எதிர்ப்பின் பிரதிபலிப்பு
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமியின் மூத்த மகனாகப் பிறந்த நடேஷ் இளம் வயதிலேயே தந்தையின் கலை, இலக்கியச் சூழலுக்கு அறிமுகமான நிலையில் அவருடைய உத்வேகங்களுடனும் இலக்குகளுடனும் இணைந்து செல்பவராகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார். 1977இல் கூத்துப்பட்டறையைத் தொடங்கி முத்துசாமி தன்னுடைய ஈடுபாடுகளுக்கு வடிவம் கொடுக்கும் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, நடேஷ் ஓவியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவராகச் சேர்கிறார். முத்துசாமியின் இசை, நாட்டியம், தெருக்கூத்து ஈடுபாடுகள் நடேஷைப் பல்வேறு இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைத்துச்சென்றதில் புதிய வடிவங்கள் குறித்த மனத்தேடல் நடேஷையும் ஆக்கிரமித்திருக்க வேண்டும். கூத்துப்பட்டறை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை வடிவமைப்பதிலிருந்தே தொடங்கியது நடேஷின் அழகியல் பங்களிப்பு. உருவங்கள் மாறியும் சிதைந்தும் பரிமாணங்கள் பெருகியும் நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் மாறுபட்ட தோற்றங்களை அளித்தன. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் நடேஷ் வரைந்த கோட்டோவியங்கள், வடிவங்கள் குறித்த மனநிலைகளில் அதிர்வுகளை உருவாக்கியவை.
ஓவியக் கலைஞர் ஆர்.பி. பாஸ்கரனின் மாணவராகச் சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஐரோப்பிய ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்ற நடேஷ், இந்தியக் கோவில் ஓவியங்களில் குறிப்பாக சோழர், பல்லவர் கால ஓவியங்களில் அதிகம் ஈடுபாடுகொண்டவராக இருந்தார். நடேஷின் ஓவியங்கள் மிகவும் வினோதமானவை. வடிவம்குறித்த பார்வைகளில் அதிரடி மாற்றங்களை வேண்டுபவை. வடிவச் சேர்க்கையானது விலங்குகள், பறவைகள், குருவிகள், வரிக் குதிரைகள், புலிகள், இயற்கை ஆகியவற்றுடன் மனித ஊடாட்டம் ஆகிய பல நிலைகளில் சஞ்சரிப்பது. 1998 இலிருந்து நிர்மாணக் கலையில் (Installation Art) தீவிரமாக இறங்கினார். உண்மையில் அது ஒரு எதிர்ப்பு மனநிலையின் பிரதிபலிப்பு. கலை அரசியல்குறித்த மனநிலையிலிருந்து உருவானது. புனிதங்களுக்கு எதிரான கலகத்தன்மை; வரிசைகளையும் அடுக்குகளையும் மாற்றியமைக்கும் ஒரு மனநிலை. இத்தன்மைகள் நாடகங்களுக்கான அழைப்பிதழ் ஓவியங்களிலும் பிரதிபலித்தன.
1986இல் கூத்துப்பட்டறையில் இணைந்து அரங்க வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பு, ஓவியம், ஒப்பனைகளின் பன்முகக் கலைஞராக உருவெடுத்தார். எளிய பொருள்களைக் கொண்டு பிரமாண்ட மேடை அமைப்பு, ஒப்பனைகளைப் படைத்துக்காட்ட முடியும் என நிரூபித்தார். முத்துசாமியின் அபத்தப் பாணி நாடகங்களுக்கும் அரசியல் நாடகங்களுக்கும் கூத்துப் பாணி நாடகங்களுக்கும் வித்தியாசமான மேடை அமைப்புகள், உடைகள்மூலம் அதன் அர்த்தத் தளங்களை விரிவாக்கியவர். தந்தையின் எழுத்தில் உருவான ‘நற்றுணையப்பன்’ நாடகத்தை நடேஷ் இயக்கியிருக்கிறார். அந்த நாடகம் முகமூடி மனிதர்களைப் பற்றியது. பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளின் பிம்பங்களாகவும் தொடர்ச்சிகளாகவும் பாத்திரங்கள் நடமாடுகின்றன. நற்றுணையப்பன் தெய்வம் செம்மனார்கோவிலிலிருந்து நூலேணி வழியாக இறங்குவது போன்ற படிமம் கற்பனைகளைத் தூண்டுவதாக இருந்தது. அவ்வகையில் அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நிகழ்வுகளுக்கு ஒளியும் மேடையும் அமைத்த நடேஷின் பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது.
முறிந்த மணவாழ்க்கையுடனும் முடங்கிய கால்களுடனும் முத்துசாமியின் மறைவுக்குப் பிறகு தனித்த நிலையில் அவர் கூத்துப்பட்டறையின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிலை ஏற்பட்டது. அவரது மரணம் நாடகச் சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூத்துப்பட்டறையின் நிரந்தர நடிகர்களும், நாடகப் பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று வரும் மாணவர்களுமாகத் தொடர்ந்த செயல்பாடுகள் நிறைந்த ஒரு சூழல், தன் உந்துசக்தியை இழந்துள்ளது. நடேஷ் ஆற்றொழுக்கான நடையில் சுயசரிதை போன்று எழுதி வைத்துள்ள புனைவு, அபுனைவு எழுத்துக்கள் இன்னும் பிரசுரிக்கப்படாமல் உள்ளன.
மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in