யார் அந்த நண்பர்?
1919 ஜனவரி மாத இறுதி. ஏராளமான தேசிய இயக்க நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்ட ‘கணேஷ் கம்பெனி’ என்னும் கணேஷ் வெளியீட்டு நிறுவனம் ‘இந்தியாவும் சுய ஆட்சியும்’ என்னும் நூலை வெளியிட்டது.
சென்னை மாகாணத்தில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவரும், ஆங்கிலேய ஆட்சியின் மீதான அதிருப்தியை அமெரிக்க அதிபர் வில்சனுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்து அதன் விளைவாக ஆங்கிலேய அரசப் பிரதிநிதியால் அழைக்கப்பெற்றுக் கண்டனத்தை எதிர்கொண்டவரும், இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்றவரும், மகான் மணி ஐயர் என்று போற்றப்பட்டவருமாகிய சர் (பின்னர் அப்பட்டத்தையும் துறந்தவர்) எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதிய முகவுரையையும் இந்நூல் பெற்றிருந்தது.
இதன் முற்பகுதியில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மூன்றும் மொழிபெயர்ப்புகள். ஏ.ஓ. ஹியூம் ஆங்கிலத்தில் எழுதிய இரு பாடல்கள், சரோஜினி தேவியின் சொற்பொழிவில் இடம்பெற்ற ஒரு பகுதியின் கவிதை வடிவம் ஆகியனவே அவை. ‘இந்தியா’, ‘சுய ஆட்சி’, ‘மெய்க்கீர்த்திப் ப