அடையாளத்தை வெளியிடாதிருக்கும் உரிமை
நவீன இலக்கியம், நாடகம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பாலியல் அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கடந்த இதழில் தலையங்கம், கட்டுரைகள், பாதிக்கப்பட்டோரின் நேர்காணல்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம். தன்னைப் பற்றி ஒரு பெண் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பார்த்திபராஜா அனுப்பியுள்ள மறுப்புரையை இங்கே வெளியிட்டிருக்கிறோம்.
குற்றம்சாட்டுபவரின் அடையாளத்தை வெளியிடாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். குற்றம்சாட்டுபவரின் குரலுக்கு மதிப்பும் இடமும் அளிப்பதே மீடூ குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறை. வெளியில் சொல்ல முடியாத வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வடிகால்தான் மீடூ இயக்கம். எத்தகைய பாதிப்பை வெளியில் சொன்னால் தங்களுடைய தற்போதைய வாழ்விற்குப் பாதிப்பு எழும் அபாயம் இருக்கிறதோ அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதது இயல்பானதே. பாதிப்பைக் கேட்டுப் பரிதாபத்தோடு உச்சுக் கொட்டும் அதே நாக்கு பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த கொடுமையை முன்வைத்து அவரை இழிவுபடுத்தவோ சிறுமைப்படுத்தவோ தயங்காது. சில வகையான குற்றங்கள் குற்றம் இழைக்கப்பட்டவர்மீதான களங்கங்களாக மாறிவிடும் சமூகச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாலியல் அத்துமீறல்கள் அத்தகையவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே குற்றம் சுமத்துபவர் விரும்பினாலொழிய அவர் பெயரை வெளியிடுவது நெறிசார்ந்த செயலாக இருக்க முடியாது. தமக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளியில் சொல்பவர்கள் சமூகக் களங்கத்தைத் தவிர, புதிய வலைவீசல்கள், மிரட்டல்கள் ஆகிய கொடுமைகளையும் எதிர்கொள்ள நேரிடுவதால் பலரும் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குகிறார்கள்; அஞ்சுகிறார்கள். அடையாளத்தை வெளியிட வேண்டும் என்று கோரும் பார்த்திபராஜா குற்றஞ்சாட்டுவோருக்கு மிரட்டலையும் விடுத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.
பாலியல் குற்றச்சாட்டுக்கள் விஷயத்தில் பலரால் குற்றம்சாட்டப்படும் நபர்களையே அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டுக் காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறோம். பார்த்திபராஜாவின் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவாகியிருக்கின்றன. 2017, பிப்ரவரி 8 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் பார்த்திப ராஜாவின் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களைப் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியராக அவர் இருந்தபோது தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சில மாணவிகள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்தக் கட்டுரையிலும் பாதிக்கப்பட்டவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை. பார்த்திபராஜாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து அவர்மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1999இல்) இவரால் பாதிக்ககப்பட்ட ஒரு சிறுமி தன் அனுபவத்தைப் பெயர் வெளியிடாமல் சில ஆண்டுகளாக பகிர்ந்துவருவதும் பலர் அறிந்த செய்தி. இந்த இதழில் அந்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு இவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஒரு பெண் கடந்த காலச்சுவடு இதழில் எழுதியுள்ளார். இன்னொரு பெண் தனக்கு இவர் அனுப்பிய பாலியல் குறுஞ் செய்திகள் குறித்து சமீபத்தில் முகநூலில் பதிவிட்டுள்ளார் (அவருடைய அடையாளத்தை மறைத்து அந்தப் பதிவை இங்கே தந்திருக்கிறோம்). 1999 இறுதி, 2009, 2017 எனத் தொடர்ந்து அவருடைய பாலியல் அத்துமீறல்கள் குறித்த பதிவுகள் வெளியாகிவருகின்றன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமுஎகச தன்னை விசாரித்ததாகவும் அவ்வமைப்பிலிருந்து தானாக விலகியதாகவும் பார்த்திபராஜா கூறுகிறார். காலச்சுவடு தலையங்கமும் இதையே கூறியிருக்கிறது. தமுஎகசவின் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் பேசியதில் கிடைத்த தகவல் இது. தமுஎகசவின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசியபோது அவர், “பார்த்திபராஜா மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அனுப்பிய கடிதத்தை சாத்தூரில் கூடிய மாநிலக் குழுக் கூட்டம் நிராகரித்ததுடன், இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவர் தமுஎகசவில் அடிப்படை உறுப்பினராகக்கூட நீடிக்கக் கூடாது” என்று தீர்மானித்து அவரை அமைப்பிலிருந்து வெளியேற்றியதாகக் குறிப்பிட்டார்.
இவையே பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் அவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதற்கான காரணங்கள். குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்கான அவருடைய உரிமையை மதிப்பதால் அவருடைய மறுப்பை அப்படியே வெளியிட்டிருக்கிறோம்.
- காலச்சுவடு ஆசிரியர் குழு
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நாள்: 14/04/2023
திருமிகு. அஸ்வினி காசி
கட்டியக்காரி குழு
பெறல்:
செயலர்,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர் – 635601
பொருள்: மாற்று நாடக இயக்கம் அளித்த விருதினைத் திருப்பி அளித்தல் தொடர்பாக
அன்புடையீர்
வணக்கம்.
நான் புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவள். 15 ஆண்டுகளுக்கு மேலாக நவீன நாடகம், கல்வியியல் அரங்கம், தலைமைத்துவப் பயிற்சி எனப் பல தளங்களில் இயங்கி வருகிறேன். கலைகள் சமூக மாற்றத்திற்கான கருவி என்பதில் உறுதியோடு இருக்கிறேன்.
தங்கள் கல்லூரியில் இயங்கி வரும் ‘மாற்று’ நாடக இயக்கம் அளித்த நம்பிக்கை நாடகர் விருதினை 2018 ஆம் ஆண்டில் பெற்றேன். ஆனால் அதனை வழிநடத்தும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகள் தற்போது காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது. (இணைப்பு -1). முன்னரே, ஜூனியர் விகடன் இதழிலும் இவர் தொடர்பாக வந்துள்ளது. (இணைப்பு -2). இவை தவிர பெண் குழந்தைகள் மீதும் இவரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை நான் அறிய நேர்ந்துள்ளது. இத்தனைக்கும் பின் தங்கள் நிறுவனத்தில் அவரை அரங்கம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பது அறம் சார்ந்தது அல்ல என்பது என்னுடைய கருத்து.
இப்படியான நபர் நடத்தி வரும் ‘மாற்று’, எனக்கு அளித்த விருதை, இந்த உண்மைகள் தெரிந்த பின்பும் நான் வைத்திருப்பது எனது மனச்சாட்சிக்குப் புறம்பானது. அதனால் அதனைத் திருப்பி அனுப்புகிறேன். அத்துடன் வழங்கப்பட்ட தொகையையும் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கை விரைவில் அனுப்பி வைக்கவும். எனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பணத்தை நான் திரும்ப அனுப்பி வைப்பேன்.
நன்றி.
அஸ்வினி காசி
CC: The Principal, Sacred Heart College (Autonomous), Thiruppathur 635601
பொறுப்பாளர், மாற்று நாடக இயக்கம், Sacred Heart College, Thiruppathur 635601