சாதிக்கொரு நீதி: சமூக நீதி அரசியலின் நிஜ முகம்
2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தபோது, “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள், இனி பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன். இந்த அறிவிப்பின் மூலம் இப்பள்ளிகளை இணைப்பதில் அரசிடம் அவசரம் இருப்பதாகத் தெரிகிறது. போதுமான ஆய்வுகளோ கருத்துக் கேட்புகளோ இல்லாமல் இம்முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளை இணைப்பதற்கு எதிராகக் கல்வியாளர்களிடமிருந்தும் தலித்துகளிடமிருந்தும் கருத்துகள் வந்திருக்கின்றன.
2022-23ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின்படி ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 833 ஆரம்பப் பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. மொத்தமாக 1138 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 98,509 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 ஆரம்பப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தமாக 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 28,263 மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர். ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 1324 மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 98,509 மாணவ / மாணவியர் தங்கிப் படிக்கிறார்கள. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1557 மாணவ, மாணவியர் தங்கிப் படிக்கிறார்கள்.
விடுதிகளைப் பொறுத்தவரை பள்ளி, கல்லூரி, தொழில்பயிற்சி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கான விடுதிகள் உட்பட இரு பாலினத்தவருக்குமானவையாகச் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய தனிப்பள்ளிகள் உருவானதற்கு வரலாற்றுக் காரணிகள் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி, அவற்றிற்கானச் சிறப்பு கவனம் என்று படிப்படியாக வளர்ந்து பின்னர் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகளும் விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இதற்குப் பின்னால் பலரது உழைப்பு அடங்கியிருக்கிறது. கல்வி வழங்குவதில் சாதிரீதியாகப் பாகுபாடு நிலவி வந்ததையோ அதில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டதையோ புதிதாக விளக்க வேண்டிய அவசியமில்லை. இப்பின்னணியில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான கல்வியில் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதற்காகவே ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்பள்ளிகள் உருவாக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்றளவும் மாறிவிடவில்லை. தலித்துகளில் கல்வி பெற்றிருப்போரின் விகிதமும் இடைநிற்போர் விகிதமும் எதிர்பார்த்த மாற்றத்தை எட்டவில்லை. அதேபோல தலித் மாணவர்கள்மீது பொதுப்பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் சாதிப் பாகுபாடு காட்டுவது குறித்த புகார்களும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொணரு வதற்காகச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. இம்மாணவர்கள் பொது நீரோட்டத்தில் கலக்காததால் சாதி வேற்றுமை நீடிப்பதாகச் சொல்வது முதல் காரணம்; தனியாக இயங்குவதால் தலித் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையும் உருவாகிறது என்கிற வாதத்தையும் அவர்கள் இத்துடன் முன்வைக்கின்றனர்.
இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறாண்டுக்கும் மேலாகச் சமூக நீதி அரசியல் பேசும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகள் குறித்து வழமையான பார்வையே நீடிக்கிறது, அதனால் தலித்துகள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய நிலையே இருக்கிறது என்று சொன்னால் இதுவரை இங்கு நடந்து வந்திருக்கும் மாற்றங்கள் என்னவாக இருந்தன என்கிற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம். சாதி இந்துக்களிடம் மாற்றம் உருவாவதற்குப் பதிலாக மீண்டும் தலித்துகளே தங்களை மாறிக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருப்பதையே இந்த வாதங்கள் காட்டுகின்றன.
இன்று சாதியச் சிந்தனையானது புறத்தில் குறைந்து உள்ளார்ந்த அதிகாரமாக மாறிவிட்டது. சாதிய நோக்கு குறைவதற்கு மாறாகக் கூடியிருப்பதையும், அது நவீன அரசியல் அதிகாரத்தோடு பிணைந்திருப்பதையும் பார்க்கிறோம். இச்சூழலுக்குக் கட்டுப்பட்டே அரசு ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளால் இதுவரை ஏற்பட்ட கல்வி மாற்றங்கள் குறித்து எத்தகைய முறையான புள்ளிவிவரங்களையும் காட்டாமல் இணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளனர் என எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இத்தனை ஆண்டுப் பயணத்தில் சாதிய இடைவெளி குறைந்துவிட்டது என்று கூறி இணைப்பதற்குப் பதில் தனிப்பள்ளிகள் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் என்று கூறி இணைப்பது நம்முடைய செயலாற்றலின் போதாமையைக் காட்டுகிறது.
இப்பள்ளிகள் பொதுப்பள்ளிகளுக்குக் கிடைக்கும் வசதிகளைப் பெறும் என்பது இப்பள்ளிகளை இணைப்பதற்காகக் கூறப்படும் மற்றொரு காரணம். இந்த வாதத்தில் வேறொரு உண்மை ஒளிந்திருக்கிறது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகளாக இருந்தவரையில் அவை பிற பள்ளிகள் பெறும் வசதிகளையோ பராமரிப்பையோ பெறவில்லை; பொதுப் பள்ளிகளுக்கும் நலத்துறைப் பள்ளிகளுக்குமிடையே பராபட்சம் காட்டப்பட்டிருப்பதை இந்தக் கூற்று காட்டுகிறது. இது அரசின், நிர்வாக அமைப்பின் பிழை. இப்பிழைக்கு இப்பள்ளிகள் பொறுப்பேற்க வேண்டியிருப்பது நியாயமல்ல.
இப்பள்ளிகள் விஷயத்தில் அரசின் அணுகுமுறை குறித்துப் பரவலான குற்றச்சாட்டுகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக ஆதி திராவிட நலப்பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களில் மட்டும் இடஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டு, மற்ற தேவைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.
ஒருகட்டத்தில் இப்பள்ளிகளின் அமைப்பே இச்சீர்கேடுகளுக்குப் பழகிப் போய்விட்டன எனலாம். இதனால் நாளடைவில் குழந்தைகள் வருகை குறைந்தது. இன்றைக்கு அச்சீர்கேடுகளைக் காரணமாகக் கூறியே இணைப்பதாகக் கூறுகின்றனர்; சீர்கேடுகள் எல்லோருக்கும் தெரிந்தே நடந்திருக்கின்றன.
இவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக இந்தக் குறைபாடு களையே காரணம் காட்டிப் பள்ளிகளை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளிகள் வேண்டுவது சீர்திருத்தத்தைத்தானே ஒழிய அவற்றை இல்லாமல் ஆக்குவதை அல்ல.
ஆதி திராவிட -பழங்குடிப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாகவும் சீர்மிகு பள்ளிகளாகவும் மேம்படுத்தி மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி தரும் மையமாக மாற்றியிருக்கலாம். இதனால் பட்டியல் சாதி அல்லாத மாணவர்களும் ஆதி திராவிட நலத்துறைப் பள்ளிகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால் நலத்துறைப் பள்ளிகளில் ஒன்றுகூட இத்தனை ஆண்டுகளில் இந்த வகையில் மாறவில்லை. இவையெல்லாம் நடந்திருந்தால் சமூக நீதி அரசியல் செழுமைப்பட்டிருக்கும். ஆனால் இவை எதுவும் இங்கு நடக்கவில்லை. மாறாக, மொத்தமாக இணைக்கப்படும் அறிவிப்பு வெளியாகிறது.
எல்லாவற்றையும்விட இப்பள்ளி களைப் பொதுக் கல்வித்துறையோடு இணைப்பது குறித்து தலித் தரப்பின் கருத்துக்கள் கேட்கப்படாமல் போனது முக்கியமான பிரச்சினை. மிக நீண்டகாலம் நிலவிவரும் ஒரு முறையை எந்தவிதமான விவாதமும் ஆய்வும் இல்லாமல் ஓர் அறிவிப்பு மூலம் முடக்குவது சரியல்ல என்று தலித் தரப்பு கருதுகிறது. எதிர்காலத்தில் தலித்துகள் குறித்து எதையும் செய்வதற்கு, இது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் வேறொன்றையும் தலித்துகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆதி திராவிடர் நலப்பள்ளிகளைப் போலவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளையும் இணைப்பது குறித்துச் சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், “1919ஆம் ஆண்டு முதல் உயிர்த் தியாகம் செய்ததன் தொடர்ச்சியாக உருவான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை இணைப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட மக்களுடைய கருத்தைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்று நான் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அவரும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்” என்று பேசினார். இதே விதமான அணுகுமுறை ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதி திராவிடர் நலப்பள்ளிகளை இணைப்பது குறித்து எந்த விளக்கத்தையும் அத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறவில்லை. ஓரிடத்தில் எந்தவிதமான போராட்டமும் கோரிக்கையும் இல்லாமலேயே ஒரு தரப்பாரின் ஏற்பு வேண்டப்படுகிறது; மற்றோரிடத்தில் எல்லாவிதமான கேள்வியும் எதிர்ப்பும் இருந்தும் அத்தரப்பாரின் யோசனை நிராகரிக்கப்படுகிறது. இதில் வெளிப்படுவது சாதியப் பாகுபாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
20 ஆண்டுகளுக்கு முன், 2002ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு இதே போன்ற முடிவை எடுத்தது. அப்போது எழுந்த எதிர்ப்பையொட்டி அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த 20 ஆண்டுகளில் அப்பள்ளிகள் மீதான சீர்கேடுகள் களையப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அது நடக்கவில்லை. இன்றைக்கு அக்குறைபாடுகளைக் காட்டியே பள்ளிகளை இணைக்க முற்படுகின்றனர். பள்ளிகளை மூடுவதற்கான சாக்குக்காகத்தான் அக்குறைபாடுகள் அப்படியே விடப்பட்டனவா என்ற கேள்வியை இச்சூழல் எழுப்பாமல் இல்லை.
இவ்விடத்தில் பலவீனமான பள்ளிகளை அரசு அல்லது தனியார் பள்ளியுடன் இணைத்துவிட வேண்டும் எனவும் தேசியக் கல்விக் கொள்கை அறிவுறுத்துகிறது. சிறப்புப் பள்ளிகள் என்ற அமைப்பே இருக்கக் கூடாது என்றும் அது கூறுகிறது. அரசின் இந்த இணைப்பு விவகாரம் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்தும் நோக்கத்தக்கது.
2002ஆம் ஆண்டு பள்ளிகளை இணைக்கும் முடிவை எதிர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் அம்முடிவை வரவேற்றிருக்கிறது. பொது நீரோட்டம் என்ற தேர்தல் அரசியலில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அக்கட்சி, அத்தகு உடனடித் தேவைக்காக நீண்டகாலத் திட்டம் ஒன்றையும் பொது நீரோட்டம் என்ற பெயரில் சமப்படுத்திப் பார்ப்பதில் அதன் அவசரமே புலப்படுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் இதற்கு மேலே ஒரு படி சென்று, தான் எழுதிய கடிதம் ஒன்றே அரசின் முடிவுக்குக் காரணம் என்று சமூக ஊடகங்களில் அறிவித்துக்கொண்டார். அக்கட்சி வலியுறுத்திவரும் எத்தனையோ கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு, நடைமுறையிலிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்துவதற்கு மட்டும் அக்கட்சியின் கோரிக்கையைக் கண்டுகொண்டதா என்னும் கேள்வி எழுகிறது.
இந்த முடிவை எடுப்பதற்கு முன் அரசு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து ஆலோசனை கோரியதாகவும் தெரியவில்லை. மத்தியத் தணிக்கை அலுவலகம், சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழு, ஊழல் கண்காணிப்புத் துறை ஆகியவற்றின் ஆலோசனையின் பெயரில்தான் ஆதிதிராவிட நலப் பள்ளிகளை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று நிதியமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளவிற்குக்கூடத் தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகள் இது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு இதில் எந்தப் பார்வையும் இல்லாமல் இருப்பது அக்கட்சி இம்மக்களின் பிரச்சினைகளை எந்த அளவிற்குப் பார்க்கிறது என்பதற்கான உதாரணம். தலித் பிரச்சினை என்ற அளவிலேயே இந்தப் பிரச்சினையை இங்குள்ள கட்சிகள் அணுகுகின்றன.
இந்த விஷயத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தங்களுடைய தன்முனைப்பை விடுத்து விரிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பல்வேறு கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.