு, வாசிப்பின் பின்னணியில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், புழங்குப் பொருட்கள் போன்றவற்றை முழுமையாக அறிவதற்கு உதவுகின்ற நூல்.
தொன்மையான இரும்புக் காலம், இந்து, புத்த சமயக் கோவில்கள், நாக வழிபாடு, யாழ்ப்பாண அரசு போன்ற செய்திகளை 35 சிறிய தலைப்புகளில் படங்களுடன் விவரிக்கின்றது. பழைய நினைவுகளில் இருந்து அகலாத ஆவுரிக்கல், ஆரம்ப காலத்தில் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த வேலி, பழைய குளங்கள், வீடுகள், பூங்காக்கள் எனப் பல விஷயங்களைக் கூறுகிறது.
இலங்கையின் பழமையான ஊர் யாழ்ப்பாணம். இந்த ஊரின் பல்கலைக்கழகத்திற்கு என்று தனி மரியாதை உண்டு. இங்கே வரலாறு படித்த புஷ்பரத்தினம் 1989 - 1993ஆம் ஆண்டுகளில் வட இலங்கைப் பகுதிக் கிராமங்களில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் கண்டுபிடித்த பல விஷயங்கள், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அறிந்தார். இலங்கையின் வடபகுதி தமிழ்நாட்டுடன் பண்பாட்டுரீதியாக அதிக ஒற்றுமையுடையது என்பதையும் கண்டிருக்கிறார். இவர் வட இலங்கைப் பகுதிகளில் கண்டுபிடித்த நாணயங்கள் பழந்தமிழக வரலாற்றுடன் தொடர்புடையன என்பதையும் ஆராய்ந்து கண்டார்.
கலாச்சாரச் சுற்றுலா என்னும் துறை பரவலான பிறகு உலகம் ஒன்று என்னும் கோட்பாடு உருவானது. இதன் காரணமாகச் சுற்றுலாவை நினைவுச் சின்னங்களின் செய்திகளுடன் இணைத்துப் பார்க்கிறார் புஷ்பரத்தினம்.
வடஇலங்கைப் பகுதிகளில் நடந்த அகழாய்வில் இரும்புக் காலப் பண்பாட்டுச் சான்றுகள் முன்னெடுக்கப்பட்டன. இது தென்னிந்தியாவிலிருந்து வட இலங்கைக்கு நடந்த குடிப்பெயர்ச்சிக்கு சான்றளிப்பது. அனுராதபுரத்தின் வட பகுதியில் கிடைத்த பிராமிக் கல்வெட்டில் நாக நக்கர் என்னும் பெயர் உள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு பாலி இலக்கியங்களிலும் இந்தப் பெயர் வருகிறது. இதே பெயர் தமிழ்நாட்டுடன் தொடர்புடையது. இது பழைய நாக வழிபாட்டிற்குச் சான்று. தமிழகத்திலும் நாக வழிபாடு உண்டு.
வட இலங்கையில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கும் செய்தி இந்திய தமிழ் பிராமி கல்வெட்டுச் செய்திகளிலிருந்து வேறுபட்டது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் வழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இந்துச் சார்புத் தெய்வங்கள் வழிபடப்பட்டன. அப்போது புத்தமதம் இங்கே வந்துவிட்டது என்கிறார் ஆசிரியர். கி.மு. ஆயிரமாவது ஆண்டு அளவில் உள்ள சுடுமண் தெய்வ உருவங்களை இத்துடன் ஒப்பிடுகிறார். இங்குப் பெண் தெய்வங்கள் அதிகம்.
தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த துர்க்கை, பைரவர், அண்ணன்மார் சுவாமி, காளி போன்ற தெய்வங்கள் இங்கு வழக்கில் உள்ளன. டச்சுக்காரர்கள் இப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு மதச் சுதந்திரம் கொடுத்தபோது இந்தத் தெய்வங்களின் வழிபாடு பெருகியது; இது 16ஆம் நூற்றாண்டு நிகழ்வு.
வவுனியாவிலிருந்து ஏழு மைல் தொலைவிலுள்ள இடங்களில் 40க்கு மேல் பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை புத்த பிட்சுகள் தொடர்பானவை. அனுராதபுரத்திற்கு சங்கமித்திரை என்னும் புத்தப்பிக்குணி வந்தார் என்று மகாவம்சம் கூறும் செய்தியைப் பிராமிக் கல்வெட்டுகளுடன் ஒப்பிடுகிறார். இப்படியான பல செய்திகள் மிகச் சுருக்கமாக இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தொல்லியல் அகழாய்வுச் செய்திகள் மட்டுமல்ல, ஆவுரிக்கல் போன்ற மரபுசார்ந்த பழம் அடையாளங்களையும் நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை. மாடுகள் தம் உடல் அரிப்பைத் தீர்க்கத் தேய்த்துக்கொள்ளும் கல் ஆவுரிக்கல் எனப்படும். இது மாடுகள் நீர் அருந்தும் இடத்தில் நடப்பட்டிருக்கும். இவ்வாறு கல் நடுவது தர்மமாகக் கருதப்பட்டது. வட இலங்கைப் பகுதியில் இந்தக் கல்லைப் பெண்களும் நட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இவ்வழக்கம் உண்டு.
ஆவுரிக்கல்லைப் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மந்தைக்கல், ஆவுரிக்குட்டி, தீட்டுக்குட்டி, ஆரெஞ்சிக்கல், ஆவுஞ்சி என்னும் பெயர்களால் இந்தக் கல் குறிப்பிடப்படுகிறது. திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமான் ஆவுரிக்கல்லில் வீற்றிருக்கிறான் என்னும் செய்தி வருகிறது. இப்படியாக நடப்பட்ட கல்லின் வரலாற்றைச் சரியாக அறிய முடியவில்லை. மேய்ச்சல் தொழில் ஆரம்பித்த காலத்தில் இதுவும் ஆரம்பித்திருக்கலாம். பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று இது.
வட இலங்கைக் கிராமங்களில் பேருந்து நிறுத்தும் இடங்களிலும் இந்தக் கல்லைக் காண முடிகிறது. இங்கே சில இடங்களில் இந்தக் கல் நடப்பட்ட வருஷத்தைக் கணக்கிட்டு வழிபாடு செய்கிறார்கள். இது மத அடையாளமாக மாறிவிட்டது; சிலர் இறந்துபோன மனைவியின் நினைவாக ஆவுரிக்கல்லை நட்டனர். இதுபோன்ற இடங்களில் லிங்கத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது. பின்னர் சிவன் கோயிலாக உருமாறுகிறது.
இப்படியாக அபூர்வமான பல விஷயங்களை இந்த நூல் படங்களுடன் விவரிக்கிறது. நூலில் சிறியதும் பெரியதுமாக 1096 படங்கள் உள்ளன. இவை வட இலங்கைப் பகுதிகளிலுள்ள நினைவுகளின் எச்சங்கள். பொதுவாக Coffee table Book அருமையான படங்களுடன் சாதாரணக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்ற கருத்துக்கு மாறானதாக இந்த நூல் உள்ளது.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com