மம்தா சாகர்

கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யாவனம் பள்ளி, சுமனசா அறக்கட்டளை, காலச்சுவடு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திவரும் எழுத்தாளர்களுக்கான ‘வானகம்’ வதிவிட முகாமில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் இவை. முகாமில் கவிஞர் மம்தா சாகர் தன் கவிதைகளை வாசிக்க, ஜி.ஏ. கௌதம் தமிழில் அவற்றை மொழிபெயர்த்தார்.
நீருக்கு என்ன நினைவிருக்கும்?
நீருக்கு என்ன நினைவிருக்கும்?
எல்லாமே நீரில் வழிந்தோடிவிடுகிறது.
நீரைப்போலவே நீயும்...
அதுபோல் நானும்...
கிளைபிரிந்து வெகுதூரம் இலக்கின்றி நடந்துவிட்டோம்.
எவ்வளவு பேசுகிறோம் எதுவுமே நடக்காததுபோல!
ஒருவரையொருவர் குத்திக்கொண்டதும் உணரவில்லை,
வெகுதூரம் விலகிச் சென்றதும் தெரியவில்லை.
நாளுக்கொரு நிறத்தை நீரில் கரைத்து
ஏதோ ஒன்றைப் புதிதாய்க் கண்டதுபோல் கொண்டாடி
காதலின் நிறம், மோகத்தின் நிறம், காமத்தின் நிறம் என
வண்ண வண்ணமாய் வாழ்வைக் கட்டியெழுப்பும் பிரமையில்
காமம் அழிந்து, மோகம் கலைந்து, காதல் தொலைந்து,
சேறாக்கிவிட்டோம் பளிங்கு போன்ற தெளிந்த நீரை.
தேங்கிய நீரைக் கிளறினால்
பொங்கி வெளியே சிந்துகின்றன
நம் கதைகள்;
உனக்கு உன்னுடைய புகழாரம்
எனக்கு என்னுடையது…
இப்போது, வற்றிப்போன நதியின் இருபுறக் கரைகள் நாம்.
இனி நம்மிடையே எந்த நதியும் பாயப்போவதுமில்லை
அது நம் கரைகளை இணைக்கப்போவதுமில்லை
நீருக்கு எந்த நினைவும் இருப்பதில்லை.
ஹொன்னாவரின் சூரிய அஸ்தமம்
ஹொன்னாவரக்1 கடலின் கதிரவன்
வயிறு முட்ட நெருப்பை நிரப்பிக்கொண்டு,
எரிதணலை விழுங்கி கடலெங்கும் செந்நிறக் குருதியைத் துப்பி
மெல்ல மெல்ல மூழ்கத் துவங்கி, முடிவில்
சட்டென்று ரத்தச் சகதியான நீரில்
அவசரம் அவசரமாக இல்லாமல் போகிறான்.
இவ்வாறு ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த
நாடகத்தைக் காணக் கூடுகிறது ஜனக்கூட்டம்.
குட்டியான டிரவுசர் அணிந்த குழந்தைகள், பிகினி தாய்மார்கள்,
தொப்பை மறைக்காத குறுங்காற்சட்டைக்காரர்கள்,
கடல் நீரில் நனைந்து உடலெங்கும் ஒட்டிக்கொண்ட
சுடிதார் அணிந்த நங்கையர், இப்படியே கடல் அலைகளின் மீது
புரண்டோடி உருண்டோடி, கை கோத்து,
குதித்து, கூச்சலிட்டு, களித்திருக்கும் மக்கள்
கரையை விட்டு அலையாய் நீரோடு கலந்துவிடுகிறார்கள்.
அத்தனை கால்தடங்களையும் அழித்தோடும் அலைகள்
ரத்தத்தின் பிரதிபலிப்பை அழிக்க முடியாமல், செந்நிறக்
கரைசலில் களியாடி மெருகூட்டுகின்றன, சூரியனின்
கொடூரக் கொலையை.
பட்கலில்2 இருந்து வாப்பாவின் தோளேறி
கடற்கரை வந்தப் பிஞ்சுக் குழந்தையிடம்,
சிவந்த சூரியனைப் பார்த்தவாறே உம்மா சொல்கிறாள்,
‘நீரில் இறங்காதே தங்கமே, அலைகள் அடித்துச் செல்லக் கூடும்.’
1. ஹொன்னாவர்: கர்நாடகாவின் தென் கனரா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை—வலதுசாரிகள் மிகவும் தீவிரமாகச் செயல்படும் ஒரு இடம்.
2. பட்கல்: கர்நாடகாவின் தென் கனரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்—இங்கு முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகம்.
கேட்க வேண்டும் உடலின் குரல்
நமக்கு, பெண்களுக்கு ஆன்மா என்பதில்லை
உடலே நமது ஆன்மா!
நம் உடலைத் தொடுவதென்றால்,
நம் ஆன்மாவைத் தொடுவதாகும்!
NO!
தீட்டாகும், தீண்டப்படும்
எல்லைகளுக்கப்பால் இந்த ஆன்மாக்கள் பேசுகின்றன.
கண்களின் ஒளியில், குரலின் உறுதியில்,
வளையாத நிமிர்வில், நிற்கும், நடக்கும், நவிலும் விதத்தில்
ஆன்மாக்கள் உடல்களாகவே காட்சியளிக்கின்றன.
காண்பதைக் கண்டு, காணாததை அறியாமல்
திக்குத் திசை தவறி இங்கே வந்துவிடாதீர்கள்.
NO!
தண்டிக்கும் தர்மம் நமதல்ல
நம் தெய்வத்துக்கே முலைகளுண்டு, யோனிகளுண்டு,
ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு நூறாய்... உடல்முழுதும்.
அதன் இதயங்களில் வற்றாத அன்புண்டு.
நம் ஆன்மாவிற்கு ஆத்மதிருப்தி என்பதில்லை
உடல் கேட்கக் கேட்க இன்னும் வேண்டுமென்னும்
மோகத்தின் மயக்கத்தில் மயங்கி,
நாடி நரம்புகளில் நாதம் இசைத்து,
ஆடும் இந்த உடலென்னும் ஆன்மாவிற்கு
எந்தக் கடப்பாடுமில்லை.
NO!
‘No’ is a complete sentence!
ஆன்மாவுக்கு வயதாவதில்லை.
நமக்கு, பெண்களுக்கு இருப்பது உடலல்ல,
வெறும் ஆன்மா!
கதவைத் தட்டிய சத்தம்
கதவைத் தட்டிய சத்தம்,
வெளியேயும்… உள்ளேயும்…
இப்பக்கமாய்த் திறக்க வேண்டிய கதவை,
அப்பக்கமாய் எட்டித்தள்ளி
உள்ளே நுழைந்த இருள்
வெளிச்சத்தை வீதிக்கிழுக்க
தெருவெங்கும் கலவரக் கூச்சல்…
உள்ளும் புறமும் இருள் சூழ்கையில்,
சுகமாய்க் கம்பளி போர்த்தி உறங்குபவர்களுக்கு
இருண்ட ஒட்டுத்தையல் போர்வையின் கீழ்
வழிந்தோடும் குருதியின் நிறம் தெரிவதே இல்லை.
அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்த கதவைத் தட்டிய சத்தம்
இப்போது எங்கெங்கும் ஒலிக்கிறது!
குறிப்பு: ஆகஸ்ட் 28, 2018 அன்று ஐந்து சமூக ஆர்வலர்கள் ‘நகர்ப்புற நக்ஸல்கள்’ என்று இந்திய அரசால் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பாக இக்கவிதை எழுதப்பட்டது.
பொழிய வேண்டும் மழை
பொழிய வேண்டும் மழை பாலஸ்தீனத்தில்,
காசா பள்ளத்தாக்கின் குழந்தைகளின் ஆன்மாக்கள்
மழைத்தாரையின் இழைகளைப் பிடித்தேறி
வான முற்றத்தில் இறங்கி, மேகத்தின்மேல் நடந்து,
காற்றுடன் தூளியாடியவாறே
வலிமிகுந்த நிலத்தின் நினைவுகளை நட்சத்திரங்களாக்கி
கருவானம் முழுதும் தூவிவிட வேண்டும்.
பேசாமல் நிம்மதியாய்ச் சுருண்டுகிடக்கும்
நம் கனவில் அவர்கள் வரவேண்டும்;
உறங்க விடாத் துயரக் கதைகளின் ரீல்களை
மேலும் மேலும் விழித்திரையில் காட்ட வேண்டும்.
அவர்களைக் குறிவைத்த தோட்டா வெடித்து
கனவிலாவது நம்மைச் சிதறடிக்க வேண்டும்;
தலையுடைந்து, கைகால் சிதைந்து, பசியை
தட்டு நிறைய நிரப்பிக்கொண்டு,
வாராத உணவுக்கும் நீருக்கும் அவர்கள் காத்துக்கிடப்பது
இப்படியாவது நமக்கு உறைக்க வேண்டும்.
குழந்தைகள் வலியிலும் சிரிக்கிறார்கள்,
விளையாடுகிறார்கள், பாடுகிறார்கள்,
மரணத்தின் மடியேறியும் வாழ விரும்பும் துடிப்பைக் காட்டுகிறார்கள்,
கருணை இழந்து, மரத்து, உறங்கும் நம்மிடம் வேண்டுகிறார்கள்,
கனவு காணும் இன்னொரு வாய்ப்புக்காக.
ஓயாமல் பெய்யும் இந்த உதிர மழையில்
இனப்படுகொலை எனும் குடையின் கீழ் தேசத்தின் கனவை விற்று,
‘ஹா-ஹா ஹீ-ஹீ’ எனக்கூறி, தான் செய்த கொலையின் ரத்தக் கறையை
காசாவின் குழந்தைகளுடைய ரத்தத்தில் கழுவிக்கொள்ளப் புறப்பட்டவரின்
உறக்கம் முழுவதும் பெருமழை பெய்து,
பெருவெள்ளத்தில் நிம்மதி இழுபட்டோட
இனியென்றும் கனவே காண முடியாத நிலை வந்து சேரட்டும்!
அப்போதேனும், கனவுகளில் கால்பதித்த குழந்தைகள்
நம் கண்ணுக்குத் தெரிவார்கள், அணைத்துக்கொள்வோம் அவர்களை,
இனியாவது உண்ணும் சோறு தொண்டையில் இறங்கும்,
‘எங்கள் குழாய்களில் நீர் வந்தால் போதும்’ என்கிற
மதக்குருட்டுத்தனம் அழியும்.
மின்னஞ்சல்: goodbadeditor@gmail.com
