மதுரைப் புத்தகக் காட்சி 2024 நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
சென்னைக்கு அடுத்து, பரப்பளவிலும் விற்பனையிலும் முக்கியமானதாக இருப்பது மதுரைப் புத்தகக் காட்சி. குளிரூட்டப்பட்ட அரசு அரங்கில் நடைபெறும் ஒரே புத்தகக் காட்சியாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பபாசி மட்டுமே பொறுப்பேற்று நடத்திவந்தபோது, மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் ஐஏஎஸ் போன்றவர்கள் மதுரைப் புத்தகக் காட்சியின் வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றி உள்ளனர்.
மக்களின் வாசிப்புப் பழக்கம் என்பது சமூக ஆரோக்கியம். இதை உணர்ந்தே அரசு மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை அறிவித்துள்ளது. அதற்காகத் தனியாக நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பித்துள்ளது. சால்வைகள், மலர் மாலைகளைத் தவிர்த்துப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்றது. இவையனைத்துமே ஒரு அரசு தான் சார்ந்த மக்களை அறிவுச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று நினைத்ததால் கொண்டுவந்தவை என்பதில் சந்தேகமில்லை. தவிர, இலக்கிய நிகழ்வுகளையும் தமிழ்க் கலை கலாச்சாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து நடத்திவருகிறது. ஆனால் மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி என்னும் நோக்கம் நல்ல முறையில் நிறைவேறிவருகிறதா, அந்த அறிவிப்பு வெளியாகும்போது இருந்த அதே பொலிவோடும் நோக்கத்தோடும் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ என்ற கேள்விகள் இந்த ஆண்டு மதுரைப் புத்தகக் காட்சியைப் பார்த்தபோது எழுந்தன. பரவலான விளம்பரங்கள் இல்லாமல், நிர்வாகத்தின் முழுமையான ஈடுபாடு இல்லாமல், வருடத்தில் ஒருமுறை என்ற சம்பிரதாயமாக மதுரைப் புத்தகக் காட்சி மாறிவருகிறதா என்ற ஐயம் எழுந்திருக்கிறது. அந்த அளவுக்கு அங்கே புத்தகக் காட்சியின் நோக்கத்திற்கு முரணான காரியங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் 6முதல் 16வரை நடந்த மதுரைப் புத்தகக் காட்சிக்கு அரங்குகள் ஒதுக்குவதில் பிரச்சினை. 80 அரங்குகள்வரை பற்றாக்குறை உள்ளது. இரண்டு அரங்குகள் ஒதுக்கியவர்களிடம் ஒரு அரங்கு எடுத்துக்கொள்ளும்படி கேட்டுவருகிறோம் என்று பபாசி செயற்குழு உறுப்பினர் பரிசல் செந்தில்நாதன் சொன்னார். 80 பேருக்கு இடப்பிரச்சினை என்பது மிகவும் பெரியது. பபாசியின் நிர்வாகத்திலிருந்தவன் என்ற முறையிலும், பதிப்பாளர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கருதி, டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் இரண்டு அரங்குகளுக்கான வரைவோலை கொடுத்த நிலையில், கடைசி நேரத்தில் ஒரு அரங்கினை விட்டுக்கொடுத்தோம்.
புத்தகக் காட்சிக்குச் சென்றபோதுதான் அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே வழக்கத்தைவிடக் கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான அரங்குகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் புத்தகங்களோடு தொடர்பில்லாத சில அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருபுறம் உள்ளே நுழைந்து இன்னொரு புறம் வெளியேறிவிட வேண்டும் என்பது மட்டுமே நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. இடையில் உள்ள வரிசைகளில் சிக்கியவர்களின் புலம்பல் கேட்டுக்கொண்டே இருந்தது.
கண்காட்சியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான மூன்று சிறப்பு அரங்குகள் வெளிப்படையான ஏமாற்றத்தைத் தந்தன. இந்த அரங்குகளில் 50% தள்ளுபடியில் நூல்களை விற்பனை செய்வதாகச் சொன்னார்கள். இந்த அரங்கினை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா தனிப்பட்ட முறையில் விரும்பி அமைத்ததாகப் பிறகு அறிந்தேன். மாணவர்கள் கூட்டமாக வரும்போது அவர்கள் தங்களுக்கான நூல்களைக் குறைந்த விலையில் வாங்கும் நல்ல நோக்கத்தோடு மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
மாவட்ட ஆட்சியரின் இந்த யோசனையை பபாசி நிர்வாகம் எப்படிக் கையாண்டுள்ளது என்று பார்த்தால் அதிகாரிகளின் பாராமுகமும் பபாசி நிர்வாகப் பொறுப்பாளர்கள் சிலரின் சுயநலமும் புத்தகக் காட்சிகளின் உண்மை முகமும் தெரிந்துவிடும்.
மாவட்ட ஆட்சியரின் தனி விருப்பத்தால் இந்த அரங்குகள் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குத் தேர்வுகளுக்காக நடைபெறும் குலுக்கலில் இடம்பெறாமல், தனிச் சலுகையாக இந்த அரங்குகளுக்கான இடங்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கினைக் கடந்துதான் வாசகர்கள் உள்ளே போக வேண்டும், வெளியேற வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த அரங்கினைப் புத்தகக் காட்சியை நிர்வகித்த பபாசி நிர்வாகி, தனக்கு நெருக்கமானவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டார்.
இது ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லுமளவுக்கு இதில் இடம்பெற்ற நூல்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன. முழுக்க முழுக்கப் பழைய நூல்கள். உலக அளவில், பல்வேறு அடிப்படைகளில் பயன்படுத்தப்பட்டுக் குப்பையைப்போல இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நூல்கள் அவை; கிலோ கணக்கில் கொள்முதல் செய்யப்படும் pulp fiction வகையிலான ஆங்கில நூல்கள். இதுபோன்ற நூல்களைக் குவித்துவைத்து அதில் இடம்பெற்றுள்ள விலையில் 50% என்ற தள்ளுபடியில் விற்பனை செய்வது எவ்வாறு மாணவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க முடியும்?
ஒருவேளை மாணவர்களுக்குச் சலுகை விலையில் நூல்கள் வாங்க வகைசெய்ய வேண்டும் என்று உண்மையில் நினைத்தால் ஒரு நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? உள்ளே அரங்கு அமைத்திருந்திருக்கும் பதிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு அறிக்கை அனுப்பி, அவர்களிடம் மிகவும் குறைந்த விலையிலுள்ள நல்ல நூல்களை வாங்கிப் பொதுவான அரங்கம் அமைத்திருக்க வேண்டும் அல்லவா? மாவட்ட ஆட்சியரின் சீரிய யோசனையை, அதன் சகல சாதகமான அம்சங்களோடும் பபாசி நிர்வாகி ஒருவர் ஏகபோகமாகப் பயன்படுத்திக்கொண்டதை நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
அரசாணை, நிதி ஒதுக்கீடுகளின் பேரில், புத்தகக் காட்சி நடத்தும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் கைகளுக்குச் சென்றதும், பதிப்பாளர்களை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் முகவராக பபாசி மாறிவிட்டது. பபாசி நிர்வாகிகள் எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதற்கான பழியைச் சுமக்க மாவட்ட நிர்வாகம் இருக்கிறது என்பதால் தங்கள் அமைப்பின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் மறந்து முழுநேர முகவராகவே பபாசியின் மதுரை நிர்வாகி மாறிவிட்டதை உணர முடிந்தது.
மாவட்ட நிர்வாகத்தின், குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் ஈடுபாடும் பங்கேற்பும் இருக்கும் இடங்களில் கண்காட்சிகள் வெற்றிகரமாக அமைவதைப் பார்க்கிறோம். மதுரையில் மாவட்ட ஆட்சியராக உதயசந்திரன் இருந்தபோது அவர் காட்டிய முனைப்பின் காரணமாகப் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டு வேகமாக வளர்ந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் புத்தகக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் சிறப்புக் கவனம் அளித்துச் செயல்பட்டதன் சாதகமான விளைவுகளைக் காண முடிந்தது. அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மயிலாடுதுறை புத்தகக் காட்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதியும் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினார்.
மதுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளும் புத்தகக் காட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் முனைப்பு அதிகம் இல்லை. விளம்பரங்கள் உள்படப் பலவிதமான நிர்வாகச் செயல்பாடுகள் போதிய அளவில் நடைபெறவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்வம் எடுத்துக்கொண்டு தீட்டிய திட்டம் பபாசி நிர்வாகியின் சுயநலத்துக்குப் பயன்பட்டிருப்பதைக் காணும்போது பதிப்பாளர்கள் என்ற முறையிலும் புத்தகப் பண்பாட்டைச் செழுமைப்படுவதற்காகப் பங்களிப்பவர்கள் என்ற முறையிலும் பபாசி உறுப்பினர்கள் பலர் மதுரைப் புத்தகக் காட்சி நடைபெற்ற விதம் குறித்து ஆழ்ந்த வருத்தத்திலும் மனக்கசப்பிலும் இருக்கிறார்கள். நல்ல நோக்கத்தோடு புத்தகத் துறைக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் அரசு நிர்வாகமும் பல ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகளை நடத்திவரும் பபாசி நிர்வாகமும் இதுபோன்ற சீர்கேடுகளைக் களைய ஆவன செய்ய வேண்டும்.
மு. வேடியப்பன்: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் உரிமையாளர்.
மின்னஞ்சல்: vediapan@gmail.com