ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம்
அவனைக் கண்டீர்களா?
(குறுநாவல்)
பா.அ. ஜயகரன்
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்,
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 627 001
பக். 216
ரூ. 270
தமிழ்த் தேசியப் போரிலக்கியம் வெளிப்படுத்திய மூடுண்ட பதிவுகளிலிருந்து நாம் உருவாக்கிக்கொண்டி ருக்கும் மனப்பதிவுகளுக்கு அப்பால் போரால் பாதிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விளிம்புநிலையினர், அகதிகள் ஆகியோரின் உலகை அசலாகக் காட்டியிருக்கிறது பா.அ. ஜயகரனின் ‘அவனைக் கண்டீர்களா’ சிறுகதைத் தொகுப்பு.
பொதுப்புத்தியிலிருந்து வெளித் தள்ளப்பட்ட மாற்றுப் பாலினத்தோர், பாலியல் தொழிலாளர்கள், கைவிடப்பட்ட தெருவோர மனிதர்கள், கடைநிலை ஊழியர்கள் குறித்து எந்தப் புகார்களுமின்றிப் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நகர்ந்திருக்கின்றன இவருடைய கதைகள்; அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கடந்து மென் உணர்வைத் தொட்டுச்செல்கின்றன.
பா.அ. ஜயகரனின் கதை சொல்லல் பாணி சுவாரசியமானது. இரட்டைக் கதைகளாக நகர்ந்து கடைசியில் ஒரு புள்ளியில் முடிகின்றன. உதாரணமாக ‘நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்’ கதை முதியவரையும் அவர் உருவாக்கிய பூங்காவையும் இணைத்து உருவானது. ‘புத்தன் தொலைந்த வெளி’ வளர்ப்பு நாயுடன் காதலை இணைத்துச் சொல்லப்படுவது, ‘இல்லாத கால்களின் வலி’யில் உச்சிக் கோபுரத்தையும் கால்களையும் இணைத்துக் கதை பின்னியது என்பவற்றைக் குறிப்பிடலாம்.
பல கதைகளில் இலங்கைப் போர் பின்னணியாக இருக்கிறது. தீவிர இலக்கிய வாசகர்களில் கணிச மானவர்கள் போரிலக்கியத்தின் வெம்மையைத் தாளாது “அய்யோ வேண்டாம்” என்று விலகிச் செல்லும் நிலையிருப்பதை அவதானிக்க முடியும் கதைகள் இலங்கைப் பின்னணியில் ஆரம்பமானாலும் பெரும்பகுதிக் கதை மேற்கத்திய நாடுகளில் நடப்பவை;
‘அவனைக் கண்டீர்களா?’ கதையில் இலங்கைப் போர்ச் சூழலில் தன்பாலினத்தவராக அறிமுகமாகும் ரவி கதாபாத்திரம் மேற்கத்திய நாடொன்றில் பாலியல் களியாட்ட விடுதியின் விளிம்புநிலைப் பணியாளராக மாறுகிறார். இந்தக் கதை வாசகருக்கு மாறுபட்ட பார்வையை உருவாக்கக்கூடும். படிக்க ஆரம்பிக்கும்போது பாலியல் கதையாக மாறிவிடுமோ என்று தோன்றக்கூடும். ஆனால் கதைக்குள் அதற்கான மறுபக்கத்தையும் உள்ளடக்கிச் சமநிலையுடன் முடிகிறது. தன்பாலினத்தவரான ரவி கதாபாத்திரத்தை மிகைப்படுத்துதலோ, குறை மதிப்பிடுதலோ இன்றிக் கதையின் மையமான குற்ற உணர்வை இயல்பாக எழுதுகிறார் ஜயகரன். குற்ற உணர்வு ஏற்கெனவே இலக்கியத்தில் உரையாடப்பட்டுக்கொண்டிருந்தாலும், கதை நடக்கும் இடமும், கதை சொல்லல் முறையும் மாறுபட்டிருப்பது இக்கதையின் தனிச் சிறப்பாகக் கொள்ள முடியும். இலங்கைப் போரிலக்கியத்தில் பால் புதுமையினர், மாற்றுப் பாலினத்தவர் நிலை போதுமான அளவு உரையாடப்படாத நிலையில், இந்தக் கதை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கதைகள் பிசிறில்லாத உறுத்தலற்ற மென்னுணர்வை வருடுபவையாக இருந்தாலும் கதையினூடாகக் கதைக்கு வெளியே தாவி உரையாடலை உருவாக்கும் தருணங்களையும் இவற்றில் ஆங்காங்கே அவதானிக்கலாம். உதாரணமாக ‘சந்தி: ஒரு கதை சொல்லியின் கதை’யில் ஏஞ்சல் என்ற கதாபாத்திரம் “எனது யோனியைக் காப்பதற்குக் காவலர்களும் தண்டத்துக்கு நீதிபதிகளும் இருக்கும்வரைக்கும் சட்டமும் ஒழுங்கும் எனது யோனிக்குள் நிலைநாட்டப்படுகிறது” என்று கூறுகிறது. அதுபோல் ‘ஜெனி - போரின் சாட்சி’ கதையில், “தோழர் நாத் ஆயுதங்களை எடுத்துப் பாருங்கோ’ என்றார் மல்லி”. போராட்டத்துக்கு வெளியே நிற்பவனை ஆசையைத் தூண்டி உள்ளிழுக்கும் பிரச்சாரமாகவே இந்தக் கூற்று கதையில் சொல்லப்படுகிறது. பதின்வயதுடையோரை அதிகாரத்தின் உச்சமான ஆயுதம் ஈர்த்துக் கொள்வது அந்த வயதுக்கான உளவியல். இக்கதையில் தொடர்ச்சியாக, “ஆயுதத்துக்கு அரசியல் முக்கியம் தோழர்” என்று வேறு ஒரு நிலையில் மல்லி கதாபாத்திரம் நாதனிடம் சொல்கிறது.
இந்த ஆயுத உற்பத்தியும், அதற்குள் இருக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தையும் நாளாந்தம் அகதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆயுதத்துக்கு அரசியலா, அரசியலுக்கு ஆயுதமா என்றால் இரண்டும் இணைந்து உருவாக்கும் அழிவுகளும் கொலைகளும், அகதிகள் உருவாக்கமும் வெளியேற்றமும் என்பன விரிந்த தொடர் உரையாடலுக்கானது. இந்த உரையாடலை ‘ஜெனி போரின் சாட்சி’ கதை தொட்டுச் செல்கிறது.
இத்தொகுப்பில் பெரிதும் சிறிதுமாகப் பத்துக் கதைகள் இருக்கின்றன. அத்தனை கதைகளையும் நாடகத்தன்மைகள் இல்லாமல் இயல் நிலையில் நேராக எழுதிய அவரிடமிருந்து இதுபோன்ற நிறைவான கதைகளை எதிர்பார்க்கலாம்.
மின்னஞ்சல்: pathixyz@gmail.com