சண்டாளர் என்பவர்...
காலச்சுவடு செப்டம்பர் 2024 இதழில் வெளியான ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘சண்டாளனும் பறையனும்’ கட்டுரை தொடர்பாகச் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘சண்டாளன்’ என்பதற்கான வரையறையை மனுதர்ம சாஸ்திரமே தருவதாகக் குறிப்பிடும் அவர் ‘சூத்திரனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவன் சண்டாளன்’ என்ற அந்த நூலின் சூத்திரத்தை மேற்கோளிட்டுள்ளார். அதற்கடுத்ததாக, “பின்னர் பிராமணர் அல்லாத மூவகை வர்ணத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பிராமண வர்ணப் பெண்களுக்கும் பிறப்போர் என்று பொதுவாக அறியப்படுகிறது. எனவே சண்டாளன் என்ற சாதி மனு தர்மம் முன்மொழிந்த சாதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு கூற்றுமே சரிபார்க்கப்பட வேண்டியவை.
பிராமணர் அல்லாத மூவகை வர்ணத்தைச் சேர்ந்த ஆண்களுக்குப் பிராமண வர்ணப் பெண்ணிடம் பிறக்கும் குழந்தைகளுக்கு வர்ணத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு பெயரை மனுதர்ம சாஸ்திரம் தருகிறது. “சத்திரியனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்தவனுக்குச் சூதன் என்று பெயர்; வைசியனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்தவனுக்கு வைதேகன் என்று பெயர் (10.11): சூத்திரனுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை சண்டாளன் எனப்படுவான் (10.12)” ‘மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம்’, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 2011/2017).
மனுதர்ம சாஸ்திரத்தை அடியொட்டிப் பின்னர் பிறந்த யாக்ஞவல்கிய தர்ம சாஸ்திரமும் “சத்திரிய ஆணுக்குப் பிராமணப் பெண்ணிடம் பிறப்பவன் சூதன்; வைசிய ஆணுக்குப் பிறப்பவன் வைதேகன்; சூத்திர ஆணுக்குப் பிறப்பவன் சண்டாளன்; இவனுக்கு எந்த தர்ம காரியங்கள் செய்யவும் அனுமதியில்லை” என்று குறிப்பிடுகிறது (Yajnavalkya- A Treatise on Dharma, edited and translated by Patrick Olivelle; Murthy Classic Library of India, Cambridge, 2019).
இனி இரண்டாவது பகுதிக்கு வருவோம்:
இது தொடர்பாக, தர்மானந்த கோஸம்பி தனது ‘பகவான் புத்தர்’ நூலின் பத்தாவது அத்தியாயத்தில் (சாதிப் பிரிவினை) எழுதியுள்ளவற்றில் ஒரு பகுதியைத் தருகிறேன்:
‘மற்றச் சிரமண சங்கங்களுக்குள்ளே, நிக்கந்தர்களின் சங்கத்தைப் பற்றித்தான் ஓரளவு செய்திகள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சிரமண சங்கம், அசோகன் காலத்திற்கு முன்னமே, சாதி வேற்றுமைக்குப் பெருமை தரத் தொடங்கியதாக ஆசாரங்க சூத்திரத்தின் நிருக்தியினின்று தெரியவருகிறது. இந்த நிருக்தியை இயற்றிவர் பத்திரபாகு; அவர் சந்திரகுப்தரின் குரு என்று ஜைனர்கள் கருதிவருகிறார்கள். இந்த நிருக்தியின் தொடக்கத்திலேயே சாதிப் பிரிவினையைப் பற்றிய செய்தி வருகிறது. அதன் சாரமாவது:
“நான்கு வருணங்கள் சேர்க்கையினால் பதினாறு வருணங்கள் தோன்றியுள்ளன. அந்தணனும் சத்திரியப் பெண்ணும் சேருவதனால் பிரதான சத்திரியன் அல்லது ஸங்கர சத்திரியன் தோன்றுகிறான் இப்படி ஏழு வருணங்கள் ஆயின. இனி, ஒன்பது வருணாந்தரங்களாவன: 1. அந்தணனுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறக்கும் அம்பஷ்டன். 6. சத்திரியனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் ஸூதன்… 8. வைசியனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் வைதேகன். 9.வேளாளனுக்கும் அந்தணப் பெண்ணுக்கும் பிறக்கும் சண்டாளன்.” (ஆசாராங்க நிருக்தி, அத்.1, காதை 21-27)
இன்று நாம் காணும் மனுஸ்மிருதி இந்த நிருக்திக்கு மிகப் பிற்காலத்தியது. ஆயினும் இந்த நிருக்தி தோன்றிய காலத்தில் அந்தணர்கள் மனுஸ்மிருதியிலுள்ள அநுலோம, பிரதிலோம சாதிகளுக்கு இவ்வாறு மொழிப் பொருள்காரணம் காண முயன்றிருப்பார்கள் என்று ஊகிக்கத் தடையில்லை.’
மின்னஞ்சல்: srinipotty66@gmail.com