இப்போது என்னால் ஒரு கவிதை எழுத இயலுமா?
ஓவியம்: ரோஹிணி மணி
சுந்தர ராமசாமி 1990களின் இறுதியாண்டுகளில் தன் நாட்குறிப்பில் எழுதிய சில குறிப்புகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். கதை, கவிதை, கட்டுரை, கடிதம், நாட்குறிப்பு, சிறு குறிப்புகள் என எதை எழுதினாலும் சு.ரா. அந்த எழுத்தின் மீது காட்டும் ஈடுபாடும் தீவிரமும் அலாதியானவை. உண்மையின் குரலும் ஆத்மார்த்தமும் அவருடைய எல்லா எழுத்துக்களையும் போலவே இந்தக் குறிப்புகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். அன்றாடப் பணிகள், திட்டங்கள், ஏமாற்றங்கள், வாசிப்பு, நிகழ்வுகள் / நூல்கள் சார்ந்த எதிர்வினைகள் எனச் செல்லும் இந்தக் குறிப்புகளில் சு.ரா.வின் ஆளுமையையும் சிந்தனையின் வீச்சையும் மொழி நேர்த்தியையும் காணலாம். சு.ரா. காலமாகி 20 ஆண்டுகள் நிறையும் தருணத்தில் இந்தக் குறிப்புகளை அவரை நினைவுகூரும் விதமாக வெளியிடுகிறோம்.
– பொறுப்பாசிரியர்
சாந்தா க்ரூஸ்
103 சார்ல்ஸ் ஹில் கோர்ட்
மேல்மாடி தங்குவின் அறை
மரங்களிடையே புகுந்து தெற்கு கண்ணாடி ஜன்னலின் மீது வந்து படரும் சூரிய ஒளி உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
நல்ல நாள். மிகவும் நல்ல நாள். நல்ல நாட்கள் எவ்வளவு அபூர்வமானவை என்பதை யோசித்துப் பார்த்தால்தான் தெரியும். நான் மீண்டும் நம்பிக்கை கொள்கிறேன். செயல் குறைவு என்பது என் பலவீனம். நிறைய நினைத்துக் குறைவாகச் செய்வது என் பலவீனம். 50 வருடங்களாக, எனக்குத் தெரிந்து, என்னிடமிருக்கும் பலவீனம் இது. குறைவாக நினைத்து, நினைத்தவற்றை உறுதியாகச் செய்ய நான் கற்றுக்கொள்ள வேண்டும். சறுக்கி விழுகிற ஒவ்வொரு முறையும் மீண்டும் நம்பிக்கை கொள்வது என் பலம். நினைப்போடு காரியத்தை இணைத்துவிட முடியும் என்று நம்பிக்கைகொள்வது என் பலம். புதிய உறுதிப்பாடுகள் செயல்களாக மாறாத வரையிலும் கொள்ளும் நம்பிக்கைகள் பகற் கனவுகளாகி விரையமாகிவிடுகின்றன.
இன்று இப்போது என்னால் ஒரு கவிதை எழுத இயலுமா?
இன்று தேதி 17.12.96 காலை மணி 10.45 செவ்வாய்க் கிழமை
சிறு இலைகள்.
தங்க நிறம்.
வடிவம், ஆடுதன்
இலைகளின் வடிவங்களில்
என் மனம் படியும் வடிவம்.
காற்று விட்டு விட்டு மந்தமாக அடிக்கிறது.
விட்டு விட்டு தங்க நிற இலைகள் துடிக்கின்றன.
அவை துடிக்கும் விதம் என மனதைக் கவருகிறது.
உதிரக் காத்திருக்கின்றன அவை.
மண்ணில் கரைந்து / மீண்டும் மரத்தில் ஊடுருவ /
அவை காத்திருக்கின்றன.
*
என்.டி. ராஜ்குமார் கவிதைகள்
என்.டி. ராஜ்குமார் உண்மையான கவிஞர்.
உண்மையான என்றால் என்ன பொருள்?
உண்மை என்றாலே காலாவதி ஆகிவிட்ட பழங்காலத்துச் சொல் என்ற பாவனை இருக்கிறது. பாவனைதான் உண்மை, பொய், நேர்மை நேர்மையின்மை, ஒழுக்கம், ஒழுக்கக்கேடு என்ற தளங்களைச் சார்ந்துதான் இன்று வரையிலும் சமூக வாழ்க்கை இருக்கிறது. மனித உறவுகள் சமூகம் சார்ந்து இருக்கும் காலம் வரையிலும் இந்தச் சொற்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் இந்தச் சொற்களுக்குரிய அர்த்தங்கள் ஒரே மாதிரி. நேற்றைய உண்மை இன்று பொய்யாகி இன்று புது உண்மைகள் தோன்றும். நேற்றை ஒழுக்கம் இன்று காலாவதியாக இன்று புது ஒழுக்கம் உருவாகி நிற்கும்.
என்.டி ராஜ்குமார் என்ற கவிஞரை உண்மையான கவிஞர் என்று சொல்லும்போது உண்மை என்ற சொல்லுக்கு மனம் என்ன அர்த்தம் தருகிறது.
1. இவர் தன் அனுபவங்கள் சார்ந்து எழுதுகிறார். இந்த அனுபவங்களை இவர் எதிர்கொள்ளும் முறை நேர்மையானது. மனித குலத்தின் அனுபவம் அது. யாருடைய அனுபவமாக இருந்தாலும் சரி அது தன்னளவில் முக்கியமானது.
இது நமக்கு எப்படித் தெரிகிறது?
இப்போது முதல் கவிதையை எடுத்துக்கொள்ளுவோம்.
பச்சமிளகாய்
அரிந்துபோட்ட
கருவாட்டுக் குழம்பின்
ருசியோடும் காரத்தோடும்
என் கவிதை.
இந்தக் கவிதையில் எல்லாச் சொற்களும் எனக்கு முக்கிய மானவைதான்; காரம், ருசி, கருவாட்டுக் குழம்பு, கவிதை.
(தேதி குறிப்பிடப்படவில்லை)
*
24.7.97 திங்கள் கிழமை காலை 6.30 மணி
காலையில் 5 மணிக்கு எழுந்திருந்து உடற்பயிற்சி செய்துவிட்டு 5.30 மணிக்கு நடக்கச் சென்றேன். பள்ளியில் ஒரு வட்டம் வந்தபோது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரம் ஏற்பட்டது. அப்போது சிறு தூற்றலும் தொடங்கிற்று. வீட்டுக்கு வந்தபோது மணி 6.
சி. மோகன் சலபதியைத் திட்டியதுபற்றி கண்ணன் சொன்னான். சிறுபத்திரிகைக்காரர்களைப் பற்றி மொத்தமாக ‘அயோக்கியர்கள்’ என்று சொல்லியிருக்கக் கூடாது. நான் சிறுபத்திரிகைக்காரன்தான்; நான் யோக்கியன் அல்ல என்பதுபோலவே அயோக்கியனும் அல்ல என்பது எனக்குத் தெரியும். மோகனின் உணர்ச்சியை நான் மிகவும் போற்றுகிறேன். ஆனால் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திய விதத்தை நான் ஏற்க முடியாது. கோபத்தைத் தார்மீகமான கோபமாக மாற்றுவதற்குப் பதில் வசையாக மாற்றிவிட்டார்.
தில்லியில் ராஜாவுக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. எல்லோரையும் ஏதோ ஒரு அர்த்தத்தில் துரதிருஷ்டசாலி என்று சொல்லிவிடலாம். சாரதாவை ‘ஒரு விசேஷமான துரதிருஷ்டசாலி’ என்று சொல்ல வேண்டும். கடவுளை அழவைக்கும் துரதிருஷ்டம் அவளு டையது. கடவுளை கதறி அழச் செய்யும் துரதிருஷ்டம்.
*
27.6.87 வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணி
கிட்டத்தட்ட 10 நாட்களாக நாவல் எழுதும் பணி தடைப்பட்டு நிற்கிறது. புதிய கடை திறக்கவிருக்கும் சூழலில் அந்தக் காரியத்தைத்தான் கவனித்து வருகிறேன்.
சிறுகதைக்கான ஒரு குறிப்பு
பெண்கள் சிக்கனமாக இருப்பதும், ஆண்கள்
பணத்தை வீணடிப்பதும் சர்வ சாதாரணமாகப் பார்க்கக் கிடைக்கும் விஷயமாகும்.
*
10.7.97 வியாழக்கிழமை மதியம் 12.30 மணி
நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 425 பக்கங்கள் வரையிலும் வந்திருக்கின்றன. ஆகஸ்டு 14இல் முடிக்க வேண்டும். இப்போது 2 வாரங்களாக கண்ணனின் புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்ததில் நாவல் எழுத்து தடைபட்டு மீண்டும் 2, 3 நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்று மழை தொடங்கியிருக்கிறது. குளிர் இதமாக இருக்கிறது. மனதைத் தொடும் பணி செய்ய இதமாக இருக்கும்.மனதைத் தொடும் பணி செய்யக் கிடைக்க வேண்டுமே.
நேற்றும் கமலாவும் தங்குவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் போய்விட்டு வந்தார்கள். அங்கு தடங்கல். இதனால் மனம் சோர்டைந்திருக்கிறது.
ஒரு வாரம் வரையிலும் இங்கிருந்த யேசுராசா இன்று காலை ராமேச்வரம் போகிறார்.
*
26.7.97 சனிக்கிழமை
நாவல் எழுத்து நடந்துகொண்டிருக்கிறது. சுமார் 480 பக்கங்கள் வரையிலும் எழுதியிருக்கிறேன். ஆகஸ்டு 10ஆம் தேதியோடு எழுத்தை முடித்துக் கொண்டு முதல் பிரதியை எம்.எஸ்.ஸிடம் படிக்கத் தரலாம் என்றிருக்கிறேன். நாவல் இப்போது ஒரு சராசரித்தளத்தில் இருக்கிறது. இனிமேல் இதைச் சிறுகச் சிறுக மேலெடுத்துச் செல்ல வேண்டும்.
ஆகஸ்டு 10ஆம் தேதிக்குப் பின்னர் அடுத்த கட்டப் பணிகளைக் கவனிக்க வேண்டும். தினமும் 3 பக்கங்களாவது எழுத வேணடும். முடிந்த மட்டும் படிக்க வேண்டும்.
‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் குறிப்புகள் எழுத விரும்புகிறேன். இக்குறிப்புகளில் மிகச் சிறப்பானவற்றை மட்டும் அச்சேற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. இன்று நாவல் சுமார் 3 பக்கங்கள் எழுதினேன்.
*
1.8.97 – வெள்ளி
காலை 6 மணிக்கு எழுந்திருந்தேன்.
இரவு நல்ல மழை. காலையில் நடக்கப் போகவில்லை. ‘மண்ணும் மனிதரும்’ விட்டுப்போயிருந்த படிப்பை இன்று காலை தொடர்ந்தேன். வாசிப்பு இதமாக ஓடிற்று. அதன்பின் தினசரிகளைப் படித்தேன். பணிக்கு வருவதாகச் சொல்லியிருந்த புதிய பெண் விஜயா வரவில்லை. பாரதிப்பித்தன் வந்து அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். விஜயாவுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டுக் கடிதம் எழுதினேன். பாரதிப்பித்தன் அவரும் நண்பர்களுமாகச் சேர்ந்து கட்டும் கோவிலுக்கு நன்கொடை எதிர்பார்க்கிறார். தினசரிகள் பார்த்தேன். ‘செம்மலர்’, ‘ஓம் சக்தி’ புரட்டினேன். எம். எஸ்ஸுடன் உட்கார்ந்து கிக்விற்றா (ஹிக்விட்டா). என். எஸ். மாதவன் - மலையாளக் கதை மொழிபெயர்ப்பைச் சரி பார்த்தேன். மொழிபெயர்ப்பின் தரத்தைக் கூட்ட முடிந்தது மன நிறைவைத் தந்தது. காலையிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஒரு நிமிஷம் கூட வீண் செய்யவில்லை. V.R. கடை கண்ணன் விபத்தில் காயமடைந்து விட்டான். கணேசன் (சந்நியாசி) உடன்போகும்போது அவனை இன்று போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் மழைபெய்யும் சூழல் இருக்கிறது. சத்திக் கன்னாவிடமிருந்து தந்தி வந்தது. டிசம்பரில் நாகர்கோவிலில் இருப்பேனா என்று கேட்டிருக்கிறார். செப்டம்பர் பாதிவரையிலும் நிச்சயமாக இருப்பேன் என்றும் அதன் பின்னர் அமெரிக்காபோகும் வாய்ப்பு உண்டு என்றும் எழுதியிருக்கிறேன். நானே தந்தி அலுவலகம் சென்று தந்தி கொடுத்துவிட்டு வந்தேன். C.B. Hospital போய் நானும் கமலாவும் கண்ணனைப் பார்த்துவிட்டு வந்தோம். வலது கை முட்டு உடைந்துவிட்டது. விலா எலும்பிலும் நல்ல அடிபட்டிருக்கிறது. இப்போது மணி 7.20. மாலையில் மண்ணும் மனிதரும் ஒரு அத்தியாயம் படித்தேன். லீலா வரவில்லை. அவருடைய சகோதரிக்குக் குழந்தை பிறந்திருப்பதாக போனில் சொன்னாள்.
*
நாவல் பற்றிச் சில சிந்தனைகள்
நாவலில் யதார்த்தமும் அதற்கு அப்பாலும்
10.10.99 ஞாயிறு காலை 5. 30 மணி
MILAN KUNDERA ‘THE ART OF THE NOVEL’
சுய சிந்தனைகள்:
நாவல் விமர்சகனுக்கு நாவல் பற்றிச் சொல்ல இருக்கும். அதேபோல் நாவல் படைப்பாளிக்கும் நாவல் பற்றிச் சொல்ல இருக்கும். நாவல் படைப்பாளிக்கு ஒரு புறவயப் பார்வை சாத்தியமில்லையென்று சொல்ல முடியாது. படைப்பாளி தன் வாசிப்பு அனுபவத்தோடு தன் படைப்பு அனுபவத்தை இணைத்துப் பேசுகிறான். விமர்சகனுக்கு நாவல் பற்றிய படைப்பனுபவம் இல்லை. அவன் தன் வாசிப்பை மட்டுமே சார்ந்திருக்கிறான். விமர்சகனுக்கு நாவல்பற்றி ஒரு பொதுப்பார்வை சாத்தியம். ஒரு பொதுப்பார்வை தனக்குத் தேவையென்று அவன் கருதும்பட்சத்தில் அது சாத்தியம். நாவல், படைப்பாளியின் நாவல்களைப் பற்றிய சிந்தனைகளை உருவாக்கும்போது அவருடைய சொந்தப் படைப்பின் குணங்கள் வலுவான செல்வாக்கை அவனிடம் செலுத்துகின்றன. தான் படைத்துள்ள நாவல்களின் குணங்களை முன்னுதாரணமாக நாவல்களின் குணங்களாக அவன் மாற்றிக் கொண்டுவிடும் வாய்ப்பு அதிகமுண்டு. நாவல்பற்றி எந்த அணுகுமுறையை வாசகர்கள் ஏற்றுக்கொண்டால் தன் நாவல்களை மிக உயர்வானதாகக் கருதுவார்களோ அந்த அணுகுமுறையையே சிறந்த நாவலை இனம் கண்டுகொள்வதற்கான அணுகுமுறையாக படைப்பாளி முன் வைக்கக்கூடும். எடுத்த எடுப்பில் இது ஒரு குறையாகத் தோன்றக்கூடும். விமர்சன அளவுக்குப் படைப்பாளியின் சிந்தனைகள் புறவயமானவை அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். திட்டவட்டமாக அப்படிக் கூற முடியும் என்று தோன்றவில்லை. படைப்பாளிக்குரிய கோணத்தில் இந்தப் பிரச்சனையை இப்போது அணுகலாம்.
*
10.10.10.99 ஞாயிறு
ஒரு படைப்பாளி நாவல் பற்றிப் பேசும்போது அதற்குப் பின்னால் இருக்கும் அனுபவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள்
2. வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள்
3. படைப்பு- முக்கியமாக நாவல் படைப்பு- சார்ந்த அனுபவங்கள்
ஒரு விமர்சகன் - விமர்சகன் என்று நான் இங்கு குறிப்பிடுவது - படைப்பாளி அல்லாத விமர்சகனை - நாவல் பற்றிப் பேசும்போது அதற்குப் பின்னால் இரண்டு அனுபவங்கள் இருக்கின்றன.
1. வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள்
2. வாசிப்பு அனுபவங்கள்
படைப்பு அனுபவம் விமர்சகனுக்கு இல்லை. இதனால் விமர்சகனைவிட படைப்பாளிதான் நாவல் பற்றிப் பேச அதிக தகுதிகொண்டவன் என்ற முடிவுக்கு வர இயலுமா?
விமர்சகனுக்கு நாவல் பற்றி ஒரு புறவயப் பார்வை சாத்தியம். ஒரு மொழியிலுள்ள நாவல்களின் பொதுக் குணங்களை அவன் ஆராய்ந்து தொகுக்கலாம். அவனது மனத்தை வெகுவாகக் கவர்ந்த பெரிய அல்லது சிறந்த நாவலை முன்னிறுத்தி அல்லது பெரிய நாவல்களை முன்னிறுத்தி நாவல்களின் சிறப்பியல்புகளை அவன் வகுத்துக் கொள்ளலாம். பெரிய நாவல்களையும் தன் மொழியில் விமர்சகன் படிக்க நேர்ந்த நாவல்களையும் ஒப்பிட்டு நிறைகுறைகளை ஆராய்ந்து நாவல் பற்றி ஒரு பார்வையை அவன் உருவாக்கிக்கொள்ளலாம். எப்போது ஒரு பார்வை அல்லது ஒரு பொதுத்தன்மை ஊடுருவி நிற்கும் விமர்சனம் உருவாகி விடுகிறதோ அப்போது விமர்சகன் பேசுவது நாவல் பற்றி அல்ல, நாவல் எனும் கலை பற்றி.
படைப்பாளிக்குச் சாதமாக நிற்கும் விஷயம் - விமர்சகனோடு ஒப்பிடும்போது - அவனுடைய படைப்பனுபவங்கள் முக்கியமாக நாவல் படைப்புச் சார்ந்த அனுபவங்கள்; இச்சாதகநிலையே ஒரு பாதக நிலையாகவும் மாறிவிடலாம்.
படைப்பாளிக்கும் அவனது படைப்புக்குமான உறவு existential ஆனது human existence சம்பந்தப்பட்டது; Human experience சம்பந்தப்பட்டது. தன்னிலிருந்து தன் படைப்புக்களைப் படைப்பாளியால் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. படைப்பாளி என்று நான் இங்கு குறிப்பிடுவது தனது நம்பிக்கைசார்ந்து செயல்படுகிறவனை லௌகீகம் சார்ந்த வெற்றி தோல்விபற்றிக் கவலைப்படாதவனை அல்லது எவ்வளவு எதிர்மறையான சூழலிலும் தனது நம்பிக்கைகளை, விமர்சனங்களைச் சமூகத்தோடு தைரியமாகப் பகிர்ந்துகொள்கிறவனை. வெற்றிக்காக வளைந்து கொடுப்பவனை அல்ல. தனது சிந்தனையை இயக்கத்திற்காகவோ, தொலைக்காட்சி ஊடகங்களுக்காகவோ பத்திரிகைகள் அரசியல், பதவிகள், அதிகாரம் இவற்றிற்காகவோ அடகுவைப்பவனை அல்ல. பரிசுகள்தான் படைப்பாளியின் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்று நம்பி இளித்துக்கொண்டிருப்பவனை அல்ல. பணமோ, பதவியோ, புகழோ தேடி அலைந்து தன்னை விற்றுக் கொள்பவனை அல்ல. ஒரு உண்மையான படைப்பாளிக்கும் அவனுடைய படைப்புகளுக்குமான உறவும் அவனுடைய உடலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஒரு படைப்பை இழக்கும்போது ஒரு அங்கத்தை இழந்ததுபோன்ற துன்பத்தையே படைப்பாளி அடைகிறான். வணிக எழுத்தாளனுக்கு இந்தத் துன்பம் என்ன என்பது தெரியாது.
படைப்பாளி நாவலைப் பற்றிப் பேசும்போது அவனது பேச்சை அதாவது சிந்தனைகளை சுயபடைப்பனுபவம் அதிக அளவில் பாதித்திருப்பதை உணர முடிகிறது. அவன் படைக்கும் விதமான நாவல்களை வாசகன் முன்னுதாரணமான நாவல்களாக ஏற்றுக் கொள்ளத் துணை நிற்கும் சிந்தனைகளையே அவன் அதிக அளவுக்கு உருவாக்குகிறான். இன்றும் தெளிவாகக் சொல்லப் போனால் நான் நாவல் பற்றிப் பேசும்போது என்னுடைய நாவல்களை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளத் துணை நிற்கும் வாதங்களையே முன் வைக்கிறேன் என்று ஒரு விமர்சகனுக்குத் தோன்றலாம்; அதில் உண்மை இல்லையென்று இல்லை. இவ்வாறான ஒரு பார்வை எனக்கு இழிவானதும் அல்ல. ஏனெனில் நாவல் சார்ந்த எனது நம்பிக்கைகள்தான் என் நாவலில் வெளிப்படுகின்றன. நாவல் சார்ந்த என் பார்வை வாழ்க்கை சார்ந்த பார்வையிலிருந்து பிரிக்க முடியாதது. இவ்வாறு வாழ்க்கைக்கும் நாவலுக்குமான உறவை உயிருககும் உடலுக்குமான உறவாக எடுத்துக்கொள்ளும் நிலையில்தான் நாவல் அதன் கௌரவத்தைப் பெறுகிறது. நாவல் வாழ்வுடன் உறவுகொள்ளும்போது அது தத்துவம் உள்ளிட்ட சகல அறிவுத் துறைகளுடனும் பிற கலை வடிவங்களுடனும் காலத்துடனும் பரிணாமத்துடனும் பிரபஞ்சத்துடனும் தன் உறவைப் பிரித்துக்கொள்ளுகிறது. இன்றைய உலக நாவல் பேசாத விஷயம் எது என்று கேட்டால் எதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவிஞர்களும் தத்துவாசிரியர்களும் பௌதிக விஞ்ஞானிகளும் உளவியலாளர்களும் மனநல மருத்துவர்களும் நாவல் என்ற மிகப் பெரிய கலைவடிவத்துக்குள் - மனிதனின் சிந்தனைக்குள் சிக்கியுள்ள ஆகப் பெரிய கலை வடிவமும் இதுதான் – திரைப்படத்தைப் போல் அல்லாமல் ஒவ்வொருவரையும் தனியாகவும் அந்தரங்கமாகவும் சந்திக்கும் வடிவம் - ஒரு சிறந்த நாவலின் ஆயுளை எந்தப் படமும் இதுவரையிலும் பெற்றதில்லை - இவ்வளவு பெரிய வடிவத்தை வாழ்க்கையிலிருந்து பிரித்துத் தொடர்கதைகளாக மாற்றியிருக்கிறோம். இன்றும் தமிழில் மிக முக்கியமான நாவலாசிரியராகக் கருதப்படுபவர்கள், கருதப்படுகிறவர்கள் மட்டுமல்ல வாசகர்களின் அமோக ஆதரவுக்கு ஆளாகிக்கொண்டி ருப்பவர்களின் படைப்புக்கும் நிதர்சனமான புலன்களுக்கு அனுபவமாகும் தமிழ் வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ் நாவலாசிரியர்களின் கற்பனை - இலக்கியத்தில், கற்பனை என்பது வாழ்வு சார்ந்தது, வாழ்வோடு பொருத்திப்பார்க்கும்போது பொருள் தருவது, அர்த்தம் தருவது, தமிழ் நாவலாசிரியரின் கற்பனைக்கும் தமிழ் வாழ்வுக்கும் சம்பந்தமே இல்லை.
***
17.5.1958
உயர்திரு. ராஜாஜி அவர்களுக்கு,
அநேக நமஸ்காரம்.
இம்மாதம் 31 ஆம் தேதியும் ஜூன் மாதம் முதல் தேதியும் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடு நடைபெறுகிறது என்பதையும், தொடர்ந்து ஏனைய விவரங்களையும், பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள். மாநாடு நிர்வாகக் காரியதரிசிகளில் நானும் ஒருவன். மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானத்தைக் கொண்டுபோக எண்ணியுள்ளேன்.
1. இந்திய அரசாங்க மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து - கால வரையறையின்றி - இருக்க வேண்டுமென்றும்
2. கல்லூரிகளில் கல்வி மொழியாக (medium of instruction) அந்த அந்த ராஜ்ஜியங்களின் மொழிகளே இருத்தல் வேண்டுமென்றும்,
3. இந்தி மொழி கல்வி நிலையங்களில் கட்டாயப் பாடமாக வற்புறுத்தப்படாமல் மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மொழியாக ஆக்க வேண்டும் என்றும்
இம்மகாநாடு முடிவு செய்கிறது.
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையான எண்ணம் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் உருவானதாகும்.
தங்கள் ஆசியையும் யோசனைகளையும் விரும்புகிறேன்.
அன்புள்ள,
சுந்தர ராமசாமி.
1958ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடுபற்றி ஒரு குறிப்பு - அ.கா. பெருமாள்
நாகர்கோவில் கோட்டாறு பார்வதிபுரம் சாலையில் ஜவகர் மருத்துவமனை அருகே பெரிய மைதானத்தில் 1958இல் நடந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தமிழகத்தில் உள்ள முன்னணிப் படைப்பாளிகளும் ஆராய்ச்சியாளர்களும் பங்குகொண்டனர் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த இரண்டாம் ஆண்டில் இந்த மாநாடு நடந்தது
இந்த மாநாட்டை நடத்தக் காரணமாய் இருந்தவர், ஏற்பாடுகளை ஒழுங்கு செய்தவர் வே. நாராயணன். சுந்தர ராமசாமியின் தாய்மாமாவான இவர் பிற்காலத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையில் பரந்தாமன் என்னும் பெயரில் எழுதினார்.
இந்த மாநாட்டிற்குத் திரு.வி.க. வெ. சாமிநாத சர்மா, ந. சஞ்சீவி, நாரண துரைக்கண்ணன், நா. பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், கவி கா.மு. ஷெரீப் முதலான பலரும் வந்திருந்தனர்.
வெளியூர்களிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி, மாஸ்கோ மணிவர்மன், பி.எஸ். மணி, பேராசிரியர் தெ. வேலப்பன் எனச் சிலரின் வீடுகளில் தங்கினார்கள். சு.ரா. வீட்டில் சாமிநாத சர்மா தன் பேத்தியுடன் தங்கியிருந்தார்.
மாநாட்டில் மரபு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் பற்றிப் பேசினார்கள். தொ.மு சி. கல்கியின் நாவல் பற்றிக் கிண்டலாகப் பேசியபோது பார்வையாளர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. வே. நாராயணன் அதைச் சமாளித்தார்
மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவற்றில் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும், இந்தித் திணிப்பு கூடாது என்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. பார்வையாளர்களிடமிருந்து இந்தித் திணிப்பிற்கு எதிரான குரல் வந்தது. மொழிப் பிரச்சினை தீவிரமாக விவாதிக்கப்பட்டுவந்த காலத்தில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் இந்திக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இந்த மாநாடு நடக்கும்போது சு.ரா.விற்கு வயது 27. மாநாட்டை நடத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு இருந்தது.