கண்மூடிக் காணும் கலை
பல வருடங்களுக்கு முன்பு, நடேஷின் ஓவியங்கள் குறித்து ஓவிய நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், ஏனைய விஷயங்களுடன், அவரது ஓவியங்களில் காலமும் இடமும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அல்லது அந்த ஓவியங்கள் காலம் இடம் ஆகியவற்றிலிருந்து தப்பிச் செல்வனவாக இருப்பதை உணர்ந்தோம். இது பார்வையாளராகிய நம்மை நிலைகுலையச் செய்கிறது. எதனோடும் அவற்றைப் பொருத்திப் பார்ப்பது கடினமாகிறது. காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் யானையைப்போல அவை நம் பிடியிலிருந்து நழுவிச் செல்கின்றன. அவரது ஓவியங்களில் செங்குத்து, கிடைமட்டம் போன்றவை கிடையாது - பற்றிக்கொள்ளவோ காலூன்றி நிற்கவோ எதுவும் இல்லை. மேலும் காகிதத்தின் ஓர வரம்புகள்மீது அவருக்கு அப்படியொன்றும் மரியாதை இல்லை. அவர் காகிதத்தையாவது பார்க்கிறாரா என்ற வலுவான ஐயம் எனக்குண்டு. அவரது உடலிலிருந்து ஓவியங்கள் கசிகின்றன; குதிரைகள், புலிகள், சிங்கங்கள், காளைகள், பறவைகள், பெண்கள், ஆண்கள், பாதி ஆண், பாதிப் பெண், பாதி ஆணும் குதிரையும், இப்படிப் பலப்பல.
நடேஷ் தனது ஓவியங்களைத் தம் போக்கில் உருவானவை என்று குறிப்பிடுகிறார். இப்படித்தான் மிகை யதார்த்தவ