ஏப்ரல் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2026
    • கட்டுரை
      புகழ்மொழி வீச்சம்
      இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டுவேலை
      காவல் இறப்புகள்: நிர்வாகத் தோல்வியா-?
      இஸ்தான்புல்: இருவேறு உலகங்களின் நகரம்
      ஈரான் போர்: எப்படித் தொடங்கியது? எவ்வாறு முடியும்?
      காசியில் பெரியார்
    • கதை
      இருவர்
      பூட்டனாரும் பேய்பூதங்களும்
    • அஞ்சலி: வ. ஜெயதேவன் (1947-2026)
      அகராதியியல் துறையில் புலமை பெற்றவர்
    • பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்கு
      தமிழ்ச் சமூகத்தின் நன்றியறிதல்
    • அஞ்சலி: கே.என். பணிக்கர் (1936- 2026)
      வரலாற்றில் நிற்பவர்
    • கற்றனைத்தூறும் -16
      பிள்ளையோ பிள்ளை
    • கடிதங்கள்
      கடிதங்கள் 01.03.2026
    • அஞ்சலி: யூர்கென் ஹேபர்மாஸ் (1929 – 2026)
      உரையாடலுக்கு இடமளிக்கும் செயல்பாடே இன்றைய தேவை
    • அஞ்சலி: ஆர். பார்த்தசாரதி (1934–2026)
      ஆங்கிலச் சங்கிலியில் பிணைத்த தமிழ் நாக்கு
    • மதிப்புரை
      இருளில் நகரும் பெண்கள்
    • கவிதைகள்
      மம்தா சாகர்
    • அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026)
      அறத்துக்குச் சாட்சியானவர்
    • தலையங்கம்
      தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்
    • கவிதை
      முந்நூறு குழந்தைகள்
      ஆறு, ஒரு காலத்தில்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2026 கதை பூட்டனாரும் பேய்பூதங்களும்

பூட்டனாரும் பேய்பூதங்களும்

கதை
ஆங்கிலத்தில்: மி.ஜே.து. தம்பிமுத்து; தமிழில்: எழுத்துக்கினியவன், அனுஜா பிரகாஷ்

ஓவியங்கள்: மணிவண்ணன்

 

வட இலங்கையின் அச்சுவேலிக் கிராமத்தில் இருந்த தாடித்தாத்தாவின் வளவில் இரண்டு பிரதானமான கட்டடங்கள் இருந்தன. அவற்றிற்கு இடையே இருந்த முற்றம், மாமரங்களும் பலாமரங்களும் நிழல் தரும் சோலையாக இருந்தது. கிழக்கிலங்கை திருகோணமலையில் இருந்து பாடசாலை விடுமுறைகளுக்கு நானும் எனது ஐந்து சகோதரர்களும் அச்சுவேலிக்குப் போகும்போது, தாத்தா வசித்த கட்டடத்தில் நாங்கள் தங்குவதற்கு என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்குப் பிரியமானது மற்றக் கட்டடம்தான். அது ‘சாலை’ என்று அழைக்கப்படும் விசாலமான வரவேற்புக் கூடம். அதன் ஒரு பக்கம் முற்றத்தையும் வானத்தையும் நோக்கித் திறந்தபடி இருந்ததால் வெளிச்சமும் காற்றோட்டமும் அங்கு தாராளம். இந்தக் கட்டடத்தோடு இருந்த அறை ஒன்றில்தான் எங்கள் கொள்ளுத்தாத்தா வசித்தார். இலங்கையில் கொள்ளுத்தாத்தாவுக்குப் பூட்டன் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. எங்கள் பூட்டனார் கொஞ்சம் தனிமை விரும்பி. அங்கேயேதான் உணவருந்திக் கொள்வார் (பீங்கான் கோப்பைகளில் உணவருந்தும் எங்களது நவீன வழக்கம் அவருக்குக் கொஞ்சம் எரிச்சல் ஊட்டியது). வீட்டிலிருந்த மற்றவர்களின் வாழ்க்கையை விட்டு விலகி ஒரு இச்சாதிகாரியாக வாழ்ந்துவந்தார்.

அவருடைய தாமரை இலையில் தண்ணீர் போன்ற வாழ்க்கைக்கு அவரது வயதும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் இளமைப் பருவத்தில் சந்தோஷமாக, கலகலப்பாக இருந்தார் என்றும் அதற்குப் பிறகு இன்னும் மகிழ்ச்சி ததும்பும் கணவராகவும் தந்தையாகவும், பிறகு தாத்தாவாகவும் இருந்தார் என்றும் சொல்வார்கள். எனது அம்மம்மாதான் அவருக்கு ஒரேயொரு பிள்ளை. இந்த வளவைத் தாடித்தாத்தாவுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார். அம்மம்மா இறந்தபோது தாத்தா துயரம் தாங்காமல் தாடி வளர்க்கத் தொடங்கினார். பூட்டனாரின் துயரம் வேறு விதமாக வெளிப்பட்டது. மற்றக் கட்டடத்தில் வசிக்கும் யாரோடும் பட்டும் படாது சாலையில் உள்ள தன் அறையிலேயே வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

முக்கியமான சில விருந்தினர்களைத் தவிர வேறு யாருக்கும் உள் நுழையும் அனுமதி இல்லாத சாலைக்குள் தனது கொள்ளுப்பேரர்களான எங்களுக்கு மட்டும் விரும்பியபடி வந்துபோகும் அனுமதியைக் கொடுத்திருந்தார். நாட்டுப்புறம் முழுக்க எங்களோடு கதை சொன்னபடி சுற்றுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்தமான விடயம், அவரது சாராயத்தைத் தவிர்த்து. வயது போன காலத்தில் ஊரெல்லாம் உலாத்தித் திரிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

ஓய்வான வாழ்க்கை வாழ்ந்தாலும் அந்த வீட்டிலேயே சுறுசுறுப்பானவர் பூட்டனார்தான். சினிமா வில்லனை மாதிரி இருந்த அழகான, படிப்பறிவு மிகுந்த எனது தாத்தாவுக்கு வீட்டு விவகாரங்களைக் கவனிக்கும் சாதுரியம் அறவே இருக்கவில்லை. ஆகவே, தொண்ணூற்றைந்து வயதான பிறகுகூடப் பூட்டனார் தான் தேங்காய், மாங்காய், நெல், புகையிலை போன்ற அறுவடைகளை விற்கும் பொறுப்பையெல்லாம் கவனித்தார். அவற்றை வாங்க வருபவர்களிடம் பூட்டனார் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்ப்பதே அலாதியான அனுபவம். அப்படி வருபவர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமானவர்கள். அவர் களில் நாலைந்து பேர் (எல்லோரும் அசப்பில் பார்த்தால் ஒரே மாதிரி இருப்பார்கள்) ஏதோ சுகம் விசாரிக்க வருபவர்கள் மாதிரி வந்து, விற்பனையைத் தவிர உலகத்திலுள்ள மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் உரையாடுவார்கள்.  பூட்டனார் தனது மங்கிப்போன ஆழமான கபில நிறக் கண்களால் அவர்களை உற்றுப் பார்த்து, எந்தப் பக்கமும் சாயாமல், “ஹா” என்று மட்டும் சொல்வார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “மாங்காய் அறுவடையை வாங்கப் போறியளா?” என்பார். “ஓம் ஐயா,” என்று சங்கோஜப்பட்டு, ஏதோ அந்த யோசனை தங்களுக்கு இதுவரை இருக்கவேயில்லை என்பதுபோல வந்தவர்கள் பதில் சொல்வார்கள்.

 

ஆறடி ஓரங்குலம் உயரமான பூட்டனார் இளந்தாரியின் உற்சாகத்துடன் கட்டிலிலிருந்து கீழே குதிக்கையில், வெள்ளை வேட்டிக்கிடையில் அவருடைய நீண்ட, திடகாத்திரமான கால்களின் பிம்பத்தைக் காணலாம். பின்னால் ஒரு சின்னக் குடுமியோடு இருக்கும் அவரது பரந்த கழுகு போன்ற முகத்தில் புதுத் துடிப்பு மலரும். கொளுவியில் மாட்டியிருந்த தங்கச் சரிகை கோடு போட்ட சால்வையைத் தன் வலது தோளின் மேல் போட்டுக்கொள்வார். என் அம்மா மலாக்காவிலிருந்து கொண்டுவந்து கொடுத்த வெள்ளிப்பூண் போட்ட பிரம்பை எடுத்துக்கொண்டு நிமிர்ந்த நடையுடன் மாந்தோப்பை நோக்கிக் கிளம்புவார். நானும் என் ஐந்து சகோதரர்களும் வேலைக்காரரும் பின்னால் தொடர்வோம். கரடுமுரடாகத் திளைத்து வளர்ந்திருந்த ஒவ்வொரு மரத்தின் முன்னாலும் நின்று அந்த வருடத்தின் அறுவடையின் மதிப்பைத் திட்டவட்டமாகக் கணக்கிட்டுக்கொள்வார். வாங்க வந்தவர்களுக்குப் பல வருட அனுபவம் இருந்ததால் ஒவ்வொரு மரத்தின் குணாதிசயங்களையும் வம்சாவளிப் பெருமைகளையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். அவர்கள் ஒரு விலையைச் சொல்ல, பூட்டனார் “ஹ்ம்” என்று மட்டும் செருமிவிட்டு அடுத்த மரத்துக்கு நகர்வார். சொன்ன விலை அபத்தமானது என்றால், பதிலொன்றும் சொல்லாமல் விலை சொன்னவனை உற்றுப் பார்ப்பார். அவன் உடனே அவசரப்பட்டு விலையை உயர்த்திவிடுவான். கடைசியாக எல்லா விலைகளையும் கூட்டி ஒட்டுமொத்தம் கணித்த பின்பு, பூட்டனார் அந்த மொத்தத் தொகையை இன்னும் உயர்த்துவார். அதுதான் கடைசி விலை. வந்தவர்கள் எப்போதுமே அந்தத் தொகையைச் செலுத்தினார்கள்.  அடுத்த சில நாட்கள் அவர்கள் அந்தத் தோப்பிலே மாங்காய்களை ஆய்ந்துகொள்வார்கள். ஆய்வதற்குச் சாமர்த்தியமான முறையைக் கையாண்டார்கள். நீண்ட கொக்கத்தடியின் முனையில் ஒரு கொளுக்கி இணைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழே சிறிய ஓலைக் கூடை தொங்கவிடப்பட்டிருக்கும். கொளுக்கியால் மாங்காயைக் கொய்ய அது கூடைக்குள் இருக்கும் தென்னம் பொச்சு மெத்தையின் மேலே விழும். ஏதாவது காயம் பட்டால் மாங்காய் பழுக்க முதலே அழுகிப் போகும்.

மாங்காயோ, தேங்காயோ, நெல்லோ, புகையிலையோ எதை விற்றாலும் பூட்டனார் எனக்கும் என் சகோதரர்களுக்கும், நாங்கள் காட்டிய ஆர்வத்துக்காக ஒரு சிறிய பங்கு தருவார். உடனே நாங்கள் அச்சுவேலிச் சந்தியிலுள்ள கிட்டங்கியில் இருக்கும் கடைகளை நோக்கிப் படையெடுப்போம். பூட்டனார் பண விஷயத்தில் தாராள மனது கொண்டவர்.  எனது தாய்மாமன் சிறுவனாக இருந்தபோது பூட்டனார் எங்கள் பகுதியில் இருந்த கள்ளு, சாராயத் தவறணைகளை நடத்திவந்தார். ஒரு நாளுமே சில்லறைக் காசுகளை வங்கிக்குக் கொண்டு போய் முதலீடு செய்வதில்லை என்பார்கள். ஒரு சின்ன மூட்டையிலே கட்டிக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு வந்து மாமா விளையாடுவதற்காக அவரது கட்டிலில் போடுவாராம். விளையாடி முடிந்ததும் அவரது அம்மாவிடம் கொடுக்கச் சொல்வாராம். நாங்கள் எங்களுக்குக் கிடைத்த பணத்தைச் செலவழிக்க அச்சுவேலிக் கிட்டங்கிக்குப் போகும்போது சிலவேளைகளில் பூட்டனாரும் வருவார். அப்போது எங்களுக்கு அங்கே இராஜ மரியாதை கிடைக்கும்.

பூட்டனார் பற்றிய எனது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று, நானும் என் அண்ணா இரத்தினமும் பூட்டனாருடன் முதல் தடவையாக ‘யக்குன் நெட்டும’ என்கிற சிங்களப் பேயாட்டம் பார்க்கப் போனதுதான். குடும்பத்தில் ஒரு திருமணத்துக்காகக் கொழும்புக்குப் போனபோது அருகிலிலுள்ள களனி நகரத்தில் இருந்த உறவினர்களைப் பார்க்கப் போயிருந்தோம். எங்கள் அம்மாவுக்கு நாங்கள் போவதில் முதலில் விருப்பமில்லை. ஆனால் கிழவரின் விருப்பத்துக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பது கிடையாது. தனது குடும்பத்தோருக்கு இப்படியான விடயங்களைப் பற்றித் தெரிந்திருப்பது முக்கியம் என்றுதான் கிழவர் நினைத்தார். எனக்கு அப்போது மூன்றரை வயதுதான். சிங்கப்பூரிலிருந்து எனது பெற்றோர் கொண்டுவந்த பல பொத்தான்கள் போட்ட கறுப்பு மென்பட்டு மேலங்கியையும் காற்சட்டையையும் பெருமிதத்தோடு அணிந்துகொண்டு போனேன்.

இரவு உணவுக்குப் பிறகு பக்கத்து வீடொன்றுக்குப் போனோம். அங்கேயுள்ள ஒரு பெண்ணைப் பேய் பிடித்துவிட்டதாகப் பூட்டனார் விளக்கினார். கலைந்த தலைமுடியும் அடிக்கடி வரும் வலிப்புமாகப் பேய் பிடித்ததற்கான எல்லாவிதமான அறிகுறிகளும் அவளிடம் இருந்தன. பேயோட்டல் அன்றிரவு தொடங்கி அடுத்த நாள் மதியம்வரை நடக்கவிருந்தது.

பேயாட்டக்காரன் இறுக்கமான வெள்ளைக் காலுறைகளும் பலவண்ணங்களில் மிளிர்கின்ற மணிகளாலும் கண்ணாடித் துண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மேலங்கியும் அணிந்திருந்தான். பெரிய பித்தளை வளையல்கள் கைகளில் கணத்தன. கையில் தீப்பந்தத்தை ஏந்தியிருந்தான். இடைக்கிடை அதன்மேல் குங்கிலியப் பிசினைத் தூவினான். அப்போது தெறித்துப் பறந்த தீச்சுவாலைகள் அவனது நடனத்துக்கு நடுநடுவே நிறுத்தற்குறிகள்போல வந்துபோயின. மத்தளத்தின் தாளகதி அதிகரிக்க, அவன் காற்சிலம்புகள் கலகலக்கச் சுழன்று சுழன்று நுட்பமாக ஆடினான். முகத்தை மறைத்து ஒரு ‘மகசோனா’ பேய் முகமூடியை அணிந்திருந்தான். ஆட்டம் தொடர இடைக்கிடையே முகமூடிகளை, ஒன்றைவிட அடுத்தது இன்னும் பயங்கரமாக இருக்கக் கூடியதாக, மாற்றிக்கொண்டான். ஆட்டத்தினதும் பாட்டினதும் உக்கிரம் கூடக்கூட மகசோனாவைப் போலிப் புகழ்ச்சிகளால் வாழ்த்தி, அந்த இடத்துக்கு ஏமாற்றி வரவழைக்கப் பார்த்தான். சரியாக நள்ளிரவில் பேயோட்டம் ஆரம்பிக்கும். ஆனால் அதற்கு வெகு நேரத்திற்கு முதலே நாங்கள் கிளம்பிவிட்டோம்.

மத்தள ஒலி எங்கள் காதுகளுக்குள் இன்னும் தடதடக்க,  வீடு நோக்கித்  திரும்புகையில், எனக்கும் இரத்தினத்துக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏனென்றால், பேயோட்டம் தொடங்கிய பிறகு மகசோனா சீற்றம் கொந்தளிக்க அலைந்து திரிந்து வழியில் சந்திப்பவர்கள் எல்லோரையும் பழிவாங்குவான். ஆலமரங்களுக்கும் ஈரப்பலா மரங்களுக்கும் கீழே திட்டுத் திட்டாக இருண்டு போயிருந்ததைக் கொஞ்சம் பதற்றத்துடன் நோட்டமிட்டோம். “பேயோட்டம் துவங்கி இருக்குமோ?” என்று இரத்தினம் மெல்லிய குரலில் கேட்டான். “எனக்குத் தெரியாது,” என்று சொன்ன நான், “ஐயா,” என்று பூட்டனாரைப் பயத்துடன்அழைத்து, “பேயோட்டம் தொடங்கியாச்சா?” என்று கேட்டேன். அவர் தன் பிரம்பை விசுக்கியபடி, “பயப்பிடாத, பூதம் எங்களைத் தொடாது,” என்று தைரியம் தந்தார். ஆனால் எங்களைப் போலவே அவருக்கும் விரைவாக வீடு போய்ச்சேர வேண்டும் என்ற பயம் இருந்ததை உணர்ந்து கொண்டோம்.

அடுத்த நாள் திரும்பவும் பேயாட்டம் பார்க்கப் போனோம். ஆட்டக்காரன் நன்றாகக் களைத்துப் போயிருந்தான். அவன் ஆடும்போது தரையில் கால் இழுபட்டது, குரல் கரகரத்துப் போயிருந்தது. ஆனால் இன்னும் ஆடிக்கொண்டே இருந்தான்.

கடைசியில் ஆட்டத்தின் வேகம் உச்சக்கட்டத்தை அடைய, ஆட்டக்காரன் தன் சக்தி முழுக்கச் சேர்த்துச் சுற்றிச் சுழன்று ஆடிக் கடைசியில் களைத்துப்போய் மல்லாக்கத் தரையில் விழுந்தான். அவனது உதவியாளன் உடனே அவனுக்கருகே ஓடிப் போய் ஒரு பூசணிக்காயை அவன் நெஞ்சின் மேலே வைத்துக் கத்தியால் ஒரே வெட்டில் இரண்டாகப் பிளந்தான்.  உடனே பேயாட்டக்காரன் எழுந்து அழிவின் ஊழித்தாண்டவத்தை ஆரம்பித்தான். சூறாவளிபோலச் சுற்றிச் சுழன்று ஆடியபடி அங்கே போடப்பட்டிருந்த பந்தலையும் மேடையையும் துவம்சம் செய்யத் தொடங்கினான். இடைக்கிடை கையில் பிடித்திருந்த பந்தத்தில் குங்கிலியப் பிசினைத் தூவ, கண்களைக் குருடாக்கும் தீச்சுவாலைகள் சிதறிப் பறந்தன. இத்தனைக்கும், பேய் பிடித்திருந்த பெண், பாக்குமரக் கட்டைகளால் விசேடமாகக் கட்டப்பட்டிருந்த மேடையில் இன்னமும் உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவள் குணமாகிவிட்டாள்போலத் தோன்றியது. இரத்தினத்தின் மனதிலும் என் மனதிலும் இந்தச் சம்பவம் அழிக்க முடியாத தடயங்களை விட்டுச் சென்றது. எங்களுக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து பூட்டனார் சற்றும் தளராமல் வர்ணித்துவந்த அந்த மாயாஜால உலகத்தை எங்கள் கண்முன்னே யதார்த்தமாக்கிய உண்மைச் சம்பவம் அது.

பேயாட்டம் முடிந்த பிறகு, நிலத்தில் ஒரு மந்திரித்த சக்கரம் வரைந்து மகசோனாவை தடுத்து நிறுத்துவதற்காகச் சக்கரத்துக்கு நடுவில் ஒரு இரும்புக்கம்பியை நாட்டினார் பூட்டனார். எங்கள் கிராமத்து மாந்திரீகன் சொல்லிக் கொடுத்ததால் அவருக்கு எல்லாவிதமான மந்திர வித்தைகளும் அத்துப்படி.

கிராமத்து மாந்திரீகன்தான் பூட்டனாரை அடிக்கடி சந்திக்க வருபவன். மாந்திரீகனாக இருந்தாலும் அவனது உருவம் பயங்கொள்ள வைக்கக்கூடிய உருவமேயல்ல; சாந்த சுபாவமுள்ள சிறிய உருவம் கொண்ட மனிதன். பூட்டனார் அவனோடு பேசும் போது அவன் வெட்கப்படுபவன்போலத் தலையை ஒருபுறமாகச் சாய்த்துக்கொள்வான். உண்மையிலேயே வெட்கம் இல்லாவிட்டாலும் அப்படிச் செய்வதுதான் மரியாதைக்கு அறிகுறி. அவன் வழமையில் வீட்டுக்குள் நுழையவோ அல்லது உட்காரவோ அனுமதி வழங்கப் படாத தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். ஆனால் அவனது மந்திரஜாலத் திறமையின் காரணமாகப் பூட்டனார் அவனை வீட்டுக்குள் வரவிட்டு, தன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருக்கும் பாயில் உட்கார்ந்து கொள்ளவும் அனுமதித்தார். மற்றவர்கள் போட்ட சூனியத்திற்குப் பரிகாரம் செய்ய அவனால் முடியும். அதைவிட, ஒருவரின் தலை முடியையோ அல்லது நகம் வெட்டிய துண்டுகளையோ, வேறு பொருட்களுடன் - கோழிக்குடல், எருதின் ரத்தம், அல்லாவிட்டால் அவரின் உருவத்தைச் செய்து அதில் ஆணியறைந்து, அவர் வீட்டுக்கு முன்னால் புதைத்து வைத்துக்கொண்டு அவருக்குச் சுகயீனம் வரப் பண்ணவும் முடியும். அதனால்தான் உள்ளூர் முடிவெட்டுபவன், பூட்டனாரின் நகம் வெட்டும் போதெல்லாம், நகத் துண்டுகளைக் கவனமாகப் புதைத்து விடுவான்! அடிக்கடி பூட்டனார் மந்திரச் சுலோகங்கள் எழுதியுள்ள ஓலைச் சுவடிக் கட்டுகளை வெளியே எடுக்கும்போதெல்லாம், மாந்திரீகனும் அவரும் மெல்லிய குரலில் குசுகுசுப்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாந்திரீகனுக்குப் பூட்டனார் நன்றாகச் சாராயம் அருந்தக் கொடுப்பார். அது கிராமத்து வழக்கத்துக்கு எதிரானது. அதற்கும் மேலாகச் சாராயப் போத்தல்கள் தேவைப்படும் போது மாந்திரீகனே போய் வாங்கிக்கொண்டும் வருவான். அதுவும் வழமைக்கு எதிரானது. அவன் தயங்கித் தயங்கி வீட்டுக்குள் நுழையும்போது தாடித்தாத்தா கொஞ்சம் முறைப்பார். தாத்தாவுக்கு இந்தப் பில்லி சூனியமெல்லாம் பிடிக்காது. ஆனால் இத்தனை வயதிலும் பூட்டனார் நினைத்தபடி செய்வதைத் தாத்தாவால் தடுத்து நிறுத்த முடியாது. அப்பேர்ப்பட்ட அதிகாரம் யாரிடமுமே இருக்கவில்லை.  எங்கள் உறவினர்களுக்குள் வயதில் மூத்தவர் பூட்டனார். சந்தியடிப் பூட்டனாருக்கு அவரை விட வயது அதிகமென்றாலும் அவர் இந்த வீட்டைச் சேர்ந்தவர் அல்லர்.

சிலவேளை மாந்திரீகனும் பூட்டனாரும் சிறுவர்கள் எங்களில் ஒருவனை அழைத்து ஒரு கண்ணாடித் துண்டில் ஏதோ ஒரு மந்திரக் கலவையின் மூலம் ஏற்பட்ட சதுரமாகவோ வட்டமாகவோ இருக்கும் கறுப்பு நிறக் கறையைக் காட்டி, “என்ன தெரிகிறது?” என்று கேட்பார்கள். வழக்கத்தில் எங்களுக்கு எதுவுமே தென்படுவதில்லை. ஆனால் சில வேளைகளில் நாங்கள் ஒரு மனித உருவமோ மிருக உருவமோ தெரிகிறது என்று சொன்னால் அவர்களுக்கு ஒரே உற்சாகம் பிறந்துவிடும். “அட சக்கை, அந்தச் சுலோகம் சரியேதான்!” என்று மாந்திரீகன் மகிழ்ச்சியுடன் குசுகுசுக்க, பூட்டனார் பிரமித்துப்போவார்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில், பூட்டனாரைப் பற்றிய மூன்று விடயங்கள் என்னைக் கவர்ந்தன—அவருடைய மூக்குத் துவாரங்கள், கடுக்கன் தோடுகள், அவர் உணவருந்தும் பழக்கங்கள். அவரது மூக்குத் துவாரங்களைப் போன்ற அதிசயம் வேறெதுவும் கிடையாது. நீண்ட மெல்லிய மூக்கு வியப்பான பெரிய கிழங்குகளுக்குள் அகன்று விரிந்த துவாரங்களாய் வந்து முடிந்தது. அவை கூடாரங்கள் போன்று, அல்லது பெரிய காற்றோட்டமான அறைகள் போன்று பெருத்திருந்தன. சூரிய வெளிச்சத்தில் தெரியும் அவற்றின் உட்பகுதிகளை ஆர்வத்தோடு அவதானிப்பேன். அவருடைய தடித்த கடுக்கன்களைப் போல வேறு எந்த ஆணும் அணிந்து நான் காணவில்லை. கிராமத்தில் மற்ற ஆண்கள் தோடு அணிபவர்கள்தான். ஆனால் பூட்டனாரைப் போன்ற பென்னாம் பெரிய கடுக்கன்களை யாரும் அணிந்தது கிடையாது. தங்கத்தில், கடைந்தெடுத்த மாதிரி மூன்று மடிப்புகளைக் கொண்ட பெரிய தோடுகள் அவரது காதுகளின் மடல்களைக் குப்தர் காலத்துப் புத்தர் சிலைகளில் உள்ளதுபோல நீளவைத்தன. நீண்ட காதுகள் நல்ல குடும்பத்துப் பூர்வீகத்தைப் பறை சாற்றுவன. அவர் நடக்கும்போது அவை ஊஞ்சலாடி, வெயிலால் நிறத்த அவரது முகத்துக்கு மெருகூட்டின.

சாலையில் எப்போதும் தனியாகத்தான் உணவருந்துவார். அந்த நேரங்களில் நாங்கள் சிறுவர்கள் அவரைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நிற்போம். தனது கருங்காலிக் கட்டிலில் உட்கார்ந்தபடி ஒரு சிறிய மேசையின் மேல் விரிக்கப்பட்ட வாழையிலையிலிருந்துதான் சாப்பிடுவார். பூட்டனார் சாதாரணப் பீங்கான் கோப்பைகளை உபயோகிக்க மாட்டார். அவை அசுத்தமானவை என்று கருதினார். வாழையிலையில் உண்ணும் உணவுக்கு அருமையான தனிச் சுவை என்பார். இலைக்குப் பக்கத்தில் கிண்ணத்தில் தண்ணீரும் அதற்கருகே ஒரு தங்க ஊசியும் வைக்கப்பட்டிருக்கும். மேசையில் ஒரு சோறு விழுந்தாலும் அதை அந்த ஊசியால் குத்தியெடுத்துக் கிண்ணத்துத் தண்ணீரில் கழுவுவார். ஒரு சோற்றைக் கூட வீணாக்குவது பாவச் செயல். முதலாம் நூற்றாண்டுப் புலவர் ஔவையாரின் வெண்பாவைப் பூட்டனார் மேற்கோள் காட்டுவார்:

“சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.”

அந்தக் கிராமத்திலே சிறந்த கதைசொல்லி பூட்டனார்தான். பேய்பூதங்களோடு மல்லுக்கட்டித் தான் செய்த சாகசங்களையும் பிரித்தானியருக்கு எதிராகச் சண்டையிட்டதையும் பற்றிக் கதைகதையாகச் சொல்லுவார். தன் உயரமான கட்டிலில் உட்கார்ந்த படியோ அல்லது மூங்கிலாலும் பிரம்பாலும் செய்த பழுப்புநிறச் சிங்கப்பூர் சாய்வு நாற்காலியில் ஆறியிருந்தபடியோ கதை சொல்லுவார். கதையோடு ஒத்துப்போகும்படி அவரது நீண்ட கைகள் சைகை செய்ய, புகையிரத வண்டியும் கோயில் மணியும் உயிர் பெற்றுப் பேசுவன: “டொங்டொங்-டொங்-டொங்-டொங்டொங்,” “சுக்குச் சுக்குச் சுக்கு.”  அவரது கதைசொல்லலில் சாதாரணமான சொற்கள்கூட ஒலிக்குறிச் சொற்களாக மாறிவிடுவன: “பறந்து போஓ...னது,”  “சூஊ...றைக்காத்து.” பேய்களைப் பற்றிச் சொல்லும்போது பயப்பட வைக்கும் கீழ்ஸ்தாயிக் குரலிலும் தன்னைப் பற்றிச் சொல்லும் போது சாதாரண தொனியிலுமாக ஏற்றியிறக்கிக் கதை சொல்வார். தத்ரூபமான கட்டத்துக்குக் கதை வரும்போது அவரது வலக்கண்ணுக்குப் பக்கத்திலும் தொண்டையிலும் உள்ள நாளங்கள் பெருத்துத் துடிக்க, அவரது மங்கிப் போன குடுமி நடுக்கமிடும். கதையின் உச்சக்கட்டத்தின் சுவாரசியமான விடயங்களைச் சொல்லிவிட்டு உரத்த குரலில், “அதுக்குப் பிறகு இளவரசியும் இளவரசனும் கலியாணங் கட்டி, சந்தோஞ்ஷமாக வாழ்ந்தினம்!” என்று சொல்லி முடிப்பார். கதைக்கும் அந்த வசனத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது! ஒருவேளை எங்கள் அம்மா ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தால் அவருக்குச் சாலம் காட்டுவதற்கான ஒரு தந்திரம்தான் அது! பூட்டனார் எங்களுக்குப் பேய்பூதக் கதைகளைச் சொல்வது அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் ஒரு நாளுமே அவர் வாய்விட்டுத் தன் எதிர்ப்பைக் தெரிவித்ததில்லை.

அந்த வீட்டில் பிள்ளை பார்க்கும் வேலைக்காரியாக இருந்த ஆச்சியைத் தவிர வீட்டிலிருந்த வேறு யாருக்குமே மாந்திரீகத்திலும் பேய்பூதங்களிலும் ஆர்வம் இருக்காததைப் பூட்டனாரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவற்றைப் பற்றிய அறிவு குடும்பத்துக்குத் துரதிர்ஷ்டம் வராமற் பாதுகாப்பதற்கு அவசியமானது என்று அவர் நினைத்தார்.

சில கதைகள் அவரே சிறுவனாக இருந்தபோது கேட்ட கதைகள். அவை அவரோடு உள்ளறக் கலந்துவிட்டன. ஒரு சிறுபிள்ளைக்குச் சொல்லக்கூடிய கதைகள் எல்லாச் சிறுபிள்ளைகளுக்கும் தகுந்ததுதான் என்று அவர் நினைத்தார்.

பூட்டனாருக்கு மிகவும் பிரியமான கதைகளிலொன்று பிரபல மாந்திரீகனாக இருந்த அவரின் பூட்டனுக்கு நடந்த கதையாம். பேயின் தலையில் மந்திரித்த மரக்கட்டை ஒன்றை அடித்து அதை ஒரு சிறுமியாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு நாள் அவர் சிறுமி ஒருத்தியை வீட்டுக்கு அழைத்து வந்து தன் மனைவியிடம் ஒப்படைத்தார். “இந்தப் பெட்டைக்கு நாலு ஆக்களுக்குச் சமமா வேலை செய்ய முடியும், ஆனால் கொஞ்சமாத்தான் சாப்பிடுவாள்,” என்று சொன்னார். அப்படியே நடந்தது.

ஆனால் ஒரு நாள் அந்தப் பேய்ச்சிறுமி காட்டிலிருந்து நான்கு பேர் தூக்குமளவுக்கு இருந்த விறகுக் கட்டுகளைத் தனியாகவே தலையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அவள் அவரது கொள்ளுப் பாட்டியிடம் சென்று, “அம்மா, ஒரு விறகுத் துண்டு என்ர தலைக்குள்ள போட்டுது. எடுத்து விடுறீங்களா?” என்று கேட்டாள்.

கொள்ளுப் பாட்டிக்குக் கண்பார்வை குறைவு. விறகுத் துண்டுக்கும் மந்திரக் கட்டைக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை. ஆகவே தன் பாக்குவெட்டியால் அந்தச் சிறுமியின் தலையிலிருந்து மந்திரக் கட்டையை உருவி வெளியே எடுத்துவிட்டார். உடனே ஒரு பெரிய அலறல் கேட்டது, பேயைச் சுற்றிப் புகைமூட்டம் எழ, பேய் காணாமல் மறைந்துவிட்டது.

அன்று மாலை அதே பேய் வீட்டுக்குத் திரும்பி வந்து எரிகிற வாளைத் தலைவாசலில் எறிந்துவிட்டு, “ஐந்து தலைமுறைக்கு இந்தக் குடும்பத்தின்ர முதலாவது ஆண் பிள்ளை இருபத்தொரு வயசுக்கு மேல உயிரோட இருக்காது,” என்று சபித்தது. சபித்த மாதிரியே நடந்தது.

இந்தச் சாபத்தில் ஒரு சிக்கல் இருந்தது. அது ஐந்தாம் தலைமுறைப் பிள்ளையையும் பாதிக்குமா அல்லது ஐந்தாம் தலைமுறைவரை இருந்த நான்கு பேரை மட்டும்தான் பாதிக்குமா? பூட்டனாரின் பேரன், எனது மாமா, ஐந்தாம் தலைமுறையின் முதலாவது ஆண்பிள்ளை. இருபத்தொரு வயதிலே அவரைக் கடுமையான சுகயீனம் பீடித்தது. ஆனால் கடைசியில் அவர் சுகமடைந்து தப்பிவிட்டார். அப்படி நடந்தது பூட்டனார் ஏதாவது நிவாரணம் செய்தபடியாலா என்று அவர் எங்களுக்குச் சொல்லவேயில்லை. இப்படியான முக்கியமான விடயங்களைப் பற்றி அவரும் கிராமத்து மாந்திரீகனும் எங்கள் முன்னே பேசிக்கொள்வதில்லை.

இந்தக் கதைகளால் சிறுவனாகிய நான் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டேன். மாலையில் இருட்டத் தொடங்கும் போதெல்லாம், வளவின் எல்லைக்கு அருகிலிருந்த வேப்ப மரங்களில் இருக்கும் பேய்களைப் பற்றிய யோசனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பேய்களுக்கு வேம்பு என்றால் நல்ல விருப்பம். இடுகாட்டைத் தாண்டிப் போகும்போதேல்லாம் எட்டி நடந்தேன். அங்கேயிருந்த என் அம்மம்மாவின் சமாதியில் இரவு முழுவதும் ஒரு ஒற்றை விளக்கு, கம்பியால் அடைக்கப்பட்ட மாடத்துக்குள் எரிந்தபடியிருக்கும். தீய சக்திகள் கிட்ட வராமல் ஓட்டுவதற்காகத் தாடித்தாத்தா அந்த விளக்கைத் தவறாமல் ஏற்றிவிடுவார். மற்றச் சமாதிகளில் அப்படி விளக்குகள் எதுவும் கிடையாது.

மாலை நேரங்களில் நாங்கள் பூட்டனாருடன் நாட்டுப் புறத்தில் நீண்ட உலாத்தலுக்குப் போகும்போது அடிக்கடி அவருடைய மாயாஜால உலகத்தோடு முட்டுப்பட வேண்டி வரும். போகிற வழியில் பேய்பூதங்களுக்கு வைக்கப்பட்ட பிரசாதங்கள் மரங்களில் தொங்கிக்கொண்டும், சட்டி பானைகளிலும், மூங்கிற் கூடுகளிலும் இருப்பதைக் காட்டுவார். உணவு வகைகளும் பூக்களும் வாழையிலைப் பொதிகளாகக் கட்டப்பட்டு வழியோரங்களில் பலிக் காணிக்கைகளாக வைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக ஒரு கரகத்தைக் கண்டால், அதைக் கவனமாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “ஹ்ம்ம்!” என்பார். கரகம் எப்படியானது என்றால் களிமண்ணால் அல்லது பித்தளையால் செய்யப்பட்ட குடமொன்றில் தண்ணீர் நிரப்பி, சுற்றிவர மாவிலைகளை நிறுத்தி, அலரிப் பூக்களாலும் தென்னம்பூக்களாலும் அலங்கரித்து, நடுவில் ஒரு தடியில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம் நிறுத்தப்பட்டிருக்கும். கரகங்கள் தீய பேய்களை ஓட்டுவதற்காகத்தான் செய்யப்படுவன. பூட்டனாருக்கு ஒவ்வொரு கரகத்தின் தாற்பரியமும் தெரிந்திருந்தது. கிராமத்து மாந்திரீகனால் அல்லது அவனது போட்டியாளர்களால் நோயாளிகளின் உருவங்கள் பொம்மைகளாகச் செதுக்கப்பட்டு மரங்களில் குத்தப்பட்டிருப்பதைக்  கவனமாகப் பார்ப்பார்.  நோயாளிகளைப் பீடித்த பேய்பிசாசுகள் இப்படிச் செய்வதால் மரத்துக்குள் செலுத்தப்படுவன. பேய்களின் வாடிக்கையான இருப்பிடமான ஆலமரங்களைக் கடக்கும்போது அவர் நிலத்தில் ஏதோ மந்திர எழுத்துக்களால் சூழப்பட்ட சக்கரம் வரைந்து அதற்கு நடுவே தனது கத்தியையோ வேறு ஏதாவது இரும்பு ஆயுதத்தையோ குத்தி அந்தப் பேய்களை வழிமறிப்பார். அப்படிச் செய்த தாயத்தை யாருமே தொட மாட்டார்கள். வீடு திரும்பும்வரை அது அப்படியே இருக்கும். பூட்டனார் தன் கத்தியைத் திருப்பி எடுத்துக்கொள்வார்.

பூட்டனாரோடு போன இந்த நீண்ட உலாக்கள் உண்மையாகவே எம் கண்களை வேறு பல விடயங்களில் திறந்துவிட்டன. அவரால்தான் எனக்கு இலங்கைத் தீவின் தாவரங்களிலும் மற்ற உயிரினங்களிலும் ஆர்வம் பிறந்தது. அரச மரம் விஷ்ணுவுக்கு உகந்தது. வேப்பமரம் சிவனுக்குப் புனிதமானது. இதனால்தான் இறைநம்பிக்கையுள்ள இந்துக்கள் அவையிரண்டுக்கும் சம்பிரதாயபூர்வமாகத் திருமணம் செய்துவைப்பார்கள். அரச மரத்தின் வெள்ளிநிற விழுதுகள் கறுத்த வேப்ப மரத்தின் அடித்தண்டை இறுக்கக் கவ்விப் பிடிப்பன. ஒரே தண்டிலிருந்து இரண்டு வகையான கிளைகளும் இலைகளும் வெளிவந்திருக்கும் அற்புதமான காட்சி அது. பனந்தோப்புக்கூடாகத் தன் கைத்தடியை வீசியபடி கம்பீரமாக நடக்கையில் ஒரு மீன்கொத்தியையோ மாங்குயிலையோ பூட்டனார் கண்டால் அவற்றைப் பார்ப்பதற்காக நடையைக் கொஞ்ச நேரம் நிறுத்துவார். பனைமரங்களுக்கும் இலுப்பை மரங்களுக்கும் இடையே வளரும் மந்தாரைச் செடிகளைச் சுட்டிக் காட்டுவார். மாமரங்களில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு ஒட்டு வேலைகளைப் பற்றியும் சொல்வார். ஒருமுறை, தென்னம்பொச்சாலும் துணிக்கட்டாலும் எப்படி மரங்களை ஒட்டி வளர்ப்பது என்றும் காட்டித் தந்தார்.

பொழுது சாயும் வேளை, திரண்டுவரும் இருளில் திரும்பி வீட்டை நோக்கி நடப்பதுதான் மயிர்கூச்செறிய வைக்கும் உற்சாகம் மிகுந்த நேரம். அங்குமிங்குமாக ஓலைக் குடிசைகளில் எண்ணெய் விளக்குகள் மினுமினுக்க, தடித்த காம்புள்ள பனையோலைகள் சரசரக்க, கிணறு குளங்களில் தவளைகள் சத்தமிட, காகங்கள் கரைந்தபடி கூட்டமாக வானத்தைக் கடந்துபோகும் நேரம். சடாரெனத் தோன்றிய இராட்சச வௌவாலின் பயமூட்டும் உருவம், சாத்தானாகவே இருக்கலாம். வாலில்லாத விசித்திரமான ஜந்துகள் அலைந்து திரிந்தன. தங்கள் அங்கங்களை நினைத்தவுடனே மாற்றக்கூடிய ஆற்றல் பேய்பூதங்களுக்கு இருந்தது. ஆனால் எந்த உருவத்தை  எடுத்தாலென்ன, அவை வேட்டைக்குச் செல்லும்போது இடும் ஓலம் ஒரு நரியினது ஊளைதான். இரவில் அந்தக் கிராமம் பகலில் இருந்த நிலையில் இருந்து முற்று முழுதாக மாறிவிடும்; இனந்தெரியாத உருவங்களும் சப்தங்களும் ஓசைகளும் நிறைந்த ஒரு அதிசயக் கிராமமாகிவிடும்.

இரவில் இடி முழங்கினால், அடுத்த நாள் காலையில் இடி மழையால் வெளியே தலை நீட்டிய ஈட்டிபோல் உருவங்கொண்ட காளான்களைத் தேடிப் பூட்டனார் எங்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார். நான் கண்ட சாதாரணக் காளான்களைப் போல இல்லாமல் விசித்திரமான உருவம் கொண்டவை இவை. அந்த அச்சுவேலிச் செம்பாட்டு மண் இடி முழக்கத்தால் பிளக்கப்பட்டு (இப்படியாக என் கற்பனைக்குத் தோன்றியது), அந்தப் பிளவுகளுக்கூடாகச் சிறிய இளஞ்சிவப்பு நிற மிருகங்கள் மாதிரி அவை தலை நீட்டிப் பார்த்தன. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாயாஜால வித்தை. அந்தக் காளான் கறியின் ருசி இறைச்சி போலவே இருந்தது.

மழை தூறும்போது பூட்டனாருடன்  இரண்டு வேலையாட்களும் நாமும் சேர்ந்து வயல் வெளிக்குச் செல்வோம். அங்கே குழிகளில் பதுங்கியிருக்கும் அகிழான்களைப் புகையூட்டிப் பிடிப்பார்கள். வீட்டில் வேறு யாருக்கும் இந்த வயலெலிகளை உண்ணுவதில் நாட்டம் கிடையாது. சிறுவர்களான நாங்கள் கடலாமை உண்பதை விரும்பவில்லை. ஆனால் அவருக்கு இரண்டுமே பிடிக்கும். இது மேலும் அவரை விநோதமான மனிதராக்கியது.

பூட்டனார் சம்பந்தமாக நடந்த விசித்திரமான சம்பவமென்றால் எனது தம்பி சிங்கம் வீட்டிலிருந்து காணாமற் போனதுதான். அதற்குப் பிறகுதான் எனக்கு அவருடைய மாயாஜால உலகத்திலிருந்த நம்பிக்கை கரைய ஆரம்பித்தது.

அது இப்படித்தான் நடந்தது. ஒரு நாள் என் அண்ணா, பூட்டனார் பேய்களை ஓட்டினார் என்பதைத் தான் நம்பவில்லை என்று திட்டவட்டமாகச் சொன்னான். ஏனென்றால் பேய்கள் இருப்பது உண்மையில்லை!

என் தம்பி சிங்கமும் நானும் இதை ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாவை நையாண்டி செய்தோம். எங்கள் வீட்டு வேலைக்கார ஆச்சிக்குக் கூடப் பூட்டனார் சொன்ன எல்லாக் கதைகளும் அத்துப்படி. ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் அவள், மாந்திரீகராக இருந்த பூட்டனாரின் பூட்டனைப் பற்றிய கதையை எங்களுக்குத் திருப்பிச் சொன்னாள்.

“ஆனா அம்மாக்கு அதிலயெல்லாம் நம்பிக்கை இல்லை,” இரத்தினம் சொன்னான், “உண்மையா இந்தக் கதையெல்லாம் நாங்கள் கேக்கிறதும் அவவுக்கு விருப்பமில்லை.”

“அது ஏனெண்டா நாங்கள் பயந்துடுவம் எண்டு அவ நினைக்கிறபடியா,” என்று சிங்கம் பிடிவாதத்தோடு சொன்னான், “எனக்குப் பயமில்லை. உங்களுக்குப் பயமா?”

“பூட்டனார் நீ நினைக்கிறத விடப் புத்திசாலி,” என்றேன் நான், “ஏன் எங்கட கிராமத்து மாந்திரீகன் அவரை எப்பவும் பாக்க வாறான் எண்டு நினைக்கிறாய்?”

“அவனுக்குச் சாராயம் எண்டா நல்ல விருப்பம். அதாலதான் அவன் வாறவன்! என்ன நினைக்கிறாய்? பூட்டனார் ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை பிடிச்சார் எண்ட கதையும் உண்மையா இராது. அவங்கள் பூட்டனார் பிறக்கிறத்துக்குக் கன வருஷத்துக்கு முதலே இங்க வந்துட்டாங்கள்.”

“ஆர் உனக்கு உந்தக் கதை சொன்னது?”  என்று நான் கொஞ்சம் கோபத்தோடு கேட்டேன்.

“ஓ, நான் கேள்விப்பட்டன்!”

“வா, போய் அவரிட்டயே கேப்பம்,” என்று கத்தினேன்.

“சரி, கேப்பம்,” என்றான் இரத்தினம்.

நாங்கள் சாலைக்குப் போய்ப் பூட்டனாரைத் தேடினோம். அவர் அங்கே இருக்கவில்லை. காலையில் கள்ளிறக்குவதைப் பார்ப்பதற்குப் போயிருக்க வேண்டும். அதுவும் நல்லதுதான். எங்களுக்குக் கருப்பநீர் கிடைக்கும். பனை மரத்துக்குக் கீழே உட்கார்ந்த படியே கருப்பநீரைக் குடிப்பது என்றால் எங்களுக்கு நல்ல விருப்பம். பனந்தோப்பை நோக்கிப் புறப்பட்டோம். ஒவ்வொரு மரத்திலும் வெள்ளை நிறத்தில் கலால்வரி முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. எங்கள் ‘மரமேறி’ வேலு இடுப்புப் பட்டையில் தொங்கிக்கொண்டிருந்த மண்பானைகளைக் கீழே கொண்டுவருவதைப்் பூட்டனார் அவதானித்துக்கொண்டிருந்தார்.

“ஹா!” என்று பூட்டனார் கண் சிமிட்டினார், “கள்ளடிக்க வந்துட்டிங்களாடா?”

எங்களைக் கண்டதும் வேலு வாயெல்லாம் பல்லாகினான். அவனது தாடையில் கரகரவென்று நரைத்த மயிர் இருந்தது. “உங்கள் எல்லாருக்கும் போதுமான அளவு பிழா என்னட்ட இல்லை,”  என்று சொன்னவன் சரேலேன்று குரங்கின் இலாவகத்தோடு மரத்தில் திரும்பவும் தாவி ஏறத் தொடங்கினான்.  ஒரு பனையோலையை வெட்டி இறக்கி அதிலிருந்து படகுகள் மாதிரிப் பிழாக்களைச் செய்து கொஞ்சம் கருப்பநீராலேயே அவற்றைக் கழுவி விட்டு, அவற்றில் கருப்பநீரை நிரப்பித் தந்தான்.

ஏதோ ஒவ்வொரு நாளும் வாடிக்கையாகக் குடிப்பவர்கள் போல இரண்டு கைகளாலும் பிழாவைச் சரியான முறையில் ஏந்தியபடி கருப்பநீரை அருந்தினோம். கருப்பநீரால் போதை வராது.

பூட்டனார் தனது பெரிய பிழாவில் நிரம்பியிருந்த கள்ளை ஒரே மூச்சில் விழுங்கிவிட்டுப் பிழாவை நிலத்தில் எறிந்தார்.

“ஐயா, ஆங்கிலேயரோட சண்டை பிடிச்சிருக்க உங்களுக்கு வயது காணாது எண்டு ராஜா மச்சான் நினைக்கிறான்,” என்று இரத்தினம் ஆரம்பித்தான். ராஜா மச்சானுக்குத் தான் இப்படி ஒரு குறுக்கு யோசனை வந்திருக்கிறது. எனக்கு அவன்மேல் எரிச்சல் வந்தது.

“நல்ல கதைதான்,” என்று பூட்டனார் கூச்சலிட்டார், இரத்தினத்தை வெளுத்த புருவங்களுக்கூடாக முறைத்துப் பார்த்தார். “எனக்கு எத்தினை வயதெண்டு ராசாவுக்கு எப்பிடித் தெரியும்? நீங்கள் நினைக்கிறதவிட எனக்கு வயதுகூட!”

அவர் பதில் அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இரத்தினத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கும் நல்ல சந்தோஷம்.

ஆனால் பூட்டனாரின் பதிலால் இரத்தினம் திருப்தி அடையவில்லை. அதற்குப் பிறகும் அவன் கதைகள் கேட்பதற்கு வந்தாலும், கதைகளை வழக்கம்போல ரசித்தாலும், கதை கேட்ட பிறகு தான் ஏதோ ரகசியம் தெரிந்தவன் மாதிரி நடந்துகொள்வான். அதைப் பார்க்கும்போது எனக்கும் சிங்கத்துக்கும் எரிச்சல் வரும்.

“ஓ, நீங்கள் இருந்து பாருங்கோ, ஒரு நாள் உங்களுக்கு எல்லாம் விளங்கும்,” எனப் பயமுறுத்தினான்.

ஒரு நாள் பிற்பகல் புழுங்கிக்கொண்டிருக்க, நானும் எனது சகோதரர்களும் கட்டிலிலுக்கு இரண்டு பேராகப் பகல் குட்டித் தூக்கத்திற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தோம். படுக்கைகளைப் பகிர்ந்துகொள்வது எங்களுக்குப் பழகிப்போன விடயம்தான். அடிக்கடி காட்டில் கூடாரத்தில் ஓரே மெத்தையில் நீட்டுக்கு எல்லோரும் ஒன்றாகப் படுத்தெழும்பினோம். பொழுது போகாமல் போரடித்தது. பிற்பகற் காற்று மாவிலைகளை இனிமையாகச் சலசலத்தது. ஆனால் நித்திரை மட்டும் வரவில்லை.

“ஐயாவை ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேப்பம்,” சிங்கம் சொன்னான்.

“இல்லையில்லை,” இரத்தினம் பதிலிறுத்தான், “அவர் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பார்.” நானும் சிங்கமும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமலே கட்டிலிலிருந்து குதித்து ஓடிப்போனோம். இரத்தினம் பின்னால் வந்தான். நாங்கள் எங்கு போனாலும் ஒட்டிக்கொண்டு பின்னாலே வரும் மூன்றே வயதான கடைசித் தம்பி நாயகம் அன்றும் பின்னால் தத்திக்கொண்டு வந்தான்.

நாங்கள் சாலைக்குள்ளே நுழைந்ததும் பூட்டனார் நெஞ்சில் ஒரு பத்திரிகை விரிந்துபோய் இருக்க சிங்கப்பூர் நாற்காலியில் சாய்ந்திருந்தார். எங்களைக் கண்டதும் கண்களை அகல விழித்துப் பார்த்தார். நாங்கள் ஏன் வந்திருக்கிறோம் என்று அவருக்குப் புரிந்தது.

“ஐயா, ஒரு கதை சொல்லுங்கோ,” என்று கேட்டேன்.

“கதையா?” என்று அவர் செருமிக்கொண்டார், “நீங்கள் நித்திரை கொள்ள வேண்டிய நேரம்.”

“நித்திரை வரேல்லை,” என்றேன்.

அவர் எங்களை முறைத்துப் பார்த்தார், “என்ன நடக்குது எண்டு உங்களுக்கு இன்னும் விளங்கேல்லையா?”

“என்ன?” இரத்தினம் கேட்டான்.

“பூதம் ரோட்டு ரோட்டாப் போய்ச் சின்னப் பிள்ளைகளைப் பிடிச்சுத் தன்ர சாக்கில போட்டுக் கொண்டு வருஷ விடுமுறைக்கு போகுற நேரமிது. நீங்கள் எல்லாரும் வீட்டுக்குள்ள போய்ப் படுங்கோடா!” என்றார் பூட்டனார். நாயகத்தின் கண்களைப் பீதி கவ்வியது.

“எப்பிடி உங்களுக்குத் தெரியும்?” என்று இரத்தினம் சவால் விட்டான்.

“எனக்கு நல்லாத் தெரியும்!”

அதைவிட வேறு காரணம் எனக்குத் தேவையாக இருக்கவில்லை. “ஓடிப்போய் ஒளிப்பம்,” என்று சொல்லியபடி நாயகத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு எங்கள் அறைக்குத் திரும்பி ஓடிப் போனேன். அவ்வளவு புழுக்கமாக இருந்தபோதும் கட்டிலில் பாய்ந்தேறி, எங்களைப் போர்வையால் போர்த்திக் கொண்டோம். இன்று வரைகூடப் போர்வைக்குள்ளே அப்போது சூழ்ந்த அந்தப் புழுங்கவைத்த இருளின் நிறம் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. என் காதுகள் வெளியே இருந்துவரும் சத்தங்களைக் கூர்மையாக அவதானித்தன. பிடித்த பிள்ளைகள் நிறைந்த சாக்கைத் தூக்கிக்கொண்டு பூதம் ஊர் முழுக்கச் சுற்றும் காட்சி என் மனக்கண்ணை விட்டு அகலவேயில்லை.

“பூதம் வாற சத்தம் உனக்குக் கேக்குதா?” என்று நாயகம் கேட்டான்.

எச்சிலை விழுங்கிக்கொண்டு, “இல்லை,” என்றேன்.

ஒரு அரை மணிநேரமாவது அப்படி இருந்திருப்போம். இரத்தினமும் சிங்கமும் ஏன் எங்களுக்குப் பின்னாலேயே அறைக்குத் திரும்பி வரவில்லை என்ற பதற்றம் தோன்றியது.

“அண்ணை,” என்று அழைத்துப்பார்த்தேன், “இங்கை இருக்கிறீங்களா?” ஆனால் ஒரு பதிலும் வரவில்லை. அதற்குமேல் தாங்க முடியாமல், அறைக்கு வெளியே ஓடிப் போனேன். நாயகம் பின்னாலேயே வந்தான். யாரைக் கண்டாலும் அந்த நேரம் ஒரு மனத்திருப்தி வந்தது.

தன் அறையில் ஒரு நண்பியுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்த என் அம்மாவிடம் “சிங்கத்தையோ அண்ணாவையோ கண்டீங்களா?” என்று கேட்டேன்.

“இல்லை. ஏன்? என்ன விஷயம்?” என்று கேட்டார் அம்மா.

“பூதம் பிள்ளையளைப் பிடிச்சுக் கொண்டுபோய் சாப்பிடப் போகுது,” நாயகம் கூக்குரலிட்டான்.

“உங்களுக்கு யார் அப்பிடிச் சொன்னது, ஐயாவா?” அம்மா கேட்டார்.

“ஓம்.”

“அசட்டுப் பிள்ளையளே! ஐயா சும்மா புளுகுக் கதைதான் விடுறவர் எண்டு உங்களுக்குத் தெரியாதே?”

“இல்லை!” என்று நான் தீர்க்கமாகச் சொன்னேன்.

“ஓம்! அவர் புளுகுக் கதையளைத்தான் கற்பனை பண்ணி அளக்கிறவர், வயது போனவைதான் மந்திர வித்தை, பில்லி சூனியம் எல்லாத்தையும் நம்பிறவை. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கை கிடையாது. நீங்களும் நம்பக் கூடாது. இப்ப திரும்ப நித்திரை கொள்ளப் போங்கோ.”

அம்மா இப்படி அக்கறையில்லாமற் பேசுவதைப் பார்த்து அதிர்ந்து போனேன். எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் நான் எங்கள் அறைக்குப் போய் இருந்தபோது, இரத்தினம் அறைக்குள் வந்தான். அந்தப் பொழுதில் மின்னலென ஒரு எண்ணம் நெற்றியிலடித்தாற்போல எனக்குத் தோன்றியது. அம்மா பேய்பூதங்களில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அவை உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை.

“ஹலோ!” என்றான் இரத்தினம், “இன்னும் பூதத்திட்ட இருந்து தப்புறத்துக்கு ஒளிச்சிருக்கிறீங்களா?”

“சிங்கம் எங்கை?” என்று கேட்டேன்.

“எனக்குத் தெரியாது,” என்றான் இரத்தினம்.

“அவன் உன்னோடதானே இருந்தவன்.”

“நான் என்னோட வெளீல உலாத்த வா, எண்டு அவனுக்குச் சவால் விட்டன். அவன் வந்தான். நாங்கள் வேலு வீட்டடியில இளனி குடிக்கப் போனம். அதுக்குப் பிறகு அவனைக் காணேல்லை. அவனும் பூதம் பிடிக்காமல் ஒளிச்சிருக்கிறானாக்கும்.”

“வா போய்த் தேடுவம்,” என்றேன் நான், “தச்செயலா அவன் யாழ்ப்பாணத்துக்கு ஓடிப் போயிருந்தால் என்ன செய்யிறது?”

அவனைத் தேடிக்கொண்டு முதலில் சாலைக்குப் போனோம். “சிங்கத்தை எங்கேயாவது கண்டீங்களா ஐயா,” என்று பூட்டனாரை இரத்தினம் வினாவினான்.

“அவன் பூதத்திட்ட இருந்து ஒளிக்கிறத்துக்குக்காக வீட்டை விட்டே ஓடிப் போயிற்றான்,” என்று நாயகம் விளக்கினான்.

“அப்பிடியா விஷயம்? சரி அப்ப போய்த் தேடுவம்,” என்று சொல்லியபடி பூட்டனார் சிங்கப்பூர் சாய்நாற்காலியில் இருந்து எழும்பியபடி சொன்னார்.

நாங்கள் எல்லா இடங்களிலும் தேடினோம். வேலைக்காரர் குடிசைகளில், தோட்டக்காரர் குடிசைகளில், கடைசியாக மரமேறியின் குடிசையில்.

“உங்கட பெரிய பூட்டப் பையனோடதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி நிண்டவர், ஆனால் நான் இளனி கொண்டு வரேக்க இங்க இருக்கேல்லை,” என்றான் மரமேறி.

“எந்தப் பக்கமாப் போனவன்?” என்று பூட்டனார் கேட்டார்.

“தெரியாது ஐயா! நான் இளனி கொண்டுவரேக்க, ‘நான் இப்ப போறன்’ எண்டு சொல்லிப் போட்டுப் படலைக்குள்ளால ஓடிப் போனார். அவரைத் தேட உதவி செய்யுறன்! குண்டூ! லச்சுமணா!” என்று வேலு தன் இரண்டு மகன்களையும் அழைத்தான். இரண்டு பையன்கள் குடிசைக்கு வெளியே ஓடி வந்தார்கள். “குண்டு, நீ சந்தியடிக்குப் போய் அங்க தம்பி சிங்கம் வந்தவரா எண்டு பார். லெச்சுமணா. நீ கல் வீட்டடிக்குப் போய்ப் பார்.”

நாங்கள் வேலுவோடு பக்கத்திலிருந்த குடிசைகளெல்லாம் தேடினோம். யாருமே சிங்கத்தைக் கண்டிருக்கவில்லை. பிறகு வளவுக்கு வெளியாலே போய்த் தொலைவில் எங்காவது தென்படுகிறானா என்று பார்த்தோம். அடுத்ததாக எங்கே தேடுவதென்று எங்களுக்குப் புரியவில்லை.

அப்போதுதான் நாங்கள் அவனைக் கண்டோம். மரமேறியின் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த புளியந்தோப்புக்குள் இருந்த பழைய பிரம்மாண்டமான மரத்தைக் கடக்கும்போது மரத்தின் மற்றப் பக்கத்தில் அவன் ஒரு சிலை மாதிரி உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்க்கும்போது சிறிய புத்தர் மாதிரி இருந்தது. அதற்கு முதல் நாள் பூட்டனார் வரைந்திருந்த சக்கரத்தின் நடுவில் அமர்ந்திருந்தான். பக்கத்திலிருந்த குப்பைப் பெட்டியிலிருந்து எடுத்த இரும்புக் கம்பியைச் சக்கரத்தின் நடுவிலே நாட்டியிருந்தான். சிங்கம் எழுந்திருக்க முயற்சிக்கவில்லை. அப்படியே உறைந்துபோயிருந்தான்.

பூட்டனார் அவனைக் கரிசனையோடு வெறித்துப் பார்த்தார். ஒரு கை கொடுத்து அவனை எழுப்பிவிட்டு, “என்ன செய்யுறாய்?” என்று கேட்டார்.

“பூதம் வராமல் பாத்துக்கொள்ளுறன்,” என்று அவன் புலம்பினான், “இந்த இரும்புக் கம்பியை நான் வீட்டை கொண்டுபோக வேணும்.”        

அதற்குப் பிறகு எனக்குப் பூட்டனாரின் மாயாஜால உலகில் இருந்த நம்பிக்கையெல்லாம் சிதறிப்போனது. “நீங்கள் இருந்து பாருங்கோ, ஒரு நாள் உங்களுக்கு எல்லாம் விளங்கும்,” என்று இரத்தினம் முன்னரே பயங்காட்டியிருந்தான். இப்போது எல்லாம் புரிந்தது. அந்த உலகத்தின் மேலிருந்த சிங்கத்தின் தொடர்ந்த விசுவாசம், அவன் எவ்வளவு ஆணித்தரமாக எடுத்துச் சொன்னபோதும், என் மனதை மாற்றவில்லை. பூட்டனாரின் கதைகளைக் கேட்டு இரசிப்பது தொடர்ந்தாலும் அது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொள்ளாத வித்தியாசமான இரசிப்பாக மாறிவிட்டது. என் மனதில் அவை ஏற்றி வைத்த வியப்பையும் பயங்கலந்த உற்சாகத்தையும் அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அடித்து நொறுக்கிவிட்டது. அதை மீளப் பெற முடியவேயில்லை. சிறுபராயத்தில் இருந்து பிறகு தொலைந்துபோன மற்ற மாயைகளுடன் சேர்ந்துகொண்டது. உதாரணமாக, பல்லி சொல்வதன் அர்த்தம் ஆபத்து வருகிறது என்று எச்சரிக்கை செய்வதற்காக என்பதோ, அல்லது நாகப்பாம்பு தன் தலையில் வளர்க்கும் வைரத்தை ஒவ்வொரு இரவும் கக்கிவிட்டு இரவு முழுதும் காவல் நிற்கும் என்பதோ, அதை யாராவது கண்டெடுக்க முடிந்தால் அது உலகிலேயே விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகத் திகழும் என்பதோ.

நான் பூட்டனாரைக் கடைசி முறையாக 1937இல்  சந்தித்தேன்.  அவர் அப்போது நூறு வயதைத் தாண்டி விட்டார். கிராமத்து மாந்திரீகன், இந்த முறை ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடி,  அவருடன் சாராயம் அருந்திக்கொண்டிருந்தான். பூட்டனார் நன்றாக வயது போய் வீரியம் குன்றி இருப்பதுபோலத் தெரிந்தது. நெகிழ்வுள்ள நல்லவராகத்தான் தெரிந்தார். என்னைக் கண்டதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.

பூதம் பிள்ளைகளைச் சாக்கில் போட்டுக் கொண்டுபோன நாளைப் பற்றி அவருக்கு நினைவூட்டினேன். மங்கிய கண்களில் மறதி படர, தனது கணக்கற்ற பூட்டப் பிள்ளைகளில் யார் நான் என்று சரியாகப் புரியாததுபோல, அவர் என்னைப் பார்த்தார். பிறகு, “பூதம் அப்பிடிச் செய்தது எண்டு தான் நினைக்கிறன்” என்று சொன்னார்.  மாந்திரீகனைத் திரும்பிப் பார்த்துத் தன் விரலைச் சொடுக்கிக்கொண்டு, “நீ இப்ப நல்லா வளந்துட்டாய்தானே, இவன் உனக்குச் சிலவேளை தன்ர மந்திரங்களில கொஞ்சத்த சொல்லித் தரக்கூடும் என்றார்.” மாந்திரீகன் வழக்கம்போலத் தலையை ஒரு புறம் சாய்த்தபடி கிளுகிளு என்று சிரித்தான். தாடித்தாத்தா அப்போது உள்ளே வந்து, “இன்னும் மந்திரஜாலம் பற்றித்தான் கதைக்கிறீங்களா?” என்று கிண்டல் செய்தார்.

இது நடந்து ஒரு வருடத்தில் பூட்டனார் இறந்து விட்டார், முதுமையால்தான். நான் அப்போது இங்கிலாந்தில் இருந்தேன். எனக்கு உடனே ஞாபகத்தில் வந்தது கிராமத்து மாந்திரீகன்தான். பூட்டனாரின் இழப்பால் எல்லோரிலும் பார்க்க அதிகமாக வருந்தியது அவனாகத்தான் இருக்கும்.

பூட்டனாரின் சமாதி எங்கள் ஊரில்தான் இருக்கிறதென்றாலும் அதிலே அவருடைய மகளின் சமாதியைப் போல இரவு முழுவதும் எரியும் எண்ணெய் விளக்கு கிடையாது. அச்சுவேலிப் பகுதிகளில் பாட்டி கதைகள் சொல்வதுபோல எனக்கு நிச்சயமாகத் தெரிந்த விடயம், பேய்பூதங்களெல்லாம் பூட்டனாரின் சமாதியை நெருங்காமல் விலத்தியே போயின என்பதே. தங்களை நூறு வருடங்களுக்கும் மேலாக நெருங்க விடாமல் பாதுகாத்த ஒருவர்தான் அங்கே கிடக்கிறார் என்பது அவைகளுக்குப் புரியும் தானே.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மி.ஜே.து. தம்பிமுத்துவின் ‘The Reporter’ என்கிற அமெரிக்கச் சஞ்சிகையில் 1956ஆம் ஆண்டில் வெளிவந்த, ‘Great-grandfather And the Devils’ (5 ஜூன் 1956) கதையின் தமிழாக்கம். தமிழாக்கியோர்: எழுத்துக்கினியவன், அனுஜா பிரகாஷ்.

தம்பிமுத்து குறித்த பௌசரின் விரிவான கட்டுரை 2015 செப்டம்பர் 189ஆவது இதழில் வெளியாகியுள்ளது.

                      மின்னஞ்சல்: ez.iniyavan@gmail.com

                                           ap.socialweaver@gmail.com

***

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.