கடிதங்கள்
நெடுநாளாகக் காலச்சுவடு வாசித்து வருகிறேன். பல்லாற்றானும் சிறப்பாக வருகிறது. அதிலும் இந்த இதழ் மிகச்சிறப்பு. பாலியல் அத்துமீறலுக்கு எதிரான தலையங்கம், கட்டுரைகள் நேர்காணல், சிறுகதை என்று பன்முகம் பூண்டு மிளிர்கிறது.
பிரவீன்
சாத்தூர்
“கோணங்கி இறந்துவிட்டார்” என்ற வாசகத்தை விடவும் கொடியதாக இருந்தது “கோணங்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தார்” என்னும் வாசகம்.
எங்கள் பகுதி பொள்ளாச்சி நண்பர் ஒருவர் கோணங்கியைப் பற்றிய உரையாடல்களின்போதெல்லாம், காலத்தின் முடிவு பெறாத திசைகளில்... என்று ஆரம்பித்து ஒரு வசனத்தைச் சொல்லி முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார். தொய்வின்றிக் கேட்பதை நான் வழக்கமாகக் கொண்டிருப்பேன்.
சுந்தர ராமசாமி அவர்கள் ஒருமுறை கோவையில் உரையாற்றும்போது, கோணங்கியைக் குறித்து ஒரு தகவலை, சிறு தகவல், பகிர்ந்துகொண்டார். காலச்சுவடு இதழ்களில் ஒன்றில் கூட கோணங்கியின் சிறுகதை வராததைக் குறிப்பிட்டு அதனால் ‘கோணங்கி அண்ணனுக்கு’ அக்காலச்சுவடு ஆசிரியரின் மேல் எந்த காழ்ப்புணர்வும் இல்லாததையும் பொதுவெளியில் எங்கு கண்டாலும் கோணங்கியுடன் தோளில் கை போட்டு உரையாட முடியும் என்று மிகவும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
சுந்தர ராமசாமி அவர்களின் 50 ஆவது திருமண விழா நிகழ்வில் நான் கலந்துகொண்போது முதல்முறையாக கோணங்கி அண்ணனைச் சந்திக்க நேர்ந்தது. நான் வாசகனாய் இருந்ததால் எனக்குத் தெரிந்த எல்லா ஆளுமைகளையும் சற்று இடைவெளி விட்டுக் குறுகுறுவென வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயம் ஒருவர் என்னிடம் மெதுவாக நகர்ந்து வந்து, “சார்... யாருன்னு தெரியலையே” என்ற கேள்விக்குறியுடன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். கேட்டது கோணங்கி அண்ணன்! எனக்கு இருந்த பரவசத்தில் கால்கள் துவண்டு விழுந்துவிடுவேன்போல இருந்தது. ‘செம்மூதாய்’ துண்டுப் பிரசுரம் அன்னாரின் கையிலிருந்து என்னுடைய கைக்கு ஓரிரு மணித்துளிகளில் இடம் மாறியிருந்தது.
இப்பொழுது கோணங்கி அண்ணன் குறித்து வரும் செய்திகளாலும் கால்கள் துவண்டுவிழுந்துவிடுவது போன்ற கையறு நிலையில் உள்ளேன். நம்பினார் கெடுவதில்லை என ஒரு பக்தி தமிழ் திரைப்படம் உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நம் நவீன வாழ்க்கையில் நம்பினார் கெடுவதில்லைக்கு அர்த்தம் இருக்க முடியாது என்பதற்கு எனது கையறுநிலை ஒரு அழுத்தமான நிரூபணம்.
நன்றி கோணங்கி சார்.
கோபாலகிருஷ்ணன்
மின்னஞ்சல் வழி
கவிமணி பற்றிய பதிவுகள் மிகச் சிறப்பானவை. அவரது அரசியல் பங்களிப்பையும் விடாது பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள். ஒரு தகவல் இல்லை.தமிழ் படித்த கவிமணி அறிவியல் ஆசிரியரானது எவ்வாறு? ம. பொ. சி யின் தன்வரலாற்று நூலான ‘எனது போராட்டம்’ நூலில் வடக்கெல்லைப் போராட்டக் காலத்தில் கவிமணி அவர்களைச் சந்தித்ததைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
கவிமணி சந்தித்த அறிஞர்கள் பட்டியலில் ம பொ சி பெயர் இல்லை. ஒரு வேளை கல்லூரிப் பட்டமும் பதவியும் இல்லாமையால் விடுபட்டு விட்டாரோ? அ.கா. பெருமாளுக்கும் ஆசிரியர் கண்ணனுக்கும், ஆசிரிய குழுவிற்கும் பாராட்டுகள். சு.ரா.வின் கட்டுரை கூடுதல் சிறப்பு!
நெய்வேலி பாலு
மின்னஞ்சல் வழி
செ. ரவீந்திரனின் ‘காத்திருக்கும் படைப்பாளி’ கட்டுரையில் இ.பா.வின் கொங்கைத் தீ நாடகம்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணியாற்றிய இரா. ராஜூ அவர்கள் இயக்கத்தில் மேடையேற்றப்பட்டது. தேவை எனில் உறுதி செய்து கொள்ளவும். வெண்மணி என்றாலே 44 மனித உயிர்கள் கொளுத்தப்பட்டதே நினைவுக்கு வரும்; 48 அல்ல.
பா. செல்வபாண்டியன்
மின்னஞ்சல் வழி